search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடு தீ விபத்து"

    • வீடு எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
    • மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்து மற்ற பொருட்களுக்கும் தீ பரவியது.

    புதுச்சேரி:

    சேதராப்பட்டு திடீர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் புதுவை காவல் துறையில் சி.பி.சி.ஐ.டி பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று இரவு ராஜேஷ் தனது வீட்டின் முதல் தளத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென அவரது அறையில் தீப்பிடித்து எரிந்து அறையில் இருந்த பிரிட்ஜ் பீரோ மற்றும் மரத்திலான மேசை நாற்காலி, உடைகள் உள்ளிட்ட பொருள்கள் மளமளவென எரிந்தது.

    ஆழ்ந்த தூக்கத்திலிருந்து அவர்களால் வீடு எரிந்தது தெரியவில்லை. புகை மூட்டத்தில் அனைவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்ட பின்னரே வீடு தீ பிடித்து எரிந்தது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வெளியேற முயற்சித்தனர் ஆனால் புகை மூட்டத்தால் அவர்களால் வெளியேற முடியவில்லை.

    வீடு எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே தீ அணைக்கப்பட்டது.

    புகை மூட்டத்தில் மூச்சு திணறி சிக்கிக் கொண்ட போலீசாரின் குடும்பத்தினரை உறவினர்கள் பத்திரமாக மீட்டனர்.

    சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் வந்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்து மற்ற பொருட்களுக்கும் தீ பரவியது.

    இந்த சம்பவத்தால் சேதராப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • சிறிது நேரத்தில் அவர் வீட்டில் இருந்து தீ மளமளவென பிடித்து எரிந்தது.
    • தீ விபத்து நடந்த போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சாலைப்புதூர் பகுதியில் குடியிருப்பவர் கிருஷ்ணன் (70). இவர் திருவிழா பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு கிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று விட்டார்.

    அப்போது அவர் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் அவர் வீட்டில் இருந்து தீ மளமளவென பிடித்து எரிந்தது.

    கிருஷ்ணன் வீட்டில் தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் கொடுமுடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    எனினும் இந்த விபத்தில் வீடு தீப்பிடித்து சேதம் அடைந்தது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்க பணம் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இது தவிர வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள், வீட்டு சமையல் அறையில் இருந்த சாமான் பாத்திரங்கள் வீட்டிலிருந்த கட்டில், பீரோக்கள் எரிந்து சேதம் அடைந்தன.

    நல்ல வேலையாக தீ விபத்து நடந்த போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

    • தீக்காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை:           

    உளுந்தூர்பேட்டை அருகே  உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் திரவியம், இரண்டு மகள்கள் ரியாஷினி, விஜயகுமாரி, ஆகியோர் தீயில் கருகி பலியாகினர்.

    காப்பாற்ற முயன்ற தாத்தா மூச்சுத்திணறல் மயங்கி விழுந்து பலியானார். தீக்காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின.
    • தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஏரியூர்:

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சிகரலஅள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் கோபால். இவரது மனைவி விஜயா (வயது55). இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் வெளியூரில் கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று விஜயா மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏரி வேலைக்கு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் அவரது வீட்டில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதைக் கண்ட பொதுமக்கள் வீட்டின் கதவை உடைத்து தீயை அணைக்க முற்பட்டுள்ளனர்.

    இருந்த போதும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின.

    மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூ. 7 லட்சம், 2 பவுன் தங்க நகை, வீட்டின் பட்டா , மற்றும் அவரது பேரக் குழந்தையின் சான்றிதழ்கள் எரிந்த நிலையில் இருந்தன. இதனை வீட்டிற்கு வந்து பார்த்த விஜயா கதறி அழுதார்.

    தீ விபத்து குறித்து, விஜயாவின் வீட்டின் அருகே தாழ்வான மின் கம்பி செல்கிறது. மின் கசிவின் காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என தெரிகிறது.

    கிராமங்களில் குடியிருப்பு பகுதியில் உள்ள தாழ்வான மின் கம்பிகளை அப்புறப்படுத்தி சீர்செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    இந்த தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • படுக்கை அறை முழுவதும் தீ பரவத் தொடங்கியது.
    • விஜய லட்சுமி சுதாரித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் படுக்கையறையில் இருந்து வெளியில் ஓடி வந்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் சுபாஷ் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கணேஷ் குமார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 31).

    இவர் நேற்று இரவு வழக்கம் போல தனது வேலைகளை முடித்துவிட்டு தனது மகன்கள் ஸ்ரீ பிரணவ்(11),ஸ்ரீ ஆரவ்(4) ஆகியோருடன் படுக்கை அறையில் உறங்கி விட்டார்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் படுக்கை அறையில் இருந்த ஏ.சி.யில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்துள்ளது. இதனால் விஜயலட்சுமி திடுக்கிட்டு கண் விழித்து பார்த்தார். அப்போது படுக்கை அறை முழுவதும் தீ பரவத் தொடங்கியது. பின்னர் அவர் படுத்திருந்த கட்டிலுக்கும் தீ பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய லட்சுமி சுதாரித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் படுக்கையறையில் இருந்து வெளியில் ஓடி வந்துள்ளார்.

    மேலும் இது குறித்து முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் தெர்மல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ் தலைமையில் ரவிக்குமார் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் விஜயலட்சுமி வீட்டில் படுக்கை அறையில் பற்றிய தீ சமையலறை வரை பரவி எரிந்தது. அதனை மேலும் பரவாமல் தீயணைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டு உடனடியாக அணைத்தனர். சாமர்த்தியமாக செயல்பட்டதால் விஜயலட்சுமியை தனது குழந்கதைளையும் தன்னையும் காப்பாற்றிக் கொண்டார்.

    விரைந்து செயல்பட்டு தீயை அணைத்த தெர்மல் நகர் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கும், போலீசாருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • சோழவரம் அருகே விஜயநல்லூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்குன்றம்:

    சோழவரம் அருகே விஜயநல்லூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இதற்காக அவர்களுக்கு அங்கு ஓலை கொட்டகை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த ஓலை கொட்டகையில் இன்று காலை திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென குடிசை முழுவதும் பற்றி எரிந்தது.

    தீ விபத்து ஏற்பட்ட போது கொட்டகையில் வடமாநில தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் இந்த தீ அருகே இருந்த பழைய பிளாஸ்டிக் மற்றும் மரக்கட்டைகள் குடோனுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஆனது. தகவல் அறிந்ததும் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் குடோன்களில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமானது.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×