search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு பணமழை பொழிய வாய்ப்பு?
    X

    கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு பணமழை பொழிய வாய்ப்பு?

    • கோவையில் பறக்கும் படையினரின் கண்காணிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.
    • சோதனைச்சாவடிகள் வழியாக வரும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதன் காரணமாக இந்த தொகுதி மாநில அளவில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் திரும்பி பார்க்கும் தொகுதியாக மாறி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மும்முனை போட்டி நிலவினாலும் கோவையில் இந்த போட்டி இன்னும் மிக கடுமையாக உள்ளது.

    மற்ற அரசியல் கட்சியினருக்கு சிம்ம சொப்பனமாக திகழும் அண்ணாமலையை வீழ்த்தும் நோக்கில் இந்த தொகுதியில் மற்ற கட்சிகளின் களப்பணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆளும் கட்சியான தி.மு.க. கோவை பாராளுமன்ற தொகுதியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் இந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுக்காமல் அந்த கட்சியே பெற்று களமிறங்கி உள்ளது. தற்போது அண்ணாமலை போட்டியால் மிக கவனமாக காய்களை நகர்த்தி வருகிறது. முன்னாள் மேயரான கணபதி ராஜ்குமாரை வேட்பாளராக களமிறக்கி தீவிர களப்பணியில் குதித்துள்ளது. வரும் நாட்களில் இந்த தொகுதியில் வாக்கு சேகரிப்பு பணியை மேற்கொள்ள அமைச்சர்கள் பலர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல அ.தி.மு.க.வும் கடுமையான போட்டியில் இறங்கி உள்ளது. கோவையை தங்கள் கோட்டையாக கருதும் அந்த கட்சி செல்வாக்கை தக்க வைக்க களமிறங்கி உள்ளது.

    அண்ணாமலை வருகையால் ஏற்பட்ட மிக கடுமையான போட்டியால் மற்ற தொகுதிகளை விட இந்த தொகுதியில் பணமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். வாக்காளர்களை கவரும் வகையில் பணம், பரிசு பொருட்கள் அதிகளவில் வழங்கப்படலாம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

    கோவையில் தற்போது களமிறங்கி உள்ள பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். கோவையில் என்னை வீழ்த்தும் நோக்கில் கோடிக்கணக்கான ரூபாய் கொண்டு வந்து செலவு செய்வார்கள். பணமழை இங்கே பொழியும், இலவசங்கள் அள்ளித்தரப்படும். ஆனால் நான் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன் என கூறி உள்ளார்.

    கோவை தொகுதியில் பணப்புழக்கம் அதிகம் இருக்க வாய்ப்பு இருப்பதால் பறக்கும் படையினர் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளனர். தனிப்படைகளின் எண்ணிக்கையும் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. தனிப்படையினர் இரவு- பகல் பாராமல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சோதனைச்சாவடிகள் வழியாக வரும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

    இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது கோவையில் பறக்கும் படையினரின் கண்காணிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை ரூ.1 கோடியே 68 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 72 வழக்குகள் பதிவாகி உள்ளது. பரிசு பொருட்கள் என்று எதுவும் சிக்கவில்லை. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுக்கப்படுகிறதா என்பதைதொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.

    Next Story
    ×