search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ"

    • பெரம்பலூர் அருகே ஓடும் லாரியில் திடீரென தீப்பற்றி எரிந்தது
    • தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்

    பெரம்பலூர்,

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர்-செங்குணம் பிரிவு சாலை அருகே நேற்று காலை ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியின் முன்பக்க என்ஜினில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை கண்ட டிரைவர் லாரியை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கினார். இதையடுத்து லாரியின் முன்பக்கம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து தீயணைப்பான் கருவியை கொண்டு, லாரியில் எரிந்த தீயை அணைக்க முயன்றார். பின்னர் தண்ணீரை ஊற்றி தீைய அணைக்க முயன்றனர். இதற்கிடையே பெரம்பலூர் தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காற்றின் வேகத்தால் தீ வேகமாக அப்பகுதி முழுவதும் பரவியது.
    • காட்டுத் தீயில் அரியவகை மூலிகைகள், தாவரங்கள் எரிந்து இருக்கலாம் என தெரிகிறது.

    சிவகிரி:

    சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் உள்ள கோம்பை ஆறு பீட்டிற்கும், சிவகிரி பீட்டிற்கும் இடையே வனப்பகுதிகளில் நேற்று அதிகாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் தீ வேகமாக அப்பகுதி முழுவதும் பரவியது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் டாக்டர் முருகனுக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

    மாவட்ட வன அலுவலர் டாக்டர் முருகன் உத்தரவின் பேரில் சிவகிரி ரேஞ்சர் மவுனிகா, வனவர்கள் அசோக்குமார், அசோக் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், தன்னார்வலர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோம்பை ஆறு பீட் பகுதியிலும், சிவகிரி பீட் பகுதியிலும் முற்றிலுமாக அணைக்கப்பட்டதாகவும், காற்றின் வேகத்தில் இரண்டிற்கும் மேலே உள்ள உள்ளார் பீட்டில் பகுதியில் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைப்பதற்கு வனத்துறையினர் 2 குழுக்களாக பிரிந்து இலை தழைகளை கொண்டு அணைத்து வருவதாகவும், இன்று வியாழக்கிழமை எரியும் தீயை முழுமையாக அணைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    காற்றின் வேகம் காரணமாக தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் போராடினர். இந்நிலையில் இன்று அதிகாலை தீ கட்டுக்குள் கொண்டு வந்தனர். காட்டுத் தீயில் அரியவகை மூலிகைகள் மற்றும் தாவரங்கள் எரிந்து இருக்கலாம் என தெரிகிறது. வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் சிவகிரி அடிவாரப் பகுதிகளில் வேளாண்மை செய்யப்பட்டுள்ள பயிர்களில் சாம்பல்கள் படிந்து காணப்படுகிறது.

    • சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (28). இவரது நண்பர் சபரி இருவரும் நேற்று காரில் ஏற்காட்டை சுற்றி பார்த்து விட்டு மாலை சேலம் திரும்பி கொண்டிருந்தனர்.
    • ஏற்காடு மலைப்பாதையின் 60 அடி பாலம் அருகே வந்தபோது காரில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினர்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (28). இவரது நண்பர் சபரி (27). இருவரும் நேற்று காரில் ஏற்காட்டை சுற்றி பார்த்து விட்டு மாலை சேலம் திரும்பி கொண்டிருந்தனர். ஏற்காடு மலைப்பாதையின் 60 அடி பாலம் அருகே வந்தபோது காரில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து சேலம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து போனது. இந்த சம்பவத்தால் ஏற்காடு மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயில் அதிகமாக இருந்தது.
    • சுமார் 30 நிமிடம் தொடர்ந்து பெய்த மழையால் தட்பவெட்ப நிலை குளிர்ச்சியாக மாறியது.

    பல்லடம்:

    பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயில் அதிகமாக இருந்தது. சில நேரங்களில் இது ஆகஸ்ட் மாதமா?, அல்லது ஏப்ரல்,மே மாதமா? என நினைக்கும் வகையில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை பல்லடம் பகுதியில் இடி,மின்னலுடன் மழை பெய்தது.இந்த நிலையில் பல்லடம் பெரியார் நகரில் உள்ள சுந்தர்ராஜ் என்பவரது வீட்டில் இருந்த தென்னை மரத்தில் இடி தாக்கியதால் தீப்பிடித்து எரிந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடம் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தென்னை மரத்தில் பற்றிய தீயை அணைத்தனர். இதனால் தென்னை மரம் தீயினால் முழுவதும் எரியாமல் தப்பியது. சுமார் 30 நிமிடம் தொடர்ந்து பெய்த மழையால் தட்பவெட்ப நிலை குளிர்ச்சியாக மாறியது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஒரு ஏக்கர் அளவிலான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
    • சம்பவ இடம் வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரைப்பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம்- மாணிக்காபுரம் ரோட்டில் உள்ள பெரியார் நகர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இறைச்சி கடைகள் உள்ளது. இதன் பின்புறம் சுமார் ஒரு ஏக்கர் அளவிலான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம ஆசாமிகள் சிகரெட் புகைத்து விட்டு குப்பைகளின் மேல் வீசிச் சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் மளமளவென பற்றிய தீ கொளுந்து விட்டு எரிந்து அந்த பகுதியில் புகை மண்டலமாக மாறியது. இதுகுறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரைப்பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அக்கம் - பக்கம் உள்ள வீடுகள் தீ விபத்தில் இருந்து தப்பியது. குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    தீவிபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடம் வந்து தீயை அணைத்த தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

    • வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் சிவக்குமார் பனியன் நிறுவனத்தில் டெய்லராக உள்ளார்.
    • தொழில் சரிவர இல்லாததால் கடந்த 2 மாதமாக வீட்டு வாடகை செலுத்தாமல் இருந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48). பனியன் நிறுவனத்தில் டெய்லராக உள்ளார். இவருடைய வீட்டில் ஆட்டோ டிரைவர் வீரமணிகண்டன் (34) என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வந்தார். தொழில் சரிவர இல்லாததால் கடந்த 2 மாதமாக வீட்டு வாடகை செலுத்தாமல் வீரமணிகண்டன் இருந்துள்ளார். இதுகுறித்து சிவக்குமார் அவரிடம் வாடகை கேட்டு சத்தம் போட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த வீரமணிகண்டன் கடந்த 1-ந் தேதி தீக்குளித்து இறந்தார்.

    இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் வீட்டு உரிமையாளர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்தநிலையில் சிவக்குமாரை தெற்கு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • தீ நகருக்குள் பரவியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன.
    • தீ விபத்து ஏற்பட்டதும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி விட்டனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே உள்ள மவுய் தீவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ நகருக்குள் பரவியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. பலர் உயிருக்கு பயந்து கடலில் குதித்தனர்.

    இந்த காட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 67 ஆக அதிகரித்து உள்ளது. பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. தீ விபத்து ஏற்பட்டதும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி விட்டனர்.

    தற்போது தீ அணைக்கபட்டதால் பொதுமக்கள் ஊருக்கு திரும்பினார்கள். அவர்கள் வீடுகள் தீயில் எரிந்து எலும்புகூடாக காட்சி அளிப்பதை பார்த்து கண்ணீர் விட்டு கதறினார்கள். இந்த தீ விபத்து காரணமாக வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்து விட்டதால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • விசேஷ நிகழ்ச்சிக்கு சமைத்த போது சம்பவம்
    • எதிர்பாராத விதமாக அவரது கைலியில் தீப்பிடித்தது.

    குன்னம் 

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா பண்டாரவடை திருமணஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மக்கள் பாஷா (வயது 45).சமையல் கலைஞர். இவர் ஆர்டரின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடி காடு ஜமாலியா நகரில் உள்ள ஒரு வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சமையல் செய்யச் சென்றார். அங்கு சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது கைலியில் தீப்பிடித்தது.

    பின்னர் மளமளவென உடல் முழுவதும் பரவியது. சக தொழிலாளர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் மக் புல் பாஷா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • எரிவாரி சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு அதில் நெருப்பு பற்றியது
    • அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க போராடினர்

    மணப்பாறை

    திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த வெள்ளாளபட்டி அருகே உள்ள பிச்சைரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது கான்கிரிட் கட்டிடத்தின் ஒரு பகுதியில் குடிசை அமைத்து அதில் சமையல் செய்து வந்துள்ளனர். நேற்று மாலை அவரது மனைவி சமையல் செய்து கொண்டிருந்த போது எரிவாரி சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு அதில் நெருப்பு பற்றியை பார்த்ததும் அனைவரும் வீட்டை விட்டு வெளியில் ஓடி விட்டனர். சிறிது நேரத்தில் சிலிண்டர் வெடித்து நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க போராடினர். ஆனாலும் சிறிது நேரத்தில் குடிசை முழுவதுமாக எரிந்ததுடன் அதில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது. சிலிண்டர் வெடித்ததில் வீட்டிலும் சேதாரம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பலர் காட்டுத்தீயில் சிக்கி உடல் கருகினார்கள்.
    • காட்டுத்தீயால் இந்த தீவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயில் 8 தீவு நகரங்கள் உள்ளன. இங்கு 2-வது பெரிய நகரமாக மவுய் தீவு விளங்குகிறது. இந்த தீவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மவுய் தீவில் காட்டுத் தீ ஏற்பட்டது. படிப்படியாக இந்த தீ நகர் புற பகுதிகளுக்கு பரவியது. இதனால் வீடுகள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் தீ பற்றி எரிந்தது. எங்கு பார்த்தாலும் தீ பிழம்பாக காட்சி அளித்தது. வானுயர எழுந்த கரும் புகையால் மவுய் நகரமே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    இதையடுத்து அந்த நகரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். பலர் காட்டுத்தீயில் சிக்கி உடல் கருகினார்கள்.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து அமெரிக்க விமான படை மற்றும் கடற்படை வீரர்களும் தீயை அணைக்க போராடினார்கள். காட்டுத்தீ என்பதால் தீ கட்டுக்குள் அடங்க மறுத்தது. இருந்த போதிலும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    தீயில் இருந்து தப்பிக்க பலர் பசிபிக் பெருங்கடலில் தீக்காயங்களுடன் குதித்தனர். இதில் சிலர் பலியானார்கள். இதனால் இந்த காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 53 ஆக உயர்ந்துள்ளது. ஏராளமானவர்கள் தீக்காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மவுய் தீவில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. செல்போன் சேவையும் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.270-க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் தீயில் எரிந்து சேதமானது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

    காட்டுத்தீயால் இந்த தீவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர். அவர்கள் நகரை விட்டு வெளியேறி விமான நிலையத்திற்கு சென்றனர். ஆனால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் விமான நிலையத்தில் குடும்பத்துடன் தவித்து வருகின்றனர். அங்கு அவசர நிலை பிரகனப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    • தீ விபத்தால் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளது.
    • மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது தீ விபத்து ஏற்பட்டு விடுகிறது.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடிக்கடி தீ பற்றி எரிவது வாடிக்கையாகி விட்டது.

    இந்நிலையில் கடையநல்லூரில் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ள கிருஷ்ணா புரம் வனப்பகுதியில் திடீரென பயங்கர காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளது. இந்த தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த தீ விபத்து குறித்து வனத்துறையினர் கூறுகையில், கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் அங்குள்ள மரங்களில் உள்ள இலைகள் எல்லாம் உதிர்ந்து காய்ந்து கிடக்கின்றது.

    காற்றின் வேகத்தால் அந்த மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது தீ விபத்து ஏற்பட்டு விடுகிறது. தற்போதும் அதேபோல் மலையில் தீ விபத்து ஏற்பட்டு, மளமளவென பரவி வருகிறது.

    அதனை அணைக்கும் முயற்சியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

    • வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின.
    • தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஏரியூர்:

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சிகரலஅள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் கோபால். இவரது மனைவி விஜயா (வயது55). இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் வெளியூரில் கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று விஜயா மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏரி வேலைக்கு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் அவரது வீட்டில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதைக் கண்ட பொதுமக்கள் வீட்டின் கதவை உடைத்து தீயை அணைக்க முற்பட்டுள்ளனர்.

    இருந்த போதும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின.

    மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூ. 7 லட்சம், 2 பவுன் தங்க நகை, வீட்டின் பட்டா , மற்றும் அவரது பேரக் குழந்தையின் சான்றிதழ்கள் எரிந்த நிலையில் இருந்தன. இதனை வீட்டிற்கு வந்து பார்த்த விஜயா கதறி அழுதார்.

    தீ விபத்து குறித்து, விஜயாவின் வீட்டின் அருகே தாழ்வான மின் கம்பி செல்கிறது. மின் கசிவின் காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என தெரிகிறது.

    கிராமங்களில் குடியிருப்பு பகுதியில் உள்ள தாழ்வான மின் கம்பிகளை அப்புறப்படுத்தி சீர்செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    இந்த தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×