search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவிழா, பொதுத்தேர்வுகள் விவரங்களை அரசிடம் கேட்டுள்ளோம்: தலைமை தேர்தல் அதிகாரி
    X

    திருவிழா, பொதுத்தேர்வுகள் விவரங்களை அரசிடம் கேட்டுள்ளோம்: தலைமை தேர்தல் அதிகாரி

    • தற்போது பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் வரும் மார்ச் மாதம் வழங்கப்படும்.
    • பாராளுமன்ற தேர்தல் தொடர்பான தயார்நிலை பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை:

    சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    கடந்த அக்டோபர் 27-ந்தேதி முதல் கடந்த 9-ந்தேதி வரையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தொடங்கி உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிவடைந்தால்கூட, பெயர் சேர்த்தல், திருத்தம் போன்றவற்றுக்காக ஆன்லைனிலும், தாலுகா அலுவலகங்களில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அந்த விண்ணப்பங்கள் ஜனவரி மாதத்துக்குப் பின்னர்தான் பரிசீலிக்கப்படும்.

    தற்போது பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் வரும் மார்ச் மாதம் வழங்கப்படும்.

    இதுதவிர, ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருப்போர், புதிய அட்டைக்காக ஆன்லைனில் விண்ணப்பித்தால் இலவசமாக வழங்கப்படுகிறது.

    பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் அலுவலகம், மாவட்ட வருவாய் அதிகாரிகள் அலுவலகம் ஆகியவற்றில் அடுத்த 10 நாட்களில் தலா ஒரு மின்னணு எந்திரம் வைக்கப்பட உள்ளது. இந்த அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் இந்த எந்திரங்களை பயன்படுத்தி வாக்களிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது.

    தேசிய வாக்காளர் தினத்திற்கு பின்னர் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாகனத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு சென்று, வாக்களிப்பது எப்படி? என்பது குறித்து மக்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பான தயார்நிலை பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ள காலகட்டத்தில் வரும் பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை மற்றும் திருவிழாக்கள், பண்டிகைகள் குறித்த விவரங்களை தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். இந்த விவரங்கள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    மிச்சாங் புயல், மழை காரணமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×