என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 40 தொகுதிகளின் வேட்பாளர்களையும் சீமான் ஒரே மேடையில் அறிமுகம்.
- நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களில் 20 பேர் பெண் வேட்பாளர்கள்.
மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளது.
ஏற்கனவே அறிவித்தபடி, சென்னையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக பொதுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் ? என்ற பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 40 தொகுதிகளின் வேட்பாளர்களையும் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்துள்ளார்.
இதில், கிருஷ்ணிகிரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டியிடுவதால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களில் 20 பேர் பெண் வேட்பாளர்கள்.
அப்போது அறிமுக கூட்டத்தில் சீமான் பேசியதாவது:-
தனித்து நிற்கிறோம், தனித்துவத்தோடு நிற்கிறோம். தனித்து நின்று உண்மையான உயரத்தை காட்ட வேண்டும் என்பதாலே தனித்து நிற்கிறோம்.
மாற்று மாற்று என்று பேசிவிட்டு பின்பு அதே கட்சியுடன் கூட்டணி வைப்பது ஏமாற்று.
சின்னத்தை பார்த்து வாக்களிப்பதை விட்டுவிட்டு எண்ணத்தை பார்த்து வாக்களியுங்கள்.
இங்கு கூடியிருப்பது சீமானுக்கான கூட்டம் அல்ல. சீமான் ஏற்றுக்கொண்ட தலைவனுக்கான கூட்டம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- பாஜகவிற்கு மாறுபவர்கள் மீது சட்டம் தனது கடமையை செய்யாதது ஏன் ?
- திமுக அறிக்கையை காப்பி அடித்து தேர்தல் அறிக்கையை ஈபிஎஸ் வெளியிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நாகை, தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண் வருகிறார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கருணாநிதி பிறந்த, வளர்ந்த, வென்ற பகுதிகளை உள்ளடக்கிய தொகுதிக்கு வந்துள்ளேன். இந்தியாவின் புதிய அத்தியாயத்தை எழுதக்கூடிய தேர்தல் பிரசாரத்திற்காக வந்துள்ளேன்.
பிரசார கூட்டத்தை மாநாடு போல் ஏற்பாடு செய்த அனைவருக்கும் பாராட்டுகள்.
முரரொலியை படித்து வளர்ந்த நான், வேட்பாளர் முரசொலிக்காக வாக்கு கேட்கிறேன். இந்திய கம்யூ.வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகம் இருக்காது. மாநிலங்கள் இருக்காது.
கண்ணுக்கு எதிரிலேயே ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை பார்த்தோம். காஷ்மீரில் எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் வைத்துள்ளனர்.
இந்தியாவில் எல்லா கட்டமைப்புகளையும் பாஜக சிதைத்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் நிலைமை தமிழகத்திற்கு வரலாம்.
பாஜகவிற்கு மாறுபவர்கள் மீது சட்டம் தனது கடமையை செய்யாதது ஏன் ? பாஜக அழுகுனி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. மோடியின் ஆட்சி தொடர்வது தமிழகத்திற்கு அழிவு, இந்தியாவிற்கு நல்லது அல்ல.
தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்காத திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் வெளிச்சம் பாய்ச்சும் அளவிற்கு விடியலை திமுக அரசு வழங்கி வருகிறது.
திமுக ஆதரிக்கும் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும். வங்கிகளில் குறைந்தபட்ச தொகை திட்டம் இருக்காது.
திமுக ஆதரிக்கும் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ ரத்து செய்யப்படும். விற்பனை சந்தைகள் அமைக்கப்படும். திருவாரூரில் இருந்து புதிய ரெயில்கள்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை எடப்பாடி பழனிசாமியின் பம்மாத்து அறிக்கை. திமுக அறிக்கையை காப்பி அடித்து தேர்தல் அறிக்கையை ஈபிஎஸ் வெளியிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியில் ஆளுநர் ஆய்வுக்கு புறப்பட்டபோது திமுக போராட்டம் நடத்தியது. இப்போது, ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தியுள்ளோம்.
ஆளுநர் விவகாரத்தில் இப்போது அதிமுக என்ன செய்கிறது? அதிமுக ஆதரித்ததால் தான் சிஏஏ சட்டம் அமலுக்கு வந்தது. மதுரை எய்ம்ஸ் விஷயத்தில் இழுத்தடிப்பது குறித்து மோடியிடம் அதிமுக கேள்வி கேட்டதா ?
கருப்புபணம் உள்ளிட்ட மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றினாரா ? 15 லட்சம் கூட வேண்டாம், 15 ரூபாயாவது மோடி கொடுத்தாரா ?
வேலை வாய்ப்பு அளிக்காமல் படித்த இளைஞர்கள் பக்கோடா விற்கலாம் என கூறினார்கள்.
விவசாயிகளை பாதிக்கும் 3 சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்தபோது அதிமுக என்ன செய்தது. பச்சை துண்டு போட்டபடி விவசாயிகளை ஈபிஎஸ் ஏமாற்றினார்.
விவசாயிகளுக்கு எதுவும் செய்யாததால் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடக்கிறது. அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை விட விவசாயிகள் தான் மோடிக்கு எதிரியாக தெரிகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருச்சி மற்றும் தேனி ஆகிய தொகுதிகளில் அமமுக போட்டியிட உள்ளது.
- தேனியில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை டிடிவி தினகரன் தொடங்குகிறார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள அமமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நாளை அறிவிக்க உள்ளார்.
பாஜக கூட்டணியில் திருச்சி மற்றும் தேனி ஆகிய தொகுதிகளில் அமமுக போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இதுதொடர்பாக அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அமமுக கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட G.கல்லுப்பட்டி, அருள்மிகு பட்டாளம்மன் திருக்கோயில் அருகே நாளை 24.03.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில், நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் தேனி மற்றும் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளார்.
அதன் தொடர்ச்சியாக தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை டிடிவி தினகரன் தொடங்கவிருக்கிறார். அதற்கான விவரப்பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
- சென்னை ஆர்.கே.நகரில் செயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் சிம்லா முத்துச்சோழன்.
மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக தனது முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
இதில், நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நெல்ல தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டு அதிமுக அறிவித்துள்ளது.
அதன்படி, சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக இணை செயலாளரான ஜான்சிராணி வேட்பாளராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஜான்சிராணி தற்போது திசையான்விளை பேரூராட்சி தலைவராகவும் உள்ளார்.
திமுக வில் இருந்து அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் வேட்பாளராக சிம்லா அறிவிக்கப்பட்டார். சென்னை ஆர்.கே.நகரில் செயலலிதாவை எதிர்த்து சிம்லா முத்துச்சோழன் போட்டியிட்டவர்.
ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழனுக்கு வாய்ப்பு கொடுப்பதா என எதிர்ப்பு எழுந்த நிலையில் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- திருச்சி சூர்யா, சாட்டை துரைமுருகனை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
- ஆடியோவை திருச்சி சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மக்களவை தேர்தல் நடைபெறும் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
பாஜக கட்சி கூட்டணி தொகுதி பங்கீடுகள் முடிவடைந்த நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல், 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.
இதில், தென் சென்னையில் தமிழசை சவுந்தரராஜன், கோவையில் அண்ணாமலை, விருதுநகரில் ராதிகா சரத்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
பரபரப்பான தேர்தல் கள நேரத்தில், தமிழக பாஜக நிர்வாகியான திருச்சி சூர்யா சிவா, நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளரும் யூட்யூபருமான சாட்டை துரைமுருகனுக்கும் இடையேயான ஆடியோ உரையாடலை வெளியிட்டுள்ளார்.
திருச்சி சூர்யா, சாட்டை துரைமுருகனை போனில் தொடர்பு கொண்டு, "அண்ணாமலை குறித்து சாட்டை துரைமுருகன் பேசிய வீடியோவை நீக்குமாறும், இனிமேல் அதுபோன்று வீடியோக்களை வெளியிட வேண்டாம் எனவும்" கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த சாட்டை துரைமுருகன், "இனிமே பாஜகவை எதிர்த்து வீடியோ வெளியிட மாட்டேன், அண்ணனே சொல்லிவிட்டார். நாம் தமிழரின் முழு டார்கெட்டும் திமுகதான் என்று. ஆகையால் இதை விட்டுவிடுங்கள். இனிமே பார்த்துக்கொள்கிறேன். 100 விழுக்காடு உறுதியாக இனி அப்படி வீடியோ வராது" என கூறியிருந்தார்.

சாட்டை துரைமுருகனோடு பேசிய இந்த ஆடியோவை திருச்சி சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோ சர்ச்சையை கிளப்பியது.
ஏற்கனவே, நாம் தமிழர் கட்சி பாஜகவிற்கு மறைமுகமாக ஆதரவாக இருப்பதாக பேசப்படுகிறது. இந்த சூழலில், திருச்சி சூர்யா கேட்டதற்கினங்க பாஜகவிற்கு ஆதரவாக பதிலளித்தது மட்டுமின்றி எங்களது டார்கெட் பாஜக அல்ல என குறிப்பிட்டிருப்பது நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆடியோ தீயாய் பரவியதை அடுத்து, சாட்டை துரைமுருகன், திருச்சி சூர்யாவை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டிருப்பதாவது, 'ஆடியோல என்னடா சொல்றது இங்கேயே சொல்றேன். எங்கள் இனத்தை கொன்றொழிக்க காரணாமாக இருந்த காங்கிரசும் துணை நின்ற திமுகவும் எங்கள் முதல் எதிரிகள் ! அவர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக் கட்டவே நாம்தமிழர் கட்சி துவங்கப்பட்டது !
பாஜக மனித குலத்திற்கு ஆபத்து அண்ணாமலை போன்றவர்கள் தமிழ்நாட்டு அரசியலுக்கே பேராபத்து என்பதை சொல்லி காணொளி போட்டதற்கு காலில் விழாத குறையாக கெஞ்சி கோரிக்கை வைப்பது போல் அலைபேசி உரையாடலை பதிவு செய்து போடுவதெல்லாம் சில்லரைத்தனத்தின் உச்சம் ! இதுக்காகவே கோவையில் தங்கியிருந்து அண்ணாமலை போன்றவர்களை காலி செய்வோம் !' என குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகத்தில் பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.
- தென் சென்னையில் தமிழசை சவுந்தரராஜன், கோவையில் அண்ணாமலை போட்டி.
மக்களவை தேர்தல் நடைபெறும் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடுகள் முடிவடைந்த நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல், 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.
இதில், தென் சென்னையில் தமிழசை சவுந்தரராஜன், கோவையில் அண்ணாமலை, விருதுநகரில் ராதிகா சரத்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக அமர் பிரசாத் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- துர்க்கை ஈஸ்வரனின் உடல் புதைத்த இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
- டாக்டர்கள் குழுவினர் அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகுமுத்து என்பவரது மகன் துர்க்கை ஈஸ்வரன் (வயது 32). விவசாயியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் கைக்குழந்தை உள்ளது.
இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி வீட்டிலிருந்து போன துர்க்கை ஈஸ்வரன் 17-ந் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.ஆனால் அதிக மது போதையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று கருதிய குடும்பத்தினர் அவரது உடலை புதைத்து விட்டனர்.
இந்தநிலையில் துர்க்கை ஈஸ்வரனின் இறப்பு சான்றிதழ் வழங்குவதற்காக விசாரணை மேற்கொண்ட கிராம நிர்வாக அலுவலர் பிரபுவிடம் சிலர் துர்க்கை ஈஸ்வரனின் மரணம் குறித்து சந்தேகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
உடல் தோண்டியெடுப்பு இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பிரபு அளித்த புகாரின் பேரில் துர்க்கை ஈஸ்வரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அதே ஊரை சேர்ந்த ராமேஸ்வரன் (45) என்பவர் முன்விரோதம் காரணமாக துர்க்கை ஈஸ்வரனை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் துர்க்கை ஈஸ்வரனின் உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய முடிவு செய்தனர். அதன்படி துர்க்கை ஈஸ்வரனின் உடல் புதைத்த இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
பின்னர் டாக்டர்கள் குழுவினர் அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றதும் அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- 8 டிக்கெட்டுகள், ரூ.31,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. சி.எஸ்.கே.-பெங்களூரு அணிகள் மோதிய ஆட்டத்தில் கள்ளச் சந்தையில் அதிக விலையில் டிக்கெட்டுகள் விற்பனையானது.
இது தொடர்பான வினோத்குமார், அசோக் குமார், இமானுவேல், ரூபன், சரவணன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 டிக்கெட்டுகள், ரூ.31,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
- தாராபுரம் தொகுதியில் 298 வாக்குச்சாவடிகள் உள்ளன.
- உடுமலை தொகுதியில் 294 வாக்குச்சாவடிகள் உள்ளன.
திருப்பூர்:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிக்களுக்குரிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி முடிந்தது. இதையடுத்து திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலமாக அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று முடிந்தது.
இந்தநிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இன்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு கிடங்கு திறக்கப்பட்டு 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது.
கண்ட்ரோல் யூனிட், இ.வி.எம்., - வி.வி.பேட் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், ஜி.பி.எஸ்., பொருத்திய வாகனத்தில், 8 சட்டசபை தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டது.
தாராபுரம் தொகுதியில் 298 வாக்குச்சாவடிகள் உள்ளன. கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் தலா 360, விவிபேட் 390 அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இவை தாராபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படுகிறது. காங்கயம் தொகுதியில் 295 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 356, விவிபேட் 386 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவை காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்படுகிறது.
அவினாசி சட்டமன்ற தொகுதியில் 313 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 378, விவிபேட் 410 அனுப்பி வைக்கப்பட்டது. இவை அவினாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இருப்பு வைக்கப்படுகிறது. திருப்பூர் வடக்கு தொகுதியில் 379 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 458, விவிபேட் 496 அனுப்பி வைக்கப்பட்டது. இவை திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்படுகிறது.
திருப்பூர் தெற்கு தொகுதியில் 242 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 292, விவிபேட் 317 அனுப்பி வைக்கப்பட்டது. இவை திருப்பூர் குமரன் பெண்கள் கல்லூரியில் இருப்பு வைக்கப்படுகிறது. பல்லடம் தொகுதியில் 412 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 498, விவிபேட் 539 அனுப்பி வைக்கப்பட்டது. அவை பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டது.
உடுமலை தொகுதியில் 294 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 355, விவிபேட் 385 அனுப்பி வைக்கப்பட்டன. இவை உடுமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் இருப்பு வைக்கப்பட்டது. மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 287 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 347, விவிபேட் 375 அனுப்பி வைக்கப்பட்டன. இவை மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்படுகிறது. 8 தொகுதியில் கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவு எந்திரங்கள் தலா 3 ஆயிரத்து 44-ம், விவிபேட் 3 ஆயிரத்து 298-ம் பயன்படுத்தப்படுகிறது.
- அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை.
- சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்தது ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து கடந்த 18-ந்தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? இல்லையா? என்பது குறித்து நிலுவையில் உள்ள மூல வழக்கில் தான் முடிவு செய்ய முடியும் என ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் கூறி உள்ளது.
42 ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டர், முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த எனக்கு, கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்தது ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்களோ, அல்லது கட்சியின் தொண்டர்களோ புகார் அளிக்காத நிலையில் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை. இரண்டு விதமான கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் இணைய தளத்தில் பதிவேற்றி உள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.சக்திவேல் அமர்வில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 4-வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப் பட்டுள்ளது.
இதற்கிடையே அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று திண்டுக்கல்லைச் சேர்ந்த எஸ்.சூரியமூர்த்தி தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் அளித்த பதில் மனுவில், "சூரியமூர்த்தி அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினரே இல்லை. சின்னம் தொடர்பாக மனு அளிக்க அவருக்கு உரிமை இல்லை" என பதில் அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் கே.சி.சுரேன், ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவில், எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக, கட்சியின் அவைத் தலைவர் தேர்தல் ஆவணங்களான ஏ.பி. படிவங்களில் கையெழுத்திட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் சூரிய மூர்த்தி மற்றொரு மனுவை நேற்று தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சிவில் நீதிமன்றம் இன்றளவும் என்னை அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே பல்வேறு சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கோ, வேறு நபர்களுக்கோ ஒதுக்க கூடாது என தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- 6 சட்ட மன்றத் தொகுதிகளைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி தோழமை கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சென்னை:
தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் முனைவர். த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, தொகுதியில் மேற்கொள்ளவிருக்கும் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளர் மயிலை த.வேலு தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், சைதாப் பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், தியாகராயர் நகர், மயிலாப்பூர் ஆகிய 6 சட்ட மன்றத் தொகுதிகளைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி தோழமை கட்சிகளான, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், சமத்துவ மக்கள் கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி, ஆம் ஆத்மி மற்றும் பல்வேறு தோழமைக் கட்சி களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தொகுதியில் வீதி வீதியாக இல்லம் தோறும் சென்று வாக்குகள் சேகரித்து, திமுக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய அனைத்து பணிகளையும் செய்வது குறித்து முடிவு செய்யப்பட்டது.
நிறைவாக கூட்டத்தில் பேசிய அமைச்சர் மா.சுப்பிர மணியன், "தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழச்சி தங்கபாண்டியன் மிகச் சிறப்பாக பணியாற்றி உள்ளார். நாடாளுமன்றத்தில் தொகுதியின் பிரச்சினைகள் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த பெண்களின் உரிமைக் குரலாக ஒலித்திருக்கிறார். கழகத் தோழர்கள், தோழமைக் இயக்கத் தோழர்களின் எழுச்சியை பார்க்கும் போது நமது வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குறைந்தது 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்றார்.
- மாவட்டத்தில் 18 தேர்தல் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது. தற்போது கூடுதலாக 5 பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.
- நாகர்கோவில் வடசேரி குறிஞ்சி பஜார் பகுதியில் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தக்கலை:
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. மேலும் பணம் மற்றும் பொருட்கள் பட்டுவாடா செய்வதை கண்டறியும் வகையில் பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. எனவே மாவட்டத்தில் 18 தேர்தல் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது. தற்போது கூடுதலாக 5 பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்
அப்போது அந்த வழியாக ஒரு பிக்கப் வேன் வந்தது. அந்த வேனை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வேனில் தங்க, வெள்ளி நகைகள் இருந்தன. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதனையடுத்து நகைகளை வேனுடன் பறிமுதல் செய்த அதிகாரிகள், திருவட்டார் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு வருமான வரித்துறை அதிகாரி செல்வராஜ் தலைமையிலான பணியாளர்கள் விடிய விடிய விசாரணை நடத்தியதில் அந்த வேனில் 2½ கிலோ தங்க நகைகளும் 4 கிலோ வெள்ளி நகைகளும் இருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.1½ கோடிக்கு மேல் இருக்கும் என தெரிகிறது.
அந்த நகைகள் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில் இருந்து உரிய ஆவணமின்றி கோயம்புத்தூர் பகுதியில் உள்ள மற்றொரு நகைக்கடைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து வருமான வரித்துறையினர் உரிய ஆவணங்களை சமர்பித்து எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினர். தற்போது நகைகளுடன் அந்த வேனை பறிமுதல் செய்து போலீஸ் பாதுகாப்புடன் தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதற்கிடையில் நாகர்கோவில் வடசேரி குறிஞ்சி பஜார் பகுதியில் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இன்று காலை வரை ரூ.36 லட்சத்து 23 ஆயிரத்து 372 ஆவணங்களின்றி கொண்டு சென்றதாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






