என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Illam thedi kalvi"

    திருவாரூரில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கலை பிரசாரத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    திருவாரூர்:

    பள்ளி கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கலை பிரசார வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். பிரசார வாகனத்தை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா நோய் தொற்று காலத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுகட்ட பள்ளி கல்வித்துறை இல்லம் தேடி கல்வி எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் குறித்து திருவாரூர் மாவட்டத்தில் 10 ஒன்றியங்களிலும் 8 கலைக்குழுவினரை கொண்டு பிரசார வாகனம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    மேலும் பள்ளி நேரங்களை தவிர்த்து மாணவர்களின் வசிப்பிடம் அருகே தன்னார்வலர்களை கொண்டு மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்குவதற்கும், கற்றல் திறனை மீண்டும் வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தன்னார்வலர்களாக செயல்பட விருப்பம் உள்ளவர்கள் http://illamthedikalvitoschool.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிவண்ணன், பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    குடவாசல் அருகே அகரஓகை சந்திப்பில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. இதை வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலக ஊழியர்கள் கலா, பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×