என் மலர்
இந்தியா
- போக்குவரத்து விதிகளை மீறிய ஆண்களை மடக்கிப்பிடித்து ராக்கி கயிறு கட்டினார்கள்.
- அபராதத்தை போக்குவரத்தை கவனிக்கும் ஆண் போலீசார் விதித்தனர்.
புதுடெல்லி:
வடமாநிலங்களில் நேற்று ரக்ஷா பந்தன் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தலைநகர் டெல்லியில் இந்த பண்டிகையை முன்னிட்டும் பணிக்கு வந்திருந்த பெண் போலீசார் சாலைகளில் ஒரு நூதனத்தை கடைப்பிடித்தனர்.
ஹெல்மெட் அணியாமல் இருத்தல், சிக்னல் தாண்டுதல் போன்ற போக்குவரத்து விதிகளை மீறிய ஆண்களை மடக்கிப்பிடித்து ராக்கி கயிறு கட்டினார்கள். அவர்களது கையில் சுதந்திர தினத்தை நினைவுப்படுத்தி தேசியக்கொடியையும் வழங்கினர். இப்படியெல்லாம் செய்ததால் அவர்களுக்கு அபராதம் கிடையாது என்றில்லை. அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் அதனை, போக்குவரத்தை கவனிக்கும் ஆண் போலீசார் விதித்தனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கை டெல்லி சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இருந்தது.
- இந்தியா வேகமாக முன்னேறி உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது.
- இந்தியாவுக்கு எதிராகவோ, இந்தியாவைப்பற்றியோ யாருக்கும் எந்த குறையும் இருக்க முடியாது.
புதுடெல்லி:
இந்திய பொருட்களுக்கு முதலில் 25 சதவீத வரியை விதித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் கூடுதலாக 25 சதவீதம் என 50 சதவீத வரி விதித்து அதிரடி காட்டியுள்ளார். டிரம்பின் இந்த நடவடிக்கை இந்தியா மட்டுமின்றி சர்வதேச அரங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் டிரம்பின் இந்த மிரட்டலுக்கு அடிபணியமாட்டோம் என இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது.
இந்த நிலையில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் அமெரிக்க வர்த்தக பதற்றத்துக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்வதில் நாங்கள் உறுதியாக இருப்போம். மேலும் நமது மூலோபாய மற்றும் தேசிய நலனில் உறுதியாக நிற்போம். எந்த அச்சுறுத்தல்களுக்கும் அடிபணிவது என்ற கேள்விக்கே இடமில்லை. அச்சுறுத்தல்கள் இந்தியாவிடம் எடுபடாது.
'பகிர்வு மற்றும் பராமரிப்பு' தத்துவத்தின் அடிப்படையில் ஒத்துழைப்புக்கு உறுதியுடன் இருக்கும் அதே வேளையில், இந்தியா தனக்காகவும் நிற்கிறது.
இந்தியா வேகமாக முன்னேறி உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது. இதைப்பார்த்து சில நாடுகள் பொறாமை கொள்கின்றன. நமது வளர்ச்சியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அஜீரணக்கோளாறால் அவதிப்படுகின்றன.
உலக அளவில் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறி வரும் நிலையில், விவசாயிகள், ஆய்வாளர்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பால் நாடு நிச்சயம் பல உயரங்களை எட்டும்.
இந்தியா ஒரு துடிப்பான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு. 6.5 முதல் 7 சதவீதம் வரை வளர்ச்சியை பெற்றுள்ள இந்தியா சர்வதேச ஜி.டி.பி.யில் 18 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. 11 சதவீத பங்களிப்பை வழங்கும் அமெரிக்காவை விட மேலே இருக்கிறது.
ரஷியாவிடம் இருந்து யுரேனியம், உரத்தை அமெரிக்காவும், அதிக அளவிலான கச்சா எண்ணெயை ஐரோப்பிய நாடுகளும் இறக்குமதி செய்யும் நிலையில் இந்தியா போன்ற நட்பு நாடுகளுக்கு வரி விதிப்பது நியாயமா?
நாம் நண்பர்கள். உலகின் பழமையான ஜனநாயகமாக இருக்கும் அமெரிக்காவை நாம் எப்போதும் போற்றுகிறோம். நாம் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள். ஒருவரையொருவர் மதிக்கிறோம், போற்றுகிறோம்.
ஆனால் எந்த ஆத்திரமூட்டலும் இல்லாமல், காரணமும் இல்லாமல் இந்தியாவை குறித்து சொல்லப்படுவது அனைத்தும் துரதிர்ஷ்டவசமானது.
இந்த வர்த்தக பதற்றம் இருந்தபோதும் பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்றவே இந்தியா விரும்புகிறது. பகிர்வு மற்றும் பராமரிப்பு என்பது இந்திய தத்துவத்தின் மையக்கருவாக உள்ளது.
இந்தியாவுக்கு எதிராகவோ, இந்தியாவைப்பற்றியோ யாருக்கும் எந்த குறையும் இருக்க முடியாது.
இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும்.
தெற்கு கடலோர ஆந்திரபிரதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கோவை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
- மூத்த அண்ணனுக்குப் பிறந்தநாள்!
- தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மூத்த அண்ணனுக்குப் பிறந்தநாள்!
நெருப்பாறுகள் பல நீந்தி, கழகத்தின் மனச்சாட்சியாக - தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84!
அரசியலில் தெளிவு, வரலாற்றில் ஆழம், இன உணர்வில் தீரம், கலை - இலக்கியத்தில் செழுமை எனச் செயல்படும் தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையை வாழ்த்துகிறேன்!
இன்றைய செய்திகளைப் பதிவு செய்து, கருத்தாழமிக்க கட்டுரைகளால் சிந்தனையூட்டி நாளைய வரலாற்றை எழுத உணர்வளிக்கும் முரசொலியின் பயணம் என்றென்றும் தொடரட்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பதிவு செய்யப்பட்ட 334 அரசியல் கட்சிகளை நீக்கியது தேர்தல் ஆணையம்.
- இந்த அரசியல் கட்சிகள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவை.
புதுடெல்லி:
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை கூட 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக நிறைவேற்றாத பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இந்த அரசியல் கட்சிகளின் அலுவலகங்களும்கூட எங்கேயும் இருக்கவில்லை. பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இந்த அரசியல் கட்சிகள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவை.
பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,854 ஆக இருந்த நிலையில், அவற்றில் தற்போது 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டதால் இந்த எண்ணிக்கை 2,520 ஆக குறைந்துள்ளது.
பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற 6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தற்போது நாட்டில் உள்ளன என தெரிவித்துள்ளது,
- பாராளுமன்ற தேர்தல், அதன்பின் நடந்த பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களில் முறைகேடு நடந்துள்ளது.
- ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி, தொடர்ந்து தேர்தல் ஆணையம் மீது வாக்கு திருடப்பட்டதாகக் குற்றம்சாட்டி வருகிறார்.
கடந்த 2024 பாராளுமன்ற தேர்தல், அதன்பின் நடந்த மாநில சட்டசபை தேர்தல்களில் முறைகேடு நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் என அடுக்கடுக்கான புகார்களை கூறி ஆவணங்களையும் வெளியிட்டார். அவரது இந்தக் குற்றச்சாட்டு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது. தனது குற்றச்சாட்டுகள் குறித்து ராகுல் காந்தி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
ஆனால், குற்றச்சாட்டுகளை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய ராகுல் மறுத்துவிட்டார். இதையடுத்து பா.ஜ.க. உள்ளிட்ட ஆளும் கூட்டணி கட்சி தலைவர்கள் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மீண்டும் தெரிவித்துள்ளது.
- ரஷியா, உக்ரைன் இடையிலான போா் 3 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வருகிறது.
- இப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
புதுடெல்லி:
ரஷியா, உக்ரைன் இடையிலான போா் 3 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக ரஷியாவுடன் அமெரிக்காவுக்கு மோதல் போக்கு அதிகரித்தது. அமைதி ஒப்பந்தத்தை கொண்டு வர ரஷியாவுக்கு டிரம்ப் நேற்று வரை கெடு விதித்திருந்தார்.
அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ரஷியா சென்று அதிபர் புதினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கிடையே, அதிபர் டிரம்ப் மற்றும் அதிபர் புதின் இடையிலான சந்திப்பு வரும் 15-ம் தேதி அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில், எனக்கும், ரஷிய அதிபர் புதினுக்கும் இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு வரும் 15-ம் தேதி அலாஸ்காவில் நடைபெறும் என பதிவிட்டுள்ளார். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான ஒரு இறுதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என டிரம்ப் தெரிவித்தார்.
டிரம்ப்-புதின் சந்திப்பை ரஷியாவும் உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், அலாஸ்காவில் அதிபர் டிரம்ப் மற்றும் அதிபர் புதின் சந்திப்பு நடைபெற உள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது.
இந்த சந்திப்பு உக்ரைனில் அமைதியை கொண்டுவர உதவி புரியும், இது போருக்கான காலம் அல்ல என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
- கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.
- தமிழகம், கேரளாவில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.
படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் அமெரிக்கா மற்றும் ஓவர்சீஸ் நாடுகளில் தொடங்கி அதிரடி புக்கிங்ஸ் நடந்து வருகிறது. படத்தின் பிரீமியர் ஷோவிற்கு வட அமெரிக்கா நாட்டில் 50,000-க்கு மேற்பட்ட டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் நேற்று டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ரசிகர்கள் காலையிலேயே தியேட்டர் வாசலில் வரிசையில் நின்று அடித்து பிடித்து டிக்கெட் புக் செய்தனர். இதேபோல், தமிழ்நாட்டிலும் டிக்கெட் முன்பதிவு நேற்று இரவு தொடங்கியது. ரசிகர்கள் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவிலும் கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று இரவு 9 மணிக்கு தொடங்கியது. ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இப்படம் முன்பதிவுகளில் மட்டுமே பல கோடிகள் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மீனவர்கள் நீண்டகாலமாக சிறையில் வைக்கப்பபடுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
- அவர்களின் குடும்பங்களுக்கு கடுமையான மன உளைச்சலையும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்கள் சிறைபிடிப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், இன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் இலங்கை கடற்படையினரால் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு இந்திய மீனவர்கள் அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுடன் சிறைபிடிக்கப்பட்ட மற்றொரு துயரமான சம்பவத்தை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு கடலை நம்பியே உயிர்வாழ்ந்து வரும் நிலையில் தற்போது சிறை வாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்கள் நீண்டகாலமாக சிறையில் வைக்கப்பபடுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் குடும்பங்களுக்கு கடுமையான மன உளைச்சலையும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தை திறம்படக் கையாண்டு, கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட இந்திய அரசு உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 21 பெட்டிகள் அடங்கிய ரெயில் பஞ்சாபில் இருந்து அனந்த்நாக் சென்றடைந்துள்ளது.
- சுமார் 600 கி.மீ. தூரத்தை 18 மணி நேரத்தில் சென்றடைந்துள்ளது.
வடக்கு ரெயில்வே முதன்முறையாக பஞ்சாப் மாநிலம் ரூப்நகரில் இருந்து காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கிற்கு சிமெண்ட் ஏற்றிக் கொண்டு சரக்கு ரெயில் சென்றது. இது குறிப்பிடத்தக்க மைல்கல் என மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனந்த்நாக் சரக்கு ஷெட்டிற்கு முதன்முறையாக சரக்கு ரெயில் இன்று சென்றடையந்துள்ளது. காஷ்மீர் பிராந்தியத்தை தேசிய சரக்கு நெட்வொர்க் உடன் இணைப்பதற்கான குறிப்பிடத்தக்க மைல். இந்த ரெயில் நெட்வொர்க் போக்குவரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் நம்முடைய மக்களின் செலவு குறையும் என அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
21 BCN பெட்டிகள் சிமெண்ட் உடன் சரக்கு ரெயில் சென்றடைந்தது வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. 18 மணி நேரத்திற்கும் குறைவான பயணத்துடன் ஏறக்குறைய 600 கி.மீ. தூரத்தை இந்த ரெயில் கடந்து சென்றுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
- தாழ்வான பகுதிகள் முற்றிலுமாக நீரில் மூழ்கி, இயல்பு வாழ்க்கை முடங்கியது.
- சாலைகளில் தண்ணீர் ஆறுகளை போல ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
டெல்லியில் நேற்றும் இன்றும் பெய்த பலத்த மழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகள் முற்றிலுமாக நீரில் மூழ்கி, இயல்பு வாழ்க்கை முடங்கியது.
பஞ்ச்குயன் மார்க், மதுரா சாலை, பாரத் மண்டபத்தின் நுழைவாயிலில் உள்ள சாலைகள், சாஸ்திரி பவன், ஆர்.கே. புரம், மோதி பாக் போன்ற பகுதிகள் நீரில் மூழ்கின.பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் ஆறுகளை போல ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இந்நிலையில், டெல்லி ஹரிநகரில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பழைய பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த, குடிசைப் பகுதியை சேர்ந்தவர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கங்கா நதியில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- வெள்ளத்தில் சிக்கி தாராலி கிராமத்தில் பலர் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள தாராலி பகுதியில் இன்று கனமழை பெய்தது. இதனால் கீர் கங்கா நதியில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி தாராலி கிராமத்தில் பலர் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.
மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி வீடுகள், ஓட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்நிலையில், தாராலி கிராமத்தில் வெள்ளத்தால் வீடுகள் முழுமையாக சேதமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் உடனடி நிதியுதவி வழங்கப்படும் என்று உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.






