search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புலி"

    • நமது குடும்ப விழாக்களுக்கு உறவு குடும்பங்கள் கூடி வந்தால் தான் பெருமை.
    • கவுரவர்கள் சூழ்ச்சியால் வனவாசம் சென்றார்கள் பாண்டவர்கள்.

    சகோதரர் ஒற்றுமையை ஓங்க செய்யும் பெரம்பலூர் மதனகோபால சுவாமி

    தனிமரம் தோப்பாகாது என்பார்கள்.

    குடும்பங்கள் கூடி வாழ்வது தான் கோடி நன்மை தரும்.

    நமது குடும்ப விழாக்களுக்கு உறவு குடும்பங்கள் கூடி வந்தால் தான் பெருமை.

    வாழும் போது வாழ்த்துவதும், வீழும் போது தாங்கி பிடிப்பதும் சொந்த, பந்தங்கள்தான்.

    ஆனால் குடும்பங்களுக்குள் தான் எத்தனை பிரச்சனை. உறவு குடும்பங்களுக்குள் பிரச்சினை வருவது இன்று, நேற்று நடப்பது அல்ல.

    புராண காலத்தில் இருந்தே அது தொடர்கிறது.

    அதிலும் சகோதர குடும்பங்களுக்குள் எழுந்த பகையால் பஞ்ச பாண்டவர்கள் பட்ட பாடு அனைவரும் அறிந்ததே.

    அந்த பாண்டவர்களே தங்கள் குடும்பத்தில் அமைதி நிலவ, சகோதர ஒற்றுமை ஓங்கிட வேண்டி நின்ற ஒரு கோவில் தமிழகத்ததில் உள்ளது.

    பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோவில் தான் அது.

    சாபம் ஒன்றினால் புலியாகத் திரிந்த வியாக்ரம மகரிஷியின் சாபம் விலகிய தலம் வியாக்ரபுரம்...!

    யார் அந்த முனிவர்? அவருக்கு என்ன சாபம்?

    துர்வாசரின் சீடராக இருந்த ஒரு முனிவர், ஒரு சமயம் கவனக் குறைவால் தம் குருநாதரின் கமண்டலத்தில் இருந்த நீரைத் தட்டிவிட்டார்.

    அதனால் கோபமடைந்த துர்வாசர். அவரைப் புலியாக மாறும்படி சபித்தார்.

    பதறிப்போனார் சீடர். மன்னிக்கும்படி வேண்டினார்.

    சாபம் விட்டது விட்டதுதான் அதை மாற்ற முடியாது. ஆனால் விமோசனம் சொல்கிறேன்.

    புலியாக நீ உலாவும் பகுதிக்கு பஞ்சபாண்டவர்கள் வருவார்கள்.

    அப்போது பீமனின் கதை யால் நீ அடிபடுவாய்.

    அந்த சமயத்தில் உன் சாபம் விலகும் என்றார் துர்வாசர். சாபம் பலித்து சீடன் புலியாகித் திரிந்தான்.

    பூர்வ ஜென்ம வாசத்தால், அக்காட்டிலிருந்த பெருமாளைத் துதித்தான்.

    கவுரவர்கள் சூழ்ச்சியால் வனவாசம் சென்றார்கள் பாண்டவர்கள்.

    அப்போது ஒரு முனிவர் அவர்களைச் சந்தித்தார். உங்களின் இந்த நிலைக்குக் காரணம் தீவினை பாவம்தான்.

    அது தொலைய தீனரட்சகனான புருஷோத்தமனை பூஜிக்க வேண்டும் என்றார்.

    புருஷோத்தமனை பூஜிக்க தொடங்கினார்கள் பாண்டவர்கள்.

    ஒருநாள் பூஜைக்குத் தேவையான நீரை எடுக்க ஆற்றங்கரைக்கு சென்ற பாஞ்சாலி, தண்ணீர் எடுக்காமலே பதற்றத்துடன் ஓடிவந்தாள்.

    அவளை ஆசுவாசப்படுத்திய பீமன், அவளது அச்சத்திற்கு காரணம் கேட்டான்.

    பெரிய புலி ஒன்று துரத்துவதுதான் தன் கிலிக்குக் காரணம் என்றாள், பாஞ்சாலி. உடனே கதையுடன் புறப்பட்டான் பீமன்.

    தவறவிட்ட நோஞ்சானான பெண்ணுக்கு பதில், திடகாத்திரமான ஆண்... கொழுத்த வேட்டை என்று பாய்ந்தது புலி.

    அடுத்த கணம் அதன் தலையில் இடி போல் விழுந்தது ஓர் அடி. மரண ஓலம் எழுப்பிய புலி, கீழே விழுந்து துடித்தது, துவண்டது.

    சட்டென்று முனிவராக மாறி எழுந்தது. புலி பாய்ந்தபோது துணிவுடன் நின்ற பீமன், அது முனிவராக மாறியதும் அதிர்ந்தான்.

    பெரும் தவறு செய்துவிட்டதாக பயந்தான். மன்னிப்பு வேண்டிப் பணிந்தான்.

    கனிவுடன் அவனைப் பார்த்த முனிவர், தமது சாபம் விலகிய கதையை அவனுக்குச் சொன்னார்.

    தனக்கு நன்மை செய்த அவனுக்கு வீரம் பன்மடங்காகப் பெருக வரம் அளித்தார்.

    வியாக்ரம் என்றால் புலி என்று அர்த்தம். முனிவர் புலிவடிவில் இருந்ததால், அந்தத் தலம் வியாக்ரமபுரம் என்றானது.

    தமிழில் பெரும் புலிவனம் பெரும்புலியூர், அதுவே மருவி பெரம்பலூர் ஆகிவிட்டது.

    வழிபாடு செய்த பாண்டவர்களுக்கு வரம் தர வந்தார் வாசுதேவன். அவர்கள் துன்பம் தீர அருளினார்.

    வினை தீர்க்க வந்த வேணு கோபாலா, இத்தலத்தில் நீங்கள் நிரந்தரமாக வாசம் செய்திடவேண்டும்.

    எங்க ளுக்கு இந்தத் துன்பங்கள் வந்ததற்கு முக்கியமான கார ணம், உறவினர்களிடையே ஒற்றுமை இல்லாமல் போனது தான்.

    எனவே இங்கே வந்து உம்மை வணங்குவோரின் இல்லறம் நல்லறமாக அருள வேண்டும் என வேண்டினார்கள் பாண்டவர்கள்.

    பாண்டவர்களுக்கு அருளிய அதே வாசுதேவன், மதன கோபாலசுவாமியாக இன்றும் இங்கு அருள் பாலிக்கிறார்.

    தினமும் ஏராளமான மக்கள் தங்கள் சகோதர ஒற்றுமைக்கும், குடும்ப அமைதிக்கும் கோபாலனை வணங்கி செல்கின்றனர்.

    • காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் உறுதியளித்தனர்.
    • காளை மாட்டை புலி அடித்துக் கொன்றதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் புலி மற்றும் சிறுத்தை நடமாட்டம் உள்ளது.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் ஊருக்குள் வளர்க்கப்பட்டு வரும் கால்நடைகளை அடித்து கொன்று வருகிறது.

    இதையடுத்து அந்த பகுதிகளில் புலி நடமாட்டத்தை அறிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டது. அதன் மூலம் புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். சில வாரங்களுக்கு முன்பு தேவன் பகுதியில் கால்நடைகளை புலி கடித்துக் கொன்றது.

    தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு மேபீல்டு எஸ்டேட்ைட சேர்ந்தவர் ராஜூ. இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வந்தார்.

    சம்பவத்தன்று காலை வழக்கம் போல் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். பின்னர் அந்த மாடுகள் அனைத்தும் வீட்டிற்கு திரும்பி வந்தன. ஆனால் ஒரு காளை மாடு மட்டும் வீடு திரும்ப வில்லை. இதனால் அவர் பல இடங்களில் தேடினார். அப் போது தேவன் எஸ்டேட் பகுதியில் புலி தாக்கி காளை மாடு பலியாகி கிடந்தது.

    தகவல் அறிந்த கூடலூர் வனச்சரகர் ராதாகிருஷ்ணன், மனோகர் சுரேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் நேரில் வந்து இறந்து கிடந்த மாட்டை பார்வை யிட்டனர்.

    இந்த மாட்டை புலி அடித்துக் கொன்றது தெரிய வந்தது.இதையடுத்து கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு காளை மாட்டின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தொடர்ந்து அந்த பகுதிகளில் காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் உறுதியளித்தனர்.

    மேலும் பாதிக்கப்பட்ட ராஜூவுக்கு இழப்பீடு வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே காளை மாட்டை புலி அடித்துக் கொன்றதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருவதோடு கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    • ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • தற்போது புலி நலமாக உள்ளது. அதை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்துள்ளோம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் பேச்சி பாறை அருகே சிற்றார் ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் கடந்த ஜூலை மாதம் 3-ந்தேதி ஆடு ஒன்றை புலி கடித்துக் கொன்றது. அடுத்தடுத்து 6 ஆடுகள் மற்றும் 2 மாடுகளை புலி கொன்றதால் பொது மக்கள் அச்சமடைந்தனர். அட்டகாசம் செய்யும் புலியை பிடிக்க வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். புலி நடமாட்டம் உள்ள பகுதியாக கருதப்பட்ட இடங்களில் கூண்டு மற்றும் கண்காணிப்பு கேமிராக்கள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் புலி சிக்கவில்லை.

    ட்ரோன் கேமரா, எலைட்படையினர் மூலமாகவும் தேடுதல் வேட்டை நடத்தினர். 10 நாட்களுக்கு மேலாக தேடியும் புலியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த எலைட் படையினரும், மருத்துவ குழுவினரும் திரும்பி சென்றனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பத்துகாணி அருகே ஒரு நூறாம் வயல் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்து 4 ஆடுகளை புலி கடித்துக் கொன்றது. இதுபற்றிய தகவல் வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

    மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையிலான குழுவினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கேயே முகாமிட்டு புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். முதுமலை புலிகள் சரணாலயத்தில் இருந்து வனத்துறையை சேர்ந்த பழங்குடியினர் வரவழைக்கப்பட்டு தேடும் பணி நடந்தது.

    இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் கல்லறைவயல் பகுதியில் புலி நடமாட்டத்தை வனத்துறையினர் பார்த்தனர்.

    இதைத்தொடர்ந்து புலியை தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது புலி அந்த பகுதியில் உள்ள குகைக்குள் சென்றது. புலியை பொருத்தமட்டில் பகல் நேரங்களில் ஓய்வு எடுக்கும். இரவு நேரங்களில் மட்டுமே வெளியே சுற்றி தெரியும்.

    பகல் நேரத்தில் புலி குகைக்குள் சென்றதால், அது வெளியே வருவதற்கு நீண்ட நேரமாகும், அங்கேயே ஓய்வெடுக்கும் என்று வனத்துறையினர் கருதினார்கள். இதைத்தொடர்ந்து அந்த குகையின் வெளியே வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இரண்டு மணி நேரமாக புலியை பிடிக்க வியூகங்கள் வகுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மயக்க ஊசி மூலமாக புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புலி இருந்த குகைக்குள் மயக்க ஊசி செலுத்தினார்கள். அதில் புலி மயக்கமடைந்தது. பின்னர் சிறிது நேரத்துக்கு பிறகு வனத்துறையினர் குகைக்குள் சென்று புலியை பிடித்தனர்.

    பிடிபட்ட புலியை வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சாலை பகுதிக்கு தூக்கி வந்தனர். தொடர்ந்து புலியை கூண்டுக்குள் அடைத்து டெம்போவின் ஏற்றி பேச்சிப்பாறை சோதனை சாவடிக்கு கொண்டு வந்தனர். அங்கு மருத்துவ குழுவினர் மீண்டும் புலியை பரிசோதனை செய்தனர். புலி பிடிபட்டது குறித்து அந்த பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு தெரியவந்தது. இதைக் கேட்டு அவர்கள் நிம்மதி அடைந்தனர்.

    பிடிபட்ட புலி கடந்த 37 நாட்களாக வனத்துறையினருக்கு சவால் விடும் வகையில் சுற்றி திரிந்தது. சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தியதையடுத்து அதன் எதிர்புறம் உள்ள பத்துகாணி பகுதிக்கு புலி வந்துள்ளது. சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றளவிலேயே புலி சுற்றி திரிந்தபடி இருந்துள்ளது.

    பிடிபட்ட புலியை வனத்துறையினர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதையடுத்து இரவோடு இரவாக வன அதிகாரி இளையராஜா தலைமையில் புலியை ஒரு வாகனத்தில் ஏற்றி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.

    பலத்த பாதுகாப்புடன் புலி கொண்டு செல்லப்பட் டது. புலியை கொண்டு சென்ற வாகனம் மிகவும் மெதுவாகவே சென்றது. நேற்று மாலை 6 மணிக்கு பேச்சிபாறையிலிருந்து புலியை ஏற்றி புறப்பட்ட வாகனமானது, இன்று காலை 11 மணியளவில் வண்டலூர் உயிரியல் பூங்கா விற்கு சென்றடைந்தது. அங்கு புலியை முறைப்படி ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து வன அதிகாரி இளையராஜா கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தின் மலையோர பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இரண்டு இடங்களில் கூண்டு மற்றும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு தேடும் பணியில் ஈடுபட்டோம். ஆனால் புலி சிக்கவில்லை.

    அதே வேளையில் புலியின் கால் தடங்கள் ஒரு சில இடங்களில் கிடைத் தது. அதை வைத்து பார்த்த போது வயதான புலி என்பது தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பத்துகாணி பகுதியிலும் புலி அட்டகாசம் செய்தது. இதனால் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. நேற்று மதியம் புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. புலியும் கண்ணில் தென்பட்டது.

    உடனே அதை பின்தொடர்ந்து சென்று கண்காணித்தோம். அப்போது புலி அந்த பகுதியில் உள்ள குகைக்குள் சென்றது. குகைக்குள் சென்ற புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளோம். பிடிபட்ட புலிக்கு 13 வயது இருக்கும். தற்போது புலி நலமாக உள்ளது. அதை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புலி நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
    • கூண்டு அமைத்தும் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    திருவட்டார்:

    பேச்சிப்பாறை, சிற்றாறு சிலோன் காலனியில் குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டு இருந்த ஆடுகளை புலி கடித்துக் குதறியது. அடுத்தடுத்து ஆடு, மாடுகளை கடித்துக் கொன்றதால் அந்த பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் அச்சம் அடைந்தனர்.

    புலியை பிடிக்க 2 கூண்டுகள் அமைக்கப்பட்டது. மேலும் எலைட் படையினரும், டாக்டர் குழுவினரும், வனத்துறையினரும் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். டிரோன் கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்பட்டது. ஆனால் புலி சிக்கவில்லை. இதையடுத்து தேடுதல் வேட்டை கைவிடப்பட்டது.

    எலைட் படையினரும் டாக்டர் குழுவினரும் தேடுதல் வேட்டையை கைவிட்டனர். இந்த நிலையில் பத்துகாணி ஒரு நூறாம்வயல் குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த 4 ஆடுகளை புலி கடித்து குதறியது. இது குறித்து குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வன அதிகாரி இளையராஜா தலைமையில் வனக்குழுவினர் பத்துகாணி பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆடுகளை இழந்த பழங்குடியினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. கடந்த 16 நாட்களாக புலி தொந்தரவு இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் அட்டகாசத்தை தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    புலியை பிடிக்க முதுமலை காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற பழங்குடியினரும், எலைட் படையினரும், டாக்டர் குழுவினரும் மீண்டும் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. குமரி மாவட்ட வன அதிகாரிகளும் இவர்களுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் புலியை தேடும் பணியில் இறங்கி உள்ளார்கள். ஏற்கனவே சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் 2 கூண்டுகள் அமைக்கப்பட்ட நிலையில் பத்துகாணி பகுதியில் மேலும் 3 கூண்டுகளை அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்காக நெல்லை மற்றும் களக்காட்டில் இருந்து கூண்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் பத்துகாணி பகுதியில் கூண்டுகள் அமைக்கடுகிறது.

    மேலும் புலி நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வன அதிகாரி இளையராஜா கூறுகையில், சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியதை தொடர்ந்து அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் தேடுதல் வேட்டையை கைவிட்டு இருந்தோம்.

    இந்த நிலையில் பத்துகாணி பகுதியில் ஆடுகளை கடித்து கொன்றுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் தற்போது தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளோம். கூண்டு அமைத்தும் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. விரைவில் புலி பிடிபடும் என்றார்.

    • தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது காட்டு யானைகள், காட்டெருமை போன்ற வன விலங்குகள் உலா வருவது வழக்கம்.
    • புலி சாலை ஓரத்தில் அமர்ந்திருப்பதை பார்த்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் இருந்தபடியே புகைப்படம் எடுக்க தொடங்கினர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக கூடலூரில் இருந்து கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

    இந்த தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது காட்டு யானைகள், காட்டெருமை போன்ற வன விலங்குகள் உலா வருவது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று மாலை தமிழ்நாடு எல்லை பகுதியான கக்கநல்லா சோதனை சாவடி அருகே சாலை ஓரத்திற்கு வந்த புலி ஒன்று நீண்ட நேரமாக சாலை ஓரத்தில் அமர்ந்து சாலையில் சென்ற வாகனங்களை பார்த்து படி எவ்வித அச்சமும் இன்றி ஒய்யாரமாக அமர்ந்திருந்தது.

    புலி சாலை ஓரத்தில் அமர்ந்திருப்பதை பார்த்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் இருந்தபடியே புகைப்படம் எடுக்க தொடங்கினர்.

    எதையும் பொருட்படுத்தாத அந்த புலி சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் அமர்ந்தபடி யாரையும் அச்சுறுத்தாமல் காட்சி தந்தது. வனத்திற்குள் சென்றது. வாகனங்கள் அதிக அளவு கூடியதால் அந்த புலி எழுந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு மணி நேரம் சாலை ஓரத்தில் போஸ் கொடுத்த புலியால் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    • 2 இடங்களில் கூண்டுகள் அமைத்தும் புலியை பிடிக்க வனததுறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
    • புலி காட்டுக்குள் சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது

    நாகர்கோவில் :

    பேச்சிப்பாறை அருகே சிற்றார் ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு மற்றும் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு புலி அட்டகாசம் செய்தது.

    தொழிலாளர்களுக்கு சொந்தமான ஆடு, மாடுகளை வேட்டையாடியதால் பொது மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து புலியை பிடிக்க வனதுறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். 50-க்கும் மேற்பட்ட நவீன கேமராக்கள் அமைக்கப்பட்டும் கண்கா ணிக்கப்பட்டு வருகிறது. 2 இடங்களில் கூண்டுகள் அமைத்தும் புலியை பிடிக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    ஆனால் புலி சிக்கவில்லை. புலியை பிடிக்க எலைட் படையினரும், டாக்டர்கள் குழுவினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் நெல்லையிலிருந்து வந்த விரைவு படையினரும் தேடி வருகிறார்கள். பேச்சிப்பாறை மூக்கரைக்கல் பகுதியில் டிரோன் கேமரா மூலமாக தேடும் பணி நடந்தது.

    இன்று 2-வது நாளாக வனத்துறையினர் புலியை டிரோன் கேமரா மூலமாக தேடி வருகிறார்கள். ஆனால் புலி சிக்க வில்லை. இது குறித்து வன அதிகாரி இளையராஜா கூறுகையில், பேச்சிப்பாறை சிற்றாறு பகுதிகளில் டிரோன் கேமரா மூலமாக கண்கா ணிக்கப்பட்டது. டிரோன் கேமராவிலும் புலி நடமாட்டம் தென்படவில்லை. வனத்துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வந்ததை அடுத்து புலி காட்டுக்குள் சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆடுகளை மட்டும் பொதுமக்கள் பத்திரமாக அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

    • வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை
    • கூண்டுகள் அமைத்து அதில் ஆடுகளை உள்ளே கட்டி வைத்து கண்காணித்து வந்தனர்.

    கன்னியாகுமரி :

    பேச்சிப்பாறை கோதையாறு அருகே மூக்கறைக்கல் என்ற பகுதியிலும் சிற்றாறு சிலோன் காலனி குடியிருப்பு பகுதியிலும் கடந்த சில நாட்களக காட்டில் இருந்து புலி வந்து குடியிருப்பு பகுதிகளில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடுகளை கடித்து கொன்றது. இதனால் தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது. வனத்துறையினர் புலியை பிடிப்பதற்காக 2 பகுதிகளிலும் சுமார் 28-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்களை மாட்டி தேடி வந்தனர். புலி எந்த காமிராவிலும் தென்படவில்லை. இதையெடுத்து 3 கூண்டுகள் அமைத்து அதில் ஆடுகளை உள்ளே கட்டி வைத்து ஆட்டு கொட்டகை வடிவத்தில் அமைத்து கண்காணித்து வந்தனர்.

    உடனே புலி அதன் நடமாட்டத்தை வேறு பகுதிக்கு மாற்றி கொண்டது. புலியை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். சத்தியமங்கலம் வனத்துறையை சேர்ந்த புலியை பிடிப்பதில் திறம்பட வீரர்களான எலைட் படை வீரர்கள் அதிநவீன கருவிகளுடனும் 2 பிரிவுகளாக பிரிந்து சென்று தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். முண்டந்துறை வனப்பகுதி யில் இருந்து கால்நடை மருத்துவ குழுவினர் 2 பிரிவுகளாக பிரிந்து சென்று தேடி வருகின்றனர். புலியின் நடமாட்டத்தை பார்த்து மயக்க மருந்து ஊசி மூலம் செலுத்தி பிடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளை வனத்துறையினர் தீவிரமாக இறங்கி தேடி வருகின்றனர்.

    • 2 குழுக்களாக பிரிந்து சென்று வனத்துறையினர் தீவிரம்
    • ஒரு குழுவில் வனத்துறையினர் 10 பேரும், பழங்குடி மக்கள் 5 பேரும் இடம்பெற்றுள்ளனர்

    கன்னியாகுமரி :

    சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு மூக்கறைகல் பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக புலி ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது.

    ஆடுகள், மாடுகள் மற்றும் நாய்களை கடித்து குதறி வருகிறது. இதனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் பழங்குடி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.

    புலியை பிடிக்க கண்கா ணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டதுடன் 2 இடங்களில் கூண்டு வைத் துள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள ஆடு, மாடுகளை இரவு நேரங்களில் அங்குள்ள முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் பாதுகாப்பாக கட்டி வைக்க வும் நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது. கடந்த ஒரு வாரமாக புலியை பிடிக்க வைக்கப்பட்டுள்ள கூண்டில் புலி சிக்கவில்லை.

    தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்ததையடுத்து அதை பிடிக்க களக்காடு முண்டந்துறையில் இருந்து டாக்டர் குழுவினரும், தேனி மாவட்டம் வைகை ஆறு பகுதியில் இருந்து எலைட் படையினரும் வருகை தந்தனர். அவர்கள் நேற்று அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிலோன் காலனி பகுதி, மூக்கறைகல் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    ஆனால் புலி சிக்கவில்லை. இந்த நிலையில் இன்றும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. வன அதிகாரி இளையராஜா தலைமையில் எலைட் படையினரும், டாக்டர் குழுவினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    2 குழுக்களாக பிரிந்து சென்று தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ஒரு குழுவில் வனத்துறையினர் 10 பேரும், பழங்குடி மக்கள் 5 பேரும் இடம்பெற்றுள்ளனர். 2 குழுக்களிலும் 30 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அந்த பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள னர்.

    பழங்குடி மக்கள் காட்டுப்பகுதிகளில் வழி களை அடையாளம் காட்டிக்கொடுக்க வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பேச்சிப்பாறை மூங்கில் காடு பகுதியில் இன்று தேடும் பணி நடந்தது. வனத்துறையின் மோப்பநாய் உதவியுடன் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் இன்று மதியம் வரை புலி சிக்கவில்லை. தொடர்ந்து புலியை பிடிக்க வனத்துறையினர் வியூகம் வகுத்து செயல்படுகிறார்கள். புலி நடமாட்டம் உள்ளதையடுத்து சிற்றாறு குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் மாலை 6 மணிக்கு பிறகு வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • 28 இடங்களில் காமிரா அமைப்பு
    • குமரி வனத்துறையினர் இரவு பகலாக கண்காணிப்பு

    நாகர்கோவில் :

    பேச்சிப்பாறை வனப்பகுதிகளை யொட்டியுள்ள சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு, மூக்கறைக்கல் பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் புலி அட்டகாசம் செய்து வருகிறது. மாடு, 2 ஆடுகளை கடித்து கொன்றது. ஒரு நாயையும் புலி கவ்வி சென்றது. இது ரப்பர் தோட்ட தொழிலா ளர்கள் மற்றும் பழங்குடி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. புலியை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    புலி நடமாட்டம் உள்ள பகுதியாக கருதப்படும் பகுதிகளில் காமிராக்கள் அமைக்கப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது 28 காமிராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 2 இடங்களில் புலியை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

    கூண்டு அமைக்கப்பட்ட பகுதியிலும் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்ட பகுதியிலும் கடந்த 2 நாட்களாக புலி நடமாட்டம் இல்லை. இருப்பினும் வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இது குறித்து வன அதி காரி ஒருவர் கூறியதாவது:-

    புலியை பிடிக்க இரவு பகலாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கண்காணிப்பு காமிராவில் புலி சிக்கவில்லை. ஒரு இடத்தில் புலி வந்து சென்றால் மீண்டும் அந்த இடத்திற்கு 3 நாட்கள் கழித்து வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    எனவே தற்போது வந்து சென்ற பகுதியில் இன்று அல்லது நாளைக்குள் புலி வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எனவே அந்த பகுதியை தீவிரமாக கண்காணித்து புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. புலி இன்று அல்லது நாளைக்குள் சிக்காத பட்சத்தில் புலியை பிடிக்க வெளியே இருந்து பயிற்சி பெற்ற கமாண்டோ வீரர்களை அழைத்து வரலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • குமரி வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
    • இரவு நேரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள மூக்கறைக்கல் மற்றும் சிற்றாறு சிலோன் காலணி பகுதிகளில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ஆடு-மாடுகளை வேட்டையாடியது

    காட்டில் இருந்து குடியி ருப்புகளுக்குள் இரவு நேரத்தில் வரும் புலி ஆடு, பசுமாடு ஆகியவற்றை கடித்து கொன்றது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமலும், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியாமலும் தவிப்புக் குள்ளானார்கள். அவர்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து புலியை பிடிப்ப தற்கு மாவட்ட வனத்துறை சார்பாக பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளன.

    புலியின் கால் தடங்கள் கண்டறியப்பட்ட பகுதியில் சுமார் 25 கண்காணிப்பு கேமராக்கள் மாட்டப்பட்டது. அதன் மூலம் இரவு பகலாக தீவிரமாக கண்காணித்து வந்த நிலையிலும் புலியின் உருவம் எதுவும் பதிவாகவில்லை.

    ஆனால் புலியின் தாக்குதல் மட்டும் குடியிருப்பு பகுதிக்குள் தொடர்ந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு ஆடு மற்றும் நாய் புலியின் வாயில் சிக்கின. இதனால் மலைவாழ் மக்கள் மீண்டும் அச்சத்திற்கு உள்ளானார்கள். இதனை தொடர்ந்து புலியை பிடிப்ப தற்க்காக மூக்க றைக்கல் பகுதியில் வனத்துறையினர் நேற்று கூண்டு அமைத்தனர். ஆனாலும் அதில் புலி சிக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் 2-வது கூண்டு அமைக்கப்பட்டது. இது பற்றி வனத்துறையினர் கூறுகை யில், இந்த 2 பகுதிகளில் தான் அதிக அளவு புலியின் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இங்கு கூண்டுகள் வைத்து உள்ளோம். இந்த கூண்டு களுக்குள் ஆடு கட்டப்பட்டுள்ளது. அதனை பார்த்து புலி வரும் போது கூண்டில் சிக்கி விடும். அதேநேரம் ஆடு வேறு பகுதிக்கு சென்று தப்பிவிடும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. எனவே வெகு விரைவில் புலியை பிடித்து விடுவோம். பகல்நேரங்களில் மக்கள் நடமாட்டம் இருப்பதால் புலி வெளியே வருவதில்லை. இரவு நேரத்தில் தான் வருகிறது. எனவே மாலை 6 மணிக்கு மேல் சிறுவர்கள், குழந்தை களை வெளியில் விட வேண்டாம். தேவை யின்றி யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறி வுறுத்தி உள்ளோம்.

    மேலும் ஆடு, மாடு, நாய்களை இரவு நேரங்களில் கயிற்றினால் தான் கட்டி வைக்க வேண்டும் வெளியில் விடக் கூடாது. ஆடு, மாடு களை கட்டி வைத்திருக்கும் பகுதியில் இரவு நேரங்களில் மர கட்டைகள் வைத்து தீ மூட்டி வைக்க வேண்டும். கூண்டு அமைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் பகல் நேரங்களில் செல்லாமல் இருந்தால் புலி வெளியில் வர வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களும் தேவையான ஒத்துழைப்பை தர வேண்டும் என்றனர்.

    • வயலுக்குள் டிராக்டர் ஒன்றில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் உழுது செய்து கொண்டிருக்கிறார்.
    • ஒரு பயனர், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான நல்லிணக்கத்திற்கு இந்த வீடியோ சரியான எடுத்துக்காட்டு என கூறி உள்ளார்.

    மனிதர்கள்-விலங்குகள் இடையே மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் பிலிபித் மாவட்டத்தில் உள்ள ஒரு வயலில் புலி ஒன்று உலா வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

    அதில், வயலுக்குள் டிராக்டர் ஒன்றில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் உழுது செய்து கொண்டிருக்கிறார். அந்த இடத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் வரிப்புலி ஒன்று சாதாரணமாக நடந்து செல்வதை காண முடிகிறது. இதை மற்றொரு விவசாயி வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதனை ராஜ்லக்கானி என்பவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் புலியையும், மனிதனையும் இவ்வளவு நெருக்கமாக பார்த்ததில்லை என பதிவிட்டுள்ளனர்.

    வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே 1 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர். அதில் ஒரு பயனர், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான நல்லிணக்கத்திற்கு இந்த வீடியோ சரியான எடுத்துக்காட்டு என கூறி உள்ளார்.

    • கால்நடைகளை அடித்து கொல்லும் புலி கண்காணிப்பு காமிராவில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது.
    • வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கூடலூர்

    கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவன்-1 பகுதியில் கடந்த சில வாரங்களாக புலி ஒன்று ஊருக்குள் புகுந்து கால்நடைகளை அடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும் கூண்டு வைத்து புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா உத்தரவின்பேரில் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் தேவன்-1 பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். மேலும் புலி நடமாட்டத்தை கண்காணிக்க 14 இடங்களில் கேமராக்களை பொருத்தினர். அந்த கேமராக்களை தினமும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஆனால் இதுவரை புலி நடமாட்டம் கேமராக்களில் பதிவாகவில்லை. அது கேமராக்களில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது. இருப்பினும் வனத்துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டு பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து வனச்சரகர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, தேவன்-1 பகுதியில் 14 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்து வரும் விலங்கு புலியா அல்லது சிறுத்தையா என அடையாளம் காண திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கேமராக்களில் எந்த வனவிலங்குகளின் நடமாட்டமும் பதிவாகவில்லை. இருப்பினும் அப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

    ×