search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிக்கல்வித்துறை"

    • பள்ளி வளாகத்தையும், விளையாட்டு மைதானத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
    • புகையிலை மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் சீரழிவுகள் குறித்து அறிவுரைகள் வழங்க வேண்டும்.

    சென்னை:

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை மாணவர்கள் மற்றும் பள்ளி நலன் சார்ந்த சில அறிவுரைகள் அடங்கிய ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பள்ளி வளாகத்தையும், விளையாட்டு மைதானத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பருவமழை காலத்துக்கு முன்பாக பள்ளி வகுப்பறைகளின் மேற்கூரையில் படர்ந்துள்ள மரக்கிளைகள் மற்றும் தேங்கியுள்ள இலைகளை அகற்றி மழைநீர் எளிதாக வெளியேற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பள்ளி கட்டிடத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

    பள்ளியில் உள்ள மின் மோட்டார் உள்ளிட்ட மின்சாதனங்களை எக்காரணம் கொண்டும் மாணவர்களை கொண்டு இயக்கக் கூடாது. பள்ளி வகுப்பறைகள் மற்றும் வளாகங்களில் மின் இணைப்புகள் முறையாக பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். மின் கம்பிகள், மின்சாதனங்கள் பழுதுப்பட்டிருந்தால் மின் இணைப்பினை துண்டித்து பராமரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

    பள்ளி வளாகத்தில் திறந்தநிலை நீர்நிலைகள், பள்ளங்கள் மாணவர்கள் அணுகா வண்ணம் சுற்றுவேலி அமைத்தல், கிணறு மற்றும் நீர்நிலை தொட்டிகளில் மேற்புறம் முழுவதும் மூடிய அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

    புகையிலை மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் சீரழிவுகள் குறித்து அறிவுரைகள் வழங்க வேண்டும். பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை, மதியம் வழங்கப்படும் சிற்றுண்டி மற்றும் உணவு முற்றிலும் தூய்மையாக சமைக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • பழுதடைந்துள்ள சுற்றுச்சுவர் பகுதிகளைச் சுற்றி வேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்திட வேண்டும்.
    • பழுதடைந்த சுவிட்சுகள் உள்ள இடங்களில் மழைக்காலங்களில் மின்சாரம் செல்வதை தடைசெய்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகை பள்ளிகளிலும் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் விபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்கென உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள, அவ்வப்போது பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் பள்ளி பாதுகாப்பிற்கென, ஆய்வு அலுவலர்களும், பள்ளித்தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்திடும் பொருட்டு, கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

    1. மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என பெற்றோர்களுக்கு அறிவுரைகள் வழங்கிட தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    2. கடற்கரையோரம் உள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கும் மேற்கூறிய அறிவுரைகள் வழங்கிட தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    3. மாணவர்கள் மிதிவண்டிகளில் பள்ளிக்கு வரும்போது பாதுகாப்பாக வர அறிவுரை கூறவேண்டும்.

    4. மழைக் காலங்களில் மாணவர்களும், அவர்தம் உடைமைகளும் மழையில் நனையாமல் இருக்கும் பொருட்டு மழைக் கோட்டுகளையோ அல்லது குடைகளையோ பயன்படுத்த அறிவுரை வழங்கவேண்டும்.

    5. தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவர் உறுதி தன்மையை கண்காணிக்க வேண்டும். பழுதடைந்துள்ள சுற்றுச்சுவர் பகுதிகளைச் சுற்றி வேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்திட வேண்டும்.

    6. மழையின் காரணமாக பள்ளியின் சில வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் பாதிக்கப்பட்டிருப்பின் அத்தகைய வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் பயன்படுத்தாமல் பூட்டிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    7. அனைத்து மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிபடுத்திடவும், தேவையெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்துவைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய நேர்வுகளில் மின்வாரிய பொறியாளரை உடனடியாக தொடர்புகொண்டு இதனை சரிசெய்திட அறிவுறுத்தப்படுகிறது.

    8. மின் மோட்டார்கள் அமைந்துள்ள இடங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

    9. பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, மற்றும் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்று உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    10. மழைக்காலங்களில் ஏரிகள், ஆறுகளில் நீர்ப்பெருக்கு அதிகம் உடைப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், விடுமுறை காலங்களில் மாணவர்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும், குறிப்பாக காட்டாற்று வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ள நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க அனுமதிக்கக்கூடாது என பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்குவதுடன், பெற்றோர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

    11. பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது மின்கம்பி வடம் பதிப்பதற்கான பள்ளம் தோண்டியுள்ள பகுதிகளுக்கு அருகாமையில் செல்வதோ கூடாது என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

    12. மழைக்காலங்களில் இடி, மின்னல் போன்வற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்குவது கூடாது என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

    13. மாணவர்கள் சாலையில் மழைநீர் கால்வாய்கள் பாதாள சாக்கடைக் குழிகள் இருக்கும் இடங்களில் கவனமாக செல்வதுடன் அதனை தவிர்க்க பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

    14. பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

    15. பள்ளி வளாகத்தில் ஆபத்தானநிலையில் உள்ள உயர்மின் அழுத்தமுள்ள மின்கம்பங்கள், மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருப்பின் அவைகளை உடனடியாக மின்வாரியத்தின் துணையுடன் அகற்றப்படவேண்டும்.

    16. சுவிட்சுகள் (switches) சரியாக உள்ளனவா, மழைநீர் படாதவண்ணம் உள்ளனவா என்பதையும் தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்யவேண்டும். பழுதடைந்த சுவிட்சுகள் உள்ள இடங்களில் மழைக்காலங்களில் மின்சாரம் செல்வதை தடைசெய்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    17. பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டிடங்களின் மேற்கூரைகள், கைப்பிடிச்சுவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் சன்னல், கதவுகளுக்கு மேல் உள்ள கைப்பிடிச் சுவர்கள் உறுதியாக உள்ளனவா என்று அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கூரையில் நீர் தேங்காவண்ணம் உடனடியாக தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

    18. பள்ளி வளாகத்தில், கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களில் பள்ளங்களை சுற்றி பாதுகாப்பான தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

    19. பருவகால மாற்றங்களால் மாணாக்கர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து (குறிப்பாக டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களிலிருந்து) பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையான அறிவுரைகளை வழங்குவதுடன் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளபடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளவேண்டும். மேலும், மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பின் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை/ ஆரம்ப மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள

    சுகாதார நிலையங்களுக்கு சென்று அறிவுறுத்தவேண்டும்.

    20. மாணவர்கள் வசிக்கும் வீடுகளிலும் சுற்று வட்டாரங்களிலும் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். மழை நீர் தேங்குவதினால் கொசுக்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் என்பதை உணர்த்த வேண்டும்.

    21. பள்ளிகளில் இடிக்கக்பட வேண்டிய கட்டடங்கள் இருப்பின் மாவட்ட ஆட்சியரை தொடர்ப்பு கொண்டு இடித்திடல் அவசியம். இல்லையெனில் அக்கட்டடத்திற்கு அருகில் செல்லாமல் இருக்க மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

    22. பள்ளிகளில் கனமழையால் நீர் தேங்கும் காலங்களில் நீர் இறைக்கும் இயந்திரம் (மின்மோட்டார்) வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இதர அலுவலகங்களில் உள்ளதா என்பதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்து வைத்தல் அவசியம்.

    23. மழைக்காலங்களில் சுட வைத்த நீரைப் பருக அறிவுறுத்த வேண்டும்.

    24. கடலோர பகுதிகள் கொண்ட, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கடும் மழை அல்லது புயலினால் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் கடலோர பகுதியின் அருகாமையில் உள்ள பள்ளிகளில் தங்கவைப்பதற்கான உரிய இடவசதி இருப்பின் உரிய முன்னேற்பாடுளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி தலைமை ஆசிரியர்கள் செயல்படுவதை, அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிப்பார்வை மற்றும் ஆய்வின்போது கண்காணிக்க வேண்டும் எனவும், தெரிவிக்கப்படுகிறது.

    • 2022-23-ம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதான நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் பட்டியலை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.
    • நிகழ்ச்சி நடைபெறும் தினத்தன்று காலை 10 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் கலைவாணர் அரங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மத்திய-மாநில அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் மாநில அரசு சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 342 பேர், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் 38 பேர், ஆங்கிலோ இந்தியன், மாற்றுத்திறனாளிகள், சமூக படையில் (என்.சி.சி., என்.எஸ்.எஸ்.) தலா 2 பேர் என மொத்தம் 386 சிறந்த ஆசிரியர்கள் அதற்காக நியமிக்கப்பட்ட குழுவால் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, 2022-23-ம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதான நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் பட்டியலை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

    இவர்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவர்களுக்கான விருதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்க இருக்கிறார். இந்த நிலையில் விருதுக்கு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சில அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிரியர்கள் தங்களுடன் இரண்டு பேரை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்து வரலாம். நிகழ்ச்சி நடைபெறும் தினத்தன்று காலை 10 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் கலைவாணர் அரங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இதே போல் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஆசிரியர்கள் மீது குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை ஏதும் இல்லை என்பதை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மீண்டும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதும் அதற்கான அத்தாட்சியுடன் பள்ளியில் இருந்து விடுவித்து இந்த விழாவில் பங்கேற்க அனுமதி கடிதம் வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    • அடுத்த மாதம் நடைபெற உள்ள காலாண்டு தேர்விலேயே இந்த பொது வினாத்தாள் நடைமுறையை கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
    • தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பொது வினாத்தாள் முறையை கொண்டு வந்திருக்கிறது.

    சென்னை:

    6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகள் அந்தந்த பள்ளிகள் மற்றும் மாவட்ட அளவில் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன.

    அதாவது, மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டி.ஐ.இ.டி.) வாயிலாக விரிவுரையாளர்களின் மேற்பார்வையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வினாத்தாள் தயாரிக்கும் பணி நடந்தது.

    இந்த நிலையில் தற்போது மாநில அளவில் பொது வினாத்தாள் நடைமுறையை பள்ளிக்கல்வித்துறை கையில் எடுத்து இருக்கிறது. நடப்பு கல்வியாண்டில் இருந்து இதனை அமல்படுத்த திட்டமிட்டு, அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெற உள்ள காலாண்டு தேர்விலேயே இந்த பொது வினாத்தாள் நடைமுறையை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இதில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் பழைய நடைமுறையில்தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி, மாநில அளவில் தயாராகும் பொது வினாத்தாள்கள் தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (டி.என்.எஸ்.சி.இ.ஆர்.டி.) வந்து சேரும். பின்னர், அங்கிருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதற்கேற்றாற்போல், வருகிற 2-ந் தேதிக்குள் தமிழ், ஆங்கிலத்தில் 2 செட் வினாத்தாள்களை தயாரிக்க, தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது, '6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொது வினாத்தாள் நடைமுறை சோதனை அடிப்படையில் 12 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது' என்றார்.

    பொது வினாத்தாள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

    கடந்த தேசிய சாதனை ஆய்வு மற்றும் மாநில அளவிலான சாதனை ஆய்வில் மாணவ-மாணவிகளின் கற்றல் விளைவு மிகவும் மோசமாக இருப்பதாக தெரியவந்தது. அதற்கான காரணத்தை தீவிரமாக ஆய்வு செய்ததில், மாவட்ட அளவில் தயாரிக்கப்பட்ட வினாத்தாள்கள் மாணவர்களின் கற்றல் நோக்கங்களையும், விளைவுகளையும் கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர்கள் வடிவமைத்தது கண்டறியப்பட்டது. இதனை கருத்தில் கொண்டுதான், தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பொது வினாத்தாள் முறையை கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் முடிவை ஒரே சீராகவும், சரியாகவும் மதிப்பிட முடியும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மாணவர்கள் தங்களது கற்றல் திறனை அறிந்துகொள்வதற்கு மாதம் ஒருமுறை தேர்வு.
    • வினாத்தாள்கள் முந்தையநாள் அனைத்து பள்ளிகளிலும் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

    தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்களது கற்றல் திறனை அறிந்துகொள்வதற்கு மாதம் ஒருமுறை திறன்வழி மதிப்பீட்டு தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.

    மேலும், தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில், தேர்வுக்கு முந்தையநாள் அனைத்து பள்ளிகளிலும் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

    • தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அதனை சார்ந்த அனைத்து கல்வித்துறை அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.
    • மாணவர்களை தமிழில் பெயர் எழுதவும், கையொப்பமிட அறிவுறுத்த வேண்டும்.

    சென்னை:

    அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அனைத்து இடங்களிலும் தங்கள் பெயர்களை எழுதும் போதும், கையெழுத்திடும் போதும் கண்டிப்பாக தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என்று 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணையை பிறப்பித்தது.

    அந்த அரசாணையை பின்பற்றும் வகையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை, அதனை சார்ந்த அனைத்து கல்வித்துறை அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் அரசாணையை செயல்படுத்தும் விதமாக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அதிகாரிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட அனைவரும் வருகைப்பதிவு மற்றும் இதர ஆவணங்களில் தமிழில்தான் கையொப்பமிட வேண்டும். மேலும், மாணவர்களையும் தமிழில் பெயர் எழுதவும், கையொப்பமிட அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போராட்டங்களை அறிவித்திருக்கும் ஆசிரியர் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது.
    • திட்டமிட்டபடி வருகிற ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடக்கும் என்று மாநில தலைவர் தெரிவித்தார்.

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான நிலுவை இல்லாத அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பது உள்பட அடுக்கடுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டு வருகின்றன. இந்த நிலையில் போராட்டங்களை அறிவித்திருக்கும் ஆசிரியர் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது.

    அதன்படி, பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் 25-ந் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

    ஆனால் இந்த அழைப்பில் பொதுவாக குறிப்பிட்டுள்ள சங்கம் என்பது குழப்பமாக இருக்கிறது என்றும், எங்களுக்கு அப்படி ஒரு அழைப்பு வரவில்லை என்றும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்தார். மேலும் அவர், வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திட்டமிட்டபடி பள்ளிக்கல்வி இயக்குனர் வளாகத்தில் போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.

    இதேபோல், 1.6.2009-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கமும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறது. அதன் மாநில தலைவர் ராபர்ட், 'திட்டமிட்டபடி வருகிற ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடக்கும்' என்று தெரிவித்தார்.

    • சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
    • அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய மற்றும் டியூசன் எடுக்கும் ஆசிரியர்களை விருதுக்கு பரிந்துரை செய்யக்கூடாது.

    சென்னை:

    முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு, ரூ.10,000க்கான காசோலை, வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுவர்.

    அந்த வகையில், இந்த 2022-2023ம் கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட உள்ளனர்.

    இந்நிலையில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை ஆகஸ்ட் 14ந் தேதிக்குள் பரிந்துரை செய்யலாம் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி அறிவுறுத்தி உள்ளார்.

    அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய மற்றும் டியூசன் எடுக்கும் ஆசிரியர்களை விருதுக்கு பரிந்துரை செய்யக்கூடாது.

    ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், குற்ற நடவடிக்கைகளுக்கு உள்ளானவர்களையும் பரிந்துரை செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தமிழக அரசாணை அடிப்படையில் எனக்கான முழு ஓய்வூதிய பணப்பலன்களை முறைப்படுத்தி வழங்க உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
    • கோர்ட்டு உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஏன் நிறைவேற்றவில்லை? என கேள்வி எழுப்பினார்.

    மதுரை:

    நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஞானபிரகாசம் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் கூறி இருந்ததாவது:-

    நெல்லை மாவட்டம் பழையபேட்டை கிராமத்தில் உள்ள ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி மையத்தில் 1966 ஆம் ஆண்டு முதல் அலுவலக உதவியாளராக 40 ஆண்டுகள் பணியாற்றி 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன்.

    தமிழக அரசாணை அடிப்படையில் எனக்கான முழு ஓய்வூதிய பணப்பலன்களை முறைப்படுத்தி வழங்க உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

    அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள், எனது மனுவினை பரிசீலனை செய்து பணப் பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்நிலையில் எனக்கு பணப்பலன்கள் வழங்குவது தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் தற்போது வரை நிறைவேற்றவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத கல்வித்துறை அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கோர்ட்டு உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஏன் நிறைவேற்றவில்லை? என கேள்வி எழுப்பினார். பின்னர், இது குறித்து தமிழக பள்ளிக்கல் வித்துறை செயலாளர், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி கல்வி இயக்குனர் ஆகியோர் வருகிற 19-ந்தேதி இந்த கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    • பொது நூலக இயக்குனராக ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார்.
    • ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் முழு கூடுதல் பொறுப்பு வகிக்க பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.

    சென்னை:

    பள்ளி கல்வித்துறையின் கீழ் வரும் பொது நூலக இயக்குனராக (முழு கூடுதல் பொறுப்பு) ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் கடந்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார். அதோடு சேர்த்து, இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு பணி அலுவலராகவும் பணிபுரிந்து வந்தார்.

    அதையடுத்து கடந்த மாதம் (மே) இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் சிறப்பு பணி அலுவலர் பணியிடத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில், காலியாக இருந்த இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் சிறப்பு பணி அலுவலர் பணியிடத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் முழு கூடுதல் பொறுப்பு வகிக்க பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா நேற்று அரசாணை பிறப்பித்துள்ளார்.

    • மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பால் அடித்த காலம் போய், ஆசிரியர்களை மாணவர்கள் பிரம்பால் அடிக்கும் காலம் வந்துவிட்டது.
    • பள்ளிக் கல்வித்துறையில் நிலவி வரும் குளறுபடிகளை உடனடியாக களைய வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆசிரியர்களை இழிவாகப் பேசுவது, அவர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பது, அதையும் உரிய நேரத்தில் கொடுக்காதது, கூடுதல் பளுவினை அவர்களுக்கு அளிப்பது, காலிப் பணியிடங்களை நிரப்பாதது போன்ற அவல நிலை தான் கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வருகிறது.

    அரசுப் பள்ளிகளில் மாதம் 15,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற புகார் தற்போது வந்துள்ளது. மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பால் அடித்த காலம் போய், ஆசிரியர்களை மாணவர்கள் பிரம்பால் அடிக்கும் காலம் வந்துவிட்டது; இதனை ஆசிரியர்கள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்று ஓர் உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

    பள்ளிக் கல்வித்துறையில் நிலவி வரும் குளறுபடிகளை உடனடியாக களையும் வகையில், ஆசிரியர்களுக்கான சம்பளத்தை உடனுக்குடன் வழங்கவும், காலிப் பணியிடங்களை அவ்வப்போது நிரப்பவும், பதவி உயர்வுகளை உடனுக்குடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி முடிவுக்கு வந்தது.
    • இயக்குனர் பதவி அகற்றப்பட்டு, பள்ளிக்கல்வி ஆணையரே பள்ளிக்கல்வி சார்ந்த பணிகளை கவனித்து வந்தார்.

    சென்னை:

    மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக்கல்வி சார்ந்த தேவைகளை பள்ளிக்கல்வி இயக்குனர் என்ற பதவியில் இருப்பவரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவர் அரசிடம் தெரிவிப்பார். பின்னர் அது நிவர்த்தி செய்யப்பட்டு வந்தது.

    100 ஆண்டுகளுக்கு மேலான வரலாறை கொண்டது இந்த இயக்குனர் பதவி. கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. இந்த பதவி உருவாக்கப்பட்டது, இயக்குனர் பதவியை அகற்றுவதற்காக தான் என்று அப்போது பேசப்பட்டது.

    அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி முடிவுக்கு வந்தது. அதற்கு பதிலாக பள்ளிக்கல்வி ஆணையர் பொறுப்பில் இருப்பவர், அனைத்து பணிகளையும் கவனிப்பார் என்று கூறப்பட்டது.

    இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள், ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும், இயக்குனர் பதவி அகற்றப்பட்டு, பள்ளிக்கல்வி ஆணையரே பள்ளிக்கல்வி சார்ந்த பணிகளை கவனித்து வந்தார். இந்த பதவியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி நந்தகுமார் இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் (மே) பள்ளிக்கல்வி ஆணையராக இருந்த நந்தகுமாரை, மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த அறிவிப்பில் பள்ளிக்கல்வி ஆணையராக யாரையும் நியமிக்காமல் விட்டுவிட்டது. இதனால் மீண்டும் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் பதவி கொண்டுவரப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக பேசப்பட்டது.

    இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில், சென்னை தலைமை செயலகத்தில் சமீபத்தில் நிருபர்களை சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி தொடர்பாக கேள்வி எழுப்பும்போது, 'இதுதொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நாங்கள் கொடுக்கும் பட்டியலில் அவர் யார் ஒருவரை தேர்வு செய்கிறாரோ? அவர்களை அறிவிப்போம்' என்றார்.

    அதன்படி, பள்ளிக்கல்வி இயக்குனராக அறிவொளியை தேர்வு செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை நேற்று வெளியிட்டு இருக்கிறது. அறிவொளி இதற்கு முன்பு தொடக்க கல்வி இயக்குனராகவும், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராகவும், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 100 ஆண்டுகள் வரலாறு கொண்ட பள்ளிக் கல்வி இயக்குனர் பதவி 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைமுறைக்கு வந்து உள்ளது.

    அத்துடன் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கூடுதல் இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராகவும், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழக உறுப்பினர் செயலர் ச.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குனராகவும் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

    அதேபோல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் மு.பழனிச்சாமி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனராகவும், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் பெ.குப்புசாமி, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழக உறுப்பினர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    ×