search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி பலி"

    • எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென வேலுவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றம் அடுத்த கொத்திமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வேலு(வயது49). கொத்தனார். இவர் நீலமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அகத்தீஸ்வரமங்கலம் ரோட்டில் வந்தபோது பெட்ரோல் இல்லாமல் மோட்டார் சைக்கிள் நின்றது. இதையடுத்து வேலு மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென வேலுவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வேலு பலியானார். இதுகுறித்து திருக்கழுகுன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈஸ்வரனின் குடும்பத்தினரும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் புகார் அளித்தனர்.
    • நள்ளிரவில் துப்பாக்கி சூடு நடத்தி கொன்றுவிட்டு மறுநாள் காலையில் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் வண்ணாத்திப் பாறை காப்புக்காட்டில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்து வனவிலங்குகள் வேட்டையாடப் படுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் கூடலூர் வனவர் திருமுருகன் தலைமையில் வனக்காப்பாளர், வனக்காவலர் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மின்வேலி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்தபோது குள்ளப்பகவுண்டன் பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 55) என்பவர் அப்பகுதியில் பதுங்கி இருந்தார். வனத்துறையினரை கண்டதும் அவர் தப்பியோட முயன்றுள்ளார். அப்போது ஈஸ்வரனுக்கும், வனத்துறையினருக்கும் இடையே நடந்த தகராறில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    இதில ஈஸ்வரன் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து கூடலூர் ரேஞ்சர் முரளிதரன், லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஈஸ்வரனின் உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    துப்பாக்கிச்சூட்டில் ஈஸ்வரன் உயிரிழந்தது தெரியவரவே அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் கேட்காமல் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஈஸ்வரன் உடல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு தேனி எஸ்.பி.பிரவீன் உமேஷ் டோங்கரே, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் ஆனந்த், உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் ராமநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஈஸ்வரனின் குடும்பத்தினரும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் புகார் அளித்தனர். அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும். குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

    நள்ளிரவில் துப்பாக்கி சூடு நடத்தி கொன்றுவிட்டு மறுநாள் காலையில் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஒரு குற்றவாளி மீது எண்கவுண்டர் நடத்துவது போல வனத்துறைக்கு துப்பாக்கியால் சுட அதிகாரம் கொடுத்தது யார்? எனவே இப்பிரச்சினையில் போலீசாரும் எங்களை சமாதானம் செய்யும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை பிடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே நாங்கள் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம். அவர்கள் விசாரணை நடத்தினால்தான் இதில் உண்மை வெளிவரும். அதுவரை பிரேத பரிசோதனை நடத்துவதற்கும் நாங்கள் அனுமதி அளிக்காமல் கையெழுத்திட மறுத்துவிட்டோம் என்றனர்.

    இறந்த ஈஸ்வரன் மீது ஏற்கனவே அவர் அமைத்த மின்வேலி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு உள்பட 2 வழக்குகள் உள்ளன. இவர் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வந்ததால்தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

    இன்று தேனி அரசு மருத்துவக்கல்லூரி முன்பு 2ம் நாளாக ஈஸ்வரனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பான சூழல் நிலவியது. 

    • டிராக்டரின் பின்பக்க டயரில் சிக்கிய முதியவர் ரவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பத்தியால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது60). கூலித் தொழிலாளி. இவர் டிராக்டரில் எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு டிரைவர் இருக்கையின் அருகில் அமர்ந்து பயணம் செய்தார். காக்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது ஈக்காடு அருகே உள்ள வளைவில் டிராக்டரை டிரைவர் வேகமாக திருப்பினார்.

    அப்போது அங்குள்ள வேகத்தடையில் டிராக்டர் ஏறி இறங்கியதில் நிலைதடுமாறிய ரவி தவறி கீழே விழுந்தார். இதில் டிராக்டரின் பின்பக்க டயரில் சிக்கிய முதியவர் ரவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் புல்லரம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து ரவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து நடந்ததும் டிராக்டர் ஓட்டிவந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தனது வீடு அருகே பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தார்.
    • சம்பவத்தன்று அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகே சந்திராபுரம் ஒத்தவீடு பகுதியை சேர்ந்தவர் அடைக்கண்(52). இவர் தனது வீடு அருகே பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் அடைக்கண் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே அடைக்கண் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சிகிச்சை பலனின்றி பிரதாப் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருேக உள்ள மோவூர், காலனி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் பிரதாப் (வயது30). தொழிலாளி.

    அதேபகுதியை சேர்ந்த பிரதாப்பின் நண்பர் ஒருவர் புதிதாக வீடு கட்டி உள்ளார். இதற்கு குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் பிரதாப் ஈடுபட்டார். அப்போது அருகில் இருந்த ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் அருகே பள்ளம் தோண்டினார். இதில் அந்த சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து பிரதாப் மீது விழுந்தது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பிரதாப் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பென்னாலூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலியானார்.
    • திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள மேலபட்டியை சேர்ந்தவர் சந்தானம்(வயது45). இவரது மனைவி இறந்து விட்டார். சொக்கநாதன்பட்டியில் 2 மகள்கள் மனைவியின் சகோதரி பராமரிப்பில் இருந்து வருகின்றனர். அவர்களை பார்ப்பதற்காக சந்தானம் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். திருமங்கலம் குதிரைசாரி குளம் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திருச்சியை சேர்ந்த கிருபா ராஜதுரை என்பவர் ஓட்டி வந்த கார் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியது. இதில் சந்தானம் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனு ப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியி லேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரும்பு பயிரிடப்பட்ட நிலத்தில் உடல் கருகிய நிலையில் உடல் கிடப்பதை பார்த்தனர். அருகே சென்றபோது மின் கம்பி அறுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கட

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியை அடுத்த சி.கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 56). விவசாய தொழிலாளி. இவர் அதே கிராமத்தில் விவசாய பணிக்கு செல்வதாக கூறிவிட்டு நேற்று காலை வீட்டிலிருந்து சென்றார்.நேற்று மாலை வெகுநேரமாகி யும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தார் பழனிவேலை தேடினர். விளைநிலங்களில் இரவு நேரத்தில் தேடும் பணியை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டதால், காலை தேடிக் கொள்ளலாம் என்று வீடு திரும்பினர்.இன்று அதிகாலை முதல் அவர் பணிக்கு சென்ற விளைநில பகுதியில் மீண்டும் தேடும் பணியில் பழனிவேலின் குடும்பத்தார் ஈடுபட்டனர்.அப்போது, அங்கிருந்து கரும்பு பயிரிடப்பட்ட நிலத்தில் உடல் கருகிய நிலையில் உடல் கிடப்பதை பார்த்தனர். அருகே சென்றபோது மின் கம்பி அறுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இது தொடர்பாக மின் வாரியத்திற்கும், கருவேப்பிலங்குறிச்சிபோலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். மின் விநியோகத்தை நிறுத்திய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கருகிய நிலையில் இருந்த உடலை கைப்பற்றினர். இதனைப் பார்த்த பழனிவேலுவின் குடும்பத்தார், இறந்தவர் பழனிவேல் என்பதை உறுதி செய்தனர்.மேலும், அங்கு அவர்கள் கதறியழுத காட்சி காண்போரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார், பிரேத பரிசோதனைக்காக பழனிவேலுவின் உடலை விருத்தாசலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விவசாய கூலி வேலைக்கு சென்றவர் அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நாமக்கல்லில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி அதிவேக மாக வந்த கார் பழனி மீது மோதியது.
    • இதில் பழனிக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வெட்டுக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 65). கூலிதொழிலாளி.

    விபத்தில் பலி

    இவர் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு பரமத்திவேலூர்- நாமக்கல் செல்லும் சாலையை கடந்த போது நாமக்கல்லில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி அதிவேக மாக வந்த கார் பழனி மீது மோதியது. இதில் பழனிக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பழனியை பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனி பரிதாபமாக இறந்தார்.

    டிரைவர் ஓட்டம்

    விபத்து ஏற்பட்டதும் டிரைவர் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.இது குறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து காரை பறிமுதல் செய்து டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றார்.

    • மதுபோதையில் தடுமாறி கீழே விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    கலவை:

    கலவை கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ் (வயது 45) கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 29-ந் தேதி அவரது வீட்டின் மாடியில் இருந்து படி வழியாக இறங்கினார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் உமேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சென்னை சென்ற லாரி இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சேடன் குட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 55) . கூலித் தொழிலாளி.இவர் திண்டிவனம் எம். ஆர். எஸ். கே. கேட் அருகே டாஸ்மாக் கடைக்குஎதிரே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக ரோட்டை கடந்த போது திண்டிவனத்தில் இருந்து சென்னை சென்ற லாரி இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் நாகராஜ் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜ் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த பகுதியில் நெடுஞ்சாலையில் ஓரத்தில் டாஸ்மாக் கடை உள்ளதால் தொடர்ந்து விபத்து நடப்பதாகவும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தொடர்ந்து உயிரிழப்பும் ஏற்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இந்த இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் போராட்டம் நடத்துவது என திட்டமிட்டுள்ளனர்.

    • தோல் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நசீப் கான் (வயது 22) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் வழக்கம்போல் நசீப் கான் பணியில் ஈடுபட்டிருந்த போது தொழிற்சாலை இயந்திரத்தை இயக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட நசீப்கான் மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நசீப்கான் வரும் வழியி லேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டுக்கு சென்றவுடன் வீரையன் சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார்.
    • அக்கம் பக்கத்தினர் வீரையனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரையன் (வயது 50). கூலி தொழிலாளி.

    இவர் துவரங்குறிச்சி- அதிராம்பட்டினம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு தன் ஊருக்கு திரும்பி உள்ளார்.

    அவரை வழி மறித்த கலால் கவால்துறை தலைமை காவலர் குணசீலன் டாஸ்மாக்கில் மதுபாட்டில் வாங்கி திருட்டு தனமாக அதிக விலைக்கு விற்கிறாயா? என்று கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீரையன் மகன் முருகேசனுக்கு தகவல் கொடுக்க அவர் சம்பவ இடத்திற்கு வந்து தனது தந்தையை அழைத்து சென்றார்.

    வீட்டுக்கு சென்றவுடன் வீரையன் சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே அவரை பரிசோதித்த டாக்டர்கள் வீரையன் இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து தகவல் அறிந்தும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது சாவிற்கு நீதி கிடைக்கும் வரை பிணத்தை வாங்க மாட்டோம் என்றும், மரணத்திற்கு காரணமான கலால் கவால்துறை தலைமை காவலர் குணசீலன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கோரிக்கை வைத்து பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சௌகான், வட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

    ×