search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selaiyur Sub Inspector Arrested"

    • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜ் வங்காளதேசத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • ஜான் செல்வராஜ் இதற்கு முன்பு சென்னை மடிப்பாக்கம், தேனாம்பேட்டை போலீஸ் நிலையங்களிலும் பணியாற்றியுள்ளார்.

    தாம்பரம்:

    சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சேலையூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஜான் செல்வராஜ். இவரது சொந்த ஊர் திருச்சி ஆகும். சென்னை மடிப்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த அவர் அங்கிருந்தபடி சேலையூர் போலீஸ் நிலையத்துக்கு பணிக்கு சென்று வந்தார்.

    இவர் போலீஸ் நிலையத்தில் இருந்து கோர்ட்டுகளுக்கு குற்றவாளிகளை அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும் இவர் அடிக்கடி மருத்துவ விடுப்பில் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்தநிலையில் அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மருத்துவ விடுப்பில் சென்றிருந்தார். அதன் பிறகு அவர் இதுவரை பணிக்கு திரும்பவில்லை.

    இந்த நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜ் வங்காளதேசத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலையூர் போலீஸ் நிலையத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்காளதேச எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக கூறி அவரை வங்காளதேச ராணுவ அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

    போலீஸ் நிலையத்தில் இருந்து கோர்ட்டுகளுக்கு குற்றவாளிகளை அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்ட போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜுக்கு, சட்டவிரோத கும்பலுடன் தொடர்பு எற்பட்டதா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் போதைப்பொருள் உள்ளிட்ட வழக்குகளில் பிடிபடும் குற்றவாளிகளையும் கோர்ட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்படி அழைத்து செல்லும்போது அவருக்கு போதைப்பொருள் கடத்தும் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாரின் மத்தியில் எழுந்துள்ளது.

    கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜிடம் வங்காளதேச ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகுதான் இது தொடர்பான விரிவான விவரங்கள் வெளிவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    கைது செய்யப்பட்டுள்ள சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜ் இதற்கு முன்பு சென்னை மடிப்பாக்கம், தேனாம்பேட்டை போலீஸ் நிலையங்களிலும் பணியாற்றியுள்ளார். கடந்த 2 வருடமாக அவர் சேலையூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    ×