search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிபர் ஜோ பைடன்"

    • அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
    • ஓஹியோ மாகாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

    இதற்கிடையே, அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்ட் டிரம்ப் தொடங்கியுள்ளார்.

    இந்நிலையில் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நவம்பர் 5-ம் தேதியை (அதிபர் தேர்தல்) நினைவில் வைத்து கொள்ளுங்கள். அது நமது நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். என்னை மீண்டும் அதிபராக தேர்வு செய்யவில்லை என்றால் ரத்தக்களறி ஏற்படும் என தெரிவித்தார்.

    மெக்சிகோவில் கார்களை தயாரித்து அமெரிக்கர்களுக்கு விற்கும் சீனத் திட்டத்தை விமர்சித்தபோது அவர் இவ்வாறு கூறினார். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தக் கார்களை அவர்களால் விற்க முடியாது. நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், அது ஒட்டுமொத்த ரத்தக்களறியாக இருக்கும் என்றார்.

    இதுகுறித்து அதிபர் ஜோ பைடன் கூறுகையில், அவர் மற்றொரு ஜனவரி 6-ம் தேதியை விரும்புகிறார். அமெரிக்க மக்கள் இந்த நவம்பரில் அவருக்கு மற்றொரு தேர்தல் தோல்வியைக் கொடுக்கப் போகிறார்கள். ஏனெனில் மக்கள் அவரது பயங்கரவாதம், வன்முறை மீதான அவரது பாசம் மற்றும் பழிவாங்கும் தாகம் ஆகியவற்றை நிராகரித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

    • அமெரிக்க ராணுவம் வான்வழியாக உதவிப் பொருட்களை காசா மக்களுக்கு வழங்கியது.
    • முதல்கட்டமாக 38,000-க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்களை அனுப்பி வைத்தது.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. அங்குள்ள பொதுமக்கள் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். வடக்கு காசாவில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இஸ்ரேல் ராணுவம் அனுமதித்தால் மட்டுமே மனிதாபிமான அடிப்படையிலான உதவிப் பொருட்கள் காசா மக்களுக்கு சென்றடையும் நிலை உள்ளது. காசாவின் மேற்கு பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்க இஸ்ரேல் ராணுவம் சம்மதம் தெரிவித்தது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தி வந்தன.

    இதற்கிடையே, காசாவில் அமெரிக்க ராணுவம் வான்வழியாக உதவிப் பொருட்களை காசா மக்களுக்கு வழங்கும். ஜோர்டான் மற்றும் சில நாடுகளுடன் இணைந்து இந்த பணியில் ஈடுபட உள்ளோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்கா ராணுவம் வான் வழியாக காசா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது. முதல்கட்டமாக 38,000-க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்களை அனுப்பியது.

    • இஸ்ரேல், அமாஸ் அமைப்பினர் இடையிலான போரில் காசா மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
    • காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவர அமெரிக்கா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் காசாவில் உள்ள மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானோர் எண்ணிக்கை 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச்சென்ற இஸ்ரேல் பிணைக்கைதிகளை மீட்க 7 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்பின் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, காசாவில் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் முயற்சித்து வருகின்றன.

    இதில் ஹமாசின் கோரிக்கைகளை ஏற்க இஸ்ரேல் மறுத்தது. இதனால் போர் நிறுத்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது.

    இந்நிலையில், காசாவில் மார்ச் 4-ம் தேதிக்குள் போர் நிறுத்தம் ஏற்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதில் நெருக்கமாக இருக்கிறோம் என்று எனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னிடம் தெரிவித்தார். அடுத்த திங்கட்கிழமைக்குள் (மார்ச் 4-ம் தேதி) போர் நிறுத்தம் ஏற்படும் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டார்.

    • ரஷியாவில் எதிர்க்கட்சி தலைவர் மரணம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • அதிபர் புதினுக்கு அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    வாஷிங்டன்:

    ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட் அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 19 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2021-ம் ஆண்டு முதல் அவர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

    இதற்கிடையே, நேற்று அவர் திடீரென சிறையிலேயே மரணமடைந்தார். அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

    நவால்னி மர்மமான முறையில் சிறையில் மரணம் அடைந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அலெக்சி நவால்னி மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், ரஷிய அதிபர் புதினின் ஊழல்கள், மோசமான செயல்களுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்பட்ட நவால்னியின் மரணத்தில் சந்தேகம் வலுத்துவருகிறது. இதற்கு புதின் தான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும் என தெரிவித்தார்.

    உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ள அதிபர் புதினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    • அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது.
    • அயோவா மாகாணத்தில் நடந்த உள்கட்சி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் தேர்வில் முன்னாள் அதிபர் டிரம்ப், நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும் காகஸ் என்ற மாகாண அளவிலான உள்கட்சி தேர்தல் தொடங்கியது. இத்தேர்தல் பாரம்பரியமாக அயோவா மாகாணத்தில் இருந்து தொடங்கப்பட்டது.

    அந்த மாகாணத்தில் குடியரசு கட்சியின் பிரதிநிதிகள் வாக்களித்தனர். இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. 9 மாவட்டங்களின் ஆரம்ப கட்ட முடிவுகளில் டிரம்ப் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் அயோவா மாகாணத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் வேட்பாளர் தேர்வில் முன்னிலையில் உள்ளார்.

    • அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் சிக்கியிருக்கிறார்.
    • இந்த வழக்கு தொடர்பாக 9 குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பலமுனைப் போட்டிகளை எதிர்கொண்டுவருகிறார்.

    இந்நிலையில், அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் சிக்கியிருக்கிறார்.

    இதுதொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 56 பக்க குற்றப் பத்திரிகையில், ஹண்டர் பைடன் 2016 முதல் 2020 வரை 7 மில்லியனுக்கும் அதிகமான டாலர் சம்பாதித்திருக்கிறார். இந்தப் பணத்தைப் எஸ்கார்ட், தோழிகள், சொகுசு ஹோட்டல்கள், கவர்ச்சியான கார்கள், ஆடைகள் என ஆடம்பரமாகச் செலவழித்திருக்கிறார். ஆனால், 2016 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் செலுத்தவேண்டிய குறைந்தபட்ச 1.4 மில்லியன் டாலர் வரியைச் செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக 9 குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.

    அதிபர் தேர்தலுக்காக தயாராகி வரும் நிலையில், ஹண்டரின் வரி ஏய்ப்பு தொடர்பான குற்றச்சாட்டு ஜோ பைடனுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே, 2018-ல் துப்பாக்கி வாங்கியது தொடர்பாக ஹண்டர் மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்துப் பேசினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நடந்த ஆபெல் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் சான்பிரான்சிஸ்கோ நகருக்குச் சென்றார்.

    அதன்பின் கலிபோர்னியா சென்ற அதிபர் ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றார். இருவரும் தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் இரு நாட்டு ராணுவ உறவு, ரஷியா-உக்ரைன் போர், தைவான் விவகாரம் உள்ளிட்டவை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

    வர்த்தக போக்குவரத்து, பொருளாதார தடை, அமெரிக்க வான்வெளி பகுதியில் சீன உளவு பலூன் பறந்த விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாக பல்வேறு பிரச்சினைகள் இருந்து வரும் சூழ்நிலையில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    இந்நிலையில், இந்தச் சந்திப்புக்கு பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், சீன அதிபரை இன்னும் சர்வாதிகாரியாகத்தான் நீங்கள் கருதுகிறீர்களா? என செய்தியாளர்கள் கேட்டனர்.

    இதற்கு பதிலளித்த அதிபர் ஜோ பைடன், ஜி ஜின்பிங் கம்யூனிச நாட்டை வழிநடத்தும் ஒரு சர்வாதிகாரி. சீன அரசாங்கம் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டது என தெரிவித்தார்.

    • காசா மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டனர்.
    • காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பயங்கரவாதிகளே காரணம் என்றார் இஸ்ரேல் பிரதமர்.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    நேற்றைய 11-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    இதற்கிடையே, இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசா மீது நேற்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் காசா நகரில் உள்ள அல்-அக்லி மருத்துவமனையில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

    காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் வீசிய ராக்கெட் தாக்குதலே காரணம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேதன்யாகு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அல் அக்லி மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பயங்கரவாதிகளே காரணம். அவர்கள் வீசிய ராக்கெட்கள் குறிதவறி மருத்துவமனை மீது விழுந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில், காசா மருத்துவமனை தாக்குதலில் பலியானோர் குடும்பத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஜோ பைடன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், காசாவில் உள்ள அல்-அக்லி அரபு மருத்துவமனையில் ஏற்பட்ட வெடிவிபத்து மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பயங்கரமான உயிர்ச் சேதத்தால் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். இந்த செய்தியைக் கேட்டவுடன் ஜோர்டான் மன்னர் 2-ம் அப்துல்லா மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஆகியோரிடம் பேசினேன். என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களைத் தொடர்ந்து சேகரிக்கும்படி தேசிய பாதுகாப்புக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளேன். வெடிவிபத்தில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் பிற அப்பாவிகளுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
    • இஸ்ரேல், பாலஸ்தீன போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் என்றார்.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    நேற்றைய 9-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து ஐநூறைக் கடந்துள்ளது.

    காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் ராணுவம் எந்த நேரத்திலும் மும்முனை தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் இதை தடுத்து நிறுத்தவேண்டும் என்பதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் நேற்று இரவு இஸ்ரேல் பிரதமருடன் பேச்சு நடத்தினார்.

    இந்நிலையில், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இஸ்ரேல் போர் தொடர்பாக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    இஸ்ரேல் போரில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும். இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. காசாவில் உள்ள அப்பாவி மக்கள் குடிதண்ணீர், மருந்து இல்லாமல் தவிப்பது தெரிய வந்துள்ளது.

    மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு இஸ்ரேல் அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். உடனடியாக காசா மக்களுக்கு குடிதண்ணீரை வழங்கும்படி இஸ்ரேலுக்கு நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

    ஆயுதம் ஏந்திப் போராடும் ஹமாஸ் படையினரை முழுமையாக ஒடுக்கவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஹமாஸ் படையினர் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும். அதற்காக காசாவை ஆக்கிரமித்து அந்தப் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று இஸ்ரேல் நினைப்பது சரியல்ல.

    இஸ்ரேலில் தரைவழி தாக்குதல் மிகப்பெரிய தவறாக முடிந்துவிடும். அந்த தவறை இஸ்ரேல் செய்யாது என்று நம்புகிறேன். காசா பகுதி முழுக்க முழுக்க பாலஸ்தீன அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும். அதில் அமெரிக்கா தெளிவான கொள்கை முடிவுடன் இருக்கிறது.

    காசாவில் உள்ள அப்பாவி மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவர்கள் விரும்பினால் அருகில் உள்ள நாடுகளுக்கு இடம்பெயர உதவி செய்யவேண்டும். காசா வடக்கு பகுதி மக்கள் எகிப்து நோக்கிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

    அவர்களை எகிப்து நாடு அரவணைத்து உதவவேண்டும். இதற்காக நாங்கள் எகிப்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம். காசாவில் உள்ள பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்ந்து உறுதி செய்யப்பட வேண்டும்.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையே ஏற்பட்டுள்ள போரை தொடர்ந்து அமெரிக்கா அந்தப் பகுதிக்கு மேலும் ஒரு கப்பலை அனுப்பி இருக்கிறது. இந்தப் போரில் இதுவரை 30 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

    என்றாலும் இந்தப் போரில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட விரும்பவில்லை. அதற்கான காரணமும் இல்லை. இஸ்ரேலுக்கு கூடுதல் உதவிகள் செய்ய அமெரிக்காவில் கோரிக்கை எழுந்துள்ளது. அதுபற்றி பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்கா சென்றடைந்தார்.
    • வெள்ளை மாளிகையில் அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீதான ரஷியா போர் தொடுத்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். அதேபோல், அதிபர் ஜோ பைடன் உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.

    இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செப்டம்பர் 21-ம் தேதி அமெரிக்கா வருகிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வெள்ளை மாளிகை வந்தார். அவரை அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.

    இந்தச் சந்திப்பின்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் அளிப்பது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

    உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு அதிபர் ஜோ பைடன், அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா வருகிறார்.
    • வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீதான ரஷியா போர் தொடுத்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.

    இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். அதேபோல், அதிபர் ஜோ பைடன் உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா வருகிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் கூறுகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செப்டம்பர் 21ம் தேதி அமெரிக்கா வருகிறார். வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை அதிபர் ஜெலன்ஸ்கி சந்திக்கிறார். அப்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் அளிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவித்துள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு அதிபர் ஜோ பைடன், அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க அதிபர் பைடனின் பாதுகாப்பு வாகன ஓட்டுநர் விதிமீறலில் ஈடுபட்டார்.
    • இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    இதன்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கலந்துகொண்டார். அவரின் பாதுகாப்பு வாகனங்களில் ஒரு கார் நேராக தாஜ் ஓட்டலுக்குள் நுழைந்துள்ளது.

    அந்த ஓட்டலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹியான் தங்கியிருந்துள்ளார். அந்தக் காரில் பல்வேறு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. உஷாரான பாதுகாப்பு அதிகாரிகள் கார் ஓட்டுநரை பிடித்து, விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    அப்போது, கார் ஓட்டுநர் அவர்களிடம், ஜோ பைடன் தங்கியுள்ள ஐ.டி.சி. மவுரியாவுக்குச் செல்லவேண்டும் என கூறியுள்ளார். எனினும், தாஜ் ஓட்டலில் உள்ள லோதி எஸ்டேட் பகுதியில் இருந்து ஏற்றிச்சென்ற தொழில் அதிபரை திருப்பிக் கொண்டு வந்து விடவேண்டி இருந்தது. அதற்காக தாஜ் ஓட்டலுக்கு வந்தேன் என தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி நிரல் பற்றி அறிந்திருக்கவில்லை எனவும் கூறினார். விசாரணைக்கு பிறகு அதிகாரிகள் அவரை விடுவித்தனர்.

    ×