search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹவாய் காட்டுத்தீ"

    • ஹவாய் காட்டுத்தீ விபத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது.
    • ஹவாய் மாகாண தீவுக்கு அதிபர் ஜோ பைடன் விரைவில் செல்கிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நிர்வாகத்திற்கு கீழ் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவு மாகாணம் வருகிறது. உள்ளூர் மக்கள்தொகையை தவிர்த்து ஏராளமான வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவுக்காக அங்கு செல்வர்.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஹவாய் தீவின் மேற்கே உள்ள மவுய் நகரில் காட்டுத்தீ பிடித்தது. மளமளவென தீப்பற்றி எரிந்த நிலையில சூறாவளி காற்று வீசியதன் காரணமாக முக்கிய நகரங்களான ஹலைனா, குலா உள்ளிட்ட பகுதிகளுக்கு காட்டுத்தீ பரவியது. இதனால் பெரும்பாலான வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் தீயில் கருகி நாசமாகின.

    வீடுகள், செல்போன் கோபுரங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாகி நாசமாகின. சேத மதிப்பு 3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்தக் காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 111 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 1000-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். தீயில் கருகி உயிரிழந்தோரில் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஹலைனா நகரை சேர்ந்த அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மீட்புப் பணிகளில் உதவும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை பெறும் பணியும் நடக்கிறது. ஆள் பற்றாக்குறையால் அமெரிக்காவில் இருந்து ராணுவம் களம் இறங்கியது. இந்நிலையில் ஹவாய் தீவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செல்லவுள்ளார். காட்டுத்தீ பரவியுள்ள பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

    • காட்டுத்தீ நகரத்திற்குள் பரவியதால் 90-க்கும் மேற்பட்டோர் பலி
    • ஏராளமானோரை காணவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது

    அமெரிக்காவின் ஹவாயில் உள்ள தீவுக்கூட்டங்களில் 2-வது மிகப்பெரிய தீவு மவுய். இந்த தீவில் கடந்த சில தினங்களுக்கு முன் காட்டுத்தீ ஏற்பட்டது. காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், காற்று வேகமாக வீசியதால் காட்டுத்தீ கட்டுக்குள் வராமல் நகரக்குள் பரவியது. இதனால் 90-க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி உயிரிழந்தனர். 1000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

    இந்த காட்டுத்தீயால் மவுய் தீவு கடும் சேதம் அடைந்துள்ளது. ஒரு நகரமே தீக்கிரையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நானும் எனது மனைவியும் (ஜில் பைடன்) ஹவாய் செல்ல இருக்கிறோம். அங்கு செல்லும் நாங்கள் மவுய் காட்டுத்தீ குறித்து ஆய்வு செய்ய இருக்கிறோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    அங்கு செல்ல இருக்கும் ஜோ பைடன் எங்களால் மீட்புப்பணி, சுத்தப்படுத்தும் பணிக்கு தடை ஏற்படுத்த விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

    அமெரிக்கா ஹவாய் தீவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என கவர்னர் ஜோஷ் கிரீனிடம் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்த ஜோ பைடன், ஹவாய் மக்களுக்கு தேவைப்படும் ஒவ்வொன்றும், அவர்களுக்கு சென்றடையும் என்றார்.

    ஜோ பைடன் சூறாவளி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். ஆனால், ஒஹியோவில் ரெயில் கவிழ்ந்து நச்சு ரசாயனம் வெளியேறியது. அந்த இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை.

    மவுய் தீவில் காட்டுத்தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் இன்னும முழுயாக கண்டறியவில்லை. விசாரணை நடத்தி வருகிறார்கள். பழமையான லஹைனாவில் ஏற்பட்ட தீ 85 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது.
    • பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே உள்ள மவுய் தீவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ நகருக்குள் பரவியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. பலர் உயிருக்கு பயந்து கடலில் குதித்தனர்.

    இந்நிலையில், காட்டுத் தீயில் சிக்கி உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 93 ஆக அதிகரித்து உள்ளது. பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பேரழிவுகரமான காட்டுத்தீயைக் கையாள்வது குறித்து விசாரணையைத் தொடங்குவதாக ஹவாயின் தலைமைச் சட்ட அதிகாரி தெரிவித்தார்.

    லஹைனாவில் வசிப்பவர்கள் முதன்முறையாக நகரத்திற்குள் அனுமதிக்கப்பட்டதால் இந்த இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்தது தெரிய வந்துள்ளது.

    • தீ நகருக்குள் பரவியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன.
    • தீ விபத்து ஏற்பட்டதும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி விட்டனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே உள்ள மவுய் தீவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ நகருக்குள் பரவியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. பலர் உயிருக்கு பயந்து கடலில் குதித்தனர்.

    இந்த காட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 67 ஆக அதிகரித்து உள்ளது. பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. தீ விபத்து ஏற்பட்டதும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி விட்டனர்.

    தற்போது தீ அணைக்கபட்டதால் பொதுமக்கள் ஊருக்கு திரும்பினார்கள். அவர்கள் வீடுகள் தீயில் எரிந்து எலும்புகூடாக காட்சி அளிப்பதை பார்த்து கண்ணீர் விட்டு கதறினார்கள். இந்த தீ விபத்து காரணமாக வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்து விட்டதால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • பலர் காட்டுத்தீயில் சிக்கி உடல் கருகினார்கள்.
    • காட்டுத்தீயால் இந்த தீவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயில் 8 தீவு நகரங்கள் உள்ளன. இங்கு 2-வது பெரிய நகரமாக மவுய் தீவு விளங்குகிறது. இந்த தீவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மவுய் தீவில் காட்டுத் தீ ஏற்பட்டது. படிப்படியாக இந்த தீ நகர் புற பகுதிகளுக்கு பரவியது. இதனால் வீடுகள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் தீ பற்றி எரிந்தது. எங்கு பார்த்தாலும் தீ பிழம்பாக காட்சி அளித்தது. வானுயர எழுந்த கரும் புகையால் மவுய் நகரமே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    இதையடுத்து அந்த நகரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். பலர் காட்டுத்தீயில் சிக்கி உடல் கருகினார்கள்.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து அமெரிக்க விமான படை மற்றும் கடற்படை வீரர்களும் தீயை அணைக்க போராடினார்கள். காட்டுத்தீ என்பதால் தீ கட்டுக்குள் அடங்க மறுத்தது. இருந்த போதிலும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    தீயில் இருந்து தப்பிக்க பலர் பசிபிக் பெருங்கடலில் தீக்காயங்களுடன் குதித்தனர். இதில் சிலர் பலியானார்கள். இதனால் இந்த காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 53 ஆக உயர்ந்துள்ளது. ஏராளமானவர்கள் தீக்காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மவுய் தீவில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. செல்போன் சேவையும் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.270-க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் தீயில் எரிந்து சேதமானது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

    காட்டுத்தீயால் இந்த தீவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர். அவர்கள் நகரை விட்டு வெளியேறி விமான நிலையத்திற்கு சென்றனர். ஆனால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் விமான நிலையத்தில் குடும்பத்துடன் தவித்து வருகின்றனர். அங்கு அவசர நிலை பிரகனப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    • ஹவாய் காட்டுத் தீயில் சிக்கி 36 பேர் பலியாகி உள்ளனர்.
    • ஏராளமான வீடுகள், வணிக வளாகங்கள் எரிந்து சாம்பலானது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்று மவுயி தீவு. இங்கு பயங்கர காட்டுத் தீ பரவியுள்ளது. பிரபல சுற்றுலா நகரமான அங்கு லஹைனா பகுதியில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் 12,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேறினர். அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க சிலர் கடலில் குதித்தனர். வேகமாக பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 36 பேர் பலியாகி உள்ளனர். பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளது.

    இந்நிலையில், ஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை பெரிய பேரழிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

    காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளுக்கு ராணுவத்தை அனுப்ப அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

    • அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ளது மவுயி தீவு.
    • இந்தத் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் சிக்கி 6 பேர் இறந்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ளது மவுயி தீவு. இந்தத் தீவில் உள்ள காடுகளில் திடீரென தீ பிடித்தது.

    வேகமாக வீசி வரும் காற்றினால் வனப்பகுதியில் தீ வேகமாக பரவியது. தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    லஹைனா பகுதியிலும் காட்டுத் தீ பரவியதால் வானுயர கரும்புகை எழுந்தது. அங்கு வசிக்கும் மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்களை பத்திரமாக மீட்க கடலோர காவல்படை ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன.

    இந்நிலையில், இந்த காட்டுத்தீயில் சிக்கி 6 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் என மவுயி தீவு மேயர் ரிச்சர்ட் பைசன் தெரிவித்துள்ளார்.

    ×