search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளிகள்: சென்னையிலும் சதி செயலுக்கு திட்டமா?
    X

    சென்னையில் தங்கி இருந்த ஷாசிப், தாஹா ஆகியோரை காணலாம்

    பெங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளிகள்: சென்னையிலும் சதி செயலுக்கு திட்டமா?

    • ஷாசிப், தாஹா இருவரும் சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துள்ளனர்.
    • தொப்பியை தலையில் மாட்டிக்கொண்டு தான் ஷாசிப் பெங்களூரு சென்றுள்ளார்.

    சென்னை:

    பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளான ஷாசிப், தாஹா ஆகிய இருவரும் சென்னை திருவல்லிக்கேணி லாட்ஜில் ஒரு மாதம் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இருவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகிறார்கள். இவர்களில் ஷாசிப் தான் தொப்பி அணிந்து கொண்டு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த ராமேஸ்வரம் கபே ஓட்டலில் இருந்து வெளியேறுவது கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் முதலில் தெரிய வந்துள்ளது.

    அவர் தவற விட்டுச்சென்ற தொப்பி, அதில் ஒட்டி இருந்த தலைமுடி ஆகியவற்றை வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகளும், கர்நாடக மாநில போலீசாரும் துப்பு துலக்கி வந்தனர். இந்த நிலையில்தான் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் இருவரும் தங்கி இருந்து சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.

    ஷாசிப், தாஹா இருவரும் சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துள்ளனர்.

    அதுதொடர்பான தகவல்கள் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலமாக தெரிய வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதேபோன்று இருவரும் சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். பலரை சந்தித்தும் பேசி இருக்கிறார்கள். இதன் மூலம் ஷாசிப், தாஹா இருவருக்கும் சென்னையில் பலர் அடைக்கலம் கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் யார்-யார் என்பது பற்றி அறிய விசாரணையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இருவரும் எங்கெல்லாம் சென்றார்கள் என்பது பற்றிய தகவல்களை கண்டறிய 1000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலமாக துப்பு துலக்கப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது.

    ஷாசிப், தாஹா இருவரும் பெங்களூருவில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது போல சென்னையிலும் சதி திட்டத்தில் ஈடுபட திட்டம் வகுத்தார்களா? என்கிற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் பற்றி உளவுப்பிரிவு போலீசாரும் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வணிக வளாகத்துக்கு சென்று இருவரும் தொப்பி ஒன்றை வாங்கி இருக்கிறார்கள். இந்த தொப்பியை தலையில் மாட்டிக்கொண்டு தான் ஷாசிப் பெங்களூரு சென்றுள்ளார். அவருடன் தாஹாவும் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    வணிக வளாகத்திற்கு சென்று தொப்பியை வாங்கியதுபோல சென்னையில் வேறு எங்காவது சென்று குண்டுவெடிப்பு சதி செயலுக்கு தேவையான பொருட்கள் ஏதாவது இருவரும் வாங்கினார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இப்படி பெங்களூரு குண்டுவெடிப்பு குற்றவாளிகள் சென்னையில் எந்தவித தங்குதடையுமின்றி குறிப்பிட்ட லாட்ஜில் தங்கி சென்றிருப்பது சென்னை போலீசாரை கடும் அதிச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    இதன் மூலம் சென்னைக்கு குற்றச்செயல்களில் தொடர்புடைய யார் வேண்டுமானாலும் வரலாம், தங்கலாம் என்கிற நிலை உள்ளதா? என்கிற அச்சம் மேலோங்கி இருப்பதை மறுப்பதற்கில்லை.

    இதையடுத்து சென்னை மாநகர போலீசார் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    Next Story
    ×