search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது குடிக்க செலவு ரூ.500... அபராதம் ரூ.10 ஆயிரம்- போலீஸ் வேட்டையால் தவியாய் தவிக்கும் குடிமகன்கள்
    X

    மது குடிக்க செலவு ரூ.500... அபராதம் ரூ.10 ஆயிரம்- போலீஸ் வேட்டையால் தவியாய் தவிக்கும் குடிமகன்கள்

    • தினமும் 150 பேர் வரையில் மதுபோதையில் போலீசாரிடம் சிக்குகிறார்கள்.
    • சென்னையில் பைக் ரேசில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை மாநகரில் விபத்துகளை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். போதையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதும், விபத்துக்கு முக்கிய காரணமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் மேற்பார்வையில் போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய தினமும் ரோந்துப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

    இரவு நேரங்களில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்து வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 47 ரோந்து படையினர் போதை ஆசாமிகளை பிடிப்பதற்கு களம் இறக்கப்பட்டுள்ளனர்.

    மாலை மற்றும் இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளை சோதனை செய்யும் போலீசார் மது குடித்திருக்கிறார்களா? என்பது பற்றி பரிசோதனை செய்கிறார்கள். இதில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    அபராத தொகை உயர்த்தி வசூலிக்கப்படுவதால் போதையில் வீட்டுக்கு செல்பவர்கள் தவியாய் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தினமும் 150 பேர் வரையில் மதுபோதையில் போலீசாரிடம் சிக்குகிறார்கள்.

    வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போதையில் சிக்குபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வாரமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சென்னையில் வார இறுதி நாட்களில் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் பெரும்பாலானோர் மது விருந்தில் ஈடுபடுகிறார்கள்.

    இவர்கள் விருந்து நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பும்போது போலீசார் விரிக்கும் வலையில் சிக்கிக்கொள்கிறார்கள். இதுபோன்ற நேரங்களில் மதுபோதையில் கும்பலாக சென்றும் பலர் மாட்டிக்கொள்கிறார்கள்.

    இதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் 250 பேர் வரை போலீசாரிடம் சிக்குகிறார்கள். இப்படி மாட்டிக்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    இதுபோன்ற நேரங்களில் குடிமகன்களுக்கு ஒட்டுமொத்த போதையும் இறங்கி விடுகிறது என்றே கூறலாம். போலீசாரிடம் சிக்கியதும் சிலர், `என்ன... சார் தண்ணி அடிக்க மொத்த செலவே 500 ரூபாய்தான் ஆனது. நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறீர்களே' என்று வாக்குவாதம் செய்பவர்களும் உண்டு.

    இவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அபராதம் விதித்த பின்னர் வாகனத்தை பறிமுதல் செய்து மாற்று வாகனத்தில் அனுப்பி வைக்கிறார்கள்.

    ரூ.10 ஆயிரம் அபராத தொகையை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லை என்றால் அவரது அசையும் சொத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபடுகிறார்கள். சம்பந்தப்பட்ட வாகனம் உள்ளிட்ட ஏதாவது அசையும் சொத்தை ஏலத்தில் விட்டு ரூ.10 ஆயிரம் அபராதத்தை வசூலிக்கும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுபோன்ற போலீசாரின் அதிரடியால் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே குடிமகன்கள் தினமும் திண்டாடும் நிலைக்கே தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

    சென்னையில் பைக் ரேசில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கோட்டூர்புரத்தை சேர்ந்த ராகுல், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணவம்சி, கொருக்குபேட்டை அஜய், லோகேஷ் ஆகிய 4 வாலிபர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தி.நகர் துணை கமிஷனரின் தனிப்படை போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×