என் மலர்
உள்ளூர் செய்திகள்
- விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூா்:
திருவண்ணாமலையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் சிவ சண்முகம் ஓட்டி வந்தார்.
இன்று காலை அந்த பஸ் கும்பகோணத்திற்கு வந்து சிறிது நேரம் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி கொண்டிருந்தது. மீண்டும் அங்கிருந்து தஞ்சாவூருக்கு பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
அப்போது தஞ்சாவூர் அருகே மானாங்கோரை என்ற இடத்தில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த சிறிய பாலத்தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு கவிழ்ந்தது. பயணிகள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்... என்று கூக்குரலிட்டனர்.
தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீசார் மற்றும் அப்பகுதி பொது மக்கள் பஸ்சின் இடிபாடுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் 26 பயணிகள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி தஞ்சை கீழலாயத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி லட்சுமி (வயது 50) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, மற்ற 25 பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.
- வழக்கு விசாரணைக்கு நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.
தாம்பரம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நயினார் நாகேந்திரன் ஓட்டலில் வேலை பார்த்த சதீஷ், பெருமாள் உள்பட3 பேரை கைது செய்து தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 3 பேரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் நயினார் நாகேந்திரன், ஆசைதம்பி, சென்னை அபிராமிபுரத்தை சேர்ந்த பா.ஜனதா மாநில தொழில் துறை பிரிவின் தலைவர் கோவர்தனன், பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஜெய்சங்கர், நவீன், பெருமாள் உள்ளிட்டோர் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது. வழக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்று ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் ஆகியோர் தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன், இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் ஆஜரானார்கள்.
அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 2-வது சம்மன் அனுப்ப ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- சென்னை விமான நிலையத்தில் ரூ.28 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
- போதைப் பொருள் கடத்திய இளைஞரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சென்னை:
நாடு முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்த மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், போலீசாரும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கடந்த பிப்ரவரி மாதம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக டெல்லியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ போதைப்பொருளை டெல்லி சிறப்பு போலீசாரும், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் கைப்பற்றினார்கள்.
மேலும் அந்த குடோனில் இருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது சென்னையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது.
இதையடுத்து சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியது தெரியவந்தது. இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துக்கு பிறகு போதைப்பொருள் விவகாரம் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து போதைப்பொருட்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
தமிழகத்திலும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் விற்பவர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், கத்தார் நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.28 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டுஉள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு மிகப்பெரிய அளவில் போதைப்பொருட்களை கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை அதிகாரிகள் இன்று அதிகாலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பாரத் வசித்தா (28), என்ற பயணி, தோகாவில் இருந்து சென்னை வந்து விட்டு, மற்றொரு விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்காக, டிரான்சிட் பயணியாக சென்னை விமான நிலையத்திற்குள் அமர்ந்திருந்தார்.
மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவரை நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அவர் வைத்திருந்த பையை பரிசோதித்தபோது அதில் சுமார் ஒரு கிலோ எடை கொண்ட போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் வாலிபர் பாரத் வசித்தாவின் பயணத்தை ரத்துசெய்தனர். பின்னர் அவரை தனியாக அழைத்துச் சென்று அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
அவர் கடத்தி வந்த போதை பொருளை பரிசோதித்தபோது, அது மிகவும் விலை உயர்ந்த கோகைன் போதைப்பொருள் என்பது தெரிய வந்தது. அந்த போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.28 கோடி இருக்கலாம் என்று தெரிகிறது.
இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் வாலிபர் பாரத் வசித்தாவை கைதுசெய்தனர். அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் போதைப்பொருளை எங்கு கடத்திச் சென்றார் என்பது தொடர்பாக விசாரித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வாலிபர் பாரத் வசித்தா, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
எனவே அவர் எவ்வளவு நாட்களாக போதைப்பொருட்களை கடத்தி வருகிறார்? அவருக்கு இந்தியாவில் யார்-யாருடன் தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
- ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது.
- வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டால் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதம் ஆவதற்கான சூழல் ஏற்படும்.
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற்றுவிட்டது. அதனைத் தொடர்ந்து 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கி நடந்தது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி விரைந்து ஆண்டு இறுதித் தேர்வை முடிக்க கல்வித் துறை திட்டமிட்டு அதற்கேற்றாற் போல் அட்டவணையை வெளியிட்டு தேர்வை நடத்தியது. அந்த அட்டவணைப்படி, கடந்த 12-ந்தேதியுடன் தேர்வு நிறைவு பெறுவதாக இருந்தது.
ஆனால் ரம்ஜான் பண்டிகையையொட்டி, கடந்த 10 மற்றும் 12-ந்தேதிகளில் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நடத்த இருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் 22 மற்றும் 23-ந்தேதிக்கு மாற்றப்பட்டது. இவர்களைத் தவிர 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 6-ந்தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டுவிட்டது.
கல்வித் துறை மாற்றி அறிவித்த அட்டவணையின்படி, தேர்தல் முடிந்ததும், நேற்று முன்தினமும் (22-ந்தேதி), நேற்றும் (23-ந்தேதி) 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முறையே அறிவியல், சமூக அறிவியல் தேர்வு நடந்து முடிந்தது.
தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், இன்று (புதன்கிழமை) முதல் மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்பது குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. அதற்கு பிறகே பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் கோடை காலமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டால் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதம் ஆவதற்கான சூழலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
- பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- நாளை காலை 5.15 மணிக்கு கருடசேவை நடக்கிறது.
சென்னை:
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கான சித்திரைமாத பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முதல் நாளில் தர்மாதி பீடத்தில் அருள்பாலிப்பதுடன், புன்னைமர வாகனத்தில் வீதி உலா நடந்தது. இன்று பரமபதநாதன் திருக்கோலத்தில் சேஷ வாகன வீதி உலா மற்றும் சிம்ம வாகன வீதி உலாவும் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 5.15 மணிக்கு கருடசேவை நடக்கிறது.
வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சூரிய பிரபை, சந்திர பிரபை, தொடர்ந்து வருகிற 27-ந்தேதி நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கு சேவையும் நடைபெறுகிறது. 6-ம் நாள் திருவிழாவான வருகிற 28-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 29-ந்தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 3.30 மணிக்கு பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்கிறார். காலை 7 மணி அளவில் தேரோட்டம் வடம் பிடிக்கப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
- சென்னை சென்டிரல்-மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
- மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 26-ந் தேதி முதல் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்-மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து நியூ ஜல்பைகுரிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22611) இன்று (புதன்கிழமை) முதல் ஹிஜ்லி, கரக்பூர், பட்டா நகர் வழித்தடத்தில் செல்லும்.
அதேபோல, மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22605) வருகிற 26-ந் தேதி முதல் 2 மணி நேரம் தாமதமாக மதியம் 12 மணிக்கு புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவில் சர்வீஸ் தேர்வு கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வழங்கப்படுகிறது
- செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தற்போது வினாத்தாள்களை எளிதாக மொழிபெயர்ப்பு செய்யலாம்
ஐ ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத அனுமதியளித்துள்ள நிலையில், கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்நிலையில், அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று, வழக்கின் விசாரணையை ஜூன் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தற்போது எளிதாக மொழிபெயர்ப்பு செய்யலாம் என யோசனை தெரிவித்தனர்.
இந்த மொழி பெயர்ப்பு நூறு சதவீதம் சரியாக இல்லாவிட்டாலும், 70 சதவீதம் வரை சரியாக இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அவற்றை மனிதர்களைப் பயன்படுத்தி சரி செய்யலாம் எனவும், இது சம்பந்தமாக நேர்மறையாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
- 2017 ஆம் ஆண்டு தமிழ் நடிகர் சங்கம் தங்களுக்கான கட்டுமான பணியை தொடங்கியது
- ஆனால் சில பிரச்சனையினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன
நடிகர் சங்கத்தின் கட்டுமான பிரச்சனை 2017 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு தமிழ் நடிகர் சங்கம் தங்களுக்கான கட்டுமான பணியை தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் இதற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் சில பிரச்சனையினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், தென்னித்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளை தொடர்வதற்காக வைப்புரீதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து ரூ.50 இலட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி அவர்களிடம் வழங்கினார்.
இதற்கு முன்பாக, நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளுக்காக நடிகர் கமல்ஹாசன் 1 கோடியும், நடிகர் விஜய் 1 கொடியும் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஸ்ரீஜித் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பெண் புகார் அளித்திருந்தார்.
- அப்பெண்ணிடம் அடையாறு மகளிர் போலீசார், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்டனர்
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி அளித்த புகாரில், முன்னாள் பேராசிரியர் ஷீஜித் கிருஷ்ணா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஷீஜித் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தற்போது வெளிநாட்டில் வசிக்கும் அப்பெண் புகார் அளித்திருந்தார்.
அப்பெண்ணிடம் அடையாறு மகளிர் போலீசார், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்ட நிலையில், பிப்ரவரி 2024-ல் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஷீஜித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஷீஜித்தை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார் என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஷீஜித் கலாஷேத்ராவில் பணியாற்றவில்லை. தனியாக நடனப்பள்ளி அமைத்து மாணவிகளுக்கு நடனம் கற்றுக்கொடுத்து வருகிறார்.
கடந்தாண்டு இதே கல்லூரியில் பணியாற்றிய நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சர்வதேச மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கும் பணியை மீண்டும் தொடங்கியிருக்கிறது திமுக.
- பக்தர்களின் விருப்பத்திற்கு எதிராக சத்திய ஞான சபையை ஆக்கிரமிக்கும் முயற்சிகளை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சென்னை :
தமிழக பா.ஜ.க. மாநில தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பாராளுமன்றத் தேர்தலுக்காக வாலைச் சுருட்டிக் கொண்டிருந்த திமுக அரசு, தேர்தல் முடிந்ததும் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறது. வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடத்தை, சர்வதேச மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கும் பணியை மீண்டும் தொடங்கியிருக்கிறது திமுக.
கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலாரின் ஆன்மீகப் பணிகளுக்காக, பொதுமக்கள் மனமுவந்து தானமாக வழங்கிய நிலத்தில், 150 ஆண்டுகளுக்கும் மேலாக, அனைவரின் பசி தீர்க்கும் மேன்மையான பணி நடைபெறுவதோடு, ஆண்டுதோறும், லட்சக்கணக்கான பக்தர்கள், தைப்பூச தினத்தன்று ஜோதி தரிசனமும் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடம் கண்ணை உறுத்த, சர்வதேச மையம் என்று கூறி ஆக்கிரமிக்க முயற்சித்து வருவதை, கடந்த ஜனவர் 26 அன்று, குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரையின்போது சுட்டிக்காட்டி, உண்மையிலேயே திமுக அரசின் நோக்கம் சர்வதேச மையம் அமைப்பதுதான் என்றால், சத்திய ஞானசபைக்குச் சொந்தமான ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 30 ஏக்கர் நிலத்தை மீட்டோ, அல்லது வேறு இடத்திலோ அமைக்க வேண்டுமே தவிர, மீண்டும் சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்திருந்தோம்.
அதன்பிறகு, வள்ளலாரின் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் காரணமாகவும், கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்து நாடகமாடிய திமுக, தற்போது காவல்துறை பாதுகாப்புடன் மீண்டும் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படும் திமுகவின் இந்த அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அரசுக்குச் சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருக்கையில், விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைப்பது, வள்ளலார் அவர்களின் கொள்கைக்கு விரோதமாக, சத்திய ஞான சபைக்குச் சொந்தமான இடத்தில் சர்வதேச மையம் அமைப்பது என, திமுக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது.
பக்தர்களின் விருப்பத்திற்கு எதிராக சத்திய ஞான சபையை ஆக்கிரமிக்கும் முயற்சிகளை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ‘ஈரக்குமிழ் வெப்ப நிலை’ பாதிப்பு ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
- மாநிலத் திட்டக் குழுவானது தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய வெப்பத் தணிப்பு செயல்திட்டம் தொடர்பான வரைவு அறிக்கையை 2023ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு அளித்துள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
இந்தியா முழுவதும் 2024 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வழக்கத்தை விட அதிகமாக வெப்பம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மிக அதிக வெப்பம் நிலவும். இயல்பை விட அதிகமான நாட்கள் வெப்ப அலை வீசக்கூடும், பல நகரங்களை நகர்ப்புற வெப்பத்தீவு பதிப்பு தாக்கக் கூடும். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தும் 'ஈரக்குமிழ் வெப்ப நிலை' பாதிப்பு ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவானது ( தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய வெப்பத் தணிப்பு செயல்திட்டம் தொடர்பான வரைவு அறிக்கையை 2023ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு அளித்துள்ளது. இந்த திட்டத்தை உருவாக்குவதற்கான உதவிகளை இங்கிலாந்து அரசு செய்துள்ளது. ஆனால், இந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்பதை முதலமைச்சராகிய தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
உள்ளூர் அளவிலான வானிலை முன்னெச்சரிக்கைகள், நகர்ப்புற பசுமையை அதிகமாக்குதல், நீர்நிலைகள் பாதுகாப்பு, குளிர்ந்த கூறைகள் திட்டம், வெப்பத்தை சமாளிக்கும் காற்றோட்டமான கட்டுமானங்கள், மருத்துவ கட்டமைப்புகள், விழிப்புணர்வு பிரச்சாரம், வெப்ப ஆபத்தில் சிக்குவோருக்கான புகலிடங்கள், போதுமான குடிநீர் வசதிகள், போக்குவரத்தில் வெப்பத்தை சமாளித்தல் மற்றும் பொதுப்போக்குவரத்தை அதிகமாக்குதல், அவசர உதவி வசதிகள், பல்துறையினர் பங்கேற்பு, போதுமான நிதி ஆதாரம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக வெப்பத் தணிப்பு செயல்திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். இவற்றை செயலாக்குவதற்கான முழுமையான பொறுப்புடைமை விதிகளை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தி கோடைக் கால வெப்பத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் கருத்துக்களை கேட்டு, முழுமையான ஒரு வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.
- ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
- பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தினமும் ரூ.500 முதல் ரூ.1000 வரை ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 39 தொகுதிகளிலும் ஸ்டிராங்ரூமில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் துணை ராணுவ படையினரின் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தேர்தல் அதிகாரிகளும் ரோந்து சென்று வருகிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
இவ்வளவு கட்டுக்காவல் இருந்தாலும் அரசியல் கட்சிகளும் தங்கள் சார்பில் தொண்டர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி இருக்கிறது. சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டுள்ள தொண்டர்கள் 8 மணி நேரத்துக்கு ஒருமுறை மாறி மாறி காவல் இருக்கிறார்கள்.
இந்த வகையில் தி.மு.க. மற்றும் பா.ஜனதா சார்பில் தலா 9 பேர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அ.தி.மு.க. சார்பில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தினமும் ரூ.500 முதல் ரூ.1000 வரை ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. மேலும் உணவு, தண்ணீர் பாட்டில் நொறுக்கு தீனிகளும் வாங்கி கொடுக்கிறார்கள்.
மொத்தம் 44 நாட்கள் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒவ்வொரு வேட்பாளருக்கும் சுமார் ரூ.3 லட்சம் வரை செலவாகலாம் என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.






