என் மலர்
நீங்கள் தேடியது "அரசு பள்ளி மாணவன்"
- ஆட்சியர் பள்ளிக்கு சென்று, மாணவர் விஜய் படிக்கும் வகுப்பறையில் அவரை சந்தித்து கலந்துரையாடினார்.
- மாணவன், ஆட்சியரிடம் போட்டித் தேர்வுகளை எந்த மொழியில் எழுதினீர்கள்? என கேட்டான்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர் விஜய், ஆட்சியர் துர்காமூர்த்திக்கு கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பி இருந்தார்.
அதில் 'வாட்ஸ்-அப் குழுக்களில் பகிரப்பட்ட குறுஞ்செய்தி மூலம் ஆட்சியர் பணிக்கு நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்து வந்துள்ளீர்கள் என்பதை நான் அறிந்தேன். எனவே தாங்கள் எங்களது பள்ளிக்கு வரவேண்டும்' என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
அந்த மாணவரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நேற்று எருமப்பட்டி பேரூராட்சியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஆட்சியர், அங்குள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று, மாணவர் விஜய் படிக்கும் வகுப்பறையில் அவரை சந்தித்து கலந்துரையாடினார்.
ஆட்சியர் துர்காமூர்த்தி, மாணவன் எழுதிய கடிதத்தை படித்தபோது கண்கலங்கினார்.
மழைக்காக காத்திருக்கும் பயிர்களைப்போல உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம் என்று மாணவன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை வாசித்த அவர், மாணவனை பாராட்டி புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
அப்போது மாணவன், ஆட்சியரிடம் போட்டித் தேர்வுகளை எந்த மொழியில் எழுதினீர்கள்? என கேட்டான். அதற்கு ஆட்சியர், ஆங்கிலத்தில் எழுதினேன் என்றார்.
உடனே ஏன் தமிழில் எழுத முடியாதா? என மாணவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆட்சியர், 'தாராளமாக தமிழில், நமது தாய்மொழியில் எழுதலாம். இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வு பெற்றவர்கள், பலர் தங்கள் தாய்மொழியில் எழுதி உள்ளார்கள். அதிலும் தமிழில் எழுதியவர்கள் அதிகமானவர்கள் உள்ளனர்' என்றார். இவ்வாறு மாணவர் மற்றும் ஆட்சியர் இடையே கலந்துரையாடல் சுவாரசியமாக நடந்தது.
தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர், நீங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு, பல்வேறு சாதனையாளர்களாக வரவேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். மேலும் தன்னை பள்ளிக்கு அழைத்த மாணவருக்கு ஆட்சியர் புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கியும் பாராட்டினார்.
- மாணவன் தனது வீட்டிற்கு சென்று புத்தகப்பைக்குள் அரிவாளை எடுத்து வைத்துக்கொண்டான்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை அழைத்து விசாரித்துள்ளனர்.
சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள வெள்ளாளங்குளம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பிளஸ்-2 படிக்கும் மாணவன் ஒருவன் சம்பவத்தன்று சக மாணவனை விளையாட்டாக தலையில் தட்டியுள்ளான். இதைப்பார்த்து அந்த மாணவன் கோபம் அடைந்து திட்டியுள்ளான்.
அதன் பின்னர் சக மாணவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி உள்ளனர். ஆனாலும் தன்னை தலையில் தட்டிய மாணவர் மீது தொடர்ந்து ஆத்திரத்தில் இருந்த அந்த மாணவன் தனது வீட்டிற்கு சென்று புத்தகப்பைக்குள் அரிவாளை எடுத்து வைத்துக்கொண்டான்.
பின்னர் மறுநாள் பள்ளிக்கு வந்தபோது, தனது தலையில் தட்டிய சக மாணவனை அவன் கொண்டு வந்திருந்த அரிவாளை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் தனது ஆசிரியரிடம் தகவலை தெரிவித்துள்ளான்.
இதுகுறித்து உடனடியாக சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை அழைத்து விசாரித்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து அரிவாள் வைத்திருந்த மாணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவன் கமல் நாத் நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
- பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முருகேசன். விசைத்தறி கூடத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி.
இவர்களது மகன் கமல் நாத். இவர் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதி முடிவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நடந்து முடிந்த நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் மாணவன் கமல் நாத் 720-க்கு 623 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மேலும் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 561 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாணவன் கமல் நாத்துக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
- மொழி புரியாமல் என்ன என்று கேட்டபோது, திடீரென அந்த மாணவனை பிடித்து இழுத்து சென்று உள்ளனர்.
- சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்தபோது, மாணவன் அடையாளம் கூறிய கார் வேகமாக செல்வது பதிவாகியுள்ளதை வைத்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த நாகம்பட்டி போயர்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன். இவர் மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பதால், மதியம் 1 மணிக்கு மேல் பள்ளி செயல்படுகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் அவரது வீட்டில் இருந்து சுமார் 11.50 மணியளவில் கிளம்பி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையில் நின்றுக்கொண்டிருந்த வெள்ளை நிற காரை கடந்து சென்றுக்கொண்டிருந்த போது, அதிலிருந்து வெளியே வந்த அடையாளம் தெரியாத நபர், பேசுவது போல் இந்தியில் பேசியுள்ளார்.
மொழி புரியாமல் என்ன என்று கேட்டபோது, திடீரென அந்த மாணவனை பிடித்து இழுத்து சென்று உள்ளனர். அதற்குள்ளாக சுதாரித்துக்கொண்ட மாணவன், தன்னை யாரோ கடத்துவதற்கு முயற்சிப்பதை உணர்ந்து, கையிலிருந்த பள்ளி பையை கழட்டிவிட்டு அவர்களிடமிருந்து தப்பித்து அங்கிருந்து ஓடியுள்ளார். இதனை உணர்ந்த சக மாணவர்களும் கையிலிருந்த பையை கீழே போட்டுவிட்டு அனைவரும் ஓடியுள்ளனர்.
அப்போது அவ்வழியே யாரும் செல்லாததால், அந்த கார் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றது. பின்னர் மாணவன் பையை எடுத்து கொண்டு உடன் வந்த அனைத்து மாணவர்களையும் அழைத்து கொண்டு, சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ள மத்தூர் போலீஸ் நிலையம் சென்று அங்கு புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்து வருகின்றனர். அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்தபோது, மாணவன் அடையாளம் கூறிய கார் வேகமாக செல்வது பதிவாகியுள்ளதை வைத்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவனிடம் கேட்டபோது, பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது காரை நிறுத்திவிட்டு வந்த நபர் என்னிடம் பேசுவது போல் பேசிவிட்டு, திடீரென என்னை இழுத்து காரில் போட முயற்சித்தார். நான் அவரிடமிருந்து தப்பித்து ஓடிவிட்டேன். அப்போது ஏற்கனவே காரியில் இரு அரசு பள்ளி மாணவர்கள் இருந்ததை கவனித்தேன். அதில் ஒரு மாணவன் காரிலிருந்து வெளியே கத்திக்கொண்டு வந்தபோது, அவனை தலையில் தாக்கி உள்ளே தூக்கி போட்டனர் என தெரிவித்தான். இந்த சம்பவம் மத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






