என் மலர்
இந்தியா
- தேசிய பாதுகாப்பு விஷயங்களில் இவ்வளவு திறமையற்ற ஒரு பிரதமரை இந்த நாடு ஒருபோதும் பார்த்ததில்லை.
- ட்ரம்ப் முன்பு நின்றதும் பிரதமர் மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்கி விடுகிறது.
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் இன்று முதல் விவாதத்தை தொடங்க இருப்பதாக ஆளும் கட்சி தெரிவித்தது. இதை எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டன.
அதன்படி மக்களவையில் நேற்று விவாதம் நடத்தப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், நேற்று ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, "பஹல்காம் படுகொலைக்கு பிரதமரும் உள்துறை அமைச்சரும் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும். 4 பயங்கரவாதிகள் இந்தியாவில் நுழைந்து, துப்பாக்கிச் சூடு நடத்தி அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் கொன்றுவிட்டு எவ்வித பயமும் இல்லாமல் அங்கிருந்து வெளியேறினர். அப்போது CISF, PSF மற்றும் நமது நாட்டின் பாதுகாப்பு எந்திரம் எங்கே இருந்தது?
தேசிய பாதுகாப்பு விஷயங்களில் இவ்வளவு திறமையற்ற ஒரு பிரதமரை இந்த நாடு ஒருபோதும் பார்த்ததில்லை. இப்போது, தனது தோல்வியை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, அவர் தன்னைப் புகழ்ந்து பேசுவதில் மும்முரமாக இருக்கிறார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய மக்கள் அனைவரும் உங்களுடன் ஒற்றுமையுடன் நின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இறுதியாக மீட்கப்படும் என்றும் நாங்கள் நம்பினோம். ஆனால், நீங்கள் பாதியிலேயே சண்டையை நிறுத்திவிட்டீர்கள்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னது தவறான தகவல் என்று X தளத்தில் பதிவிடக்கூட பிரதமர் மோடியால் ஏன் முடியவில்லை?
ட்ரம்ப் முன்பு நின்றதும் பிரதமர் மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்கி விடுகிறது. உயரம் 5 அடியாக குறைந்து விடுகிறது. ஏன் இவ்வளவு பயம்?" என்று தெரிவித்தார்.
- ஜஸ்டின் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
- கைது செய்யப்பட்ட 5 பேரும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை 5 மீனவர்களை கைது செய்தது. மேலும், ஜஸ்டின் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
கைது செய்யப்பட்ட 5 பேரும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெறவுள்ளது.
- இன்று பகல் 12 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்கவுள்ளார்.
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் இன்று முதல் விவாதத்தை தொடங்க இருப்பதாக ஆளும் கட்சி தெரிவித்தது. இதை எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டன.
அதன்படி மக்களவையில் நேற்று விவாதம் நடத்தப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இன்று பகல் 12 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிப்பார் எனவும் மாலை பிரதமர் மோடி விளக்கம் அளிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
- ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதிக்கு முடிவெடுக்க காலக்கெடு
- உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதிக்கு திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் கவர்னர் கிடப்பில் போடப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் "ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்காதபட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்" எனக் கூறியிருந்தனர்.
முதன்முறையாக உச்சநீதிமன்றம் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்தது. ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதிக்கு முடிவெடுக்க காலக்கெடு விதித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதிக்கு திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் ஒரு வாரத்தில் கருத்து தெரிவிக்க உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில், குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளை திரும்ப அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த பதில் மனுவில், உச்ச நீதிமன்றத்தால் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை மீறுவதற்காக மாறுவேடத்தில் செய்யப்பட்டதே இந்த மேல்முறையீடு என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த வழக்கு மீண்டும் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
ஜனாதிபதி எழுப்பியிருந்த 14 கேள்விகள்:
1. ஒரு மசோதா, கவர்னரின் ஒப்புதலுக்கு வரும்போது அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் அவருக்கு இருக்கும் சட்டரீதியான வாய்ப்புகள் என்ன?.
2. அவ்வாறு ஒரு மசோதா அனுப்பப்பட்டு, தனக்குரிய அனைத்து வாய்ப்புகளையும் கவர்னர் பயன்படுத்தும்போது, மந்திரிசபையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா?.
3. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின்கீழ், கவர்னரின் தனியுரிமை என்பது கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா?.
4. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின்கீழ் கவர்னரின் செயல்பாடுகள் தொடர்பாக கோர்ட்டு விசாரிக்க, அரசியல் சாசனத்தின் 361-வது பிரிவு தடையாக உள்ளதா?.
5. கவர்னரின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாசனம் காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில் கோர்ட்டு உத்தரவு மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?.
6. அரசியல் சாசனத்தின் 201-வது பிரிவின்கீழ், ஜனாதிபதியின் தனியுரிமை என்பது கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா?.
7. ஜனாதிபதியின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாசனம் காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில், கோர்ட்டு உத்தரவு மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?.
8. ஜனாதிபதியின் அனுமதிக்காக கவர்னர் மசோதாவை அனுப்பி வைக்கும்போது, அரசியல் சாசனத்தின் 143-வது பிரிவின்கீழ், சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை ஜனாதிபதி பெற முடியுமா?.
9. ஒரு சட்டம் அமலுக்கு வரும் முன்பு, கவர்னரும், ஜனாதிபதியும் அரசியல் சாசனத்தின் 200 மற்றும் 201-வது பிரிவுகளின்கீழ் எடுக்கும் முடிவுகள் கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா? மசோதா, சட்டம் ஆவதற்கு முன்பு, அதன் பொருள் குறித்து கோர்ட்டு விசாரிக்க அனுமதி உள்ளதா?.
10. ஜனாதிபதி, கவர்னர் ஆகியோரின் உத்தரவுகள் மற்றும் அதிகாரங்களை அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின்கீழ் வேறுவகையில் பிறப்பிக்க முடியுமா?.
11. மாநில சட்டசபை நிறைவேற்றும் சட்டத்தை கவர்னரின் ஒப்புதல் இல்லாமலே அமலுக்கு கொண்டுவர முடியுமா?.
12. அரசியல் சாசனத்தின் 145(3)-வது பிரிவின்படி, அரசியல் சாசனம் குறித்த ஆழமான கேள்விகள் எழுப்பப்படும் வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்புவது கட்டாயம் இல்லையா?.
13. அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின்கீழ், சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரங்கள், நடைமுறை சட்டத்துக்கு மட்டும் உட்பட்டதா? அல்லது அமலில் இருக்கும் அரசியல் சாசன நடைமுறைகளுக்கு முரண்பட்ட உத்தரவுகளை பிறப்பிக்க வழி செய்கிறதா?.
14. மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான சச்சரவுகளை அரசியல் சாசனத்தின் 131-வது பிரிவின்கீழ் சிறப்பு வழக்கு தொடுக்காமல், வேறு வகைகளில் தீர்வுகாண சுப்ரீம் கோர்ட்டின் அதிகார வரம்புக்கு அரசியல் சாசனம் தடையாக உள்ளதா?. மேற்கண்ட கேள்விகளை ஜனாதிபதி எழுப்பி இருந்தார்.
- அறுவை சிகிச்சைக்கு முன் நடத்தப்பட்ட இரத்த பரிசோதனையில் அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
- குடும்பத்தின் பெருமையை காக்க, போர்வையால் அவரை மூச்சுத் திணறடித்ததாக நிஷா நாகராஜப்பாவிடம் கூறினார்.
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள டும்மி(Dummi) கிராமத்தை சேர்ந்தவர் 23 வயதான மல்லிகார்ஜுன்.
பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர், அவ்வப்போது தனது குடும்பத்தினரை சந்தித்து வந்தார். ஜூலை 23 ஆம் தேதி, தனது நண்பரின் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மல்லிகார்ஜுன், நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியதில், அவரும் அவரது நண்பர்களும் காயமடைந்தனர்.
பின்னர் அவர்கள் சித்ரதுர்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மல்லிகார்ஜுன் மேல் சிகிச்சைக்காக தாவநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கிருந்து, அறுவை சிகிச்சைக்கு முன் நடத்தப்பட்ட இரத்த பரிசோதனையில் அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அடுத்தடுத்த அறுவை சிகிச்சையின் போது அவரது காலில் இருந்து அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
மல்லிகார்ஜுன் உடைய மூத்த சகோதரி நிஷா அவரை பெங்களூருக்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர்களிடம் கூறினார்.
ஜூலை 25 ஆம் தேதி மாலை, மல்லிகார்ஜுனை பெங்களூருக்கு அழைத்துச் செல்வதாக நிஷா தனது தந்தையிடம் தெரிவித்தார். இருப்பினும், பயணத்தின் போது, மல்லிகார்ஜுன் இறந்துவிட்டதாகக் கூறி, உடலுடன் வீடு திரும்பினார்.
மகன் மரணம் தொடர்பாக தந்தை நாகராஜப்பா தனது மகள் நிஷா மற்றும் அவரது கணவர் மீது சந்தேகம் அடைந்து விசாரித்தார். அப்போது நிஷா தனது கொடூரமான செயலை ஒப்புக்கொண்டார்.
குடும்பத்தின் பெருமையை காக்க, போர்வையால் அவரை மூச்சுத் திணறடித்ததாக நிஷா நாகராஜப்பாவிடம் கூறினார்.
இதை தொடர்ந்து நாகராஜப்பா மகள் நிஷா மற்றும் அவர் கணவர் மீது போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். HIV தோற்று குறித்த தவறான புரிதல் காரணமாக ஒரு இளைஞர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சான்றிதழின் வலதுபுற ஓரத்தில் நாய் ஒன்றின் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது.
- "மக்களின் வாக்குகள் நாய்களுக்கு வழங்கப்படும் போலிருக்கிறது" என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் பாபு என்ற ஒரு நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும் சமயத்தில் நடந்த இச்சம்பவம், அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு செயல்முறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
சான்றிதழ் எண் BRCCO/2025/15933581, வார்டு எண் 15, மசாவர்ஹி நகராட்சி கவுன்சில் என்றும் இந்த பகுதியில் பாபு வசித்து வருகிறார் என்றும் அந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சான்றிதழின் வலதுபுற ஓரத்தில் நாய் ஒன்றின் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. பாபுவின் தந்தை குட்டா பாபு என்றும் தாய் குடியா தேவி என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
விவகாரம் வைரலான நிலையில் இந்த இருப்பிட சான்றிதழ் இன்று ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், சான்றிதழ் பெற விண்ணப்பித்த கணினி ஊழியர் மற்றும் அவருக்கு சான்றிதழ் அளித்த அதிகாரி ஆகியோருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது என பாட்னா மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், "லஞ்சம் இல்லாமல் பீகாரில் எதுவும் நடக்காது. சன்னி லியோன் மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் பெயரிலும் ஆதார் அட்டைகள் தயாரிக்கப்பட்டன. நாயும் லஞ்சம் கொடுத்திருக்க வேண்டும்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
வாக்காளர் சரிபார்ப்புக்கு ஆதார், EPIC கார்டுகள் நிராகரிக்கப்படும் நிலையில், ஒரு நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்டது, இந்தத் திருத்தப் பணியின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது என்று எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.
"மக்களின் வாக்குகள் நாய்களுக்கு வழங்கப்படும் போலிருக்கிறது" என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
- அட்லஸ் காப்கோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இன்ஜினீயராக பணிபுரிந்து வந்தவர் 23 வயதான பியூஷ் அசோக் காவ்டே.
- தற்கொலை செய்வதற்கு முன்பு, பியூஷ் தனது குடும்பத்திற்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவின் ஹிஞ்சேவாடி ஐடி ஹப்பில் உள்ள அட்லஸ் காப்கோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இன்ஜினீயராக பணிபுரிந்து வந்தவர் 23 வயதான பியூஷ் அசோக் காவ்டே.
இவர் நேற்று காலை 9:30 மணியளவில் ஆபீஸ் மீட்டிங் கூட்டத்தின் நடுவே வெளியேறி, தான் வேலை செய்யும் கட்டிடத்தின் மேலே இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன்பு, பியூஷ் தனது குடும்பத்திற்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். தற்கொலைக் கடிதத்தில் அவர் என்ன எழுதியுள்ளார் என்பது முழுமையாக விசாரிக்கப்படும் என்று புனே காவல்துறையின் உதவி ஆணையர் சுனில் குராடே தெரிவித்தார்.
அவர் மீது பணி அழுத்தம் இருந்ததா என்று கேட்டபோது, "முதல் பார்வையில் அப்படி எதுவும் தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது" என்று சுனில் தெரிவித்தார்.
இது குறித்து தற்செயலான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
- இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
- போக்சோ சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் பாலியல் தொல்லைக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யாது என்று தெரிவித்தார்.
"ஐ லவ் யூ" என்று சொல்வது மட்டும் பாலியல் தொல்லை ஆகாது, தெளிவான பாலியல் நோக்கம் இல்லாவிட்டால் அது பாலியல் சீண்டலாகக் கருதப்படாது என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தம்தரி மாவட்டத்தில் உள்ள குரூட் காவல் நிலையப் பிரிவில் 15 வயது சிறுமி ஒருவர், தான் வீட்டிற்குச் செல்லும் வழியில் இளைஞர் "ஐ லவ் யூ" என்று சொன்னதாகவும், இதற்கு முன்பும் பலமுறை தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
அவரது புகாரின் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இருப்பினும், போதிய ஆதாரம் இல்லாததால் விசாரணை நீதிமன்றம் ஏற்கனவே இளைஞரை விடுவித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த உய்ரநீதிமன்ற நீதிபதி சஞ்சய் எஸ் அகர்வால், "ஐ லவ் யூ" என்று ஒருமுறை மட்டும் சொல்வது, தொடர்ந்து அல்லது பாலியல் ரீதியாகத் தூண்டும் நடத்தை இல்லாமல், போக்சோ சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் பாலியல் தொல்லைக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யாது என்று தெரிவித்தார்.
அட்டர்னி ஜெனரல் ஃபார் இந்தியா வெர்சஸ் சதீஷ் (2021) வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, பாலியல் ரீதியான சைகை பாலியல் தொல்லையின் வரம்பிற்குள் வர வேண்டுமானால், அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, இளைஞரின் விடுதலையை நீதிபதி உறுதி செய்தார்.
- உயிரியல் ஆசிரியை பினா தாஸ், திரிஷாவின் விடைத் தாளை அவரது முகத்தில் விட்டெறிந்துள்ளார்.
- தனது மகளின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்து இறுதிச் சடங்குகளை செய்யக்கூட பணம் இல்லாத நிலையில் இருந்துள்ளார்.
திரிபுராவில் உள்ள சோனாபூர் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி திரிஷா மஜும்தார் (15).
6 ஆம் வகுப்பு முதல் திரிஷா வகுப்பின் முதல் ரேங்க் வாங்கும் மாணவியாக இருந்து வந்துள்ளார். ஆனால் அண்மையில் நடந்த தேர்வில் அவர் சீட்டிங் செய்ததாக கூறி, ஜூலை 24 ஆம் தேதி, உயிரியல் ஆசிரியை பினா தாஸ், திரிஷாவின் விடைத் தாளை அவரது முகத்தில் விட்டெறிந்துள்ளார்.
அனைவர் முன்னிலையிலும் இதை அவமானகமாக கருதிய திரிஷா மாலை வீடு திரும்பியதும் தனது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டார். ஒரு நாள் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திரிஷாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
திரிஷா ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை, ஒரு ஏழை விவசாயி, தனது மகளின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்து இறுதிச் சடங்குகளை செய்யக்கூட பணம் இல்லாத நிலையில் இருந்துள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ சுதீப் ராய் பர்மன் மருத்துவமனைக்குச் சென்று துயரத்தில் இருக்கும் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினார்.
- எட்டு 9 மிமீ பிஸ்டல்கள், பதினான்கு 12 போர் துப்பாக்கிகள், 21 சிங்கிள் போர் துப்பாக்கிகள் மற்றும் 14 நாட்டுத் துப்பாக்கிகள் ஆகியவை அடங்கும்.
- துப்பாக்கிகள் மட்டுமல்லாமல், ஆபத்தான வெடிபொருட்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி சோதனைகளில், பெருமளவிலான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற போர் தளவாடங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மலை மாவட்டங்களான சுராசந்த்பூர், காங்போக்பி, பெர்சாவ்ல், தெங்காப்பால் மற்றும் சந்தேல் ஆகிய பகுதிகளில் இந்த சோதனை நடனதப்பட்டது.
காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்திய தகவலின்படி, மொத்தம் 155 துப்பாக்கிகள் மற்றும் 1,652 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் அதிநவீன மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அடங்கும்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் எட்டு ஏகே சீரிஸ் ரைபிள்கள், இரண்டு இன்சாஸ் ரைபிள்கள், நான்கு கார்பைன்கள், ஒரு எஸ்.எல்.ஆர், எட்டு 9 மிமீ பிஸ்டல்கள், பதினான்கு 12 போர் துப்பாக்கிகள், 21 சிங்கிள் போர் துப்பாக்கிகள் மற்றும் 14 நாட்டுத் துப்பாக்கிகள் ஆகியவை அடங்கும்.
துப்பாக்கிகள் மட்டுமல்லாமல், ஆபத்தான வெடிபொருட்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதில் 31 பம்பி (உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மோட்டார்கள்), 39 மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் (IEDs) மற்றும் 13 கையெறி குண்டுகள் அடங்கும். மேலும், பாதுகாப்புப் படையினர் 15 தகவல் தொடர்பு சாதனங்களையும், நான்கு தொலைநோக்கிகளையும் மீட்டுள்ளனர்.
எந்தவொரு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளையும் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது மத்திய கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான டிஆர்எஃப் அமைப்பை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
- ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 193 நாடுகளில், மூன்று நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளன என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் இடையே ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை தொலைபேசி உரையாடல் எதுவும் இல்லை என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த மக்களவை விவாதத்தின் போது மக்களவையில் பேசிய அவர், இந்த நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு வலுவான பதிலடி கொடுத்துள்ளோம் என்றார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் டிரம்பின் ஈடுபாட்டை நிராகரித்த அவர், பாகிஸ்தான் தான் தாக்குதலை நிறுத்த கோரியது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஜெய்சங்கர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான டிஆர்எஃப் அமைப்பை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில், குவாட், பிரிக்ஸ் மற்றும் பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 193 நாடுகளில், மூன்று நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளன என்று தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தானும் சீனாவும் ஆறு தசாப்தங்களாக ஒத்துழைத்து வருகிறது. சீனாவை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் விரிவுரைகளை வழங்குவது விசித்திரமானது.
ஒலிம்பிக்கில் பங்கேற்கவோ அல்லது ரகசிய ஒப்பந்தங்களைச் செய்யவோ நாங்கள் சீனா செல்லவில்லை. பயங்கரவாதம் குறித்த நமது அணுகுமுறையை விளக்கவும் வர்த்தக ஒப்பந்தங்களைப் பற்றி விவாதிக்கவும் தான் சீனா சென்றதாக ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
- சின்னசாமி மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
- தங்கள் இடைநீக்கத்தை நீக்கக் கோரி அதிகாரிகள் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
ஐபிஎல் 2025 போட்டியில் ஆர்சிபி வென்றதை கொண்டாடும்போது ஜூன் 4 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் கர்நாடக சித்தராமையா அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து, காவல் ஆணையர் பி. தயானந்தா, கூடுதல் காவல் ஆணையர் விகாஸ் குமார் விகாஸ் மற்றும் துணை காவல் ஆணையர் சேகர் எச். தேக்கண்ணவர், காவல் உதவி ஆணையராகப் பணியாற்றிய டி.எஸ்.பி சி. பாலகிருஷ்ணா மற்றும் கப்பன் பார்க் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையிலான நீதித்துறை ஆணையமும், மாவட்ட நீதிபதி குழுவும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை முடித்து, அரசாங்கத்திடம் அறிக்கைகளை சமர்ப்பித்ததால், தங்கள் இடைநீக்கத்தை நீக்கக் கோரி அதிகாரிகள் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
அறிக்கையை கருத்தில் கொண்டு, அதிகாரிகளின் இடைநீக்க உத்தரவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில் அவர்களின் இடைநீக்கத்தை கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது.






