என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பெங்களூரில் ரூ.1,650 கோடி செலவில் கட்டப்படும் 2வது கிரிக்கெட் மைதானம்... அப்போ சின்னசாமி மைதானம்?
- 80,000 இருக்கைகளுடன் புதிய கிரிக்கெட் மைதானம் அமைகிறது.
- இது இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இதனிடையே, பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை நகரின் மையப்பகுதியில் இருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற பரிசீலனை செய்து வருவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
இந்நிலையில், பெங்களூருவின் பொம்மசந்திரா பகுதியில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டத்திற்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சூர்யா சிட்டியில் ரூ.1,650 கோடி செலவில் உருவாக்கப்பட உள்ள பிரமாண்ட விளையாட்டு வளாகத்தின் ஒரு பகுதியாக 80,000 இருக்கைகளுடன் கிரிக்கெட் மைதானம் அமைகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.






