search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traffic Violations"

    • தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 23 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
    • விதிகளை மீறியதாக 2 ஆயிரத்து 406 குற்றங்கள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு ரூ.2 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 400 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்றுமுன்தினம் திடீர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இதில், பல்வேறு குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    அதாவது பிரேக் லைட் எரியாத வாகனங்கள், அதிக அளவில் ஆட்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள், அதிக அளவு சரக்கு ஏற்றிச்சென்ற வாகனங்கள், உரிமங்களை தவறாக பயன்படுத்தியது, உரிமங்களின் விதிமீறலுக்கு மாறாக செயல்பட்டது, உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியது, வரி கட்டாமல் ஓடும் வாகனங்கள், காலாவதியான ஓட்டுனர் உரிமம் மற்றும் பதிவுச் சான்று புத்தகங்கள் இன்றி வாகனம் ஓட்டியது என பல்வேறு குற்றங்கள் கண்டறியப்பட்டது.

    அதன்படி, தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 23 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், 2 ஆயிரத்து 281 வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.28 லட்சத்து 49 ஆயிரத்து 315 அளவிற்கு செலுத்தப்படாத வரிகள் கண்டறியப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளன.

    மேலும், விதிகளை மீறியதாக 2 ஆயிரத்து 406 குற்றங்கள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு ரூ.2 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 400 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் செலுத்தப்படாத வரிகள் மற்றும் அபராதத் தொகையை சேர்த்து ரூ.2 கோடியே 39 லட்சத்து 80 ஆயிரத்து 715 வசூலிக்கப்பட்டுள்ளது.

    அதிகபாரம் ஏற்றி வந்ததாக 389 வாகனங்களும், அதிக அளவில் ஆட்களை ஏற்றி வந்ததாக 251 வாகனங்களும், உரிமம் இல்லாமல் வந்த 96 வாகனங்களும், வரி கட்டாமல் இயக்கப்பட்டதாக 135 வாகனங்களும், தகுதிச் சான்றிதழ் (எப்.சி.) இல்லாத 308 வாகனங்களும், உரிய காப்பீடு இல்லாத 312 வாகனங்களும், ஓட்டுனர் உரிமம் இல்லாத 295 வாகனங்களும், புகைச்சான்று இல்லாத 111 வாகனங்களும், பிரேக் லைட் எரியாத 267 வாகனங்களும் கண்டறியப்பட்டன. அவற்றில் 368 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற திடீர் சோதனைகள் மாநிலம் முழுவதும் அவ்வப்போது நடத்தப்படும்.

    மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை கமிஷனர் சண்முக சுந்தரம் தெரிவித்து உள்ளார்.

    • கீழக்கரையில் அதிகரிக்கும் சாலை விதி மீறல்களால் போக்குவரத்து போலீஸ் நிலையம் ஏற்படுத்த வேண்டும்.
    • இதுெதாடர்பாக அந்தப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். வளர்ந்து வரும் மக்கள் தொகை, பெருகி வரும் வாகனங்கள் எண்ணிக்கையினால் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    போலீஸ் நிலையத்தில் நிலவும் போலீசார் பற்றாக் குறையால் நகரில் பெரிய 'தலைவலியாக' மாறி வரும் நெரிசலுக்கு தீர்வு காணுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் விதீமீறல்கள் அதிகளவில் நடைபெறுகிறது.

    போக்குவரத்து இடையூறு காரணமாக பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். ஆக்கிரமிப்பு, போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆம்பு லன்சு செல்ல முடியவில்லை. விரும்பிய இடத்தில் லாரிகளை நிறுத்தி சரக்குகளை இறக்கி வருகின்றனர். சில சமயம் வலது, இடது இரு பக்கங்களிலும் லாரி நிறுத்தப்பட்டு சரக்குகள் இறக்கப்படுவதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    கீழக்கரையின் நிலைமை குறித்து சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் முகம்மது சாலிஹ் ஹுசைன் கூறுகையில், வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும். நிரந்தர போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைத்திட கோரியும் சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பந்தப்பட்ட அதிகாரி கள் உடனடியாக நட வடிக்கை எடுத்து கீழக்கரையில் போக்குவரத்து போலீஸ் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    • அபராதம் செலுத்தாத வாகன ஓட்டிகளின் செல்போன் எண்களுக்கு மையங்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.
    • போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத்தொகை 'டிஜிட்டல்' முறையில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் போலீசார் வசூலித்து வருகின்றனர்.

    சென்னை:

    மதுபோதையில் வாகனங்களை ஓட்டிச்செல்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அபராதத்தொகை அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் உடனடியாக செலுத்துவது இல்லை. இவ்வாறு நிலுவையில் உள்ள வழக்குகளின் அபராதத் தொகையை வசூலிப்பதற்காக சென்னையில் 10 இடங்களில் போலீஸ் அழைப்பு மையங்கள் (கால் சென்டர்) இயங்கி வருகிறது.

    அபராதம் செலுத்தாத வாகன ஓட்டிகளின் செல்போன் எண்களுக்கு இந்த மையங்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் கடந்த 20-ந்தேதி அன்று ஒரேநாளில் 586 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.60 லட்சத்து 36 ஆயிரம் அபராதத்தொகை வசூலிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களில் மட்டும் இந்த அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 12 ஆயிரத்து 551 குடிபோதை வழக்குகளுக்கு போலீசார் தீர்வு கண்டுள்ளனர்.

    இதன் மூலம் ரூ.12 கோடியே 99 லட்சத்து 8 ஆயிரத்து 600 அபராதத் தொகையாக கிடைத்துள்ளது. தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டும் அபராதத் தொகை செலுத்தாத 371 வாகன ஓட்டிகளின் அசையும் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத்தொகை 'டிஜிட்டல்' முறையில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் போலீசார் வசூலித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 4 மாதங்களில் நிலுவையில் இருந்த 1 லட்சத்து 63 ஆயிரத்து 318 போக்குவரத்து விதிமீறல் வழக்குகளுக்கு போலீசார் தீர்வு கண்டு ரூ.6 கோடியே 78 லட்சத்து 69 ஆயிரத்து 540 அபராதத்தொகை வசூலித்துள்ளனர்.

    இந்த நடவடிக்கையை போலீசார் துன்புறுத்தலாகக் கருதக்கூடாது. விழிப்புணர்வாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • லாரிகளை சாலையோரம் நிறுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
    • சாலையோரம் லாரிகள் நிறுத்தப்படுவதை தடுக்க போலீசார் ரோந்து வாகனங்களில் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

    பொன்னேரி:

    காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகம், எல்.என்.டி.துறைமுகம், நிலக்கரி முனையம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு தினந்தோறும் செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திருவொற்றியூர் முதல் மீஞ்சூர்-பொன்னேரி- மணலி சாலைகளை பயன்படுத்தி வருகின்றன.

    சரக்குகள் ஏற்றி மற்றும் இறக்கி செல்லும் வாகனங்களை டிரைவர்கள் சாலையோரம் ஆங்காங்கே நிறுத்தி செல்வது வழக்கம். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கு தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்தது.

    இதையடுத்து சாலையோரங்களில் கனரக வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதன் டிரைவர்கள் மற்றும் லாரி உரிமையாளர்களிடம் போக்குவரத்து போலீசார் மற்றும் மீஞ்சூர் போலீசார் பலமுறை அறிவுறுத்தினர். ஆனால் லாரிகள் நிறுத்தப்படுவது தொடர்ந்து நீடித்து வந்தது.இந்த நிலையில் செங்குன்றம் சரக போக்குவரத்து உதவி ஆணையாளர் மலைச்சாமி ஆய்வாளர் சோபிதாஸ் தலைமையில் போலீசார் மணலிசாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகளுக்கு அதிரடியாக அபராதம் விதித்தனர். ரூ.1000 முதல் ரூ.4 ஆயிரம் வரை 92 லாரிகளுக்கு மொத்தம் ரூ.1¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ரூ.56 ஆயிரம் உடனடியாக வசூல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து லாரிகளை சாலையோரம் நிறுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல், பேபி, மணவாளன், நரேஷ், சண்முகராஜ் மற்றும் போக்குவரத்து காவலர்கள் உடன் இருந்தனர்.

    இதுகுறித்து போக்குவரத்து உதவி கமிஷனர் மலைச்சாமி கூறும்போது, திருவொற்றியூர்-மணலி-மீஞ்சூர் நெடுஞ்சாலைகளில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தது. லாரிகளை அதனை நிறுத்தும் வளாகத்தில் நிறுத்த வேண்டும். இதனை மீறும் லாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும். சாலையோரம் லாரிகள் நிறுத்தப்படுவதை தடுக்க போலீசார் ரோந்து வாகனங்களில் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றார்.

    • போக்குவரத்து காவல் வாகனங்களில் டேஷ் போர்டில் பொருத்தும் வகையிலான கேமரா பொருத்தப்பட வேண்டும்.
    • மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் வைக்கப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் சாலை போக்குவரத்தை கண்காணித்து விபத்துக்களை தவிர்க்கும் வகையில் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி புதிய நடைமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

    அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் வைக்கப்படும்.

    நவீன தொழில்நுட்பத்தின் மூலம் போக்குவரத்தை கண்காணித்தல், விபத்தை தவிர்த்தல், விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வது மட்டுமின்றி போக்குவரத்து போலீசார் தங்கள் உடலில் கேமராவை பொருத்தி வாகன போக்குவரத்தை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    போக்குவரத்து காவல் வாகனங்களில் டேஷ் போர்டில் பொருத்தும் வகையிலான கேமரா பொருத்தப்பட வேண்டும். அதே போல் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய நகரங்கள், முக்கிய சந்திப்புகளில் கேமராக்களை பொருத்தி போக்குவரத்தை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    அதிக வேகம், ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாமல் பயணித்தல், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல், சிக்னல்களை மீறிச் செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல், இதர வாகனங்களை தாறுமாறாக முந்தி செல்லுதல் உள்பட பல்வேறு விதிமீறல்களை கண்காணித்து விதிமீறும் வாகனங்களின் டிரைவர்களுக்கு 15 நாட்களுக்குள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி அபராதம் விதிக்க புதிய நடைமுறை செயல்படுத்தப்படும்.

    இதில் தேதி, நேரம், இடம் ஆகியவற்றுடன் மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் அல்லது நேரில் வழங்கப்படும்.

    அபராத சீட்டை பெற்றுக்கொண்டு இணைய தளம் அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களில் அபராத தொகையை செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய நகரங்கள், முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்படும்.
    • அபராத தொகையை இணையதளம் அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சாலை போக்குவரத்தை கண்காணித்து விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே அபராதம் விதிக்க புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, புதிய நடைமுறைகளை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது.

    Electronic Enforcement Device-ஐ பயன்படுத்தி போக்குவரத்தை கண்காணித்தல், விபத்தை தவிர்த்தல், விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய நகரங்கள், முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்படும்.

    போக்குவரத்து காவலர்கள், தங்கள் உடையில் கேமராவைபொருத்தி வாகன போக்குவரத்தை கண்காணிக்க வேண்டும்.

    போக்குவரத்து காவல் வாகனங்களில் டாஷ்போர்டில் பொருத்தும் வகையிலான கேமரா மூலம் போக்குவரத்தைக் கண்காணிக்க வேண்டும்.

    போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு தேதி, நேரம், இடம் ஆகிய விவரங்களுடன் கூடிய ரசீது மின்னஞ்சல், குறுந்தகவல் அல்லது நேரில் வழங்கப்படும்.

    அபராத தொகையை இணையதளம் அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    • பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மதுபோதையில் வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணமாக உள்ளது.
    • போதையில் வாகனம் ஓட்டுபவர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

    சென்னை:

    சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து போக்குவரத்து போலீசார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வருகிறார்கள். இப்படி போதையில் சிக்குபவர்களில் பலர் அபராதத்தை கட்டாமல் ரசீதை மட்டும் வாங்கி வைத்துக்கொண்டு ஏமாற்றி விடுகிறார்கள்.

    இதுபோன்று அபராதம் செலுத்தாமல் இருப்பவர்களை கண்டுபிடித்து அபராதம் கட்ட வைப்பதற்காக போலீசார் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் குடிமகன்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

    பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மதுபோதையில் வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணமாக உள்ளது. இதன் காரணமாகவே போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்க திட்டமிட்டு அதை நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டு உள்ளது. ரூ.10 ஆயிரம் அபராதத்துக்கு பயந்து பலர் மது குடித்த பின்னர் வாகனங்களை ஓட்டுவதில்லை.

    அதே நேரத்தில் போதையில் வாகனம் ஓட்டுபவர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதுபோன்று போதையில் வாகனம் ஓட்டி அபராதம் கட்டாமல் 8119 பேர் போலீசாரை ஏமாற்றி வருகிறார்கள்.

    இதுபோன்ற நபர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராத தொகையை வசூலிக்க போலீசார் கோர்ட்டு வரை சென்று வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவுகளையும் வாங்கி வைத்துள்ளனர். சென்னையில் 361 பேருக்கு எதிராக இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு அவர்களது அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது போன்று அபராதம் கட்டாமல் தொடர்ச்சியாக ஏமாற்றி வரும் அனைவரது வாகனங்களையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மதுபோதையில் சிக்கி அபராதம் கட்டாதவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதத்தை வசூலிக்க சென்னையில் 10 இடங்களில் அழைப்பு மையங்களை ஏற்படுத்தி போலீசார் அபராத வசூலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். 2 மாதங்களில் இந்த அழைப்பு மையங்கள் மூலமாக 8674 போதை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.8 கோடியே 97 லட்சத்து 27ஆயிரம் 400 அபராத தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது.

    எனவே மதுபோதையில் சிக்கி அபராதம் கட்டாமல் இருப்பவர்கள் உடனடியாக தங்களது அபராத தொகையை செலுத்த வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆன்லைனில் பணம் செலுத்தும் அனைத்து வழிகளிலும் பணத்தை செலுத்தலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதத்தொகை வசூலிக்கப்படுகிறது.
    • கடந்த 7 வாரங்களில் 5,738 பேர்களிடம் ரூ.5.94 கோடி அபராதத்தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதத்தொகை வசூலிக்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த 7 வாரங்களில் 5,738 பேர்களிடம் ரூ.5.94 கோடி அபராதத்தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

    அபராதத்தொகை விதித்து 14 நாட்களுக்குள் அதை செலுத்தாவிட்டால் அவர்களது வாகனம் அல்லது அசையும் சொத்துக்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கோர்ட்டு மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • போக்குவரத்து போலீஸாா் நகரின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
    • குடிபோதை, தலைக் கவசம் அணியாமல் வாகனங்களை இயக்கியது உள்ளிட்ட பல்வேறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காங்கயம் :

    காங்கயத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸாா் நகரின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனா்.

    அதன்படி, காங்கயம் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய வாகனச் சோதனையில் குடிபோதை, தலைக் கவசம் அணியாமல் வாகனங்களை இயக்கியது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக 625 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக காங்கயம் போக்குவரத்து காவல் ஆய்வளாா் மகேஸ்வரன் தெரிவித்தாா்.

    • தினமும் 150 பேர் வரையில் மதுபோதையில் போலீசாரிடம் சிக்குகிறார்கள்.
    • சென்னையில் பைக் ரேசில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை மாநகரில் விபத்துகளை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். போதையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதும், விபத்துக்கு முக்கிய காரணமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் மேற்பார்வையில் போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய தினமும் ரோந்துப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

    இரவு நேரங்களில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்து வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 47 ரோந்து படையினர் போதை ஆசாமிகளை பிடிப்பதற்கு களம் இறக்கப்பட்டுள்ளனர்.

    மாலை மற்றும் இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளை சோதனை செய்யும் போலீசார் மது குடித்திருக்கிறார்களா? என்பது பற்றி பரிசோதனை செய்கிறார்கள். இதில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    அபராத தொகை உயர்த்தி வசூலிக்கப்படுவதால் போதையில் வீட்டுக்கு செல்பவர்கள் தவியாய் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தினமும் 150 பேர் வரையில் மதுபோதையில் போலீசாரிடம் சிக்குகிறார்கள்.

    வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போதையில் சிக்குபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வாரமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சென்னையில் வார இறுதி நாட்களில் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் பெரும்பாலானோர் மது விருந்தில் ஈடுபடுகிறார்கள்.

    இவர்கள் விருந்து நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பும்போது போலீசார் விரிக்கும் வலையில் சிக்கிக்கொள்கிறார்கள். இதுபோன்ற நேரங்களில் மதுபோதையில் கும்பலாக சென்றும் பலர் மாட்டிக்கொள்கிறார்கள்.

    இதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் 250 பேர் வரை போலீசாரிடம் சிக்குகிறார்கள். இப்படி மாட்டிக்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    இதுபோன்ற நேரங்களில் குடிமகன்களுக்கு ஒட்டுமொத்த போதையும் இறங்கி விடுகிறது என்றே கூறலாம். போலீசாரிடம் சிக்கியதும் சிலர், `என்ன... சார் தண்ணி அடிக்க மொத்த செலவே 500 ரூபாய்தான் ஆனது. நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறீர்களே' என்று வாக்குவாதம் செய்பவர்களும் உண்டு.

    இவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அபராதம் விதித்த பின்னர் வாகனத்தை பறிமுதல் செய்து மாற்று வாகனத்தில் அனுப்பி வைக்கிறார்கள்.

    ரூ.10 ஆயிரம் அபராத தொகையை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லை என்றால் அவரது அசையும் சொத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபடுகிறார்கள். சம்பந்தப்பட்ட வாகனம் உள்ளிட்ட ஏதாவது அசையும் சொத்தை ஏலத்தில் விட்டு ரூ.10 ஆயிரம் அபராதத்தை வசூலிக்கும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுபோன்ற போலீசாரின் அதிரடியால் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே குடிமகன்கள் தினமும் திண்டாடும் நிலைக்கே தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

    சென்னையில் பைக் ரேசில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கோட்டூர்புரத்தை சேர்ந்த ராகுல், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணவம்சி, கொருக்குபேட்டை அஜய், லோகேஷ் ஆகிய 4 வாலிபர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தி.நகர் துணை கமிஷனரின் தனிப்படை போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    • பதிவெண் கொண்ட வாகனங்களை மடக்கி பிடித்து உரிய அறிவுரைகளை வழங்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
    • வேப்பேரி, புரசைவாக்கம், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த அபராத வசூல் வேட்டை நடைபெற்றது.

    சென்னை:

    கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் வாகன பதிவெண்களில் பலர் கட்சி தலைவர்களின் பெயர் மற்றும் போட்டோக்களை எழுதி வைத்திருப்பார்கள். இன்னும் சிலரோ பதிவெண்களை அரசின் விதிமுறைகளுக்கு முரணாக சிறியதாகவோ அல்லது தடிமனாகவோ அமைத்திருப்பர்.

    இதுபோன்ற பதிவெண் கொண்ட வாகனங்களை மடக்கி பிடித்து உரிய அறிவுரைகளை வழங்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

    போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் மேற்பார்வையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஒரு மாதமாக முறையாக வாகன பதிவெண்களை பராமரிக்காத நபர்களை பிடித்து போலீசார் எச்சரித்து வந்தனர்.

    இந்தநிலையில் பதிவெண்களை முறைகேடாக அமைத்திருந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை போக்குவரத்து போலீசார் இன்று அதிரடியாக தொடங்கினர்.

    சென்னையில் வேப்பேரி, புரசைவாக்கம், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த அபராத வசூல் வேட்டை நடைபெற்றது. முதல்முறை சிக்கினால் ரூ.500 அபராதமும் 2-வது முறை பிடிபட்டால் ரூ.1500 அபராதமும் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

    வேப்பேரியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி வேலு தலைமையிலான போலீசார் பதிவெண்களை முறையாக எழுதாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். இது தொடர்பான நோட்டீஸ்களையும் வண்டியில் ஒட்டினர்.

    சென்னை மாநகரம் முழுவதும் இந்த அதிரடி வேட்டை நடைபெற்றது.

    • பொங்கல் பண்டிகை அன்று 190 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு சிறப்பு வாகன சோதனை நடத்தப்படும்.

    சென்னை:

    சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தினர் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால் நகரின் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசல் இன்றி இருக்கிறது.

    மேலும் பல சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இளைஞர்கள் ஈடுபட வாய்ப்பு உள்ளதை போலீசார் உணர்ந்தனர். எனவே பொங்கல் பண்டிகை அன்று 190 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் 5 ஆயிரத்து 904 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    இந்த சோதனையில் மது போதையில் வாகனம் ஓட்டிய 376 பேர் சிக்கினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 'ஹெல்மெட்' அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவர்கள், அதிவேகமாக வாகனத்தை சென்றவர்கள் என போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 359 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்தனர்.

    சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு சிறப்பு வாகன சோதனை நடத்தப்படும் என்றும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

    ×