என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Satyabrata Sahoo"

    • தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மறுபடியும் வெள்ளிக்கிழமை ஸ்பீடு போஸ்ட் மூலம் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைத்தார்.
    • வருகிற 16-ந் தேதி கூடும் தேர்தல் கமிஷன் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் யார்-யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்று வரும்போது ஒருவர் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக ஆர்.வி.எம். என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை (ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது.

    இது தொடர்பாக வருகிற 16-ந்தேதி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் அந்தந்த மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளிடம் கருத்து கேட்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

    அது மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு யார் பெயரில் கடிதம் அனுப்ப வேண்டும் என்று அந்த கடிதத்தில் விளக்கி இருந்தது.

    அதன்படி அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கும், தி.மு.க., பா.ம.க.வில் தலைவர்களுக்கும், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் பொதுச் செயலாளர்களுக்கும் பதவிகளை குறிப்பிட்டு அழைப்பு அனுப்ப வேண்டும் என்று கூறி இருந்தது.

    இந்திய தேர்தல் கமிஷனின் இந்த விளக்க கடிதம் கடந்த வியாழக்கிழமை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு கிடைத்ததும் அதன் அடிப்படையில் அவர் ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் கமிஷனின் தபால் பட்டுவாடாவை ஊழியர் மூலம் (மெசேஞ்சர்) ஒவ்வொரு கட்சிக்கும் கொடுத்து அனுப்பினார். அதில் ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருந்ததால் அந்த கடிதத்தை அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளாமல் வியாழக்கிழமையே திருப்பி அனுப்பி விட்டனர்.

    இதன் பிறகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மறுபடியும் வெள்ளிக்கிழமை ஸ்பீடு போஸ்ட் மூலம் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைத்தார்.

    2-வதாக வந்த அந்த கடிதத்தையும் தலைமைக் கழகத்தில் வாங்காமல் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி விட்டனர். தபால் திரும்பி வந்ததற்கான அத்தாட்சி நேற்று தேர்தல் கமிஷனுக்கு வந்து விட்டது.

    இதனால் 16-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுகுறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கூறுகையில், "அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என்றும் இடைக்கால பொதுச் செயலாளர் பதவிதான் உள்ளது என்றும் இந்திய தேர்தல் கமிஷனுக்கு அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே 3 கடி தங்கள் கொடுத்து இருக்கிறோம்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூடிய விவரங்கள், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் அதில் குறிப்பிட்டுள்ளோம்.

    எனவே இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு மறுபடியும் கடிதம் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.

    எனவே வருகிற 16-ந் தேதி கூடும் தேர்தல் கமிஷன் கூட்டத்தில் எடப்பாடி பழனி சாமி- ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் யார்-யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த சூழலில் தேர்தல் கமிஷனின் கடிதத்தை 2 முறை அ.தி.மு.க. நிராகரித்து திருப்பி அனுப்பிய விவரத்தை இந்திய தேர்தல் கமிஷனுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு விரிவாக தெரிவித்துள்ளார்.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதால் அதை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வாங்க மறுத்து உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    மின்னஞ்சல் மூலம் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த சட்டசபை பொதுத்தேர்தலின்போது கொரோனா நோய்த்தொற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்தாலும் ஒரே வாக்குச்சாவடியில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு இடைத்தேர்தலின்போதும் பதட்டம் நிறைந்த பகுதிகளை வரையறுப்பது வழக்கமாகும், அதே போல் ஈரோடு தொகுதியில் பதட்டம் நிறைந்த வாக்குசாவடிகளை கண்டறிய மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டிருக்கிறேன்.

    வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன், பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். தற்போது முதல் கட்ட அளவில் பதட்டம் நிறைந்த பகுதிகள் குறித்த விவரங்களை கேட்டிருக்கிறேன்.

    தேர்தலுக்கான செலவினங்களுக்கு நிதித்துறையின் ஒப்புதல் பெற வேண்டும், இதற்காக, தேர்தல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது.

    இந்தப் பணிகள் அனைத்தும் வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக முடிக்கப்படும். கடந்த சட்டசபை பொதுத் தேர்தலின்போது கொரோனா நோய்த்தொற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டது.

    அதன்படி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடிகள் 2-ஆகப் பிரிக்கப்பட்டது. ஒரே வளாகத்தில் துணை வாக்குச்சாவடி ஏற்படுத்தப்பட்டு, ஒரு வாக்குச்சாவடியில் 600 வாக்காளர்களும், மற்றொரு வாக்குச்சாவடியிலும் 600 வாக்காளர்களும் என்ற அளவில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    ஆனால் தற்போது கொரோனா தொற்று குறைந்து இயல்பான நிலை திரும்பியுள்ளது, இதைக் கருத்தில் கொண்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்தாலும் ஒரே வாக்குச்சாவடியில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

    கொரோனா காலத்தில் இருந்ததைவிட வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையும், தேர்தல் பணியாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறையும். அதன்படி தேர்தல் செலவும் குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெளியில் உள்ள பணத்தை தி.மு.க. நிர்வாகிகளால் அரசாங்க வருவாயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கின்ற வேலையும் செய்வதாக நாங்கள் அறிகிறோம்.
    • அரசாங்கப் பணத்தை எடுத்து ஒரு கட்சி தன்னுடைய தேர்தல் லாபத்திற்காக பயன்படுத்துவது என்பது அரசியல் அமைப்பிற்கு எதிரான ஒன்று.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடப்பதாக அ.தி.மு.க. தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

    இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார் தலைமைச் செயலகத்துக்கு சென்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் பரபரப்பு புகார் கடிதம் ஒன்றை கொடுத்தார்.

    நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் தி.மு.க. அரசு பல்வேறு வகையான குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்து அதன் மூலம் தேர்தல் ஆதாயம் அடைந்து, குறுக்கு வழியில் வெற்றிகளை ஈட்டலாம் என எண்ணி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் புதுப்புது தேர்தல் தில்லுமுல்லுகளை அரங்கேற்றி வருகிறது.

    அதில் ஒரு பகுதியாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளில் தினமும் விற்பனையாகும் பணம் அந்த துறையின் அமைச்சர் சொல்லும் நபரிடம் சேர்க்கப்படுகிறது. அதை அவர்கள் தேர்தல் பணிக்காக பயன்படுத்துவதாக நாங்கள் அறிகிறோம்.

    மேலும், வெளியில் உள்ள பணத்தை தி.மு.க. நிர்வாகிகளால் அரசாங்க வருவாயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கின்ற வேலையும் செய்வதாக நாங்கள் அறிகிறோம்.

    இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் மட்டுமல்லாமல் அரசாங்கப் பணத்தை எடுத்து ஒரு கட்சி தன்னுடைய தேர்தல் லாபத்திற்காக பயன்படுத்துவது என்பது அரசியல் அமைப்பிற்கு எதிரான ஒன்று.

    ஏற்கனவே தி.மு.க.வினர், தொகுதி முழுவதும் 111 இடங்களில் கொட்டகை அமைத்து மக்களை அடைத்து வைத்து எதிர்க்கட்சிகளின் பிரசாரத்திற்கு அவர்களை செல்லவிடாமல் தினந்தோறும் ரூ.1000 வழங்கி, 3 வேளையும் உணவு கொடுத்து ஒரு புதுவித ஈரோடு தேர்தல் பார்முலாவை கையில் எடுத்திருக்கக்கூடிய இந்த வேளையில், தற்போது டாஸ்மாக் விற்பனை பணத்தை அதே தொகுதிக்கு செலவழித்து, அரசாங்கப் பணத்திலும் எப்படி தேர்தல் பணி செய்யலாம் என்கின்ற ஒரு பார்முலாவை இந்த தேர்தலில் புகுத்தி இருக்கிறார்கள்.

    எனவே, உடனடியாக தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்கள் இந்த நவீன முறைகேட்டில் ஈடுபடும் தி.மு.க. நிர்வாகிகள் மீது கவனம் செலுத்தி, முறையாக டாஸ்மாக் விற்பனை பணம் அன்றைய தினமே அரசு கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், தொகுதிக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளில் இருந்து வரும் விற்பனை பணத்தை வசூல் செய்து அதை உரிய வங்கிகளில் அரசாங்கக் கணக்கில் வரவு வைப்பதற்கு, இந்தத் தேர்தல் முடியும்வரை ஒரு தனி அதிகாரியை நியமித்து மேற்பார்வை இடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இது குறித்து அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் ஈரோடு தேர்தல் முறைகேடு குறித்து இன்று மீண்டும் புகார் அளித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தி.மு.க. விதிமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு பணத்தை தண்ணீர் போல் வாரி இறைக்கிறார்கள். மேலும் வாக்காளர்களை இன்ப சுற்றுலாவுக்கு அழைத்து செல்கிறார்கள். ஜனநாயக முறைப்படி அங்கு தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. ஜனநாயகம் செத்துவிட்டது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி அறைபோட்டு விஞ்ஞான ரீதியாக யோசித்து தேர்தல் விதிகளை மீறி வருகிறார். ஈரோடு தொகுதியில் உள்ள 40 டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் வருவாயை தேர்தல் பணிக்கு பயன்படுத்தி வருகிறார். தி.மு.க.வினர் தொடர்ந்து தேர்தல் விதி முறைகளை மீறி வருகிறார்கள். அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 1 லட்சத்து 4 ஆயிரத்து 141 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
    • ஜூலை 1-ந் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.

    சென்னை :

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம், ஜனவரி 1-ந் தேதி மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகியவற்றை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்த்து வருகிறது.

    அந்த அடிப்படையில், ஜூலை 1-ந் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். அதன்படி 1 லட்சத்து 39 ஆயிரத்து 108 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    27 ஆயிரத்து 332 வாக்காளர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு முகவரி மாற்றம் செய்து உள்ளனர். 3 லட்சத்து 42 ஆயிரத்து 185 வாக்காளர்களின் பெயர்கள் இடமாறுதல், இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டு உள்ளன.

    மேலும் 1 லட்சத்து 4 ஆயிரத்து 141 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    ஜூலை 10-ந் தேதி வரையிலான கணக்குப்படி தமிழ்நாட்டில் 6 கோடியே 10 லட்சத்து 39 ஆயிரத்து 316 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 கோடியே 29 ஆயிரத்து 237 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 10 லட்சத்து 2 ஆயிரத்து 98 பெண் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 981 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
    • இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜனவரி 5-ந் தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறுகிறது. அந்த காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வு செய்யப்படும்.

    அதன் பின்னர் வரும் ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கும் நாளன்று, சரிபார்ப்புக்கு வசதியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் வரும் அக்டோபர் 17-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்றே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:-

    தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியாக அறிவிக்கப்பட்ட வரும் அக்டோபர் 17-ந் தேதிக்கு பதிலாக அக்டோபர் 27-ந் தேதி வெளியிடப்படும். இதற்கான அட்டவணையை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் அன்றைய தினம் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளும் தொடங்கும்.

    அதன்படி, அக்டோபர் 27-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

    இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், டிசம்பர் 26-ந் தேதி வரை பரிசீலிக்கப்படும். அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜனவரி 5-ந் தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.

    வாக்காளர் பட்டியல் திருத்த காலகட்டத்தில் ஆதார் இணைப்புக்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். பல மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகங்கள் ஆதார் இணைப்புக்கான முகாம்களை நடத்துகின்றனர். ஆனால் நகர்ப்புறங்களில் ஆதார் இணைப்பு குறைவாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டத்தில் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
    • கள்ள ஓட்டுகளை முற்றிலும் தடுப்பது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    1.1.2024 அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி நாளை மறுநாள் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட உள்ளார். இதில் தேவையான திருத்தங்கள் செய்த பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் 2024 ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்படும்.

    இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தை இன்று கூட்டி இருந்தார்.

    இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி, தாயகம் கவி எம்.எல்.ஏ. பங்கேற்றனர். அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வக்கீல் இன்பதுரை கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் நவாஸ், சந்திர மோகன், பா.ஜனதா சார்பில் கராத்தே தியாகராஜன், சவுந்தரராஜன் பங்கேற்றனர்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் ஆறுமுக நயினார், சுந்தர்ராஜன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் டாக்டர் ரவீந்திரநாத், வீரபாண்டியன், தே.மு.தி.க. சார்பில் துணைப் பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, தேசிய மக்கள் கட்சி சார்பில் சீனிவாசன், ரமேஷ், ஆம்ஆத்மி சார்பில் ஸ்டெல்லா மேரி, பாரூக், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சத்தியமூர்த்தி, சார்லஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை தலைமை தேர்தல் அதிகாரியிடம் எடுத்து கூறினார்கள்.

    கள்ள ஓட்டுகளை முற்றிலும் தடுப்பது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, போலி வாக்காளர் பெயர்களை கண்டறிந்து நீக்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன் வைத்தனர்.

    இந்த கருத்துக்களை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கேட்டுக்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

    • விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு ஜவுளிகள் ஆணையர் வள்ளலார்.
    • தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் சரவணவேல்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 27-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தற்போது 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் தொடங்கின. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளை கண்காணிப்பதற்காக மாவட்ட அளவில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி கமிஷனர் மைதிலி ராஜேந்திரன்; காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு சிறு தொழில்கள் கழக மேலாண்மை இயக்குனர் மதுமதி; விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு ஜவுளிகள் ஆணையர் வள்ளலார்;

    கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களுக்கு தமிழ்நாடு மீன்வளத்துறை ஆணையர் பழனிசாமி; அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களுக்கு நில சீர்திருத்த ஆணையர் வெங்கடாசலம்; தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு வேளாண்மை ஆணையர் சுப்பிரணியன்;

    கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலேண்மை இயக்குனர் சங்கர்; திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகவ ராவ்;

    மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையர் சுந்தரவல்லி; தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் சரவணவேல்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 10 பேரையும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் 1½ மணி நேரம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை அழைத்து ஆய்வு செய்வது, அதற்கு தேவையான அறிவுரைகளை வழங்குவது, இதற்காக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு 3 முறை பயணிப்பது ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை சத்யபிரதா சாகு வழங்கினார்.

    • புதிய வாக்காளர்களை சேர்க்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
    • தேர்தல் தொடர்பான குற்றங்களில் நிலுவை நிலையினை குறைக்க போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சுருக்கத்திருத்தம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த மாவட்ட தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வாக்குப்பதிவிற்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்குப்பதிவை சரிபார்க்கும் கருவிகள் தயார் நிலையில் உள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய உள்ள வாய்ப்புகள் குறித்து வாக்காளர்களுக்கும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6 ஐ பயன்படுத்த வேண்டும். பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்கு படிவம் 8 ஐ பயன்படுத்த வேண்டும். இதுகுறித்த சிறப்பு சுருக்கத்த முகாம்கள் வருகிற 25, 26-ந் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடத்தப்படும். இந்த வாய்ப்பை வாக்காளர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    தமிழ்நாடு எப்போதும் அமைதியான மாநிலம். ஒரே கட்டமாக எப்போதும் தேர்தல் நடத்தப்படுகின்றது. வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயர் 2 இடங்களில் இருத்தல், இறந்தவர்களின் பெயர்கள் ஆகியவற்றை நீக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

    ஒரே வாக்காளரின் பெயர் 2 இடங்களில் இடம்பெற்றிருந்தால் வாக்காளரின் ஒப்புதல் பெற்று அவர்கள் எங்கு வாக்களிக்க விரும்புகின்றார்கள் என்பதை எழுத்தப்பபூர்வமாக பெற்ற பிறகு மற்றொரு இடத்தில் பெயர் நீக்கம் செய்யப்படும்.

    புதிய வாக்காளர்களை சேர்க்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக கல்லூரிகளில் புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாணவர்களிடையே எவ்வாறு வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக்கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

    பதற்றமான வாக்குச்சாவடிகளை போலீசார் கள ஆய்வு செய்ய வேண்டும். திருநங்கைகளை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்கள் அங்கீகரிக்கபட்ட அனைத்து கட்சி அரசியல் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்த வேண்டும். தேர்தல் தொடர்பான குற்றங்களில் நிலுவை நிலையினை குறைக்க போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    • சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் உள்ள 3 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
    • 18, 19-ந் தேதி நடைபெறுவதாக இருந்த முகாம்கள் தள்ளி வைக்கப்பட்டன.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த மாதம் 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 38 லட்சத்து 68 ஆயிரத்து 178 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் படிவம் 6ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7ஐ பூர்த்தி செய்தும் வழங்க வேண்டும். சட்டமன்ற தொகுதிக்குள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடி பெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்கள் வேறு தொகுதிக்கு குடி பெயர்ந்தவர்கள் படிவம் 8ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

    இதற்கான சிறப்பு முகாம் 4 நாட்கள் நடத்தப்பட்டது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் உள்ள 3 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்பட்டது.

    முதல் கட்டமாக 4 மற்றும் 5-ந்தேதி நடந்தது. 18, 19-ந் தேதி நடைபெறுவதாக இருந்த முகாம்கள் தள்ளி வைக்கப்பட்டன. அந்த முகாம்கள் நாளை (25-ந்தேதி) மறுநாள் (26-ந்தேதி) நடைபெற்றது.

    இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய இதுவரை 15.33 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

    புதிதாக பெயர் சேர்க்க 9.13 லட்சம் பேரும், பெயர் நீக்க 1.21 லட்சம் பேரும், முகவரி மாற்றம் செய்ய 4.99 லட்சம் பேரும் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

    • தற்போது பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் வரும் மார்ச் மாதம் வழங்கப்படும்.
    • பாராளுமன்ற தேர்தல் தொடர்பான தயார்நிலை பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை:

    சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    கடந்த அக்டோபர் 27-ந்தேதி முதல் கடந்த 9-ந்தேதி வரையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தொடங்கி உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிவடைந்தால்கூட, பெயர் சேர்த்தல், திருத்தம் போன்றவற்றுக்காக ஆன்லைனிலும், தாலுகா அலுவலகங்களில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அந்த விண்ணப்பங்கள் ஜனவரி மாதத்துக்குப் பின்னர்தான் பரிசீலிக்கப்படும்.

    தற்போது பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் வரும் மார்ச் மாதம் வழங்கப்படும்.

    இதுதவிர, ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருப்போர், புதிய அட்டைக்காக ஆன்லைனில் விண்ணப்பித்தால் இலவசமாக வழங்கப்படுகிறது.

    பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் அலுவலகம், மாவட்ட வருவாய் அதிகாரிகள் அலுவலகம் ஆகியவற்றில் அடுத்த 10 நாட்களில் தலா ஒரு மின்னணு எந்திரம் வைக்கப்பட உள்ளது. இந்த அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் இந்த எந்திரங்களை பயன்படுத்தி வாக்களிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது.

    தேசிய வாக்காளர் தினத்திற்கு பின்னர் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாகனத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு சென்று, வாக்களிப்பது எப்படி? என்பது குறித்து மக்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பான தயார்நிலை பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ள காலகட்டத்தில் வரும் பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை மற்றும் திருவிழாக்கள், பண்டிகைகள் குறித்த விவரங்களை தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். இந்த விவரங்கள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    மிச்சாங் புயல், மழை காரணமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக ஸ்ரீரங்கம்.
    • வழக்கம்போல் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

    மாவட்டங்களில் உள்ள  வாக்காளர் பட்டியலில் விவரம் வெளியீடு:-

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 9 லட்சத்து 87 ஆயிரத்து 478 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 41 ஆயிரத்து 827 பெண் வாக்காளர்களும், 166 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 20 லட்சத்து 29 ஆயிரத்து 471 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் என்பது குறிப்பிடதக்கது.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 10,45,551 ஆண் வாக்காளர்களும், 10,77,438 பெண் வாக்காளர்களும், 287 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 21 லட்சத்து 23 ஆயிரத்து 276 வாக்காளர்கள் உள்ளனர். இதில் வழக்கம்போல் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

    இறுதி வாக்காளர் பட்டியலின்படி கோவை மாவட்டத்தில் 15,09,906 ஆண்கள், 15,710,93 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 595 என மொத்தம் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர்.

    திருச்சி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 91 ஆயிரத்து 890 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 11 ஆயிரத்து 573, பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 79 ஆயிரத்து 985-யும், பிற வாக்காளர்கள் 332 பேரும் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக ஸ்ரீரங்கமும், குறைந்த வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்ற தொகுதியாக லால்குடியும் உள்ளது.

    • அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, நிர்வாகிகளுடன் ஆலோசனை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் ஈடுபட்டுள்ளன.
    • அடையாள அட்டையை புதுப்பிக்க தபால் மூலம் அனுப்ப தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் தனிச்செயலாளர் தபால் நிலையம் சென்றுள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, நிர்வாகிகளுடன் ஆலோசனை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் ஈடுபட்டுள்ளன.

    தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தன்னுடைய அடையாள அட்டையை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அவர் அளித்துள்ள புகார் மனுவில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை புதுப்பிக்க தபால் மூலம் அனுப்ப தனிச்செயலாளர் தபால் நிலையம் சென்றுள்ளார். அப்போது, அட்டை காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×