search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் குழந்தை"

    • அவர்களை சுதந்திரமாகச் சிந்திக்க, செயல்படவிடவேண்டும்.
    • பெண் குழந்தைகளிடம் சொல்லக்கூடாத விஷயங்களை பார்க்கலாம்.

    பெண் குழந்தைகளுக்கு இன்றைய காலகட்டத்தில் தவறாது சொல்லிக்கொடுக்க வேண்டிய, சொல்லிக்கொடுக்கக் கூடாத விஷயங்கள் உள்ளன. அதில் சொல்லக்கூடாத விஷயங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    * பெண் குழந்தைகளுக்கு அச்சம் தரும், அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும் வகையிலான செயல்களை சொல்வதோ, செய்வதோ கூடாது.

    * ஆண் குழந்தைக்கு, பெண் குழந்தையைவிட அதிக முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆண் குழந்தை பிறந்த உடன், மூத்த பெண் குழந்தை மீது கவனம் குறைந்துபோகும் சூழலுக்கு இடம் தரக் கூடாது. ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை வாய் வார்த்தையாகச் சொல்லாமல், அதனை அவர்களே உணரும் வகையில் பெற்றோர்களின் வளர்ப்பு இருக்க வேண்டும். மேலும், மூத்த பெண் குழந்தை அதிக பொறுப்புடன், விட்டுக்கொடுத்து போகவேண்டும், வீட்டில் வேலைகள் செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி, அந்தச் சிறுமிக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    * 'எதிர்த்துப் பேசாம நான் சொல்றதை மட்டும் கேளு' என்று பெண் குழந்தைகளிடம் அதிகாரம் செலுத்தாமல், ஒரு செயலால் விளையும் நன்மை, தீமைகளை அவர்களுக்கு அன்புடன் புரியும்படியாக சொல்லிக் கொடுக்க வேண்டும். மேலும், எப்போதும் பெண் குழந்தைகளை கண்காணித்தபடியே இருந்தால், அவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள மாட்டார்கள். இதனால் அவர்களின் தனித்திறமைகள் வெளியே தெரியாமலும், சுய சிந்தனை வளராமலும் போகலாம். எனவே, அவர்களை சுதந்திரமாகச் சிந்திக்க, செயல்படவிடவேண்டும்.

    * கிரிக்கெட், ரோபாட்டிக்ஸ், கராத்தே என்று தனக்கு ஆர்வமுள்ள ஒரு விஷயத்தை பெண் குழந்தை கற்றுக்கொள்ள விரும்பும்போது, 'அதெல்லாம் பொண்ணுங்களுக்கு சரிப்பட்டு வராது' என்று கூறி மறுப்பது நியாயம் அன்று. இன்றைய உலகில் ஆண்களுக்கானது என்று எந்தத் துறையும் இல்லை. அவர்கள் விரும்பும் துறை எதுவாக இருந்தாலும், அதில் அவர்கள் முன்னேற உறுதுணையாக இருக்க வேண்டியது பெற்றோர் பொறுப்பு. 'ஆண், பெண் பாகுபாடற்ற சமுதாயத்தில் உன் திறமையை முழுமையாக வெளிப்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம்' என ஊக்கம் கொடுக்க வேண்டும்.

    * ஆண் குழந்தை அழுதால் தவறு எனச் சொல்பவர்கள், பெண் குழந்தைக்கு அதையே அடையாளமாக, அவர்களின் ஆயுதமாக கைகொள்ளும்படி அவர்களை வளர்ப்பது தவறு. 'அழுகையால் எந்தக் காரியமும் முடியாது. திறமையும், தைரியமும், முயற்சியும் மட்டுமே நீ வேண்டுவதை பெற்றுத் தரும்' என்று சொல்லி வளர்க்க வேண்டும்.

    • குழந்தைகளுக்கு இணக்கமான, புரிதலுடன் கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.
    • பெண் குழந்தைகளை பாதுகாப்பது மிகவும் கடினமாக உள்ளது.

    இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளை வளர்ப்பதும் பாதுகாப்பதும் மிகவும் கடினமாக உள்ளது. பெண் குழந்தைகளுக்கு இன்றைய காலகட்டத்தில் தவறாது சொல்லிக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    செல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள்!

    * தன்னை எல்லா சூழல்களிலும் தானே பார்த்துக்கொள்ள, தற்காத்துக்கொள்ளத் தேவையான அடிப்படை விஷயங்களை நிச்சயம் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    * எடுத்த எடுப்பிலேயே ஒருவர் மீது அளவுகடந்த நம்பிக்கை காட்டுவதோ அல்லது வெறுப்பைக் காட்டுவதோ கூடாது, மற்றவர்களிடம் இருக்கும் குறைகளைவிடவும், நல்ல விஷயங்களை முதன்மையாக எடுத்துக்கொண்டு, யார் மனதும் புண்படும்படி நடந்துக்கொள்ளக் கூடாது என்பதைப் புரியவைக்க வேண்டும்.

    * நியாயமான முறையில் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான ஆற்றலும், மனநிலையும் உருவாகும் படி அவர்களை பக்குவப்படுத்த வேண்டும். பெண் குழந்தையின் ஒவ்வொரு நல்ல முயற்சியையும் மனதார பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்.

    * பலதரப்பட்ட சூழல்களையும் சந்திக்க வேண்டிய இந்த உலகில், புதிய மனிதர்களிடம் எளிதாகப் பழகுவது, அதே சமயம் தன் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வழிமுறைகளை ஏற்படுத்திக்கொள்வது பற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பள்ளி, கல்லூரி, வேலை, திருமணம் என பல புதிய சூழல்களை அடுத்தடுத்து சந்திக்கும் பெண்கள், அவற்றை தயக்கமின்றி எதிர்கொள்வதுடன், தங்கள் திறமைகளை பலரும் பாராட்டும் வகையில் வெளிப்படுத்துவார்கள்.

    * பெற்றோர், சகோதர-சகோதரிகள், நண்பர்கள், நலம் விரும்பிகள் என அனைத்து உறவுகளிடமும், நட்பிடமும் அன்பாக, எதிர்பார்ப்பு இல்லாத சிநேகத்தை ஏற்படுத்திக் கொள்ள ஆலோசனைகளைச் சொல்ல வேண்டும். மேலும் பெற்றோரிடம், குறிப்பாக தன் தாயிடம் எந்த விஷயத்தையும் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும். அதற்கான இணக்கமான, புரிதலுடன் கூடிய சூழலையும் உருவாக்க வேண்டும்.

    • செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
    • மகளின் படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளை சமாளிக்கும் வகையில் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் நலனுக்கான சிறப்பு சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. மகள் எதிர்காலத்திற்காக மத்திய அரசு சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

    செல்வ மகள் சேமிப்பு திட்டம் உங்கள் மகளை லட்சாதிபதியாக்கும். இதற்கு, உங்கள் மகள் பிறப்பிலிருந்தே முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் மகள்களின் பெயரில் கணக்கு தொடங்கலாம்.

    செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ்,18 ஆண்டுகளுக்குப் பிறகு, பாதித் தொகையைத் திரும்பப் பெறலாம். 21 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம். மகளின் படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளை சமாளிக்கும் வகையில் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் வட்டித் திருத்தம் செய்யப்படுகிறது. ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் உயர்த்தியுள்ளது. இப்போது இந்த ஆண்டு வட்டி 8 சதவீதமாக உள்ளது. முன்னதாக இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் 7.60 சதவீத வட்டியை வழங்கியது. அதாவது, 2024 நிதியாண்டின் முதல் காலாண்டில், வட்டி 40 bps அதிகரித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், தபால் அலுவலகத்தில் கணக்கு துவங்கலாம்.

    சுகன்யா சம்ரித்தி கணக்கில் ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.250 முதலீடு செய்ய வேண்டும். இதில் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதனுடன் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் இந்தக் கணக்கில் ரூ.1.5 லட்சத்துக்கான வரிச் சலுகையும் கிடைக்கும்.

    செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், ஒருவர் தனது குழந்தை பிறந்த உடனேயே SSY திட்டத்தில் ஒரு கணக்கைத் திறந்து, 12 தவணைகளில் ரூ. 12,500 முதலீடு செய்திருந்தால், இந்தக் கணக்கின் முதிர்ச்சியில் 8% வட்டி வருமானம் கிடைக்கும். செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தொடர்ச்சியான முதலீட்டிற்குப் பிறகு, மகளுக்கு 21 வயதாகும்போது, முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெறலாம். SSY திட்டத்தில் முதிர்ச்சியில் சுமார் 60 லட்சம் பெறலாம்.

    • பாலியல் வன்மத்தை தூண்டும் இந்த விளையாட்டில் பலவகைகள் இருக்கின்றன.
    • கைபேசி பயன்படுத்தும் பிள்ளைகளை அவ்வப்போது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

    விழிப்புணர்வு பிரசாரங்கள் எவ்வளவோ மேற்கொண்ட பின்பும், பாலியல் வன்முறைகள் கட்டுக்குள் அடங்காமல் பெருகிக்கொண்டிருக்கிறது. மக்களின் மனதை கெடுக்கும் பலாத்கார விளையாட்டுகளே அதற்கு காரணம் என்பது சமூக ஆர்வலர்களின் கவலை. பாலியல் வன்முறையைத் தூண்டும் பலாத்கார விளையாட்டுகளை இருட்டில் இருந்து தனது செல்போனிலோ, கம்ப்யூட்டரிலோ விளையாடுகிறவர்கள், அப்படியே மதிமயங்கிப்போய் பின்பு அதை வெளிச்சத்தில் நிஜமாக நிறைவேற்ற விரும்பும்போதுதான் அந்த ஆபத்தின் கொடூரம் வெளியே தெரியவருகிறது.

    பாலியல் வன்மத்தை தூண்டும் இந்த விளையாட்டில் பலவகைகள் இருக்கின்றன. அவை இப்படித்தான் பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. முதலில் ஸ்கிரீனில் இளைஞன் ஒருவன் தோன்றுவான். பின்பு சில பெண்கள் திரைக்கு வருவார்கள். அதில் யாரேனும் ஒரு பெண்ணை தேர்வு செய்கிறார்கள். அந்தப் பெண் அணிந்திருக்கும் ஒவ்வொரு ஆடைக்கும் ஒரு எண் தரப்பட்டிருக்கிறது. சரியாக அந்த எண்ணை 'க்ளிக்' செய்தால் அந்த ஆடை நீக்கப்படும். இப்படி ஒவ்வொரு ஆடையாக களைந்து அந்தப் பெண்ணை நிர்வாணமாக்குவதுதான் விளையாட்டின் இறுதிக்கட்டம்.

    இந்த விளையாட்டு பெண்களை ஆடையை நீக்கிவிட்டு பார்த்து ரசிக்கவேண்டிய போகப்பொருள் என்ற எண்ணத்தை, அதை விளையாடுபவர்களின் சிந்தனையில் உருவாக்கிவிடுகிறது. அடுத்து இன்னொரு விளையாட்டு அதைவிட கொடூரம். கம்ப்யூட்டர் திரையில் தலைதெறிக்க ஓடும் பெண்ணை துரத்திப் பிடித்து, மறைவான இடத்திற்கு கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்வது போன்ற விளையாட்டுகள் பெருகி வருகின்றன. அதனால் பல்வேறு உலக நாடுகள் தடைவிதித்திருக்கின்றன. ஆனாலும் தடையை மீறி இவை உலாவருகின்றன.

    பாலியல் வன்முறை என்பது மிக மோசமான சமூகவிரோத செயல். அதைக்கூட விளையாட்டாக்கி பார்க்கும் மனோபாவம் மனித சமூகத்தை எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்பதை நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அந்த பயம் இன்று ஒவ்வொரு குடும்பத்தையும் தாக்கத் தொடங்கி யிருக்கிறது.

    டெல்லியை சேர்ந்த பிரபலம் ஒருவரது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் பெரும்பாலான நேரத்தை கம்ப்யூட்டர் முன்னாலே செலவிட்டான். மணிக்கணக்கில் விளையாடிக் கொண்டிருந்தான்.. அதன் பிறகு, அவன் செயல்பாடுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நண்பர்களுடன் அதிகம் பேசுவதில்லை. வெளியே விளையாடவும் செல்வதில்லை. படிப்பிலும் கவனக்குறைவு ஏற்பட்டது. எப்போதும் தனிமையில் இருக்க விரும்பினான். பெண்களை முரண்பாடான நிலையில் உற்றுப்பார்க்கத் தொடங்கியிருக்கிறான். அவனது மாற்றங் களால் கவலை அடைந்த தந்தை, அன்று அவனை கண்காணித்திருக்கிறார். கம்ப்யூட்டரில் அவன் விளையாடிக் கொண்டிருந்த 'ரேப் கேம்'மை பார்த்தவுடன் அவருக்கு இதயமே நின்று விட்டது போல் ஆகியிருக்கிறது. இப்படியெல்லாம் கூட ஒரு விளையாட்டு இருக்க முடியுமா என்று அதிர்ச்சியடைந்துள்ளார். தனது ஆத்திரத்தை அவரால் மகனிடம் காட்டமுடியவில்லை. காட்டினால் அவன் குணாதிசயங்கள் மேலும் மோசமாகிவிடும் என்பதை அறிந்த அவர், மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்று கவுன்சலிங் பெறவைத்திருக்கிறார். அதன்பின்புதான் அவனது 'அந்த விளையாட்டில்' மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

    கம்ப்யூட்டரில் பிள்ளைகளை விளையாட அனுமதிக்கும் பெற்றோர், அவர்கள் எந்த விளையாட்டுகளை விளையாடுகிறார்கள் என்று கண்காணிப்பது கஷ்டம்தான். ஆனாலும் கண்காணிக்கவேண்டிய நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது. இன்றைய தொழில்நுட்பங்கள் எல்லா பெற்றோருக்கும் புரிவதில்லை. ஆனால் பிள்ளைகள் அதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்பம் தெரியாத பெற்றோரால், பிள்ளைகளின் இத்தகைய போக்கை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

    மனநல ஆலோசகர் அஸ்வந்த் இதுபற்றி தெரிவிக்கும் கருத்து:

    "மூடிவைப்பதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வேகம் இளைஞர்களிடம் ஏற்படுகிறது. அந்த ஆர்வத்திற்கு வழிகாட்டுவதுபோல், அவர்களை அதலபாதாளத்திற்கு தள்ளிவிடும் வேலையை இத்தகைய விளையாட்டுகள் உருவாக்குகின்றன. இத்தகைய போக்கை கண்டறிந்து திருத்துவது கடினம் என்றாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை பிள்ளைகளிடம் எடுத்துக்கூறவேண்டும். இன்றைய கால சூழலைப்பார்த்தால் சிறுவர்களுக்குகூட அந்த விழிப்புணர்வு அவசியம் என்று நினைக்கிறோம். பொதுவான நடவடிக்கைகள் என்று எடுத்துக்கொண்டால், கம்ப்யூட்டரை எல்லோரும் இருக்கும் அறையில் வைக்கவேண்டும். அப்போதுதான் அதில் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கமுடியும். அவர்கள் தனிமையில் அதிக நேரத்தை செலவிடும்போது அதற்கு என்ன காரணம் என்பதை உடனடியாக தெரிந்துகொள்ளவேண்டும். படிப்பில் கவனம் குறைந்தாலோ, நண்பர்களோடு பேசுவதை - விளையாடுவதை நிறுத்தினாலோ அதற்கான காரணத்தை கண்டறிய முன்வரவேண்டும்" என்கிறார்.

    கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர் கன்ஷிகா கூறுகிறார்:

    "ஒரு முறை இதுபோன்ற விளையாட்டுகளை டவுன்லோடு செய்துவிட்டால் மறுபடியும் அதை அழிக்க முடியாது. இது போன்ற விளையாட்டுகள் பெரும்பாலும் சீனா, ஜப்பானில் தான் தயாரா கிறது. இதை தடுக்கவும் வழியில்லை, அழிக்கவும் முடியாது. போன் இருக்கும்வரை எல்லாமே இருக்கும். இந்நிலையில் நாம் நமது பிள்ளைகளைத்தான் பாதுகாப்பான வழியில் கொண்டு செல்ல வேண்டும். கைபேசி பயன்படுத்தும் பிள்ளைகளை அவ்வப்போது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். நமது பிள்ளைகள் நவீன தொழில்நுட்பங்களை தெரிந்துகொண்டு அதில் புகுந்து விளையாடுகிறார்கள் என்று கண்களை மூடிக்கொண்டு சந்தோஷப்படாமல், பெற்றோரும் அதை தெரிந்துகொண்டு கண்காணிக்கவேண்டும். அதோடு பெண்களை பெருமையாக நினைக்கவும் கற்றுத்தரவேண்டும். பாலியல் வன்முறை விளையாட்டுகள் போன்று துப்பாக்கியால் சுடும் வன்முறை விளையாட்டுகளும் நிறைய உள்ளன. அதில் ஆழ்ந்து போகிறவர்கள்தான் மேலை நாடுகளில் அவ்வப்போது துப்பாக்கியால் மக்களை சுட்டுக் கொல்லும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்" என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளிப்படுத்துகிறார்.

    • குழந்தையை விட்டுச்சென்றது யார் என்று தெரியவில்லை.
    • 30 நாட்களுக்குள் தொடர்பு கொள்ளாவிட்டால் அந்த குழந்தை தத்துக்கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி 3 மாத பெண் சிசுவை போட்டுவிட்டு தாயார் சென்று விட்டார்.

    குழந்தையை விட்டுச்சென்றது யார் என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அந்த குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.அந்த பெண் குழந்தை குறித்து தகவல் தெரிந்தவர்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் நலக்குழு மற்றும் சேலம் சின்னதிருப்பதியை சேர்ந்த லைப் லைன் டிரஸ்ட், தத்துவள மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

    30 நாட்களுக்குள் தொடர்பு கொள்ளாவிட்டால் அந்த குழந்தை தத்துக்கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • லாரியை சூலூர் போலீஸ் நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தி விட்டு, லாரியிலேயே படுத்து தூங்கி விட்டார்.
    • மது போதையில் லாரியை இயக்கியதற்காக அவருக்கு சூலூர் போலீசார் அபராதம் விதித்தனர்.

    சூலூர்:

    விழுப்புரத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி(வயது41). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி 15 வயதில் மகள் உள்ளார்.இந்த நிலையில் அவரது முதல் மனைவி இறந்து விடவே ராஜீவ்காந்தி 2-வதாக திருமணம்செய்து கொண்டார். அவருக்கு சில தினங்களுக்கு முன்பு 2-வதும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

    இந்த நிலையில் ராஜீவ்காந்தி இரும்பு பொருட்களை ஏற்றுவதற்காக மும்பைக்கு சென்றார். பின்னர் அங்கு பொருட்களை ஏற்றி கொண்டு சேலத்திற்கு வந்தார்.

    அப்போது கோவை சூலூர் அருகே அருகே அவர் வந்த போது லாரியை திடீரென நிறுத்தி விட்டு மது அருந்தினார். பின்னர் லாரியை இயக்கி கொண்டு சென்ற அவரால் மேற்கொண்டு இயக்க முடியவில்லை என தெரிகிறது. இதனால் லாரியை சூலூர் போலீஸ் நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தி விட்டு, லாரியிலேயே படுத்து தூங்கி விட்டார்.

    நீண்ட நேரமாக லாரி அங்கேயே நின்றதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் லாரி அருகே சென்று பார்த்தனர். அப்போது டிரைவர் தூங்கி கொண்டிருந்தார். அருகே மதுபாட்டிலும் இருந்தது. அவரை எழுப்பி பார்த்தனர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை.

    இதையடுத்து போலீசார் லாரியை போலீஸ் நிலையம் எடுத்து சென்றனர். பின்னர் தண்ணீரை ஊற்றி டிரைவரை எழுப்பினர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அவர் தனக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது. தற்போது 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. நான் செய்யும் டிரைவர் தொழிலில் 2 பெண் குழந்தைகளை வைத்து வளர்ப்பது மிகவும் கஷ்டம் எனவும் அந்த மன வருத்தத்திலேயே மது அருந்தியதாகவும், பிறந்த குழந்தையை கூட இன்னும் பார்க்கவில்லை. அதனை பார்க்கவும் எனக்கு பிடிக்க வில்லை. அதனால் நான் ஊருக்கு செல்லவில்லை எனக் கூறி புலம்பினார்.

    இதையடுத்து ராஜீவ்காந்திக்கு பெண் பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியே உருவாகும். பெண்களுக்கு அரசின் பல நலதிட்டங்கள் நடைமுறையில் உள்ளது என அறிவுரை கூறினர்.

    தொடர்ந்து மது போதையில் லாரியை இயக்கியதற்காக அவருக்கு சூலூர் போலீசார் அபராதம் விதித்தனர்.

    • தேர்வு முடிவுகளில் 347 ஒரே மதிப்பெண் பெற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தினர்.
    • கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் அருகே சின்னகனவாய் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்-தீனா தம்பதியருக்கு முதலாவதாக பெண் குழந்தையும். அதனை தொடர்ந்து 2007 ம் ஆண்டு இரண்டாவதாக இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. கிருஷ்ணன் தம்பதியினர் கூலி வேலை செய்து வந்தாலும் முதலில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் உள்பட 3 மகள்களையும் அங்குள்ள அரசு பள்ளியில் தொடர்ந்து படிக்க வைத்து வந்தனர்.

    இந்நிலையில் இரட்டையர்களான ராமதேவி, லட்சுமி தேவி இவர்கள் இருவரும் தொப்பூர் அருகே உள்ள தொ.காணிகரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவிகள் இருவரும் நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. ஒரே நாளில் பிறந்த இருவருக்கும் நேற்றைய தேர்வு முடிவுகளில் இதில் அதிசயதக்கும் விதமாக ஒரே நாள் பிறந்த இரட்டையர் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 347 ஒரே மதிப்பெண் பெற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தினர். பொதுமக்களும் அவர்கள் பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியைகள், ஆசிரியர்கள் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர் மாணவிகளுக்கு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். 

    • 2007 இல், கிராமத் தலைவர் பாலிவால் என்பவரின் 17 வயது மகள் கிரண் நீரிழப்பு காரணமாக உயிழந்தார்.
    • இதயம் உடைந்த பாலிவால் மகள் நினைவாக கிராமத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஒரு மரத்தை நட்டார்.

    'இன்னும் ஒரு மகன் பிறந்தால் நன்றாக இருக்குமே..' என்று பேராசைப்படும் ஒரு நாட்டில், ராஜஸ்தானில் உள்ள பிப்லாந்த்ரி என்ற ஒரு சிறு கிராமத்தில் பெண் குழந்தைகளைக் காப்பாற்றவும், அதே நேரத்தில் பசுமையைப் பாதுகாக்கவும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அங்கு ஒவ்வொரு முறை பெண் குழந்தை பிறக்கும்போதும் 111 மரங்களை நடுகிறார்கள்.

    2007 இல், கிராமத் தலைவர் பாலிவால் என்பவரின் 17 வயது மகள் கிரண் நீரிழப்பு காரணமாக உயிழந்தார். இதயம் உடைந்த பாலிவால் மகள் நினைவாக கிராமத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஒரு மரத்தை நட்டார். ஏன் இந்த நிகழ்வை ஒரு பரந்த திட்டமாக மாற்றக்கூடாது என்று அவர் எண்ணினார். விரைவில், மற்ற கிராமவாசிகளும் அவரது வழியைப் பின்பற்றத் தொடங்கினர்.

    பளிங்குச் சுரங்கங்களினால் சுரண்டப்பட்ட மலைகளினால் நிலம் வறண்டு, பசுமை சிதைந்திருந்த இப்பகுதியில் இந்த மேன்மையான திட்டத்தால் 3,50,000 க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. மா, நெல்லி முதல் சந்தனம், வேம்பு, மூங்கில் வரை. ஒரு காலத்தில் தரிசாக இருந்த நிலங்களில் மரங்கள் வளர்ந்து 1,000 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

    மரம் நடுவதுடன், பெண் குழந்தைகளின் பெற்றோர்களும் 18 வயதுக்கு முன் தங்கள் மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்றும், பள்ளிப் படிப்பை முடிக்க அனுமதிப்போம் என்றும் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திடுகிறார்கள். கிராமவாசிகள் ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ. 31,000 மதிப்பில் ஒரு நிலையான வைப்புக் கணக்கைத் தொடங்கி, அவள் 18 வயதை எட்டியதும், மகளின் கல்விக்காகவோ அல்லது திருமணத்திற்காகவோ அந்தத் தொகையைச் செலவிடுகிறார்கள்.

    பிப்லாந்த்ரியின் வளர்ந்து வரும் காடு, நீர் மேலாண்மையை மேம்படுத்தும்போது இந்திய கிராமங்கள் எப்படி பசுமையாக மாறும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    -சித்ரா ரங்கராஜன்

    • பெண் குழந்தைகளை வளர்ப்பதில் தந்தையை காட்டிலும், தாய் முக்கியமானவர்.
    • பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது.

    சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடங்குவது எங்கே? என்பது பற்றி மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி விளக்கம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கடந்த காலங்களில் எதுவெல்லாம் வெளிப்படையாக தெரியாதோ, அதை எல்லாம் இப்போது இணையதளம் மூலம் வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடிகிறது.

    எல்லா தகவல்களையும் செல்போன் மூலம் தனியாக தெரிந்து கொள்வதே குற்றத்தின் தொடக்கமாகிறது. குறிப்பாக செல்போன் செயலிகள் (ஆப்ஸ்) அதிகரித்து விட்டன. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றின் மூலம் சிறார்களின் தொடர்புகள் அதிகரிக்கிறது. நல்லவர்களின் தொடர்பு மட்டுமின்றி கெட்டவர்களின் சகவாசமும் எளிமையாக கிடைக்கிறது.

    யாரென்றே தெரியாத நபர்களுடன் கூட பேச முடிகிறது. அவர்களை எளிதாக நம்பியும் விடுகிறார்கள். பெண் குழந்தைகளை வளர்ப்பதில் தந்தையை காட்டிலும், தாய் முக்கியமானவர். அவருக்குதான் பொறுப்புகள் அதிகம். இது நவீன உலகம், குடும்பத்தில் தாய், தந்தை சம்பாதிக்க வேண்டியது அவசியம் தான். ஆனால் சம்பாதிப்பதை விட குழந்தைகளின் வாழ்க்கை முக்கியம் என்பதை பெற்றோர் உணர வேண்டும். என் குழந்தையை நான் தான் பார்ப்பேன் என்ற மனநிலைக்கு பெற்றோர் வர வேண்டும். தாய், தனது பெண் குழந்தையை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும்.

    அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உற்று நோக்க வேண்டும். குழந்தைகளின் கையில் எந்த வகையான செல்போன் இருக்கிறது, அதில் என்னென்ன தகவல்களை அவர்கள் பார்க்கிறார்கள், தேவைக்கு தான் செல்போன் பயன்படுத்துகிறார்களா என்பது குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து வைக்க வேண்டும். தற்போது பள்ளிகளில் நேரடி வகுப்புகள்தான் நடக்கின்றன. எனவே, பள்ளி செல்லும் பெண், ஆண் குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கக்கூடாது. அப்படியே பிள்ளைகள் செல்போன் பயன்படுத்துகிறார்கள் என்றால், தாய் அல்லது தந்தை என ஒருவர் அவர்களுடன் இருந்து அதனை கண்காணிக்க வேண்டும்.

    ஆன்லைனில் வகுப்புகள் நடந்தால், அந்த வகுப்பு முடிந்த பின்னர் அவர்களிடம் இருந்து உடனடியாக செல்போன்களை வாங்கிவிட வேண்டும். கண் பார்வையில் செல்போன்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பிள்ளைகளின் கையில் செல்போனை கொடுத்து விட்டு பெற்றோர் தங்களின் வேலையை செய்யக்கூடாது. விஞ்ஞான உலகத்திற்கு ஏற்றார் போல் குழந்தையை வளர்க்க வேண்டும் என்றால் கட்டுப்பாடுகள் விதித்து தான் ஆக வேண்டும்.

    செல்போனை "ஸ்கிரீனிங்" செய்தாலே பெருமளவு குற்றங்கள் தடுக்கப்படும். காலை, மாலை, இரவு என நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிள்ளைகளுடன் மனம்விட்டு பேச வேண்டும். பேசுவது குறைந்ததன் விளைவாகத்தான், செல்போன் பயன்பாடுகள் அதிகரித்துவிட்டன. பிள்ளைகளுக்கு நல்லது எது, கெட்டது எது என்பதை சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும். அந்த காலத்தில் எப்படி இருந்தோமோ, அதுபோல் தான் இந்த காலத்திலும் பெண் பிள்ளைகளை கவனமாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு படிப்பில் சுதந்திரம் கொடுக்க வேண்டும். அதனை பிள்ளைகள் தவறாக பயன்படுத்துகிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். பெண் பிள்ளைகளை தைரியமாக வளர்க்க வேண்டும், எந்த பிரச்சினையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் எடுத்துரைக்க வேண்டும். ஏதாவது ஒரு தற்காப்பு கலையை கற்று கொடுப்பது கூடுதல் பலம்.

    எல்லாவற்றையும் விட முக்கியமாக, பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு நல்ல விதமாக போதனைகளை எடுத்துரைக்க வேண்டும். வகுப்பு தொடங்கும் முன்பு செய்தித்தாள்களில் வரும் குழந்தைகள் தொடர்பான குற்றச்சம்பவங்களை எடுத்துரைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். யாரும் தொட்டாலோ, தவறாக நடக்க முயன்றாலோ, தவறான கண்ணோட்டத்தில் பார்த்தாலோ அதுகுறித்து பெற்றோரிடம் அல்லது ஆசிரியர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என அறிவுரை வழங்க வேண்டும்.

    குறிப்பாக 12 வயது முதல் 14 வயதுக்குள் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்கும் அனைத்தும் அவர்களின் மனதில் எளிதாக பதிந்து விடும். எனவே, அந்த காலகட்டத்தில் நல்லவிதமாக கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும். அவ்வாறு எடுத்துரைத்தால் 18 வயதில் நல்ல கல்லூரியை தேர்வு செய்து வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள். அதுபோல், 21 வயதிற்கு பின்னர்தான் திருமணத்தை பற்றி பேச வேண்டும். பெற்றோரின் தூண்டுதலால், சிறிய வயதில் திருமணம் செய்வதாலும் ஏராளமான உடல்சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது. குழந்தை திருமணம் நடத்த ஏற்பாடு செய்தால் 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    பெண் குழந்தைகளை மற்றொருவர் கட்டுப்படுத்தும் விதமாக வைக்கக்கூடாது. முதலில் பெற்றோர், 2-வதாக ஆசிரியர்கள், அடுத்தது பள்ளி, அடுத்தது சமூகம் இவை எல்லாம் பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். இது சரியாக இருந்தால், பெண் குழந்தைகள் தவறான பாதையை தேர்வு செய்ய மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவில் கல்வி கற்காமல் 40 சதவீத சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் முடங்கியிருப்பதாகவும், அவர்களில் 5 சதவீதம் பேரை அடையாளம் கண்டுவிட்டதாகவும் இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

    ‘பெண்களின் கல்வி' என்ற தொண்டு நிறுவனம், கிராமப்புறங்களில் கல்வி கற்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களிடத்தில் மீண்டும் கல்வியை கொண்டு சேர்க்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.
     
    கிராமப்புற பெண்களின் கல்வித்திறனை மேம்படுத்தி சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும், கல்வியிலும் சமமான உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே இந்த தொண்டு நிறுவனத்தின் நோக்கமாகும். அதனை முன்னிறுத்தி இந்த கல்வி சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்காமல் இல்லை.

    இதுவரை இந்தியாவில் 13 லட்சம் சிறுமிகள் இந்த நிறுவனத்தின் முயற்சியால் கல்வி பயின்றிருக்கிறார்கள். இந்த நிலையில், இந்தியாவில் கல்வி கற்காமல் 40 சதவீத சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் முடங்கியிருப்பதாகவும், அவர்களில் 5 சதவீதம் பேரை அடையாளம் கண்டுவிட்டதாகவும் இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அவர்களுக்குப் பொதுவான கல்வி அறிவைக்கொடுத்து, அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

    இதற்காக அரசு மற்றும் தன்னார்வலர்களுடன் அந்நிறுவனம் கைகோர்த்துள்ளது. '2022 தீர்வு வகுப்புகள்' என அத்திட்டத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. மஸாசுசெட்ஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு முக்கியமான 7 பாட பிரிவுகளில் கற்பிக்கவுள்ளனர்.

    தொழில்முனைவோர்கள் இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து உரையாற்றுகிறார்கள். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் கிராமப்புறங்களில் வாழும் பள்ளியில் சேராத மற்றும் கல்வியை இடைநிற்றல் செய்த சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை இதற்காக தேர்வு செய்ய உள்ளனர்.
    அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளில் சேராத அல்லது பாதியில் படிப்பை கைவிட்ட பெண்கள் மற்றும் திருநங்கைகளை கண்டறியவும், அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    உயர் கல்வி படிப்பை தொடரும் விஷயத்தில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்து வந்தது. தற்போது அந்த நிலை மாறிக்கொண்டிருக்கிறது. அதுபோல் பெண் பிள்ளைகள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிடும் நிலையும் மாறிக்கொண்டிருக்கிறது.

    இதனை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் உறுதி செய்துள்ளது. பள்ளி மாணவிகள் இடை நிற்றல் விகிதம் குறைந்துள்ளதாக மத்திய மந்திரி அன்ன பூர்ணா தேவி தெரிவித்துள்ளார்.

    2019-2020-ம் ஆண்டில் தொடக்க கல்வி பயின்ற மாணவிகளின் இடை நிற்றல் விகிதம் 1.2 சதவீதமாக இருந்தது. 2018-19-ம் ஆண்டுகளில் மேல் நிலை படிப்பில் மாணவிகளின் இடை நிற்றல் விகிதம் 17 சதவீதத்தில் இருந்து 15.1 சதவீதமாக குறைந்துள்ளது. அதுவே 2017-18-ம் ஆண்டுகளில் இடை நிற்றல் விகிதம் 18.4 சதவீதமாக இருந்தது.

    பீகார் மாநிலத்தில்தான் இடை நிற்றல் விகிதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து மூன்று ஆண்டு களாக 13.3 சதவீதம் (2017-18), 12.9 சதவீதம் (2018-19), 9.2 சதவீதம் (2019-20) இடை நிற்றல் விகிதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலம் 2017-18 மற்றும் 2019- 20-ம் ஆண்டுகளில் முறையே 35.2 சதவிகிதம், 32.9 சதவிகிதத்துடன் அதிக இடைநிறுத்தல் விகிதத்தைக் கொண்டுள்ளது. இங்கு இடை நிற்றல் விகிதம் அதிக எண்ணிக்கை கொண்டிருந்தாலும் படிப்படியாக குறைந்து வருகிறது.

    7-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் தனி கழிவறைகள் கட்டப்பட்டு வருவதாகவும் மத்திய மந்திரி அன்னபூர்ணா தேவி தெரித்துள்ளார்.

    மேலும் ‘‘அனைத்து நிலைகளிலும் பாலின இடைவெளியைக் குறைக்கும் முயற்சியாக, கல்வியில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பகுதிகளில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயாக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகள் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பின்தங்கிய வகுப்பை சேர்ந்த பெண்களுக்கான உண்டு உறைவிட பள்ளிகளாக செயல்படும்’’ என்றும் கூறி உள்ளார்.

    தற்போது, நாடு முழுவதும் 10,5018 கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளில் 6 லட்சத்து 65 ஆயிரம் பெண்கள் சேர்ந்துள்ளனர்.

    அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளில் சேராத அல்லது பாதியில் படிப்பை கைவிட்ட பெண்கள் மற்றும் திருநங்கைகளை கண்டறியவும், அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    குடும்பப் பிரச்சினையில் தற்கொலை, கொலை நிகழ்வதால் பெண்கள் இளம் வயதில் விதவையாகவும், கணவனால் கைவிடப்பட்டவர்களாகவும், குழந்தைகள் ஆதரவற்ற அனாதைகளாகவும் ஆகிறார்கள்.

    பெண் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். பெண் குழந்தைகள் மட்டுமன்றி, பிறக்கும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றன. உடல்நலம், ஊட்டச்சத்து, கல்வி, குடும்ப வன்முறை, தவறாக நடத்தப்படுதல் மற்றும் சுரண்டலிலிருந்து பாதுகாக்கப்படுதல் போன்ற குழந்தைகளின் அனைத்து உரிமைகளும், குழந்தைத் திருமணத்தின் மூலம் அப்பட்டமாக மீறப்படுகின்றது;

    கர்ப்பப்பை முழு வளர்ச்சி அடையாததால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும்; அடிக்கடி கருவுற வாய்ப்பு அதிகம்; இது உடல் நலத்தைப் பாதிக்கும்; உடல் பலவீனமடைவதால் மருத்துவச் செலவு அதிகமாகி வறுமைக்கு வழிவகுக்கும்; ரத்த சோகை மற்றும் ஊட்டச் சத்துக் குறைபாடு ஏற்படும்.

    பிரசவத்தின் போது சிக்கலான பிரசவம், குழந்தை இறந்து பிறப்பது, சிசு மரணம் மற்றும் தாய் மரணம் ஏற்பட வாய்ப்பு மிகவும் அதிகம்; எடை குறைவான குழந்தைகள் மற்றும் குறைபாடுள்ள குழந்தைகள் பிறத்தல்; மனவளர்ச்சி மற்றும் பாலியல் முதிர்ச்சி முழுமையடையும் முன் திருமணம் செய்வதால், கணவர் மற்றும் குடும்பத்தாருடன் அனுசரித்துச் செல்வதில் பிரச்சினைகள் அதிகமாகும்;

    இது குடும்பத்தில் விரிசலை உண்டாக்கி இரண்டாவது திருமணத்திற்கு வழிவகுக்கும். இதனால் அவர்களின் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள்; குடும்பப் பிரச்சினையில் தற்கொலை, கொலை நிகழ்வதால் பெண்கள் இளம் வயதில் விதவையாகவும், கணவனால் கைவிடப்பட்டவர்களாகவும், குழந்தைகள் ஆதரவற்ற அனாதைகளாகவும் ஆகிறார்கள். இது குழந்தைத் தொழிலாளர் முறைக்கு வழிவகிக்கிறது; கல்வி மறுக்கப்படுவதுடன், அவர்களின் தன்னம்பிக்கை குறையும். குழந்தைகளுக்குச் சரியான வழிகாட்டுதல் செய்ய முடியாது போன்ற எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    ×