என் மலர்tooltip icon

    இந்தியா

    • இந்திய பொருட்கள் மீது டொனால்டு டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தது நெருக்கடி உத்தியாகும்.
    • இந்திய மக்களாகிய நாம், நாட்டின் நலனை காக்க அரசுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நெருக்கடி உத்தியை இந்தியா அரசுக்கு எதிராக பயன்படுத்துகிறார். டொனால்டு டிரம்பின் நடவடிக்கைக்கு எதிராக இந்தியா அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில மூத்த அரசியல் கட்சி தலைவரும், தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) கட்சி தலைவருமான சரத் பவார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சரத் பவார் கூறியதாவது:-

    இந்திய பொருட்கள் மீது டொனால்டு டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தது நெருக்கடி உத்தியாகும். இந்திய மக்களாகிய நாம், நாட்டின் நலனை காக்க அரசுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

    அமெரிக்க அதிபராக முதல்முறை பணியாற்றிய டிரம்பின் பணி முறையை நாம் பார்த்திருக்கிறோம். அவரை கட்டுப்படுத்த யாரும் இல்லை என நான் உணர்கிறேன். அவர் தனது மனதில் தோன்றுவதை உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறார்.

    நம் நாட்டிற்கும் அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டு வரும் விரிசலை பிரதமர் மோடி புறந்தள்ளி விடக்கூடாது. இன்று பாகிஸ்தான் நமக்கு எதிராக இருக்கிறது. நேபாளம், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவுகள் கூட நம்முடைய மகிழ்சியாக இல்லை.

    நம்முடைய அண்டை நாடுகள் நம்மை விட்டு வலகிச் சென்று கொண்டிருக்கின்றன. உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு சரத் பவார் தெரவித்துள்ளார்.

    • சென்னை தனியார் நிறுவனத்தில் ஜெயராமன் பண ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
    • போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கோவை:

    கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது45). நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் முருகப்பெருமாள்(26).

    இவர்கள் 2 பேரும் கோவை செட்டிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, நாங்கள் குடிபோதையில் ஜெயராமன் என்பவரை கொன்று கிணற்றில் வீசியதாக கூறி சரண் அடைந்தனர்.

    போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் கிடந்த ஜெயராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

    இதற்கிடையே செட்டிப்பாளையம் போலீசார் ஜெயராமன் படுகொலை தொடர்பாக சரண் அடைந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல்களை கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கோவை கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட ஜெயராமன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    அப்போது இதே நிறுவனத்தில் டிரைவர்களாக வேலை பார்த்த பாலமுருகன், முருகப்பெருமாள் ஆகியோரிடம் ஜெயராமனுக்கு பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் இரவு நேரங்களில் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பதை வாடிக்கையாக கொண்டு இருந்தனர்.

    இதற்கிடையே சென்னை தனியார் நிறுவனத்தில் ஜெயராமன் பண ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரிடம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஜெயராமன் தனது சக நண்பர்களான பாலமுருகன், முருகப்பெருமாள் ஆகியோருடன் சம்பவத்தன்று ஒன்றாக அமர்ந்து மது குடித்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.

    ஜெயராமனுக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருக்கிறது. இந்த நிலையில் அவர் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதனால் பயந்து போன 2 பேரும் தனியார் நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு பேசிவிட்டு பின்னர் ஜெயராமன் உடலை காரில் கோவைக்கு கொண்டுவந்து கிணற்றில் வீசியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    கோவை கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட ஜெயராமன் படுகொலையில் நுங்கம்பாக்கம் தொழில் அதிபர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தே கிக்கின்றனர்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை போலீசார் சென்னைக்கு விரைந்து உள்ளனர். விசாரணைக்கு பிறகு தான் ஜெயராமன் எப்படி இறந்தார் என்பது பற்றிய உண்மையான விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • ஐயா அவர்கள் உருவத்திலே இங்கே இல்லை என்றாலும், உள்ளத்தில் இருக்கிறார்கள்.
    • அவருக்கு இங்கே நிரந்தரமாக ஒரு நாற்காலி இருக்கிறது. இது ஐயா உடைய நாற்காலி.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    யார் வர வேண்டும் என்பது மிக முக்கியம். இது குறித்து சில காலத்தில் முடிவு செய்வோம். நல்லதொரு கூட்டணியை அமைப்போம். மெகா கூட்டணியை அமைப்போம். நாம் ஆட்சிக்கு வருவோம். இன்னும் ஒரு சில காலத்திலேயே அது நடைபெறும். உங்களுடைய விருப்பப்படியே நாம் கூட்டணியை அமைப்போம்.

    வருகின்ற அடுத்த 6 மாத காலம் கடுமையாக உழைக்க வேண்டும். ஒற்றுமையாக உழைக்க வேண்டும். நம்பிக்கையுடன் உழைக்க வேண்டும்.

    நம்முடைய வழிகாட்டி ஐயா ராமதாஸ் அவர்கள்தான், குலதெய்வம் ஐயா ராமதாஸ் அவர்கள்தான். ஐயா அவர்கள் உருவத்திலே இங்கே இல்லை என்றாலும், உள்ளத்தில் இருக்கிறார்கள். அவருக்கு இங்கே நிரந்தரமாக ஒரு நாற்காலி இருக்கிறது. இது ஐயா உடைய நாற்காலி. ஐயா பாமகவின் நிறுவனர். அதில் மாற்று கருத்து கிடையாது.

    அதேவேளையில் பொறுப்புகளுக்கும், பதவிகளுக்கும் நான் ஆசைப்படுபவன் கிடையாது. இன்று காலத்தின் கட்டாயத்திற்காக, உங்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்.

    வியர்வை, ரத்தம் சிந்தி, உயர்த்தியாகம் செய்து இந்த கட்சியை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். இது ஐயாவின் நிரந்தரமாக நாற்காலி. ஐயா இங்கே வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    சாமிக்கு சில நேரம் கோபம் வந்துவிடும். அப்போது திருவிழா போன்றவை எடுப்போம். இதில் பூசாரிக்குதான் பிரச்சினை.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

    • 80,000 இருக்கைகளுடன் புதிய கிரிக்கெட் மைதானம் அமைகிறது.
    • இது இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

    இதனிடையே, பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை நகரின் மையப்பகுதியில் இருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற பரிசீலனை செய்து வருவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.

    இந்நிலையில், பெங்களூருவின் பொம்மசந்திரா பகுதியில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டத்திற்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    சூர்யா சிட்டியில் ரூ.1,650 கோடி செலவில் உருவாக்கப்பட உள்ள பிரமாண்ட விளையாட்டு வளாகத்தின் ஒரு பகுதியாக 80,000 இருக்கைகளுடன் கிரிக்கெட் மைதானம் அமைகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • 5 பேர் கொண்ட வக்கீல்கள் குழு இந்த விவகாரத்தில் உண்மை தன்மை கண்டறிவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
    • பாதிக்கப்பட்ட கவின் இல்லத்திற்கு சென்ற அந்த குழுவினர், சம்பவம் தொடர்பாக கவின் பெற்றோர் மற்றும் சகோதரரிடம் கேட்டறிந்தனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த ஐ.டி. ஊழியரான கவின் (வயது 27) என்ற வாலிபர் கடந்த மாதம் 27-ந்தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் காதல் விவகாரத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், அவரது மகன் சுர்ஜித் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவி வரும் சூழலில் சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்களான சுரேஷ், தமிழ்வாணன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட வக்கீல்கள் குழு இந்த விவகாரத்தில் உண்மை தன்மை கண்டறிவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி நேற்று அந்த குழு நெல்லைக்கு வந்தது. தொடர்ந்து கவின் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டதுடன் இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாநகர போலீசார், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு உதவிய வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரிடம் நேரில் தகவல்களை திரட்டினர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட கவின் இல்லத்திற்கு சென்ற அந்த குழுவினர், சம்பவம் தொடர்பாக கவின் பெற்றோர் மற்றும் சகோதரரிடம் கேட்டறிந்தனர்.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக நெல்லை மாவட்ட கலெக்டர், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி. போலீசார் உள்ளிட்டவர்களிடமும் தகவல் திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள், சமூக அக்கறையுடன் செயல்பட்டவர்கள் போன்ற பலரிடமும் தகவல்களை திரட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், தொடர்ந்து சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு பொதுவெளியில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் எனவும் அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை அரசுக்கும் சமர்ப்பித்து ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டம் இயற்றுவதற்கு வலியுறுத்தப்படும் என அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    • ஆசிரியர் செல்வம் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.
    • குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 35). மாற்றுத்திறனாளி. இவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக நியமிக்கப்பட்டுள்ள இவர் வரலாறு மற்றும் புவியியல் வகுப்புகளுக்கு பாடம் எடுத்து வருகிறார், கடந்த ஒரு ஆண்டாக இந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் செல்வம் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.

    இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழ்நதைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள், மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்கள். அந்த நேரம் மாணவிகள் ஆசிரியர்கள் மீது புகார் அளித்தனர்.

    இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் ஆசிரியர் செல்வதை கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • மக்களவை தேர்தலில் 1.25 சதவீதம் வாக்குகள் என்றாலும் 40 எம்.பி.க்களை கொண்டிருக்கிறது திமுக.
    • தமிழகத்தில் பாமக-வின் வாக்கு வங்கி 6 முதல் 7 சதவீதமாக உள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    * என் மீது தொண்டர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது.

    * சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மெகா கூட்டணி அமைப்போம்.

    * மக்களவை தேர்தலில் 1.25 சதவீதம் வாக்குகள் என்றாலும் 40 எம்.பி.க்களை கொண்டிருக்கிறது திமுக

    * நம்முடைய குலதெய்வம், வழிகாட்டிதான் ராமதாஸ். அவர் உள்ளத்தில் இருக்கிறார்.

    * சில நேரத்தில் சாமிக்கு கோபம் வந்துவிடும். அப்போது திருவிழா எடுக்க வேண்டும்.

    * தமிழகத்தில் பாமக-வின் வாக்கு வங்கி 6 முதல் 7 சதவீதமாக உள்ளது.

    * அடுத்த 6 மாத காலத்திற்கு ஒற்றுமையுடன் கடுமையாக உழைக்க வேண்டும்.

    * திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் பாமக-வின் இலக்கு.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    • மீனவர்களின் படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
    • மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரு தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார்.

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 8 பேரை கைது செய்தும் ஒரு படகை பறிமுதல் செய்தும் இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

    சமீப காலமாக அதிகரித்து வரும் தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரு தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சமீபத்தில் அன்வர் ராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
    • தி.மு.க.வில் இணைந்த அன்வர் ராஜாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததால் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து அன்வர் ராஜா விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

    இந்த நிலையில், தி.மு.க.வில் இணைந்த அன்வர் ராஜாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. இலக்கிய அணி தலைவராக அன்வர் ராஜாவை நியமித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    தி.மு.க. இலக்கிய அணி தலைவராக புலவர் இந்திரகுமாரி பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தி.மு.க. கூட்டணி நிலைக்குமா? நிலைக்காதா? என்பது 8 மாதத்தில் தெரியும்.
    • 8 மாத காலத்தில் அ.தி.மு.க. சிறப்பான கூட்டணியை அமைக்கும்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * விவசாய தொழிலாளர்களுக்கும் நன்மை பயக்கும் திட்டத்தை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தியது.

    * எம்.ஜி.ஆரை பொதுமக்கள் தெய்வமாக கருதுகிறார்கள்.

    * எம்.ஜி.ஆர். குறித்து பேசிய திருமாவளவன் அரசியலில் காணாமல் போய்விடுவார்.

    * வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக திருமாவளவன் இதுபோல் பேசிக்கொண்டிருக்கிறார்.

    * சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி அ.தி.மு.க.

    * தி.மு.க. கூட்டணி நிலைக்குமா? நிலைக்காதா? என்பது 8 மாதத்தில் தெரியும்.

    * 8 மாத காலத்தில் அ.தி.மு.க. சிறப்பான கூட்டணியை அமைக்கும் என்றார்.

    திராவிடத்திற்குள் பார்ப்பனியம் ஊடுருவ வழிவகை செய்தவர் எம்.ஜி.ஆர்.என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. 

    • ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டி நிலத்தடி நீரை உயர செய்தோம்.
    • மரம் ஏறும் தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் இருக்கின்றார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை வரவேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினை அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    நான் சேலம் மாவட்டத்தில் இருக்கின்றவன். நம்முடைய மாவட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக நான் இருக்கின்ற இந்த கால கட்டத்தில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தது மகிழ்ச்சி அடைகிறேன். 2011-2021 வரை சேலம் மாவட்டம் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்திருக்க வேண்டும். ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டி நிலத்தடி நீரை உயர செய்தோம். குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்து ஆங்காங்ககே இருக்கின்ற ஏரிகள் தூர்வாரப்பட்டு மழைக்காலங்களில் பெய்கின்ற நீரை சேமித்து கோடை காலத்தில் பயன்படுத்த முடியும் என்கிற திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினோம். ஏரிகளில் அள்ளப்படும் வண்டல் மண் நம்முடைய விளை நிலங்களில் இயற்கை உரங்களாக பயன்படுத்தினோம்.

    அதேபோல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை அளித்தோம். நம்முடைய விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன் 2 முறை தள்ளுபடி செய்தோம். இப்படி விவசாயிகளுக்காக நிறைய திட்டங்களை செயல்படுத்தினோம். நம்முடைய மாவட்டம் விசை தறி நிறைந்த பகுதி. இன்றைய தினம் விவசாய தொழில் நலிவடைந்து கொண்டிருக்கின்றன.

    இந்த ஆட்சியினுடைய நிர்வாக திறமையற்ற காரணத்தினால் இந்த 2 தொழில்களும் மெல்ல மெல்ல தேய்ந்து கொண்டிருக்கின்றது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வருகின்றபோது இந்த விவசாயிகளும், விசை தறிதொாழிலாளர்களுக்கும் உதவி செய்யப்படும். மரம் ஏறும் தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் இருக்கின்றார்கள். அவர்களுடைய கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். அடுத்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி நிச்சயம் மலரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ரஷிய தயாரிப்பான எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பினால் இந்த வெற்றி சாத்தியமானது.
    • இந்தியாவின் 3 ரஃபேல் உட்பட 6 இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்ட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

    26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மே 7 அன்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இதை தொடர்ந்து ஏற்பட்ட மோதல் மே 9 ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் பெங்களூருவில் இன்று நடைபெற்ற விமானப்படை அதிகாரிகளுக்கான கருத்தரங்கில் பேசிய இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங், ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் மற்றும் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்தார். 

    சுட்டு வீழ்த்தப்பட்ட மற்றொரு விமானம், AWACS (Airborne Warning and Control System) என அழைக்கப்படும் வான்வழி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு விமானம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இந்திய ராணுவம் வசம் உள்ள ரஷிய தயாரிப்பான எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பினால் இந்த வெற்றி சாத்தியமானது என்று அவர் தெரிவித்தார்.

    மே 7 தாக்குதலின் போது பயங்கரவாத இலக்குகள் சேதமடைவதன் முன்னாள் இருந்த நிலை மற்றும் அதன் பின்னால் சேதமடைந்த நிலை ஆகியவற்றின் செயற்கைக்கோள் படங்களையும் அவர் திரையிட்டு விளக்கினார்.

    ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று மத்திய அரசு கூறுகிறது.

    இதன்போது இந்தியாவின் 3 ரஃபேல் உட்பட 6 இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்ட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.   

    ×