search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் முதல் நாளில் 2500 வழக்குகள்: வாகன ஓட்டிகளுக்கு ரூ.15½ லட்சம் கூடுதல் அபராதம் விதிப்பு
    X

    சென்னையில் முதல் நாளில் 2500 வழக்குகள்: வாகன ஓட்டிகளுக்கு ரூ.15½ லட்சம் கூடுதல் அபராதம் விதிப்பு

    • சென்னையில் 10 போக்குவரத்து துணை கோட்டங்களிலும் போலீசார் பம்பரமாக சுழன்று அபராதம் விதிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • அண்ணாநகர் போக்குவரத்து துணை கோட்டத்தில் மட்டும் மொத்தம் 414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் புதிதாக அமல்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை நேற்று தொடங்கியது.

    புதிய சட்ட திருத்தத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து போலீசார் முதல் நாளான நேற்று அதிரடியாக அபராதம் விதித்தனர். சென்னையிலும் கூடுதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீசார் அதிரடி காட்டினார்கள்.

    அந்த வகையில் சென்னையில் நேற்று முதல் நாளில் மட்டும் போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.15½ லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 1100 பேரிடம் இருந்து உடனடியாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் 10 போக்குவரத்து துணை கோட்டங்களிலும் போலீசார் பம்பரமாக சுழன்று அபராதம் விதிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போலீசில் சிக்கினர். சென்னை மாநகர் முழுவதும் முதல் நாளான நேற்று மட்டும் 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    மீதமுள்ள 1,500 பேருக்கு கையில் பணம் இல்லாததால் அவர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் உடனடியாக பணத்தை கட்ட முடியாவிட்டால் அவர்களிடம் அபராத ரசீது தொகையை போலீசார் கொடுத்து விடுவார்கள்.

    அபராத தொகை நிலுவையில் இருப்பதாக பதிவு செய்து ரசீதை மட்டும் வழங்குவது வழக்கம். அந்த வகையில்தான் தற்போது பிடிபட்ட 2,600 பேரில் 1,500 பேருக்கு அபராதத்தை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்கள் ஆன்லைன் வழியாக அபராதத்தை செலுத்தி கொள்ளலாம்.

    அண்ணாநகர் போக்குவரத்து துணை கோட்டத்தில் மட்டும் மொத்தம் 414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 99 பேரிடம் ரூ.1000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய 10 பேரிடம் இருந்து ரூ.1000 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அண்ணா நகர் பகுதியில் மதுபோதையில் வாகனங்கள் ஓட்டிய 10 பேரும் போலீசில் சிக்கினர். இவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் வகையில் அபராதம் வசூலித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    கூடுதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீசார் 2-வது நாளான இன்றும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் போக்குவரத்து போலீசார் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    சென்னையில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களிடம் லிப்ட் கேட்டு பலர் பயணிப்பார்கள். அதுபோன்று அறிமுகம் இல்லாத நபர்களை லிப்ட் கொடுத்து மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்தவர்களும் சிக்கினர். அவர்களுக்கும் போலீசார் ரூ.100 அபராதம் விதித்ததையும் காண முடிந்தது.

    இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'கூடுதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறும் என்றும், யாருக்கும் பாரபட்சம் காட்டப்படாது என்றும் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும் என்று அந்த அதிகாரி கேட்டுக்கொண்டார்.

    Next Story
    ×