search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker dead"

    • கோவில் விழா படையலில் வைக்கப்பட்ட மது அருந்தியவர் பரிதாபமாக இறந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவின் போது சுவாமிக்கு படையல் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படையிலில் உணவுடன், மதுபாட்டில்களும் வைக்கப்பட்டதாக தெரிகிறது.

    பூஜைகள் முடிந்ததும் படையலில் வைக்கப்பட்ட மதுவை, பூசாரி சிலரிடம் கொடுத்துள்ளார். அதனை வைத்தியநாதபுரம் செல்வகுமார் (வயது 49), வடலிவிளை அருள் ஆகியோர் பெற்றுக்கொண்டு அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதிக்குச் சென்று சாப்பிட்டார்களாம்.

    இந்த நிலையில் அருள் தனது நண்பர்களுக்கு போன் செய்து, மது குடிக்க வந்த விவரத்தையும், அதனை குடித்த பிறகு தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி உள்ளார். மேலும் உடனே இங்கு வந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.

    இதனை தொடர்ந்து நண்பர்கள் அங்கு சென்ற போது, அருள் மயக்க நிலையில் இருந்துள்ளார். செல்வகுமார் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். அவர்களை மீட்டு ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நண்பர்கள் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், செல்வகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அருள் உடல் நலம் மோசமாக உள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவில் விழா படையலில் வைக்கப்பட்ட மது அருந்தியவர் பரிதாபமாக இறந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்வகுமார் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு வந்த பிறகே எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவரும்.

    • யானைபுகா அகழிவழியாக முடனாரி புதுப்பாலம் பகுதியில் அவர்கள் சென்றபோது மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.
    • ஈஸ்வரனின் உறவினர்கள் அவரது உடலை வைத்து போராட்டம் நடத்தியதோடு வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை காப்பு காட்டில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி கூடலூர் வனவர் திருமுருகன் தலைமையில் வனக்காப்பாளர்கள், வனக்காவலர் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

    யானைபுகா அகழிவழியாக முடனாரி புதுப்பாலம் பகுதியில் அவர்கள் சென்றபோது மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அங்கு சோதனையிட்டபோது மறைந்திருந்த குள்ளப்பகவுண்பட்டியை சேர்ந்த தோட்ட காவலாளியான ஈஸ்வரன் (55) என்பவரை பிடிக்க முயன்றனர்.

    ஆனால் அவர் தப்பி ஓட முயன்றபோது வனத்துறையினரும் விரட்டி சென்று துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரேஞ்சர் முரளிதரன் லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ஈஸ்வரன் வனத்துறையினரை கத்தியால் குத்த முயன்றதால் ஏற்பட்ட தகராறில் தற்காப்பிற்காக சுடப்பட்டபோது ஈஸ்வரன் பலியானதாக தெரிவித்தார்.

    ஆனால் ஈஸ்வரனின் உறவினர்கள் அவரது உடலை வைத்து போராட்டம் நடத்தியதோடு வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். மேலும் ஈஸ்வரனின் மகள் மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் புகார் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து வனவர், வனக்காவலர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில் வனவர் திருமுருகன், வனக்காவலர் ஜார்ஜ்குட்டி என்ற பென்னியை போலீசார் கைது செய்தனர்.

    • புதரில் இருந்து வெளியே வந்த யானை ஒன்று திடீரென சென்டானை தூக்கி வீசியது.
    • சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த கொத்தமங்கலம் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் சின்ன ரங்கன் என்கிற சென்டான் (46). கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சென்டான் எப்போதும் அதே பகுதியில் தர்மன் என்பவர் தோட்டத்தில் பால் கறக்க செல்வது வழக்கம். அதேபோல் இன்று அதிகாலை 4.50 மணிக்கு இந்திரா நகரில் உள்ள தர்மன் என்பவரின் தோட்டத்திற்கு பால் கறக்க சைக்கிளில் சென்டான் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது புதரில் இருந்து வெளியே வந்த யானை ஒன்று திடீரென சென்டானை தூக்கி வீசியது. இதில் பலத்த அடிப்பட்டு உயிருக்காக சென்டான் போராடி கொண்டிருந்தார். சத்தம் கேட்டு அவரது மகள் வந்து பார்த்தார்.

    அப்பொழுது தந்தை நிலையை கண்டு அருகில் இருந்தவர்களுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் கார் மூலம் சென்டானை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சென்டான் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் பலத்த தீக்காயம் அடைந்த ஜோஸ்வா உள்பட 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • சென்னை துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    ஆயில் ஏற்றிச்செல்லும் எம்.சி.பாட்ரியாட் என்னும் சரக்கு கப்பல் கடந்த மாதம் ஒடிசா மாநில துறைமுகத்துக்கு வந்தது. அந்த கப்பலில் பழுது ஏற்பட்டதை தொடந்து கடந்த மாதம் 31-ந்தேதி சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    தனியார் நிறுவனம் மூலம் கப்பலில் பழுது பார்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் தண்டையார்பேட்டையை சேர்ந்த சகாய தங்கராஜ் (வயது 45) உள்பட ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கப்பலில் இருந்த போல்டை கியாஸ் கட்டர் மூலம் சகாயராஜ் மற்றும் தொழிலாளர்கள் அகற்றினர். அப்போது அருகில் இருந்த கியாஸ் பைப்லைன் மீது பட்டு வெடித்தது.

    இதில் ஊழியர் சகாய தங்கராஜ் உடல் கருகி பலியானார். மேலும் அருகில் இருந்த காசிமேட்டை சேர்ந்த ஜோஸ்வா (24), தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜேஷ்(35), ஜீவரத்தினம் நகரை சேர்ந்த புஷ்பலிங்கம் (48) ஆகிய 3 பேரும் உடல் கருகினர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் பலத்த தீக்காயம் அடைந்த ஜோஸ்வா உள்பட 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டில் சமையல் செய்வதற்காக கோழிக்கறி வாங்கி வைத்திருந்தனர்.
    • மது போதையில் கோழிக்கறியை சாப்பிட பீம நாயக்கிற்கு ஆர்வம் ஏற்பட்டது.

    திருப்பதி:

    குடிமகன்கள் மது குடிக்கும் பொழுது விதவிதமான தின்பண்டங்களை சாப்பிடுகின்றனர். மது குடிக்கும் போது சைவம், அசைவம் என எதையும் பார்ப்பதில்லை கையில் கிடைப்பதை சாப்பிட்டு மகிழ்கின்றனர்.

    ஆந்திராவில் மது குடிக்கும் போது சமைக்காத கோழிக்கறியை தின்றுவிட்டு தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் கொத்த குடேம் கிராமத்தைச் சேர்ந்தவர் பீம நாயக் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. நேற்று வீட்டில் வைத்து மது குடித்தார்.

    அப்போது வீட்டில் சமையல் செய்வதற்காக கோழிக்கறி வாங்கி வைத்திருந்தனர்.

    மது போதையில் அதனை சாப்பிட பீம நாயக்கிற்கு ஆர்வம் ஏற்பட்டது. மதுவை குடித்தபடி சமைக்காத பச்சை கோழிக்கறியை எடுத்து சாப்பிட்டார்.

    சிறிய துண்டுகளை அவர் விழுங்கினார். பின்னர் மது குடித்த படி பெரிய கோழிக்கறி துண்டு ஒன்றை எடுத்து வாயில் போட்டு அப்படியே விழுங்கினார்.

    அப்போது எலும்புடன் இருந்த அந்த கோழி கறி துண்டு அவரது தொண்டையில் சிக்கியது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு நர்சாப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பச்சைக்கோழி கறியை தின்று தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வீட்டுக்கு சென்றவுடன் வீரையன் சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார்.
    • அக்கம் பக்கத்தினர் வீரையனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரையன் (வயது 50). கூலி தொழிலாளி.

    இவர் துவரங்குறிச்சி- அதிராம்பட்டினம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு தன் ஊருக்கு திரும்பி உள்ளார்.

    அவரை வழி மறித்த கலால் கவால்துறை தலைமை காவலர் குணசீலன் டாஸ்மாக்கில் மதுபாட்டில் வாங்கி திருட்டு தனமாக அதிக விலைக்கு விற்கிறாயா? என்று கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீரையன் மகன் முருகேசனுக்கு தகவல் கொடுக்க அவர் சம்பவ இடத்திற்கு வந்து தனது தந்தையை அழைத்து சென்றார்.

    வீட்டுக்கு சென்றவுடன் வீரையன் சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே அவரை பரிசோதித்த டாக்டர்கள் வீரையன் இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து தகவல் அறிந்தும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது சாவிற்கு நீதி கிடைக்கும் வரை பிணத்தை வாங்க மாட்டோம் என்றும், மரணத்திற்கு காரணமான கலால் கவால்துறை தலைமை காவலர் குணசீலன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கோரிக்கை வைத்து பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சௌகான், வட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

    • தண்ணீர் என நினைத்து பேட்டரி வாட்டரில் மதுவை கலந்து தொழிலாளி குடித்திருக்கிறார்.
    • உடல் நலம் பாதிக்கப்பட்ட மோகனன், தோப்ரன்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அரக்குளம் பகுதியை சேர்ந்தவர் மோகனன்(வயது56). கட்டிட தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று தோப்ரன்குடி என்ற இடத்தில் கட்டிட வேலைக்காக தங்கியிருந்தார்.

    அப்போது அவர், தண்ணீர் என நினைத்து பேட்டரி வாட்டரில் மதுவை கலந்து குடித்திருக்கிறார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மோகனன், தோப்ரன்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்பு மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது மரணம் குறித்து இயற்கைக்கு மாறாண மரணம் என்று போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாமல்லபுரம் நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த நடுவக்கரை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது62). மண்பானை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கஸ்தூரி. நேற்று மாலை கணவன்-மனைவி இருவரும் வியாபாரம் சம்பந்தமாக ஒரே மோட்டார் சைக்கிளில் புலியூர் நோக்கி சென்றனர்.

    திருக்கழுக்குன்றம் அருகே சென்றபோது மாமல்லபுரம் நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முனுசாமியும், அவரது மனைவி கஸ்தூரியும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே முனுசாமி பரிதாபமாக இறந்தார். கஸ்தூரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சூளையில் வேலை செய்து கொண்டிருந்த கோபால் என்பவர் மீது புகை கூண்டு விழுந்ததில், அவர் படுகாயம் அடைந்தார்.
    • பாப்பம்பாளையம் பகுதியில் சூறாவளி காற்றில் சுமார் 8-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விட்டது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையம் பகுதியில் மோகன் என்பவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுவுடன் மழை பெய்தது.

    இந்த சூறாவளி காற்றில் செங்கல் சூளையின் புகை கூண்டு திடீரென உடைந்து விழுந்தது. அப்போது சூளையில் வேலை செய்து கொண்டிருந்த கோபால் (55) என்பவர் மீது புகை கூண்டு விழுந்ததில், அவர் படுகாயம் அடைந்தார்.

    ஆபத்தான நிலையில் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    மேலும் பாப்பம்பாளையம் பகுதியில் சூறாவளி காற்றில் சுமார் 8-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விட்டது. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • விகிதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருத்தணி:

    திருத்தணி அடுத்த வி.சி. ஆர். கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது30). கட்டிட தொழிலாளி. இவரது மகள் விகிதா(7). கடந்த வாரம் பாலாஜி குடும்பத்துடன் குடிசை வீட்டில் தூங்கினார்.

    நள்ளிரவில் பாலாஜி, அவரது மகள் விகிதா ஆகிய 2 பேரையும் பாம்பு கடித்து சென்று விட்டது.

    இதில் உயிருக்கு போராடிய அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாலாஜி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகள் விகிதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அல்லேரிமலை கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்ற 1½ வயது குழந்தையை கடந்த 2 மாதத்திற்கு முன்பு பாம்பு கடித்தது.
    • அல்லேரி மலை பகுதியில் மேலும் ஒரு தொழிலாளி பாம்பு கடித்து பலியாகி உள்ளார்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே 100-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.

    இங்குள்ள மலை கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லை. சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து மலை கிராம மக்கள் சாலை வசதி கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களில் உடல்நலம் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கர்ப்பிணிகளை டோலிகட்டி தூக்கிச் செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

    டோலி கட்டி தூக்கி செல்லும்போது உயிரிழப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    அல்லேரிமலை கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்ற 1½ வயது குழந்தையை கடந்த 2 மாதத்திற்கு முன்பு பாம்பு கடித்தது. சாலை வசதி இல்லாததால் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்டது. இதனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.

    பிரேத பரிசோதனை முடிந்த பிறகு குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    10 கிலோமீட்டர் தூரம் வரை தாய், குழந்தையின் உடலை சுமந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் சாலை அமைக்க பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அல்லேரி மலை பகுதியில் மேலும் ஒரு தொழிலாளி பாம்பு கடித்து பலியாகி உள்ளார்.

    அல்லேரி அடுத்த ஆட்டுக்கொந்தரை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 38), கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    நேற்று இரவு சங்கர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கினார். இரவு 12 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு சங்கரின் கையை கட்டுவது போல் பிண்ணி கொண்டது.

    பாம்பின் பிடியிலிருந்து கையை எடுக்க முயன்ற போது சங்கரின் கையில் 2 முறை கடித்தது. வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார். சங்கரின் அலறல் சத்தம் கேட்டு, மனைவி மற்றும் மகள்கள் எழுந்து கட்டுவிரியன் பாம்பை அடித்துக் கொன்றனர்.

    இது குறித்து அந்த கிராமத்தினர் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவ குழுவினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர்.

    ஆம்புலன்சுடன் மருத்துவ குழுவினர் அல்லேரியில் வந்து தயார் நிலையில் காத்திருந்தனர்.

    ஆட்டு கொந்தரை மலை கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அல்லேரிக்கு பாம்பு கடித்த சங்கரை அந்த கிராமத்தினர் டோலி கட்டி தூக்கி வந்தனர்.

    ஆனால் வரும் வழியிலேயே சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஆம்புலன்சுடன் காத்திருந்த மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து கிராம மக்கள் இறந்துபோன சங்கரின் உடலை தங்கள் கிராமத்திற்கு மீண்டும் திருப்பி எடுத்துச் சென்றனர்.

    சாலை வசதி இருந்திருந்தால் நாங்கள் சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றிருப்போம். 3 கிலோமீட்டர் நடந்து தூக்கி வந்ததால் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்பட்டது. எனவே அல்லேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென மலை கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மலை கிராமத்தில் பாம்பு கடித்து அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • மருத்துவமனை விரிவாக்கம் தொடர்பான வேலையை முருகன் செய்து கொண்டிருந்தார்.
    • சுமார் 6 அடி உயரம் கொண்ட மற்றொரு சுவர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் இடிந்து விழுந்தது.

    சிங்கை:

    நெல்லை மாவட்டம் அம்பை முடப்பாலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் முருகன்(வயது 35). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று அம்பை அம்மையப்பர் கோவில் சன்னதி தெருவில் உள்ள தனியார் பல் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற கட்டுமான பணிக்காக முருகன் சென்று இருந்தார். மருத்துவமனை விரிவாக்கம் தொடர்பான வேலையை அவர் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அருகில் இருந்த சுமார் 6 அடி உயரம் கொண்ட மற்றொரு சுவர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அதன் அருகே வேலை பார்த்துக்கொண்டிருந்த முருகனின் இடுப்பு பகுதியில் சுவர் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை, சக தொழிலாளர்கள் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் மருத்து வமனை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×