search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து"

    • விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூா்:

    திருவண்ணாமலையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் சிவ சண்முகம் ஓட்டி வந்தார்.

    இன்று காலை அந்த பஸ் கும்பகோணத்திற்கு வந்து சிறிது நேரம் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி கொண்டிருந்தது. மீண்டும் அங்கிருந்து தஞ்சாவூருக்கு பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    அப்போது தஞ்சாவூர் அருகே மானாங்கோரை என்ற இடத்தில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த சிறிய பாலத்தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு கவிழ்ந்தது. பயணிகள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்... என்று கூக்குரலிட்டனர்.

    தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீசார் மற்றும் அப்பகுதி பொது மக்கள் பஸ்சின் இடிபாடுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் 26 பயணிகள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி தஞ்சை கீழலாயத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி லட்சுமி (வயது 50) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, மற்ற 25 பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் புதுச்சேரி-திண்டிவனம் 4 வழிச்சாலை உள்ளது. இந்த சாலையில் திண்டிவனத்தில் இருந்து தைலாபுரத்திற்கு ஒரு காரில் 3 பேர் இன்று காலை வந்து கொண்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 3 பேர் மற்றொரு காரில் சென்று கொண்டிருந்தனர்.

    இவ்விரு கார்களும் மொளச்சூர் பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தைலாபுரம் செல்லும் காரில் வந்த ஒருவரும், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த காரில் வந்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த 4 பேரையும், அவ்வழியே சென்றவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் தெலுங்கானாவை சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி பலியானார். தொடர்ந்து மீதமிருந்த 3 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 4 வழிச்சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்தது எப்படி? இறந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகுரா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை பஸ் இழந்தது.
    • விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

    டாக்கா:

    வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து குல்னாவுக்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. மகுரா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை பஸ் இழந்தது. இதனால் நிலைதடுமாறி எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது.

    இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    • விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வல்லம்:

    தஞ்சாவூர் அண்ணா நகர் சிவாஜி நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் பழனிதுரை மகன் கிருபா பொன் பாண்டியன் (வயது 34).

    இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் காரில் திருச்சிக்கு சென்று விட்டு இன்று காலை தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். தஞ்சை அடுத்த வல்லம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுத்திட்டு மீது ஏறி எதிர் திசைக்குச் சென்று, எதிரே நாகையிலிருந்து திருச்சி நோக்கி மீன்கள் ஏற்றிச் சென்று கொண்டிருந்த மினி லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதனால் பலத்த காயமடைந்த கிருபா பொன் பாண்டியன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த மினி லாரி டிரைவரான காரைக்கால் திருநகரைச் சேர்ந்த நெடுஞ்செழியன் (32), அவருடன் வந்த காரைக்கால் அம்பாச முத்திரம் ஏரி பகுதியைச் சேர்ந்த மேத்யூ (26) ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நெடுஞ்செழியன் உயிரிழந்தார். மேத்யூவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றிய புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்தில் சேதமடைந்த கார், லாரியை மீட்டு அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • 2 பேரின் உடலையும் போலீசார் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பாளையங்கோட்டை அண்ணாநகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாசானம். இவரது மகன் சுடலைமணி (வயது 27).

    இவரும், பாளை சக்தி நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் மகாராஜன் (24), அதே பகுதியை சேர்ந்த அருண் (21) ஆகிய 3 பேரும் நண்பர்கள்.

    இவர்கள் இன்று காலை பாளை-திருச்செந்தூர் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே உள்ள தனியார் பள்ளியின் எதிரே தனியாருக்கு சொந்தமான ஒரு கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு கிணறு அமைந்துள்ள பகுதியின் நுழைவாயில் கதவு பூட்டப்பட்டிருந்ததால் 3 பேரும் சுவர் ஏறி குதித்து குளிக்க சென்றுள்ளனர்.

    இதில் மகாராஜனுக்கு நீச்சல் தெரியாது. ஆனாலும் 3 பேரும் கிணற்றுக்குள் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மகாராஜன் தண்ணீரில் மூழ்கினார்.

    உடனே அவரை காப்பாற்றுவதற்காக சுடலை மணி போராடியுள்ளார். ஆனால் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.

    இதைப்பார்த்த அருண் உடனடியாக பாளை போலீஸ் நிலையத்திற்கு ஓடி சென்று தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த பாளை போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தொடர்ந்து அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். கிணற்றில் மூழ்கிய சுடலைமணி, மகாராஜன் ஆகிய 2 பேரையும் தேடிய நிலையில் சுடலை மணி முதலில் பிணமாக மீட்கப்பட்டார்.

    சிறிது நேரத்தில் மகாராஜனும் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர்கள் 2 பேரின் உடலையும் போலீசார் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹனிமி ரெட்டி பள்ளி என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த கார் ஜென்னி எரிசாமி மீது மோதியது.
    • வாகன ஓட்டிகள் காரை துரத்திச் சென்று 15 கிலோமீட்டர் தூரத்தில் மடக்கி பிடித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், சோழசமுத்திரத்தை சேர்ந்தவர் ஜென்னி எரிசாமி (வயது 35). மெக்கானிக். இவர் நேற்று இரவு சோழ சமுத்திரத்திலிருந்து தனது பைக்கில் வந்தார்.

    பெலுகுப்பா தேசிய நெடுஞ்சாலையில் அனந்தபூர் நோக்கி சென்றார். ஹனிமி ரெட்டி பள்ளி என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த கார் ஜென்னி எரிசாமி மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் காரின் பின்பகுதியில் உள்ள பம்பரில் சிக்கிக்கொண்டார்.

    இதனை கவனிக்காத கார் டிரைவர் காரை தொடர்ந்து ஓட்டிச் சென்றார். படுகாயமடைந்த ஜென்னி எரிசாமி துடிதுடித்து இறந்தார்.

    காரின் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் காரின் பம்பரில் சிக்கிக்கொண்டு ஒருவர் இழுத்துச் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    வாகன ஓட்டிகள் காரை துரத்திச் சென்று 15 கிலோமீட்டர் தூரத்தில் மடக்கி பிடித்தனர். அப்போது காரை ஓட்டி வந்த டிரைவர் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி சென்றார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரில் சிக்கி இருந்த வாலிபர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டிவந்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொன்யால்டி கடற்கரையிலிருந்து சுற்றுலாப் பயணிகள் கேபிள் கார்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
    • மீட்புக்குழுவினர் 600 பேர் மற்றும் 10 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.

    துருக்கியின் அன்டலியா நகரில் உள்ள மலையில் கேபிள் கார் வசதி உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கேபிள் கார்களில் செல்வார்கள். 2,010-அடி உயர மலை உச்சியில் உள்ள உணவகம் மற்றும் சுற்றுலா தலத்திற்கு கொன்யால்டி கடற்கரையிலிருந்து சுற்றுலாப் பயணிகள் கேபிள் கார்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று கேபிள் கார் ஒன்று அறுந்து விழுந்து பாறை மீது மோதியதில் ஒருவர் பலியானார். 7 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தால் கேபிள் கார்களை இயக்க முடியவில்லை. இதனால் மலைக்கு மேல்கேபிள் கார்களில் 174 பேர் சிக்கித் தவித்தனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில் மீட்புக்குழுவினர் 600 பேர் மற்றும் 10 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. இரவு முழுவதும் மீட்புப்பணி நடந்தது. சுமார் 23 மணி நேரத்துக்கு பிறகு சுற்றுலா பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    • விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் தட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
    • கராச்சியில் இருந்து 200 கிமீ தொலைவில் ஷா நூரானி ஆலயம் அமைந்துள்ளது.

    பாகிஸ்தானில் உள்ள பலோசிஸ்தானின் ஹப் மாவட்டத்தில் ஷா நூரானி சன்னதிக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் காயமடைந்ததாக பலோசிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    பலோசிஸ்தானின் குஜ்தார் மாவட்டத்தில் உள்ள ஷா நூரானி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த போது, தட்டாவிலிருந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக், ஹப் மாவட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    கராச்சியில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள தொலைதூர மலைப்பகுதியில் ஷா நூரானி ஆலயம் அமைந்துள்ளது.

    இதற்கிடையில், விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் சிந்து மாகாணத்தில் உள்ள தட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து, பலோசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்டி, படுகாயமடைந்தவர்களை கராச்சிக்கு மாற்ற சிந்து அரசாங்கத்தை தொடர்பு கொள்ளுமாறு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

    • பெனடிக் ராஜூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குழித்துறை:

    நித்திரவிளை எஸ்.டி.மங்காடு செம்மாவிளை பகுதியை சேர்ந்தவர் பெனடிக் ராஜ் (வயது 42). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3-ந்தேதி பளுகல் சோதனை சாவடியில் பணியில் இருந்தார். பணி முடிந்து 4-ந்தேதி பெனடிக் ராஜ் வீட்டிற்கு திரும்பினார்.

    அவர் இருசக்கர வாகனத்தில் நடைக்காவு-சூழல் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள ஓடையில் விழுந்தார். இதில் பெனடிக் ராஜூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பெனடிக் ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மார்ச் 31 அன்று பிற்பகல் 3 மணியளவில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் உணவகத்தின் உள்ளே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது
    • 36 வயதுடைய வழக்கறிஞர் ஒருவர் இந்த காரை ஓட்டி வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

    டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதியில் அதிவேகமாக வந்த மெர்சிடிஸ் எஸ்யூவி கார் உணவகத்தின் மீது மோதியதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) பிற்பகல் 3 மணியளவில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் உணவகத்தின் உள்ளே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்து உணவகத்தின் உள்ளே இருந்த மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    36 வயதுடைய வழக்கறிஞர் ஒருவர் இந்த காரை ஓட்டி வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக நொய்டாவில் வசிக்கும் பராக் மைனி என்பவரை கைது செய்துள்ள காவல்துறையினர், மெர்சிடிஸ் எஸ்யூவி காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த ஓட்டுநர் மது அருந்தி வாகனம் ஒட்டினாரா என்பதை கண்டறிய அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    • கடலூரில் இருந்து அதிகாலை 5.30 மணி அளவில் தனியார் பஸ் சுமார் 30 பயணிகளுடன் கிளம்பி விருத்தாச்சலம் வந்து கொண்டிருந்தது.
    • பஸ் கண்டக்டர் உட்பட சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் விருத்தாச்சலம் சாலையில் சபை பஸ் நிறுத்தம் அருகே தனியார் பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    கடலூரில் இருந்து அதிகாலை 5.30 மணி அளவில் தனியார் பஸ் சுமார் 30 பயணிகளுடன் கிளம்பி விருத்தாச்சலம் வந்து கொண்டிருந்தது.

    காலை 7.10 மணி அளவில் வடலூர் சபை பஸ் நிலையம் அருகே பஸ் வந்தபோது எதிர் திசையில் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் பகுதியிலிருந்து சிமெண்ட் மூட்டைகளை வடலூர் நோக்கி ஏற்றி வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக பஸ் நேருக்கு நேர் மோதியதில் பஸ் மற்றும் லாரியின் முன்பக்கம் கண்ணாடிகள் உடைந்து முழுவதும் சேதமானது.

    இதில் பஸ் கண்டக்டர் உட்பட சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் பஸ்சும், சிமெண்ட் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரையும் மீட்டனர்
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள புல்லுக்காட்டுவலசை சுடலைமாடன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ராஜா (வயது 20). அதே ஊரை சேர்ந்தவர்கள் கணேசன் மகன் மூர்த்தி(23), பேச்சி மகன் ஆனந்த் (23). இவர்கள் 3 பேரும் கட்டிட தொழிலாளிகள்.

    இந்நிலையில் 3 பேரும் நேற்று மாலையில் சக நண்பரான ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை சேர்ந்த ராமர் (23) என்பவரை தங்களது ஊரில் நடைபெறும் கோவில் கொடை விழாவை காண அழைப்பதற்காக 2 மோட்டார் சைக்கிளில் ஊத்துமலைக்கு சென்றுள்ளனர்.

    பின்னர் அவரை அழைத்துக்கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் மூர்த்தி, ராஜா மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் ராமர், ஆனந்த் ஆகிய 4 பேரும் பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள கே.டி.சி. நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் இரவில் புல்லுக்காட்டு வலசை நோக்கி 4 பேரும் சென்று கொண்டிருந்தபோது பாவூர்சத்திரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரமேஷ்(30) என்பவர் வேலைக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரம் நோக்கி வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென அவர்களது மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியது.

    இதில் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டு அனைவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். இதனை அந்த வழியே சென்ற மற்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தார். அவர்கள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரையும் மீட்டனர். அப்போது ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

    மற்ற 4 பேரையும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த ஊத்துமலையை சேர்ந்த ராமர் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் சிக்கிய ராஜா, மூர்த்தி, ஆனந்த் ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 3 மோட்டார் சைக்கிள்களும் சுக்குநூறாக நொறுங்கியது.

    ×