search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murasoli"

    பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கும்போது பாமக முன்வைத்த பத்து அம்சத் திட்டத்தை ராமதாஸ் நிறைவேற்றுவாரா? என திமுக கேள்வி எழுப்பி உள்ளது.
    சென்னை:

    தி.மு.க. நாளேடான முரசொலியில் டாக்டர் ராமதாசை விமர்சித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

    குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஓட்டவில்லையே என பெருமிதம் பேசுவதில் நமது மருத்துவர் அய்யாவுக்கு நிகர் அவரேதான் இருக்க முடியும்.

    தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தைத்தான் ஏற்படுத்தியதே தவிர, எனக்குள் எந்தவிதக் கவலையையோ, கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உண்மைதான். அய்யாவுக்கு எப்படி கவலை வரும்.

    மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றிருந்தால் மத்தியில் மீண்டும் அமைய உள்ள நரேந்திரமோடி தலைமையிலான அரசின் துணையோடு தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்போம் என்று கூறி சாதுர்யமாக வழக்கம்போல நழுவுகிறார் மருத்துவர் அய்யா.

    மத்தியில் வரவேண்டும் என நீங்கள் விரும்பிய ஆட்சியே வந்து விட்டது. அப்படி இருக்க, உங்கள் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற என்ன தயக்கம். எம்.பி.யாக இருந்தால் தான் செய்ய முடியுமா?

    மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்வுக்கு உங்கள் திருமகன், உங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே.மணி மற்றும் உங்கள் கூட்டணியில் அங்கம் வகித்த கிருஷ்ணசாமி, ஏ.சி. சண்முகம் புடைசூழ ஒரே விமானத்தில் டெல்லிக்குப் பயணித்தாரே, அதே போன்று அனுப்பி தமிழக மக்கள் நலனுக்குப் பங்காற்றக் கூடாதா?

    உண்மையிலேயே நீங்கள் தமிழக வளர்ச்சிக்கும், தமிழக மக்கள் நலனுக்கும் பணியாற்றும் தலைவராக இருந்தால், என்ன சொல்லியிருக்க வேண்டும்?

    “தோல்வி அடைந்திருந்தாலும் பரவாயில்லை, தமிழக நலனே என் நலன். நாம் எதிர்பார்த்த ஆட்சி மத்தியிலே அமைந்து விட்டது. மத்தியில் மீண்டும் அமைந்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு நமது அரசு. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தமிழக மக்களின் நலனுக்கும் பெரும் பங்காற்ற, அந்த அரசிடம் எடுத்துச் சொல்லி தேவையான அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்றியே தீருவோம் எனக் கூறியிருந்தால், உங்கள் உயரிய நோக்கத்தைப் பாராட்டியிருக்கலாம்.

    ஆனால் பொறுப்பை நீங்கள் உதறித் தள்ளிவிட்டு, கூட இருக்கும் ஒரு சில அப்பாவி பாட்டாளிச் சொந்தங்களைத் தக்க வைத்துக் கொள்ள நினைத்து, பொறுப்பற்ற நிலையில் ஒரு அறிக்கை விடுகிறீர்களே, இது நியாயமா?

    மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோது மக்களுக்கு எதையும் செய்யாத தி.மு.க. என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியிருக்கிறார். பாவம், தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி, அய்யாவிற்கு நினைவிழப்பை உருவாக்கியுள்ளது போலும்.


    மத்தியில் அதிகாரத்தில் தி.மு.க. இருந்தபோது அய்யாவின் ஆசை மகன் அன்புமணியும் தி.மு.க.வின் தயவால் பதவி பெற்று மத்தியில் அமைச்சராக இருந்தார் என்பதை மறந்து விட்டுப் பிதற்றுவது என்ன நியாயம்?

    அறிக்கையின் முடிவில் பாட்டாளிகளை வீறு கொண்டு எழக் கேட்டுள்ளீர்கள். அத்துடன் விடவில்லை. மக்களின் பிரச்சனைக்காக தொடர்ந்து போராட அவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறீர்கள்.

    கட்சித் தொண்டர்கள் காதிலே பூச்சுற்ற ஒரு அளவில்லையா? மருத்துவர் அய்யா, முழம் முழமாகச் சுற்றத் தொடங்கியுள்ளீர்களே, நியாயமா?

    நீங்கள் ஆதரித்த கட்சிகளின் ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும். அப்படி இருக்க, மக்களின் பிரச்சனைகளை அவர்களிடம் எடுத்துச் சொல்லி அவற்றிற்குத் தீர்வு காண வேண்டியதுதானே. அதை விடுத்து போராட அழைப்பதேன்? சரி, அதை எல்லாம் விடுங்கள்.

    தேர்தலில் கூட்டணி அமைத்தபோது ஒரு பத்து அம்சத் திட்டத்தைக் கூறி, அதனை ஏற்றுக் கொண்டதால்தான் நான் அ.தி.மு.க. அணியோடு கூட்டணி சேர்ந்தேன் என்று பேட்டி தந்தீர்களே. அந்த பத்து அம்சங்களையாவது நிறைவேற்றிடுவீர்களா, அதற்கும் “பெ....பெ....”தானா?

    தேர்தல் தோல்விக்குத் துவள வேண்டாம் என அறிக்கை விட்டுவிட்டீர்கள். பத்து அம்சமும் பஞ்சாய்ப் பறக்கிறது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டால் முடியுமா? அடுத்து கூட்டணிப் பங்கீட்டுப் பேச்சு உடன்படிக்கைப்படி ஒரு ‘ராஜ்ய சபா’ சீட்டு பாக்கியிருக்கிறது. அதை அன்புமணிக்குத் தயார் செய்யுங்கள்.

    கூட்டணி வைத்துத் தோல்விதானே கண்டோம் என அந்த ‘சீட்’டைத் தராது கைவிரித்து விடப் போகிறார்கள்.

    இதை எழுதிக் கொண்டிருக்கும்போது, எங்கோ தூரத்தில் ஒலிபரப்பாகும் “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... சொந்த நாட்டிலே...” எனும் பாடல் காதிலே விழுகிறது. அய்யாவுக்கு அந்தப் பாடலை சமர்ப்பணமாக்குகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரையில் காரசாரமான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது. #DMK #KamalHaasan
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் தி.மு.க. ஊழல் கட்சி என்றும், அழுக்கு பொதி மூட்டை என்றும் குற்றம் சாட்டி இருந்தார். இதன் காரணமாகவே தி.மு.க. கூட்டணியில் இடம்பெற விரும்பவில்லை என்றும் கமல் தெளிவுபடுத்தினார். இது தி.மு.க. தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கமலை விமர்சித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தது. தி.மு.க. எம்.எல்.ஏ.வும், நடிகருமான வாகை சந்திரசேகர், கமல்ஹாசனை கடுமையாக சாடி இருந்தார்.

    இந்த நிலையில் கமல் மீது தி.மு.க. மீண்டும் பாய்ந்துள்ளது. இது தொடர்பாக முரசொலியில் இன்று வெளியாகி உள்ள கட்டுரையில் கமல் மீது காரசாரமான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    கலைஞானி கமல்ஹாசனின் தோல் உரியத் தொடங்கி உள்ளது.

    திரையில் பல்வேறு வேடங்களைக் காட்டினார். நடிப்பாற்றல் என்று மகிழ்ந்து அவரைப் பாராட்டினோம். இப்போது அரசியல் பிரவேசம் நடத்தி, அதேபோல வேடங்களை மாற்றி வித்தை காட்டத் தொடங்கி உள்ளார். ஜென்மத்தோடு பிறந்ததை எதைக் கொண்டும் சீர் செய்ய முடியாது என்பார்கள்.

    உதாரணமாக, ‘நாய் வாலை நிமிர்த்த இயலுமா?- என்று கேட்பார்கள். ஆனால், அதிசயமாக நிமிர்ந்து நின்ற வாலைப் பார்த்து, வா.ராவைப் போல இதோ ஒரு அதிசய மனிதர் தோன்றி இருக்கிறார் என வியந்தோம்.

    ஆனால், இப்போதுதான் வாலில் கட்டிய சிம்பு விலகியதால் வால் மீண்டும் வளைந்துள்ளது.

    ஊடக விவாதங்களிலும், சில அரசியல் மேடைகளிலும் பேசி வரும் தோழர் மதிமாறன், கமல் அரசியல் வேடம் கட்டிய நாளிலிருந்து, இவர்களெல்லாம் பி.ஜே.பி.யால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை சுட்டிக்காட்டி வருகிறார். நம்மில் சிலர் கூட நினைத்தோம், ஏன் நாம் கூட எண்ணினோம். கமல்ஹாசனை தேவையின்றி ஏன் சீண்ட வேண்டும். திராவிட இயக்க உணர்வோடு ஒத்துப் போகும் அவரை நோக்கி, ஏன் இது போன்ற குண்டூசித் தாக்குதலை நடத்த வேண்டும் என்றெல்லாம் நம்மிடையே கருத்துக்கள் நிலவின.

    மதிமாறன் போன்றோர் கொண்ட கருத்து, எத்தனை தீர்க்கதரிசனமானது என்பதை நிரூபித்திடும் வகையில், கலைஞானி கமல்ஹாசனின் இன்றைய பேச்சு துல்லியமாக அமைந்துள்ளது. அரிதாங்கள் மேல் உடலை மாற்றலாம். ஆனால், உள்ளுணர்வை மாற்ற இயலாது என்பதற்கு சிறப்பான எடுத்துக் காட்டாகி விட்டார் கமல்ஹாசன்.


    மூட்டைகளைச் சுமக்கும் பிராணிக்கு கனம் தெரியுமே தவிர, அதனுள் இருப்பது என்ன என்பதை உணர முடியாது. மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்பது தெரியாது. எஜமான் தூக்கி வைப்பதைச் சுமந்து செல்வது தான் அதன் வழக்கம்.

    சில பிராணிகள் கூட மோப்பத்தில் எஜமானை அறிந்து விசுவாசத்தில் வால் ஆட்டும். மூட்டை சுமக்கும் பிராணியோ கோல் தூக்கியவனை எல்லாம் எஜமானாகக் கருதிச் செல்லும். கோல் தூக்கி மிரட்டிய எஜமானுக்கு பயந்து கோலோச்சப் புறப்பட்ட கமல்ஹாசனுக்கு செக்குக்கும், சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாது போய் விட்டது. பாவம், அவரைச் சொல்லிக் குற்றமில்லை, கட்சி தொடங்கி பல மாதங்கள் கடந்த பின் இப்போதுதான் தி.மு.க. ஊழல் கட்சியாகக் காட்சி தருகிறது அவருக்கு.

    ‘பத்மஸ்ரீ’ பட்டம் பெற்ற போதும், பாராட்டு விழாவுக்கு அன்றைய முதல்வர் கலைஞரை அழைத்த போதும், தி.மு.க. ஊழல் கட்சியாகத் தோன்றவில்லை.

    மருதநாயகம் படப்பிடிப்பைத் தொடங்க அன்றைய தி.மு.க. முதல்வரை அழைத்தபோது, ஊழல் தெரியவில்லை. ஏன் அவ்வை சண்முகியாக வேடம் கட்டி, தலைவர் கலைஞரைச் சந்தித்து ஆசிபெற்ற போதும் ஊழல் தெரியவில்லை.

    ஆனால் இப்போது திடீரென தி.மு.க. ஊழல் கட்சியாக அவர் முன் உருவெடுத்திருக்கிறது என்றால், என்ன காரணம்? ஆட்சியில் இருந்த போதெல்லாம் ஊழல் கட்சியாகத் தோன்றாத ஒன்று, ஆட்சி அதிகாரத்தை இழந்த 7 ஆண்டுகள் முடிந்தபின் திடீரென ஊழல் கட்சியாக கமலுக்குக் காட்சி அளிக்கிறது என்றால், அது அவரது சொந்தக் கருத்தாக இருக்க முடியுமா?

    சினிமா பாணியில் சொல்ல வேண்டுமெனில், நாம் பல படங்களில் பார்த்த காட்சி மூலமே இதனை விளக்கிட இயலும்.

    நாயகனின் நண்பன் பாத்திரத்தில் தோன்றுபவன், திடீரென நாயகனுக்கு எதிராகப் பேசுவான். நாயகன் குற்றவாளி என்பான். படம் பார்ப்பவர்கள் திகைப்பார்கள். என்ன இப்படி நேரம் பார்த்து காலை வாரி விட்டு விட்டானே எனப் படம் பார்ப்பவர்கள் எல்லாம் திகைத்திருக்க, அதுவரை இரு பாத்திரங்களை மட்டும் ‘குளோசப்’பில் காண்பித்த கேமரா பின் நோக்கிச் செல்லும்- அப்போது மூன்றாவது பாத்திரம் ஒன்று, நாயகனின் நண்பனுக்குப் பின்னால் அவர் முதுகின் மீது கத்தியையோ அல்லது துப்பாக்கியையோ வைத்து அழுத்திக் கொண்டிருப்பது காண்பிக்கப்படும்.

    அதே நிலைதான், பின்னால் பி.ஜே.பி.யின் துப்பாக்கி அழுத்தத்தின் காரணமாக தன்னிலை மறந்து பிதற்றத் தொடங்கி உள்ளார் கலைஞானி. ஆனானப்பட்டதாகக் கருதப்பட்ட புரட்சி நடிகர்கள் கூட அமலாக்கத்துறை, வருமானத் துறை மிரட்டலுக்குப் பயந்து, அவர்களை வளர்த்த கட்சியின் மார்பில் பாய்ந்த வரலாற்றைத் தெரிந்தவர்கள் நாம். “வளர்த்த கடா மார்பில் பாய்ந்த தடா” - எனத் தன் வெண்கலக் குரலால் மறைந்த நாகூர் ஹனீபா பாடிய பாடல் கேட்டிருப்போம்.

    அதனையே, எதிர் கொண்டு போராடி இந்தப் பேரியக்கத்தைக் காப்பாற்றி வந்தவர்கள் நாம். நம்மை இந்த “பூம் பூம்”காரனின் மாடு என்ன செய்து விடும்.

    தலைவர் கலைஞர் அடிக்கடி கூறுவது போல, புலி வேட்டைக்குச் செல்பவன், இடையில் பன்றிகள் வீசும் சேற்றைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. அது நமது கவனத்தை, குறியை திசை திருப்பும் செயலாகும். அவற்றை அலட்சியப்படுத்தி லட்சியத்தை எட்டி, பீடு நடைபோடுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #MakkalNeedhiMaiam #KamalHaasan
    ரஜினியின் அரசியல் குறித்து சாடிய முரசொலி நாளிதழின் ஆசிரியர் இனி யாருடைய மனதும் புண்படாதபடி கவனத்துடன் செயல்படுவோம் என விளக்கம் அளித்துள்ளார். #Rajini #Murasoli #RajiniPolitics
    சென்னை:

    தமிழகத்தில் ரஜினியின் அரசியல் வருகை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சமீபத்தில் தனது மன்ற நிர்வாகிகளுக்கான அவரது அறிக்கை குறித்து கட்டுரை வெளியிட்டு இருந்த முரசொலி நாளிதழ், ரஜினியின் ரசிகரின் கேள்விகள் போன்று அமைக்கப்பட்டு இருந்தது.

    இது ரஜினியின் அரசியல் வருகை குறித்து கடுமையாக சாடியதாக பலராலும் பேசப்பட்டதோடு, விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், முரசொலியின் தலைமை ஆசிரியர் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

     

    அந்த விளக்கத்தில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து முரசொலியில் வெளிவந்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவதாக இருப்பதாக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Rajini #Murasoli #RajiniPolitics
    ரசிகர் மன்றத்தில் இருப்பதால் மட்டும் மக்கள் மன்றத்தில் பதவி பெறவோ அரசியலில ஈடுபடவோ தகுதி பெற முடியாது என சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட ரஜினியை திமுக நாளேடு கடுமையாக சாடியுள்ளது. #Rajinikanth #DMK
    சென்னை:

    ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்காக அவரது ரசிகர் மன்றத்தை ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றினார்.

    இந்த மன்றம் மூலம் புதிய கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்கான நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நிர்வாகிகள் சிலர் நீக்கப்பட்டனர். இதனால் ரசிகர்களிடம் அதிருப்தி ஏற்பட்டது. ரஜினியிடம் சொல்லாமல் நிர்வாகிகள் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரஜினி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். அதில், ‘குடும்பத்தை கவனிக்காமல் மன்ற பணிக்கு வரக்கூடாது. வெறும் ரசிகர் மன்றத்தை வைத்துக் கொண்டு நாம் நினைத்ததை சாதிக்க முடியாது. ரசிகர் மன்றத்தில் இருந்தால் மக்கள் மன்றத்தில் பதவி பெறவோ, அரசியலில் ஈடுபடவோ தகுதி பெற முடியாது’ என்று கூறி இருந்தார்.


    ரஜினியின் இந்த அறிவுரைகளை விமர்சனம் செய்யும் வகையில் தி.மு.க. நாளிதழான முரசொலியில், ரசிகர்கள் பதில் சொல்வதுபோல ரஜினியை கடுமையாக சாடி உள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:-

    என்ன தலைவா கடைசியில் இப்படி காலை வாரி விடுகிறாய். கொடி பிடித்து கோ‌ஷம் போட்டு உன் பெயரை எங்கள் பெயர் முன் இணைத்தோம். ஊர் ஊராக தெருத்தெருவாக உனக்கு மன்றம் அமைத்து உன் படம் ரிலீஸ் ஆகும் அன்று வாண வேடிக்கை எல்லாம் நடத்திய எங்களை இப்படி கேவலப்படுத்துவது நியாயமா?

    குடும்பத்தை பராமரிக்காமல் மன்றப் பணிக்காக யாரும் வரவேண்டாம். செலவு செய்ய வேண்டாம் என்கிறாய். நீ சொல்லாவிட்டாலும் தலைவா இத்தனை ஆண்டு காலம் நாங்கள் செலவு செய்து உன் புகழ்பாடி போஸ்டர் ஒட்டியதை எல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டு தானே இருந்தாய்.

    வாயை கட்டி வயிற்றை கட்டி உனக்காக எவ்வளவு செலவு செய்தோம் என்பதை நீ அறியமாட்டாயா? அப்போது வாய்மூடி இருந்து விட்டு இப்போது புத்திமதி சொல்கிறாயே இதுதான் நியாயமா?

    நீ திரையில் தோன்றிய போது கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து விசில் அடித்து ஆரவாரம் செய்து கோ‌ஷம் எழுப்பிய எங்களை தகுதியற்ற கூட்டம் ஆக்கி விட்டாயே. 30, 40 வருடங்கள் திரையில் நடித்தது மட்டும் முதல்வர் ஆவதற்கு தகுதி என நீ கருதும் போது இத்தனை ஆண்டுகள் உன்னை உயர்த்திப்பிடித்த எங்களுக்கு தகுதி இல்லை என்பது என்ன நியாயம் தலைவா?

    குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள் என்கிறீர்கள். உங்கள் குடும்பத்தை, மனைவி, மருமகனை பார்த்துக் கொண்டு நீங்கள் இருக்க வேண்டியது தானே? ஏன் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று மற்றவர்கள் எங்களைப் பார்த்து கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்வது? ஊருக்கு தான் உபதேசம் உங்களுக்கு இல்லையா? ‘வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்’ என்று சொல்லி வருவதற்கு முன்பே எங்களுக்கு ஆப்பு வச்சுட்டீங்களே தலைவா? இது சரிதானா?

    மன்ற கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டவர்களைத்தான் நீக்கி இருக்கிறோம் என்கிறீர்கள். இந்த மன்றத்துக்கு எப்போதாவது கொள்கையை அறிவித்து இருக்கிறீர்களா? சிஸ்டம் சரியில்லை மாற்றப் போகிறேன் என்று சொல்லி விட்டு இஷ்டத்துக்கு செயல்படுவது நேர்மையான அரசியலா?

    அரசியலுக்கு வருவது பதவி வாங்க அல்ல என்றால், வரும் சட்டமன்ற தேர்தலில் எல்லா தொகுதி களிலும் போட்டியிடுவோம் என அறிவித்தது ஏன் தலைவா? பதவிக்காக அரசியல் இல்லை என்றால் பெரியாரைப் போல கட்சி ஆரம்பித்து கொள்கையில் உறுதியாக நின்று போராட வேண்டியதுதானே.

    உங்களுக்கு மட்டும் அமைச்சர் பதவி வேண்டும். அதற்கு நாங்கள் உழைக்க வேண்டும். ஆனால் நாங்கள் மட்டும் பதவிக்கு ஆசைப்படக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம் தலைவா? எங்களை உடைத்து எறிந்து விட்டு கார்பரேட்டுகள் துணையில் கட்சி ஆரம்பிக்க நினைக்கிறாய்.

    ‘பஞ்ச்’ வசனங்களை நம்பி உன்னை யாராலும் ஆட்ட முடியாது, அசைக்க முடியாது என நினைத்தோம். ‘பெயரைக் கேட்டா சும்மா அதிருதுல்ல’ என்றாய் உண்மைதான் தலைவா. உன் அறிக்கையை பார்த்து நாங்கள் எல்லாம் அதிர்ந்து கிடக்கிறோம்.

    மன்றத்துக்காக உண்மையாக உழைக்கும் எல்லோருடைய செயல்பாடுகளையும் நன்கு அறிவேன் என்று சொல்கிறீர்கள். முதலில் உங்களை சுற்றி இருப்பவர்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் தலைவா.

    தமிழருவி மணியன் சென்ற இடம் எதுவும் உருப்பட்டதா? ஊடகங்களில் உனக்காக குரல் எழுப்புபவர்கள் எல்லாம் மத வெறியர்கள். சாதி, மதம் கடந்து ஒற்றுமையாக வாழும் தமிழ் சமுதாயத்தை கலவர பூமியாக்கிட நினைப்பவர்கள்.

    இது பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோர் பதப்படுத்திய மண். திராவிடத்துக்கு எதிராக செயல்படும் எவரும் தலை தூக்க முடியாது. ஆனால் ஒரு கூட்டம் எங்களால் ஏற்பட்ட உங்கள் புகழை அழிக்க நினைக்கிறது.

    அந்த கூட்டத்தின் கைப்பாவையாகி அவர்கள் ஆட்டுவிக்கும்படி ஆடுவது உங்கள் புகழின் அழிவுக்கு வழி வகுத்து விடும் என்பதை தலைவா உணர்ந்து கொள்.

    உன்னை எங்களின் சுவாசக் காற்றாய் நினைத்து செயல்பட்ட எங்களை தூக்கி எறிந்து விட்டாய். தலைவா, உன்னை நம்பி நாங்கள் ஆடிக் கொண்டு இருந்தோம். ஆனால் நீயோ யாருடைய கயிற்று அசைவிலோ ஆடும் பொம்மையாகி விட்டாய்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #Rajinikanth #DMK
    ×