என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவில் நடந்த பட்டாசு வெடி விபத்தில் உடல் கருகிய தொழிலாளி பலி
- பட்டாசு ஒன்றை எடுத்து வெடித்த போது, அருகில் கட்டி வைத்திருந்த பட்டாசு மீது தீப்பொறி விழுந்தது.
- சாதிக்அலி மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலி்ல் ஜாத்திரை திருவிழா கடந்த வாரம் தொடங்கியது.
இதில் கடந்த 2-ந்தேதி மாரியம்மனுக்கு அலங்காரம் செய்து வீதி உலா நடைபெற்றது. அப்போது வான வேடிக்கை நடத்துவதற்காக மப்பேடு அடுத்த பேரம்பாக்கத்தில் இருந்து பட்டாசு தயாரிப்பு உரிமையாளர் சாதிக் அலி (36) மற்றும் ஊழியர் சஞ்சீவி ஆகியோர் ஏராளமான பட்டாசுகளை காலியான இடத்தில் வைத்திருந்தனர்.
அப்போது அதில் இருந்த பட்டாசு ஒன்றை எடுத்து வெடித்த போது, அருகில் கட்டி வைத்திருந்த பட்டாசு மீது தீப்பொறி விழுந்தது. இதில் அங்கிருந்த அனைத்து பட்டாசுகளும் வெடித்து சிதறியது. இதனால் அருகில் இருந்த பட்டாசு தயாரிப்பு உரிமையாளர் சாதிக் அலிக்கு இடது கால் சிதைந்தது. ஊழியர் சஞ்சீவி உடல் முழுவதும் கருகினார்.
அவர்கள் 2 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் சாதிக்அலி மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சாதிக்அலி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சஞ்சீவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






