என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சமூகம் சார்ந்த முற்போக்கு சிந்தனையாளரான இவருக்குள்ள அசாத்திய இசைத்திறமையின் அடிப்படையில்தான் விருது கொடுக்கப்படுகிறது.
    • "வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையை திறப்போம்" என்று ராகுல் காந்தி அடிக்கடி கூறுவார்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சமூக சிந்தனையாளர், சுற்றுசூழல் ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் சிறந்த கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு தி மியூசிக் அகாடமியின் 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சமூகம் சார்ந்த முற்போக்கு சிந்தனையாளரான இவருக்குள்ள அசாத்திய இசைத்திறமையின் அடிப்படையில்தான் விருது கொடுக்கப்படுகிறது. ஆனால், அவர் விருது பெறுவதில் குழப்பம் ஏற்படுத்தும் சிலரின் முயற்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    "வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையை திறப்போம்" என்று ராகுல் காந்தி அடிக்கடி கூறுவார். அதுபோன்று அனைவரின் மீதும் அன்பு செலுத்துவோம் என கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக பொறுப்பாளராக டி.வி.டி.செங்குட்டுவன் நியமனம்.
    • தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டும்.

    கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி தேமுதிக தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் ராமநாதன் தேமுதிகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக செயலாளராக செயல்பட்டு வந்த இராமநாதன்.

    இவர் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், இவர் மாவட்ட கழக பதவி மற்றும் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (23.03.2024) முதல் நீக்கப்படுகிறார்.

    இவர்களுடன் கழக நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் என யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். 

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக பொறுப்பாளராக டி.வி.டி.செங்குட்டுவன். இவர் இன்று (23.03.2024) முதல் நியமனம் செய்யப்படுகிறார்.

    இவருக்கு மாவட்டம், பகுதி, ஒன்றியம், நகரம், வார்டு, ஊராட்சி, கிளை கழகம், கழக சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • மொழி புரியாமல் என்ன என்று கேட்டபோது, திடீரென அந்த மாணவனை பிடித்து இழுத்து சென்று உள்ளனர்.
    • சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்தபோது, மாணவன் அடையாளம் கூறிய கார் வேகமாக செல்வது பதிவாகியுள்ளதை வைத்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த நாகம்பட்டி போயர்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன். இவர் மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பதால், மதியம் 1 மணிக்கு மேல் பள்ளி செயல்படுகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் அவரது வீட்டில் இருந்து சுமார் 11.50 மணியளவில் கிளம்பி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையில் நின்றுக்கொண்டிருந்த வெள்ளை நிற காரை கடந்து சென்றுக்கொண்டிருந்த போது, அதிலிருந்து வெளியே வந்த அடையாளம் தெரியாத நபர், பேசுவது போல் இந்தியில் பேசியுள்ளார்.

    மொழி புரியாமல் என்ன என்று கேட்டபோது, திடீரென அந்த மாணவனை பிடித்து இழுத்து சென்று உள்ளனர். அதற்குள்ளாக சுதாரித்துக்கொண்ட மாணவன், தன்னை யாரோ கடத்துவதற்கு முயற்சிப்பதை உணர்ந்து, கையிலிருந்த பள்ளி பையை கழட்டிவிட்டு அவர்களிடமிருந்து தப்பித்து அங்கிருந்து ஓடியுள்ளார். இதனை உணர்ந்த சக மாணவர்களும் கையிலிருந்த பையை கீழே போட்டுவிட்டு அனைவரும் ஓடியுள்ளனர்.

    அப்போது அவ்வழியே யாரும் செல்லாததால், அந்த கார் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றது. பின்னர் மாணவன் பையை எடுத்து கொண்டு உடன் வந்த அனைத்து மாணவர்களையும் அழைத்து கொண்டு, சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ள மத்தூர் போலீஸ் நிலையம் சென்று அங்கு புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்து வருகின்றனர். அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்தபோது, மாணவன் அடையாளம் கூறிய கார் வேகமாக செல்வது பதிவாகியுள்ளதை வைத்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவனிடம் கேட்டபோது, பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது காரை நிறுத்திவிட்டு வந்த நபர் என்னிடம் பேசுவது போல் பேசிவிட்டு, திடீரென என்னை இழுத்து காரில் போட முயற்சித்தார். நான் அவரிடமிருந்து தப்பித்து ஓடிவிட்டேன். அப்போது ஏற்கனவே காரியில் இரு அரசு பள்ளி மாணவர்கள் இருந்ததை கவனித்தேன். அதில் ஒரு மாணவன் காரிலிருந்து வெளியே கத்திக்கொண்டு வந்தபோது, அவனை தலையில் தாக்கி உள்ளே தூக்கி போட்டனர் என தெரிவித்தான். இந்த சம்பவம் மத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அறுபத்து மூவர் விழா இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கி நடைபெற உள்ளது
    • உணவு பொருட்களை சாப்பிடும் பக்தர்கள் குப்பைகளை சாலையில் வீசாமல் இருப்பதற்காக சாலையோரம் 340 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 8 மணி அளவில் திருத்தேருக்கு கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் எழுந்தருளினர்.

    காலை 9 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. 96 அடி உயரம், 300 டன் எடை கொண்ட தேரை, ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் 'சம்போ மகாதேவா' என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். 4 மாட வீதிகளில் வலம்வந்த தேர், பிற்பகல் 1.30 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அறுபத்து மூவர் விழா இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கி நடைபெற உள்ளது. வெள்ளி விமானத்தில் 63 நாயன்மார்களோடு இறைவன் வலம் வரும் காட்சியை காண, சென்னை, புறநகர் பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மயிலாப்பூரில் குவிந்துள்ளனர். இன்று காலை முதலே மயிலாப்பூருக்கு பக்தர்கள் வரத் தொடங்கினார்கள். நேரம் செலச்செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்தது.

    மயிலாப்பூர் கோவிலில் இருந்து சில கிலோ மீட்டருக்கு பக்தர்கள் கூட்டமாகவே காட்சி அளித்தது. இதையொட்டி பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானம், குளிர்பானம், பிஸ்கட், இனிப்பு வகைகள் உள்ளிட்டவை இன்று காலை முதலே வழங்கப்பட்டு வருகிறது. கோவிலை சுற்றியுள்ள தெற்கு மாடவீதி, வடக்கு மாட வீதி, கிழக்கு மாடவீதி, ராமகிருஷ்ண மடம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

     

    மயிலாப்பூர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்குமே ஒவ்வொரு பகுதியிலும் இந்த உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இதனால் மயிலாப்பூர் பகுதியே பக்தர்கள் வெள்ளமாக காணப்பட்டது.

    மேலும் உணவு பொருட்களை சாப்பிடும் பக்தர்கள் குப்பைகளை சாலையில் வீசாமல் இருப்பதற்காக சாலையோரம் 340 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 102 தொட்டிகள் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மிகப்பெ ரிய தொட்டிகள் ஆகும்.

    பக்தர்கள் தாங்கள் சாப்பிட்ட உணவுப்பொருட்களின் குப்பைகளை இந்த தொட்டிகளில் போட்டனர். குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காக 10 பேட்டரி வாகனங்கள், 4 இலகு ரக மோட்டார் வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    மேலும் பக்தர்கள் குப்பை களை தொட்டிகளில் போடுமாறு 100-க்கும் மேற்பட்ட மாண வர்கள், தன்னார்வலர்கள் விழிப்புணர்வில் ஈடுபட்டனர். 3 ஷிப்டுகளாக 269 தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியிலும் ஈடுப டுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மயிலாப்பூரில் லட்சக்கணக்கான பகதர்கள் திரண்டதால் ஆயிரக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • லாரியை ஓட்டி வந்த வாகனத்தின் டிரைவர் போலீசாரை கண்டவுடன் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.
    • வழக்கு பதிவு செய்த சூளகிரி போலீசார் தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஓட்டல் அருகே சூளகிரி காவல் ஆய்வாளர் தேவி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லாரியை ஓட்டி வந்த வாகனத்தின் டிரைவர் போலீசாரை கண்டவுடன் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    அந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்த போது, அதில் இரும்பு தகரம் மூலம் தடுப்பு ஏற்படுத்தி தனியறை அமைத்து மறைத்து வைத்திருந்த 150 மூட்டைகளில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    அதனை கைப்பற்றிய போலீசார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள லாரியை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த சூளகிரி போலீசார் தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜ் வங்காளதேசத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • ஜான் செல்வராஜ் இதற்கு முன்பு சென்னை மடிப்பாக்கம், தேனாம்பேட்டை போலீஸ் நிலையங்களிலும் பணியாற்றியுள்ளார்.

    தாம்பரம்:

    சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சேலையூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஜான் செல்வராஜ். இவரது சொந்த ஊர் திருச்சி ஆகும். சென்னை மடிப்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த அவர் அங்கிருந்தபடி சேலையூர் போலீஸ் நிலையத்துக்கு பணிக்கு சென்று வந்தார்.

    இவர் போலீஸ் நிலையத்தில் இருந்து கோர்ட்டுகளுக்கு குற்றவாளிகளை அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும் இவர் அடிக்கடி மருத்துவ விடுப்பில் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்தநிலையில் அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மருத்துவ விடுப்பில் சென்றிருந்தார். அதன் பிறகு அவர் இதுவரை பணிக்கு திரும்பவில்லை.

    இந்த நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜ் வங்காளதேசத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலையூர் போலீஸ் நிலையத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்காளதேச எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக கூறி அவரை வங்காளதேச ராணுவ அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

    போலீஸ் நிலையத்தில் இருந்து கோர்ட்டுகளுக்கு குற்றவாளிகளை அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்ட போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜுக்கு, சட்டவிரோத கும்பலுடன் தொடர்பு எற்பட்டதா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் போதைப்பொருள் உள்ளிட்ட வழக்குகளில் பிடிபடும் குற்றவாளிகளையும் கோர்ட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்படி அழைத்து செல்லும்போது அவருக்கு போதைப்பொருள் கடத்தும் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாரின் மத்தியில் எழுந்துள்ளது.

    கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜிடம் வங்காளதேச ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகுதான் இது தொடர்பான விரிவான விவரங்கள் வெளிவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    கைது செய்யப்பட்டுள்ள சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜ் இதற்கு முன்பு சென்னை மடிப்பாக்கம், தேனாம்பேட்டை போலீஸ் நிலையங்களிலும் பணியாற்றியுள்ளார். கடந்த 2 வருடமாக அவர் சேலையூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஜமேஷா முபினுடன் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

    கோவை:

    கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு 23-ந் தேதி கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) பலியானார்.

    தீபாவளிக்கு முந்தைய தினத்தில் மக்கள் கூட்டத்தில் காரை வெடிக்க செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்த ஜமேஷாமுபினும், அவரது கூட்டாளிகளும் திட்டமிட்டிருந்த நிலையில் அந்த சதியில் சிக்கி ஜமேஷா முபினே பலியானார்.

    இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். ஜமேஷா முபினுடன் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் வீடுகளில் சோதனையும் நடத்தப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் இதுவரை குற்றவாளிகள் பிடிபடாமல் உள்ளனர். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கார் குண்டுவெடிப்பில் கைதானவர்களுக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் என்.ஐ.ஏ. தற்போது விசாரணையில் இறங்கி உள்ளது.

    இதுதொடர்பாக முகமது உசேன், ஜமேசா உமரி உள்ளிட்ட 3 பேரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். அவர்கள் இன்று சென்னையில் இருந்து கோவை அழைத்து வரப்பட்டனர்.

    என்.ஐ.ஏ. அதிகாரி விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் அவர்கள் 3 பேரையும் கோவைக்கு அழைத்து வந்தனர். கோவை குனியமுத்தூரில் உள்ள அரபிக்கல்லூரி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். மேலும் ஆசாத் நகர் பகுதிக்கும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    • விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பஸ் நிலையம் அருகே இருந்து அவர் பிரசாரத்தை தொடங்குகிறார்.
    • அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே தி.மு.க. கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

    அவர் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு ராமநாதபுரம் தொகுதியில் தனது சூறாவளி பிரசாரத்தை தொடங்குகிறார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பஸ் நிலையம் அருகே இருந்து அவர் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    மாலை 6 மணிக்கு விருதுநகர் தொகுதிக்குட்பட்ட அருப்புக்கோட்டையிலும், இரவு 7.15 மணிக்கு திருமங்கலம் பகுதியிலும் பிரசாரம் செய்கிறார். அதன் பிறகு இரவு 8.30 மணிக்கு தேனி தொகுதிக்கு சென்று உசிலம்பட்டியில் பேசுகிறார். இரவு 9.15 மணிக்கு ஆண்டிப்பட்டியில் பேச உள்ளார்.

    நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு தேனி பங்களாமேடு பகுதியிலும், 11 மணிக்கு பெரியகுளம் புதிய பஸ் நிலையம் பகுதியிலும் ஓட்டு வேட்டையாடுகிறார். மாலை 5 மணிக்கு திண்டுக்கல் தொகுதிக்கு செல்கிறார். அங்கு திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியிலும், மாலை 6.15 மணிக்கு நத்தம் நகரிலும் ஓட்டு வேட்டையாடுகிறார்.

    அதன்பிறகு மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்ய உள்ளார். இரவு 7 மணிக்கு மதுரை உமச்சிக்குளம் பகுதியிலும், 7.45 மணிக்கு மதுரை புதூர் பகுதியிலும் பேசுகிறார்.

    அதன் பிறகு சென்னை புறப்பட்டு வருகிறார். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் தொகுதிக்கு சென்று பேசுகிறார். அதன் பிறகு ஆரணி தொகுதிக்கு செல்கிறார்.

    மாலை 6 மணிக்கு செய்யாறு, 7 மணிக்கு வந்தவாசி, 8 மணிக்கு சேத்துப்பட்டு நகரங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரம் செய்கிறார்.


    அதன் பிறகு திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அன்று இரவு 9 மணிக்கு கீழ்பொன்னாத்தூர் பகுதியில் ஓட்டு வேட்டையாடுகிறார். மறுநாள் (26-ந்தேதி) காலை 10 மணிக்கு திருவண்ணாமலை, 10.45 மணிக்கு கலசப்பாக்கம், 11.45 மணிக்கு செங்கம், 12.30 மணிக்கு திருப்பத்தூர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

    அன்று மாலை 5 மணிக்கு ஜோலார்பேட்டை பகுதியில் ஓட்டு வேட்டையாடுகிறார். அதன் பிறகு வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு வருகிறார். மாலை 5.45 மணிக்கு வாணியம்பாடி, 6.30 மணிக்கு ஆம்பூர், 7.30 மணிக்கு பேரணாம்பட்டு, 8.15 மணிக்கு குடியாத்தம், 9 மணிக்கு பள்ளிகொண்டா, 9.30 மணிக்கு வேலூர் பகுதிகளில் தீவிர பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    27-ந்தேதி (புதன்கிழமை) அரக்கோணம் தொகுதியில் ஓட்டு வேட்டையாட உள்ளார். அன்று காலை 10 மணிக்கு ஆற்காடு, 10.15 மணிக்கு ராணிப்பேட்டை, 11.30 மணிக்கு வாலாஜா, 12.30 மணிக்கு சோளிங்கர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட திருத்தணிக்கு வந்து ஆதரவு திரட்டுகிறார்.

    மாலை 6 மணிக்கு அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே தி.மு.க. கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார். இரவு 7.30 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிக்கு வருகிறார். ஸ்ரீபெரும்புதூரில் மணிக்கூண்டு அருகே நடக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு திரட்ட உள்ளார்.

    28-ந்தேதிக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 2-வது கட்ட பிரசாரம் தொடங்கும்.

    • ஷாசிப், தாஹா இருவரும் சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துள்ளனர்.
    • தொப்பியை தலையில் மாட்டிக்கொண்டு தான் ஷாசிப் பெங்களூரு சென்றுள்ளார்.

    சென்னை:

    பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளான ஷாசிப், தாஹா ஆகிய இருவரும் சென்னை திருவல்லிக்கேணி லாட்ஜில் ஒரு மாதம் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இருவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகிறார்கள். இவர்களில் ஷாசிப் தான் தொப்பி அணிந்து கொண்டு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த ராமேஸ்வரம் கபே ஓட்டலில் இருந்து வெளியேறுவது கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் முதலில் தெரிய வந்துள்ளது.

    அவர் தவற விட்டுச்சென்ற தொப்பி, அதில் ஒட்டி இருந்த தலைமுடி ஆகியவற்றை வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகளும், கர்நாடக மாநில போலீசாரும் துப்பு துலக்கி வந்தனர். இந்த நிலையில்தான் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் இருவரும் தங்கி இருந்து சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.

    ஷாசிப், தாஹா இருவரும் சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துள்ளனர்.

    அதுதொடர்பான தகவல்கள் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலமாக தெரிய வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதேபோன்று இருவரும் சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். பலரை சந்தித்தும் பேசி இருக்கிறார்கள். இதன் மூலம் ஷாசிப், தாஹா இருவருக்கும் சென்னையில் பலர் அடைக்கலம் கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் யார்-யார் என்பது பற்றி அறிய விசாரணையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இருவரும் எங்கெல்லாம் சென்றார்கள் என்பது பற்றிய தகவல்களை கண்டறிய 1000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலமாக துப்பு துலக்கப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது.

    ஷாசிப், தாஹா இருவரும் பெங்களூருவில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது போல சென்னையிலும் சதி திட்டத்தில் ஈடுபட திட்டம் வகுத்தார்களா? என்கிற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் பற்றி உளவுப்பிரிவு போலீசாரும் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வணிக வளாகத்துக்கு சென்று இருவரும் தொப்பி ஒன்றை வாங்கி இருக்கிறார்கள். இந்த தொப்பியை தலையில் மாட்டிக்கொண்டு தான் ஷாசிப் பெங்களூரு சென்றுள்ளார். அவருடன் தாஹாவும் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    வணிக வளாகத்திற்கு சென்று தொப்பியை வாங்கியதுபோல சென்னையில் வேறு எங்காவது சென்று குண்டுவெடிப்பு சதி செயலுக்கு தேவையான பொருட்கள் ஏதாவது இருவரும் வாங்கினார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இப்படி பெங்களூரு குண்டுவெடிப்பு குற்றவாளிகள் சென்னையில் எந்தவித தங்குதடையுமின்றி குறிப்பிட்ட லாட்ஜில் தங்கி சென்றிருப்பது சென்னை போலீசாரை கடும் அதிச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    இதன் மூலம் சென்னைக்கு குற்றச்செயல்களில் தொடர்புடைய யார் வேண்டுமானாலும் வரலாம், தங்கலாம் என்கிற நிலை உள்ளதா? என்கிற அச்சம் மேலோங்கி இருப்பதை மறுப்பதற்கில்லை.

    இதையடுத்து சென்னை மாநகர போலீசார் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    • தி.மு.க. அரசுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்துக்குக் கிடைத்த வெற்றியும் ஆகும்.
    • இதற்குப் பிறகும் ஆளுநர் பதவியில் அவர் தொடர்வது நாட்டுக்கு உகந்ததல்ல. எனவே அவர் தாமே முன் வந்து பதவி விலக வேண்டும்.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு கவர்னர் விதித்தத் தடைகளையெல்லாம் மீறி சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் காரணமாக பொன்முடி மீண்டும் உயர் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது தி.மு.க. அரசுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்துக்குக் கிடைத்த வெற்றியும் ஆகும்.

    உச்சநீதிமன்றத்துக்குத் தவறான தகவல்களை அளிப்பது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் புறக்கணிப்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு மாறாக நடந்து கொள்வது, கவர்னருக்கான மரபுகளை மீறி அரசியல் ரீதியாகத் தலையிடுவது என்று தமிழ்நாடு கவர்னர் தொடர்ந்து சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

    'ஆளுநருக்கு சட்டம் தெரியுமா? தெரியாதா? என்று கேட்ட உச்ச நீதிமன்றம், "ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்ததன் மூலம் உச்ச நீதிமன்றத்தை அவமதித்துள்ளார். முதல்-அமைச்சரின் தனிப்பட்ட அதிகாரத்தில் தலையிட்டு உள்ளார்.

    அரசியல் சாசனத்தை ஆளுநர் முறையாகப் பின் பற்றவில்லை" என்றெல்லாம் கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்து இருக்கிறது. இதற்குப் பிறகும் ஆளுநர் பதவியில் அவர் தொடர்வது நாட்டுக்கு உகந்ததல்ல. எனவே அவர் தாமே முன் வந்து பதவி விலக வேண்டும்.

    ஆளுநர் பதவி விலகாவிட்டால் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திருநாவுக்கரசர் எம்.பி. தனக்கு ஏதாவது ஒரு தொகுதியில் வாய்ப்பு கொடுங்கள் என்று தீவிரமாக போராடி கொண்டிருக்கிறார்.
    • முக்கியமாக ‘சீட்’ கேட்கும் எல்லோருமே டெல்லியிலேயே முகாமிட்டு அவரவர்களுக்கு நெருக்கமான தலைவர்கள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால் 90-க்கும் மேற்பட்ட தலைவர்கள் மோதுவதால் யாருக்கு எந்த தொகுதியை கொடுப்பது என்று முடிவு செய்ய முடியாமல் டெல்லியில் அகில இந்திய தலைவர்களும் தலையை பிய்த்து கொண்டிருக்கிறார்கள்.

    கடந்த 3 நாட்களாக தொடரும் ஆலோசனையில் 4 தொகுதிகளின் வேட்பாளர்களை மட்டும் முடிவு செய்துள்ளார்கள். இதனால் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது.

    திருநெல்வேலி தொகுதியை திருநாவுக்கரசர், ராம சுப்பு, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கேட்டு மல்லுக்கட்டுகிறார்கள். இதற்கிடையில் பக்கத்து தொகுதியான கன்னியாகுமரியில் தற்போது விஜய் வசந்த் எம்.பி.யாக இருக்கிறார். அவர் இந்து நாடார் சமூகத்தை சேர்ந்தவர்.

    ஆனால் இந்த முறை கிறிஸ்தவ நாடாருக்கு வழங்க வேண்டும் என்று கடுமையாக போராடுகிறார்கள். அதை சமாளிக்க விஜய் வசந்தை நெல்லைக்கு போகும்படி கேட்டுள்ளார்கள். அதை அவர் ஏற்கவில்லை.

    எனவே நெல்லையில் கிறிஸ்தவ நாடாரை வேட்பாளராக போடலாமா? என்று ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு ஆகியோரும் அழுத்தம் கொடுக்கிறார்களே என்ன செய்வது என்றும் யோசிக்கிறார்கள்.

    புதிதாக வழங்கப்பட்ட தொகுதி மயிலாடுதுறை. இந்த தொகுதியில் போட்டியிட டெல்லியில் நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி கேட்கிறார். அதேநேரம் ஆரணி தொகுதி பறிபோனதால் மயிலாடுதுறையில் வாய்ப்பு தாருங்கள் என்று விஷ்ணுபிரசாத் மல்லு கட்டுகிறார்.

    கடலூர் தொகுதியை முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநில துணை தலைவர் நாசே ராமச்சந்திரன் ஆகியோர் விடாப்பிடியாக கேட்கிறார்கள்.

    கிருஷ்ணகிரி தொகுதியை முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, தற்போதைய எம்.பி. டாக்டர் செல்லக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கோபிநாத் ஆகியோர் கேட்டு மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்கள்.

    ஒரே ஒரு தனித்தொகுதி திருவள்ளூர். எனவே ஒட்டு மொத்த தலித் தலைவர்களும் அந்த தொகுதியை கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். முன்னாள் எம்.பி.யும், அகில இந்திய செயலாளருமான பி.விசுவநாதன், சசிகாந்த் செந்தில், தற்போதைய எம்.பி. ஜெயக்குமார், எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் ஆகியோர் தீவிரமாக இருக்கிறார்கள்.

    இதற்கிடையில் திருநாவுக்கரசர் எம்.பி. தனக்கு ஏதாவது ஒரு தொகுதியில் வாய்ப்பு கொடுங்கள் என்று தீவிரமாக போராடி கொண்டிருக்கிறார்.

    முக்கியமாக 'சீட்' கேட்கும் எல்லோருமே டெல்லியிலேயே முகாமிட்டு அவரவர்களுக்கு நெருக்கமான தலைவர்கள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். எனவேதான் பட்டியல் உறுதியாவது தாமதமாகி வருகிறது. இன்று மாலைக்குள் வெளியாகிவிடும் என்று நம்பிக்கையுடன் கூறினார்கள்.

    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 29-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 29-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 27-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும். மேலும், இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×