என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜனாதிபதி எழுப்பிய கேள்விகளை திரும்ப அனுப்ப வேண்டும்- உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு
    X

    ஜனாதிபதி எழுப்பிய கேள்விகளை திரும்ப அனுப்ப வேண்டும்- உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு

    • ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதிக்கு முடிவெடுக்க காலக்கெடு
    • உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதிக்கு திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் கவர்னர் கிடப்பில் போடப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் "ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்காதபட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்" எனக் கூறியிருந்தனர்.

    முதன்முறையாக உச்சநீதிமன்றம் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்தது. ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதிக்கு முடிவெடுக்க காலக்கெடு விதித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதிக்கு திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் ஒரு வாரத்தில் கருத்து தெரிவிக்க உத்தரவு பிறப்பித்தது.

    இந்நிலையில், சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில், குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளை திரும்ப அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த பதில் மனுவில், உச்ச நீதிமன்றத்தால் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை மீறுவதற்காக மாறுவேடத்தில் செய்யப்பட்டதே இந்த மேல்முறையீடு என தெரிவிக்கப்பட்டுள்ளது

    இந்த வழக்கு மீண்டும் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

    ஜனாதிபதி எழுப்பியிருந்த 14 கேள்விகள்:

    1. ஒரு மசோதா, கவர்னரின் ஒப்புதலுக்கு வரும்போது அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் அவருக்கு இருக்கும் சட்டரீதியான வாய்ப்புகள் என்ன?.

    2. அவ்வாறு ஒரு மசோதா அனுப்பப்பட்டு, தனக்குரிய அனைத்து வாய்ப்புகளையும் கவர்னர் பயன்படுத்தும்போது, மந்திரிசபையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா?.

    3. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின்கீழ், கவர்னரின் தனியுரிமை என்பது கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா?.

    4. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின்கீழ் கவர்னரின் செயல்பாடுகள் தொடர்பாக கோர்ட்டு விசாரிக்க, அரசியல் சாசனத்தின் 361-வது பிரிவு தடையாக உள்ளதா?.

    5. கவர்னரின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாசனம் காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில் கோர்ட்டு உத்தரவு மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?.

    6. அரசியல் சாசனத்தின் 201-வது பிரிவின்கீழ், ஜனாதிபதியின் தனியுரிமை என்பது கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா?.

    7. ஜனாதிபதியின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாசனம் காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில், கோர்ட்டு உத்தரவு மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?.

    8. ஜனாதிபதியின் அனுமதிக்காக கவர்னர் மசோதாவை அனுப்பி வைக்கும்போது, அரசியல் சாசனத்தின் 143-வது பிரிவின்கீழ், சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை ஜனாதிபதி பெற முடியுமா?.

    9. ஒரு சட்டம் அமலுக்கு வரும் முன்பு, கவர்னரும், ஜனாதிபதியும் அரசியல் சாசனத்தின் 200 மற்றும் 201-வது பிரிவுகளின்கீழ் எடுக்கும் முடிவுகள் கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா? மசோதா, சட்டம் ஆவதற்கு முன்பு, அதன் பொருள் குறித்து கோர்ட்டு விசாரிக்க அனுமதி உள்ளதா?.

    10. ஜனாதிபதி, கவர்னர் ஆகியோரின் உத்தரவுகள் மற்றும் அதிகாரங்களை அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின்கீழ் வேறுவகையில் பிறப்பிக்க முடியுமா?.

    11. மாநில சட்டசபை நிறைவேற்றும் சட்டத்தை கவர்னரின் ஒப்புதல் இல்லாமலே அமலுக்கு கொண்டுவர முடியுமா?.

    12. அரசியல் சாசனத்தின் 145(3)-வது பிரிவின்படி, அரசியல் சாசனம் குறித்த ஆழமான கேள்விகள் எழுப்பப்படும் வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்புவது கட்டாயம் இல்லையா?.

    13. அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின்கீழ், சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரங்கள், நடைமுறை சட்டத்துக்கு மட்டும் உட்பட்டதா? அல்லது அமலில் இருக்கும் அரசியல் சாசன நடைமுறைகளுக்கு முரண்பட்ட உத்தரவுகளை பிறப்பிக்க வழி செய்கிறதா?.

    14. மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான சச்சரவுகளை அரசியல் சாசனத்தின் 131-வது பிரிவின்கீழ் சிறப்பு வழக்கு தொடுக்காமல், வேறு வகைகளில் தீர்வுகாண சுப்ரீம் கோர்ட்டின் அதிகார வரம்புக்கு அரசியல் சாசனம் தடையாக உள்ளதா?. மேற்கண்ட கேள்விகளை ஜனாதிபதி எழுப்பி இருந்தார்.

    Next Story
    ×