என் மலர்
இந்தியா

என்னை சிறையிலேயே வைத்து விடுங்கள்...வெளியே வந்தால் தவறுகளை மீண்டும் தொடர்வேன்- கல்யாணராணி
- ஒவ்வொருவரிடமும் ஒரு கதை கூறி அவர்களிடம் பணம், நகைகளை பறித்ததாகவும் கூறப்படுகிறது.
- பலநாள் தொடர்ந்த அவரது மோசடி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவை சமீப காலமாக பெண்கள் பல்வேறு விஷயங்களில் கதற விட்டு வருகின்றனர். நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் தொடர்பான விசாரணைகள் ஓய்ந்த நிலையில் தற்போது 10 ஆண்களை ஏமாற்றி மணந்த கல்யாண ராணி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காஞ்சிரா மட்டம் பகுதியை சேர்ந்த ரேஷ்மா என்பவர் தான் இந்த மோசடியில் ஈடுபட்டு உள்ளார். திருமணத்திற்கு ஆன்லைனில் பெண்களை தேடும் ஆண்களை கண்டு பிடித்து தனது வசீகர குரலால் பேசியும், நேரில் சந்திக்கும் போது தனது அழகால் வீழ்த்தியும் திருமண பந்தத்தில் பலருடன் இணைந்துள்ளார். ஆனால் ஒவ்வொருவரிடமும் ஒரு கதை கூறி அவர்களிடம் பணம், நகைகளை பறித்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவரை கரம் பிடிக்க முயன்ற நிலையில் தான் அவரது குட்டு வெளிப்பட்டது. திருமணத்திற்காக அழகுநிலையம் சென்றிருந்த அவர் தனது கைப்பையை மறந்து விட்டுச் சென்றார். அதனை மணமகனான பஞ்சாயத்து உறுப்பினர் பார்த்த போது, அதில் ரேஷ்மாவுக்கு பல திருமணங்கள் நடந்திருப்பதற்கான சான்றிதழ்கள் இருந்ததை பார்த்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஆரியநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அழகுநிலையம் சென்ற போலீசார், அங்கு வைத்தே ரேஷ்மாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது தனது மோசடியை ஒத்துக் கொண்ட ரேஷ்மா, அடுத்த மாதம் மற்றொருவருடன் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
திருமணத்துக்கு பெண் தேடுபவர்கள் விவரங்களை ஆன்லைன் மூலம் பெறு வாராம். அதில் வசதியானவரை தேர்வு செய்து, அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்வார். அப்போது தனது மகளுக்கு உங்களை தேர்வு செய்துள்ளேன் எனக் கூறி விட்டு தனது மகள் நம்பர் இது என ஒரு நம்பரை கொடுப்பாராம். அதனை நம்பியவர்கள் அந்த எண்ணை தொடர்பு கொள்ளும் போது ரேஷ்மா பேசி, அவருடன் சந்திப்பை ஏறபடுத்திக் கொள்வார்.
அப்போது தான் தத்தெடுக்கப்பட்டவள், தனது தாய்க்கு திருமணம் செய்து கொடுப்பதில் விருப்பம் கிடையாது. எனவே திருமண விழாவில் தான் சார்பில் யாரும் வரமாட்டார்கள் என கூறி திருமணம் செய்து வந்துள்ளார். கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்த ரேஷ்மா, பஞ்சாயத்து உறுப்பினரை திருமணம் செய்த பிறகு அடுத்த திருமணத்தை 20 நாட்களில் நடத்த மற்றொருவரையும் தேர்வு செய்து வைத்திருந்தாராம்.
அவர் பல்வேறு மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்டோரை இதுபோல பேசி ஏமாற்றி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இது பற்றி ரேஷ்மாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், 2014-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்த போது எர்ணாகுளத்தை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் ஓடிச் சென்று உள்ளார். 2017-ம் ஆண்டு வரை அவருடன் வாழ்ந்த ரேஷ்மா, அதன்பிறகு தான் தனது திருமண மோசடிகளை தொடங்கி உள்ளார். 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை அவர் 4 ஆண்களை திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது.
2023-ம் ஆண்டு ஒரு குழந்தையை பெற்ற அவர், இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 2 வாலிபர்களை திருமணம் செய்துள்ளார். இந்த மாதம் பஞ்சாயத்து உறுப்பினர், அடுத்த மாதம் வேறு ஒருவருடன் திருமணம் என மாதத்திற்கு ஒரு திருமணம் செய்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதமும் ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில், அந்த வாலிபர் விபத்தில் சிக்கி விட்டார். இதனால் அந்த திருமணம் நின்று விட்டது.
திருமணம் செய்த ஒவ்வொருவரிடமும் ஒரு கதையை நம்பும் படி கூறி ஏமாற்றிய அவர், சில நாட்களில் பணம் மற்றும் பொருட்களை எடுத்துக் கொண்டு சென்று விடுவாராம். அப்போது சில சான்றிதழ்களை சேகரிக்க வேண்டும் என தான் திருமணம் செய்தவர்களிடம் கூறிவிட்டு மாயமாகி வந்துள்ளார். மேலும் அவர்களுக்கு அடிக்கடி போன் செய்தும் பேசி வந்துள்ளார். இதனால் தான் அவர் மீது யாருக்கும் பெரிதாக சந்தேகம் வர வில்லை. அதனால் தான் போலீசாருக்கு புகாரும் வரவில்லை.
எர்ணாகுளம், தொடுபுழா, கோட்டயம், கொட்டாரக்கரா, வாலாகோம், வைக்கம், திருவனந்தபுரம் என பல மாவட்டங்களில் ரேஷ்மா திருமணம் செய்து உள்ளார். பலநாள் தொடர்ந்த அவரது மோசடி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. தொடர்ந்து போலீசாரிடம் பல்வேறு தகவல்களை கூறிய ரேஷ்மா, தனக்கு சரியான காதல் கிடைக்காததால் பல திருமண உறவுகளில் ஈடுபட்டதாகவும், தன்னை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் என்னை வெளியே விடாதீர்கள்... நான் வெளியே வந்தால், என் தவறுகளை மீண்டும் செய்வேன் என்றும் கூறியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணைக்கு பிறகு அட்டங்குளக்கரை பெண்கள் ஜெயிலில் ரேஷ்மா அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அப்போது தான் அவர் ஏமாற்றி திருமணம் செய்தவர்கள் யார்? என்ற விவரம் முழுமையாக தெரியவரும்.






