search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை விமான நிலையத்தில் ரூ.28 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது: சர்வதேச கடத்தல்காரன் கைது
    X

    சென்னை விமான நிலையத்தில் ரூ.28 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது: சர்வதேச கடத்தல்காரன் கைது

    • சென்னை விமான நிலையத்தில் ரூ.28 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போதைப் பொருள் கடத்திய இளைஞரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    நாடு முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்த மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், போலீசாரும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கடந்த பிப்ரவரி மாதம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக டெல்லியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ போதைப்பொருளை டெல்லி சிறப்பு போலீசாரும், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் கைப்பற்றினார்கள்.

    மேலும் அந்த குடோனில் இருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது சென்னையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியது தெரியவந்தது. இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்தச் சம்பவத்துக்கு பிறகு போதைப்பொருள் விவகாரம் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து போதைப்பொருட்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    தமிழகத்திலும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் விற்பவர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில், கத்தார் நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.28 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டுஉள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு மிகப்பெரிய அளவில் போதைப்பொருட்களை கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை அதிகாரிகள் இன்று அதிகாலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அந்த நேரத்தில் கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பாரத் வசித்தா (28), என்ற பயணி, தோகாவில் இருந்து சென்னை வந்து விட்டு, மற்றொரு விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்காக, டிரான்சிட் பயணியாக சென்னை விமான நிலையத்திற்குள் அமர்ந்திருந்தார்.

    மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவரை நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அவர் வைத்திருந்த பையை பரிசோதித்தபோது அதில் சுமார் ஒரு கிலோ எடை கொண்ட போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் வாலிபர் பாரத் வசித்தாவின் பயணத்தை ரத்துசெய்தனர். பின்னர் அவரை தனியாக அழைத்துச் சென்று அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

    அவர் கடத்தி வந்த போதை பொருளை பரிசோதித்தபோது, அது மிகவும் விலை உயர்ந்த கோகைன் போதைப்பொருள் என்பது தெரிய வந்தது. அந்த போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.28 கோடி இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் வாலிபர் பாரத் வசித்தாவை கைதுசெய்தனர். அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் போதைப்பொருளை எங்கு கடத்திச் சென்றார் என்பது தொடர்பாக விசாரித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வாலிபர் பாரத் வசித்தா, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.

    எனவே அவர் எவ்வளவு நாட்களாக போதைப்பொருட்களை கடத்தி வருகிறார்? அவருக்கு இந்தியாவில் யார்-யாருடன் தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    Next Story
    ×