search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதாள சாக்கடை"

    • பாதசாரிகளும் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களும் துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகினர்.
    • ரெட்டேரியில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து ஏரி முழுவதும் கழிவுநீர் தேங்குவதால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் நோய் தொற்றுக்கு ஆளாகி அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    நகராட்சியில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சனத்குமார் நதியின் கால்வாய் மற்றும் ராமாக்காள் ஏரியில் கலந்து வந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு, தி.மு.க. ஆட்சியில் தருமபுரி நகராட்சியில், ரூ.32 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கியது.

    முதற்கட்டமாக 19 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்ட கழிவுநீரை ஒருங்கிணைத்த மதிகோன்பாளையம் மற்றும் காந்திபாளையத்தில் உள்ள சுத்தகரிப்பு நிலையத்திற்கு சென்று அங்கிருந்து சுத்தகரிக்கப்பட்ட கழிவு நீர் சனத்குமார் நதியில் விடப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது நகராட்சி நிர்வாகத்தின் சரியான பராமரிப்பு இல்லாததால் தருமபுரி நகரில் உள்ள முகமது அலி கிளப் ரோடு, நேதாஜி பைபாஸ் சாலை, பிடமனேரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வருவதும், அதனை நகராட்சி நிர்வாகம் அடைப்பை சீர் செய்வதுமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் தருமபுரி புறநகர் பஸ் நிலையம், நகர பஸ் நிலையத்திற்கு இடையே முகமது அலி கிளப் சாலையில் மாதக்கணக்கில் பாதாள சாக்கடை அடைப்பு சீர் செய்யப்படாமல் இருந்து வந்தது. பின்னர் நகராட்சி நிர்வாகம் பல மாதங்கள் கழித்து அடைப்பை சீர் செய்தது. வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் 4 ரோடு பகுதி, தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் சென்று மதிகோன்பாளையம் வழியாக சுத்தகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீர் சென்று வந்தது.

    இந்த நிலையில் நேற்று 4 ரோடு அருகே தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வந்தது. சாலையில் வாகனத்தில் செல்வோரும், பாதசாரிகளும் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களும் துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகினர்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, நகராட்சியின் பராமரிப்பின்மையால் தான் இது போன்ற அவலங்கள் நடந்தேறி வருகிறது. அதேபோல் ரெட்டேரியில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து ஏரி முழுவதும் கழிவுநீர் தேங்குவதால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் நோய் தொற்றுக்கு ஆளாகி அவதிக்குள்ளாகி உள்ளனர் என்றார்.

    தருமபுரி 4 ரோடு பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடும் கழிவு நீரால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவுவதற்குள் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடையை முறையாக பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றிலும் தடுப்பு அமைக்காமலும், கயிறு கட்டாமலும் இருந்தது.
    • ஆமை வேகத்தில் நடை பெறுவதாகவும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி தச்சூர் சாலை எம்.ஜி.ஆர். நகர் அருகில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றிலும் தடுப்பு அமைக்காமலும், கயிறு கட்டாமலும் இருந்தது. அவ்வழியாக வந்த பொன்னேரி வள்ளலார் தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி குமார் (48) இருசக்கர வாகனத்துடன் அந்த 10 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் உதவியுடன் ஜே.சி.பி. எந்திரம் வரவ ழைக்கப்பட்டு கயிறு கட்டி அவரை மேலே தூக்கி எடுத்தனர்.

    அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பிய நிலையில் அப்பகுதி மக்கள் பாதாள சாக்கடை திட்டப் பணி ஆமை வேகத்தில் நடை பெறுவதாகவும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    • 10 நாட்களில் பணிகள் தொடங்கப்படும்
    • அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடையில் இணைப்பு அளிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய முத்து மண்டபம் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இதில் முதல் கட்ட திட்டத்தில் இணைக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர் மட்டும் சுத்திகரிக்கப்படுகிறது. 2-வது மற்றும் 3-வது கட்ட திட்டங்களுக்காக பல இடங்களில் பம்பிங் ஸ்டேஷன் மற்றும் சுத்திகரிப்பு மையம் கட்டப்பட்டுள்ளது.

    குறிப்பாக பாகாயம் பகுதியில் தொடங்கி நகரின் பல இடங்களில் கொடுக்கப்பட்டுள்ள குழாய்களிலிருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிக்க வசதியாக பாலாற்றின் மறுகறையில் விருதம்பட்டு பகுதியில் சாக்கார் தோப்பு என்ற இடத்தில் 50 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.

    இப்பகுதிக்கு கழிவுநீரை பாலாற்றை கடந்து கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காக ஆற்றின் கீழ் பகுதியில் கால்வாய் வெட்டி அதில் குழாய் பதிப்பதா? அல்லது சிறு பாலம் அமைத்து குழாய் பதிப்பதா? என்று ஆலோசிக்கப்பட்டது.

    இதையடுத்து பாலாற்றில் பாலம் கட்டி அதன் மீது கழிவு நீர் குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இப்பணிகள் இன்னும் 10 நாட்களில் தொடங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பாதாள சாக்கடை திட்டத்தில் பணிகள் நடைபெறவில்லை என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டி உள்ளார்.
    • ஜெயலலிதா ரூ.250 கோடி சிறப்பு நிதி வழங்கினார்.

    திருப்பரங்குன்றம்

    அ.தி.மு.க. சார்பில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருநகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இளைஞரணி மாவட்ட செயலாளரும், பகுதி செயலாளருமான வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மதுரையில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் மதுரை மாநகராட்சி உள்ளது. தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ. பூமிநாதன், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது மதுரை மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக அப்போ தைய முதல்வர் ஜெயலலிதா ரூ.250 கோடி சிறப்பு நிதி வழங்கினார். தற்போதைய தி.மு.க. அரசு அது போன்ற எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை.

    எய்ம்ஸ் மருத்துவமனை வருகிற 2026-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என மத்திய அமைச்சர் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். எனினும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் 2028-ல் தான் எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட பணிகள் முடியும் என மக்களுக்கு தவறான தகவலை தெரிவித்து வருகிறார்.

    தி.மு.க. அரசு மத்திய அரசிடம் மோதல் போக்கை கடைபிடிப்பதால் நிதிகளை கேட்டு பெற முடியாத சூழல் உள்ளது. மதுரையின் விரிவாக்க பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வர வேண்டும் என சட்டப்பேரவையில் தெரிவித்தேன். அப்போது ரூ.540 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அது தொடர்பாக எந்த பணிகளும் நடைபெற வில்லை.

    முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் மீது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தாக்குதல் நடைபெற்றது. இது தொடர்பாக அவர் புகார் அளித்த நிலையில், அவர் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலுமாக பழி வாங்கும் நடவடிக்கை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்டத் துணைச் செயலாளர் ஓம்.கே.சந்திரன், வட்டச் செயலாளர் என்.எஸ். பாலமுருகன் வரவேற்புரையாற்றினார். பகுதி துணைச் செயலாளர் செல்வகுமார், சாக்கிலிபட்டி மணி, வட்டச் செயலாளர் எம்.ஆர்.குமார், நாகரத்தினம், பாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்டேட் பேங்க் காலனி அருகே பாதாள சாக்கடை மூடி உடைந்து இருந்தது.
    • துணை மேயர் உடனடியாக உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட செம்மண்டலம் ஸ்டேட் பேங்க் காலனி அருகே பாதாள சாக்கடை மூடி உடைந்து இருந்தது. இதனால் பொது மக்கள் பெரும் அவதியடைந்தனர். மேலும் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வனிடம் பொதுமக்கள் சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதனை தொடர்ந்து துணை மேயர் தாமரை ச்செல்வன் உடனடியாக உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதன்படி பாதாள சாக்கடை மூடி சரி செய்யும் பணி நடைபெற்றது. இதனை மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • அருப்புக்கோட்டை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
    • திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

    பாலையம்பட்டி

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை நிறை வேற்றுவது தொடர்பாக நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நகராட்சி சமுதாயக் கூடத்தில் நடந்தது.

    நகர மன்றத்தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பி ரகாசம் தலைமை தாங்கி னார். நகராட்சி கமிஷனர் அசோக்குமார், முன்னாள் நகர் மன்றத்தலைவர் சிவபிரகாசம், நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச் சாமி, உதவி பொறியாளர் முரளி மற்றும் கவுன்சிலர் கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பேசி யவர்கள் கூறியதாவது:-

    ஜெயசெல்வி (குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர்):- நகராட்சி யில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த ரூ. 373 கோடியே 22 லட்சத்தில் திட்ட அறிக்கை தயார் செய்துள்ளோம். நகரில் 2 ஆண்டுகளுக்குள் பாதாள சாக்கடை திட்டம் செயல் படுத்தப்படும். தற்போது மக்கள் தொகை 87 ஆயிரத்து 722 பேர் உள்ளனர். 2055-ம் ஆண்டு 1 லட்சத்து 30 ஆயிரத்து 35 பேர் மக்கள் தொகையாக உயரும் பட்சத்தில் அதற்கேற்றாற் போல் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட உள்ளது.

    பிரதான கழிவுநீர் அகற்றும் நிலையங்கள் நேதாஜி ரோட்டிலும், முனியசாமி கோவில் பகுதிகளில், நகராட்சி ஆட்டு சந்தையில் துணை கழிவு நீர் அகற்றும் நிலையமும், சுக்கில் நத்தம் ரோட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட உள்ளது. சுகாதாரத்தை பேணும் வகையில் அரசால் கொண்டுவரப்படும் இந்த திட்டத்தை செயல்படுத்து வது தொடர்பாக மக்கள் கருத்தை கேட்க உள்ளோம்.

    அசோக்குமார்(நகராட்சி கமிஷனர்):- பாதாள சாக்கடை திட்டம் செயல் படுத்தும்போது எந்தெந்த பகுதியில் வேலை செய்கி றார்களோ அதை முன் கூட்டியே நகராட்சி நிர்வாகத்திற்கு குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் பொது மக்களிடம் நாங்கள் எடுத்துச் சொல்வதற்கு வசதியாக இருக்கும். சிவப்பிரகாசம் (முன்னாள் நகர் மன்ற தலைவர்):- பாதாள சாக்கடை திட்டம் மூலம் அருப்புக்கோட்டை நகராட்சி சுகாதாரமான நகரமாக மாறும். திட்டம் தொடங்கும்போது சிரமமாகத்தான் இருக்கும். அதன் பின் பயனுள்ளதாக இருக்கும்.

    ஏ.கே.மணி (நகர தி.மு.க. செயலாளர்):- இந்த திட்டம் 25 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. ஆட்சி மாற்றங்களினால் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முயற்சியால் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. உலக வங்கியில் கடன் பெற்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    பழனிசாமி (நகர் மன்ற துணைத்தலைவர்):- கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டம் குறித்து 36 வார்டுகளிலும் ஒவ்வொரு தெருக்களாக சர்வே செய்து அதன் பிறகு தான் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர், சாத்தூர் போன்று இல்லாமல் ஒவ்வொரு பகுதியாக வேலைகளை முடித்து அதன் பின்பு தான் செயல்படுத்தப்படும். இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. சாலைகளை சீரமைக்க ரூ.42 கோடியே 96 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

    • ராஜா பாதாள சாக்கடையில் விழுந்த மாட்டை காப்பாற்றுவதற்கு அங்கு இருந்த நபரிடம் உதவி கேட்டார்.
    • ராஜாவை 2 நபர்கள் சேர்ந்து திடீரென்று சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது‌.

     கடலூர்:

    கடலூர் வண்ணாரபாளையம் கூட்டு ரோட்டில் பாதாள சாக்கடையில் மாடு தவறி விழுந்துவிட்டது. அப்போது அங்கு இருந்த 2 பேர் இதனை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். இதில் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த ராஜா, பாதாள சாக்கடையில் விழுந்த மாட்டை காப்பாற்றுவதற்கு அங்கு இருந்த நபரிடம் உதவி கேட்டார். அப்போது அந்த நபர் சரியான முறையில் பதில் கூறவில்லை.

    இதனை தொடர்ந்து ராஜாவுக்கும் அந்த நபருக்கும் திடீரென்று வாய் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ராஜாவை 2 நபர்கள் சேர்ந்து திடீரென்று சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜா கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் 2 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு வெளியேறிய ரோடில் ஆறாக ஓடியது.
    • துர்நாற்றத்தின் காரணமாக 15 நாட்களுக்கும் மேலாக அவதி அடைந்து வருகின்றனர்.

    தருமபுரி, 

    தருமபுரி தகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்துவருகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு தருமபுரி நகராட்சியில் 32 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது.

    19 வார்டுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் நிறைவேற்றப்படாத 14 வார்டுகளில் செயல்படுத்த கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தருமபுரி பஸ் ஸ்டாண்ட் முகமது அலி கிளப் ரோட்டில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு வெளியேறிய ரோடில் ஆறாக ஓடியது.

    பின்னர் அந்த கழிவுநீரை பாதாள சாக்கடை பகுதியில் இருந்து பள்ளம் தோண்டி சாக்கடை கால்வாயில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் பஸ்கள் செல்ல சிரமம் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் முகமது கிளப் ரோட்டில் கடை வைத்திருக்கும் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் துர்நாற்றத்தின் காரணமாக 15 நாட்களுக்கும் மேலாக அவதி அடைந்து வருகின்றனர்.

    உடனடியாக நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை அடைப்பை சீரமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

    • பாதாள சாக்கடை பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    • பல்வேறு பணிகள் நிலுவையில் இருக்கிறது.

    கோவை,

    கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்குட்பட்ட 87 முதல் 100-வது வார்டு வரை 14 வார்டு மக்கள் பயன்பெறும் வகையில், குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதியில் ரூ.591.34 கோடியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த திட்டமானது, தி.மு.க. ஆட்சிக்கு வந்து 18 மாதங்களை கடந்து இன்னும் முடியாமல் தாமதமாகி வருகிறது.

    கொரோனா தொற்று பரவலை காரணம் கூறியதால் 2023 மார்ச் மாதத்துக்குள் முடிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இன்னும் 2 மாதங்களே இருக்கிறது.

    பம்ப்பிங் ஸ்டேசன் கட்டுவது, மேனுவல் கட்டுவது, பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோட்டில் குழாய் பதிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிலுவையில் இருக்கிறது.

    இதனால் ஒப்பந்தம் எடுத்துள்ள எல் அண்டு டி நிறுவன உயர் அதிகாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்தனர். அதன்பின் ஜூன் வரையிலான செயல்திட்ட அறிக்கையை அந்த நிறுவனம் சமர்ப்பித்து இருக்கிறது.

    இதை தொடர்ந்து மாச்சம்பாளையத்தில் பம்ப்பிங் ஸ்டேஷன் கட்டும் பணியை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.

    நிர்வாக பொறியாளர் தமிழ்செல்வன், உதவி நிர்வாக பொறியாளர்கள் மதியழகன், கீதா தேவி உள்ளிட்டோர் திட்ட செயலாக்கம் குறித்து விளக்கினர்.இதுகுறித்து மாநராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது:-

    செட்டிபாளையத்தில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டு விட்டது. குடிநீர் வடிகால் வாரியத்தினர் ஒரே ஒரு நாள் அவகாசம் கோரியுள்ளனர். அதன்பின் நெடுஞ்சாலைத்துறையினர் மூலமாக ரோடு போடப்படும்.

    போத்தனூரில் 2.5 கி.மீ தூரத்திற்கு குழாய் பதிக்க வேண்டும். 1.5 கி.மீ தூரத்திற்கு பணிகள் முடிந்துள்ளது. வீட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டதும் ரோடு போடப்படும். ஜூன் வரையிலான ஆக்ஷன் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் குறிச்சி, குனியமுத்தூர் பாதாள சாக்கடை பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    • பாதாள சாக்கடை இணைப்பில் ஏற்பட்ட உடைப்பை ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆய்வு செய்தார்.
    • பழுதடைந்த எந்திரத்தை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவில் சீரமைக்கும்படி ஒப்பந்ததாரரிடம் நகர்மன்ற தலைவர் அறிவுறுத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பல வார்டுகளில் கடந்த சில தினங்களாக பாதாள சாக்கடை இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் தேங்குவதாக பொதுமக்கள் நகர்மன்ற தலைவர் கார்மேகத்திடம் புகார் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்-தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி உடைப்பு ஏற்பட்ட குழாய்கள் அகற்றி போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.

    நகராட்சியின் 7.10 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நகர் மன்ற தலைவர் கார்மேகம், பொறியாளர் சுரேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பழுதடைந்த எந்திரத்தை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவில் சீரமைக்கும்படி ஒப்பந்ததாரரிடம் நகர்மன்ற தலைவர் அறிவுறுத்தினர்.

    • மனித கழிவுகளை அகற்றவும், கழிவு நீர் ஓடை சுத்தம் செய்யும் பணிகளிலும் மனிதர்களை பயன்படுத்த கூடாது என்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சட்டம் அமல்படுத்தினார்.
    • பாதாள சாக்கடைத் திட்டத்தில் குழாயில் உள்ள கழிவை அகற்றும் சோதனை பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில் :

    மனித கழிவுகளை அகற்றவும், கழிவு நீர் ஓடை சுத்தம் செய்யும் பணிகளிலும் மனிதர்களை பயன்படுத்த கூடாது என்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சட்டம் அமல்படுத்தினார். அதனை நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் செயல்படுத்த மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை சுத்தம் செய்தல் மற்றும் கழிவு நீர் ஓடை சுத்தம் செய்தல் பணிக்கு எந்திரம் பயன்படுத்த ஆய்வு பணி இன்று நடந்தது. தனியார் நிறுவனம் மூலம் அதற்கான செய்முறை விளக்கம் நடந்தது. அதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள பாதாள சாக்கடைத் திட்டத்தில் குழாயில் உள்ள கழிவை அகற்றும் சோதனை பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன், சுகாதார அலுவலர் ராம் மோகன், பொது சுகாதார குழு தலைவர் கலா ராணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் உத்தரவு
    • மழை பாதிப்பு குறித்த 1077 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

    வேலூர்:

    காட்பாடியில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகளால் தெருக்களி சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் காட்பாடி கழிஞ்சூர் பவானி நகர் காந்தி நகர் பகுதிகளில் தண்ணீர் தேங்கிய பகுதிகள் மற்றும் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.குண்டு குழியுமான சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

    மழை பாதிப்பு குறித்த விவரங்களை 1077 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். வேலூர் மாநகராட்சி பகுதியில் சில இடங்களில் பாதாள சாக்கடை பணிகளால் தெருக்கள் மோசமாக உள்ளது.

    சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் இன்று காட்பாடியில் ஆய்வு செய்யப்பட்டது. மாநகராட்சி பகுதியில் அகழி தண்ணீர் கோட்டை கோவிலுக்குள் வருவதை தடுக்க தற்போது ராட்சத மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    பாதாள சாக்கடை பணிகள் நடந்து வரும் தெருக்களில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    கலெக்டர் ஆய்வின்போது மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், தாசில்தார் ஜெகதீஸ்வரன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

    ×