search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழனி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
    X

    பழனி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    • பங்குனி உத்திர திருவிழாவில் கடந்த 18ம் தேதி கொடியேற்றம் நடந்தது.
    • பழனியில் இன்று மாலை திருக்கல்யாணம், நாளை தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் தற்போது பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    பங்குனி உத்திர திருவிழாவில் கடந்த 18ம் தேதி கொடியேற்றம் நடந்தது. அப்போது எர்ணாகுளத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் பழனி கோவிலுக்கு ரெயிலில் வருகை தந்தார். மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல பழனி ரெயில்நிலையம் வந்தபோது கேரளாவை சேர்ந்த 3 பேர் பழனி ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றி வந்துள்ளனர். அவர்களை ஏற்கனவே கேரளாவில் பார்த்திருந்த முருகேசன் அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்தார். அதன்பின் சொந்த ஊருக்குச் சென்ற அவர் கேரள மாநில டி.ஜி.பி.க்கு பழனி ரெயில் நிலையத்தில் நடந்த விபரங்கள்குறித்து இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்தார்.

    பின்னர் அங்கிருந்து தமிழக டி.ஜி.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

    இதனையடுத்து இன்று ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, ஆர்.பி.எப். இன்ஸ்பெக்டர் சுனில்குமார், பழனி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சேர்ந்து வெடிகுண்டு உள்ளதா என்று சோதனை மேற்கொண்டனர்.

    பயணிகள் ஓய்வெடுக்கும் அறைகள், குப்பை தொட்டி, கடைகள், ரெயில்வே தண்டவாளம் என அனைத்து பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர். இதனை தொடர்ந்து அடிவாரம் பகுதியில் உள்ள கடைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    பழனியில் இன்று மாலை திருக்கல்யாணம், நாளை தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். எனவே பக்தர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அடுத்துவரும் 3 நாட்களுக்கும் தொடர் சோதனை, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையால் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×