என் மலர்
இந்தியா

டிரம்ப் சொன்னது தவறான தகவல் என X-ல் பதிவிடக்கூட மோடியால் முடியவில்லை - கல்யாண் பானர்ஜி
- தேசிய பாதுகாப்பு விஷயங்களில் இவ்வளவு திறமையற்ற ஒரு பிரதமரை இந்த நாடு ஒருபோதும் பார்த்ததில்லை.
- ட்ரம்ப் முன்பு நின்றதும் பிரதமர் மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்கி விடுகிறது.
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் இன்று முதல் விவாதத்தை தொடங்க இருப்பதாக ஆளும் கட்சி தெரிவித்தது. இதை எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டன.
அதன்படி மக்களவையில் நேற்று விவாதம் நடத்தப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், நேற்று ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, "பஹல்காம் படுகொலைக்கு பிரதமரும் உள்துறை அமைச்சரும் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும். 4 பயங்கரவாதிகள் இந்தியாவில் நுழைந்து, துப்பாக்கிச் சூடு நடத்தி அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் கொன்றுவிட்டு எவ்வித பயமும் இல்லாமல் அங்கிருந்து வெளியேறினர். அப்போது CISF, PSF மற்றும் நமது நாட்டின் பாதுகாப்பு எந்திரம் எங்கே இருந்தது?
தேசிய பாதுகாப்பு விஷயங்களில் இவ்வளவு திறமையற்ற ஒரு பிரதமரை இந்த நாடு ஒருபோதும் பார்த்ததில்லை. இப்போது, தனது தோல்வியை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, அவர் தன்னைப் புகழ்ந்து பேசுவதில் மும்முரமாக இருக்கிறார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய மக்கள் அனைவரும் உங்களுடன் ஒற்றுமையுடன் நின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இறுதியாக மீட்கப்படும் என்றும் நாங்கள் நம்பினோம். ஆனால், நீங்கள் பாதியிலேயே சண்டையை நிறுத்திவிட்டீர்கள்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னது தவறான தகவல் என்று X தளத்தில் பதிவிடக்கூட பிரதமர் மோடியால் ஏன் முடியவில்லை?
ட்ரம்ப் முன்பு நின்றதும் பிரதமர் மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்கி விடுகிறது. உயரம் 5 அடியாக குறைந்து விடுகிறது. ஏன் இவ்வளவு பயம்?" என்று தெரிவித்தார்.






