search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உக்ரைன் ரஷியா போர்"

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 100 நாட்களைக் கடந்துள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்ற ரஷிய ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
    4.6.2022

    15:30: உக்ரைனில் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வரும்போது, தூதரக ரீதியிலான தீர்வைக் காண ரஷியா அவமானப்படுத்தப்படாமல் இருப்பது மிகவும் அவசியம் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறினார். மேலும், மோதலை முடிவுக்கு கொண்டுவர பிரான்ஸ் மத்தியஸ்தம் வகிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 

    உக்ரைனுக்கு ராணுவ ரீதியாகவும் நிதி ரீதியாகவும் பிரான்ஸ் ஆதரவு அளித்துள்ளது. ஆனால் இதுவரை மற்ற ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களைப் போல அரசியல் ஆதரவை மேக்ரான் வழங்கவில்லை. 

    15:00: மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் என்று ரஷியா குற்றம்சாட்டி உள்ளது. மேலும், உக்ரைனை நிராயுதபாணியாக்கி, தேசியவாதிகளை அகற்றுவதற்கான சிறப்பு ராணுவ நடவடிக்கையின் போக்கை மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுதங்கள் மாற்றாது என்றும் குறிப்பிட்டுள்ளது. உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. 

    இதற்கிடையே சீவிரோடோனெட்ஸ்க் நோக்கி சென்ற கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், கார் டிரைவர் உயிரிழந்தார். அதில் பயணித்த 2 பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர்.

    13:30: சீவிரோடோனெட்ஸ்க் நகரில் உக்ரைன் ராணுவம் முன்னேறுவதை தடுக்கவும், பொதுமக்களுக்கு உதவிகள் வழங்குவதை தடுக்கவும், செவர்ஸ்கி டோனெட்ஸ் ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்களை ரஷியப் படைகள் தகர்த்து வருவதாக  லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் தெரிவித்தார். 

    10.36: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100வது நாளை எட்டியது. இதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், ‘ரஷியாவுக்கு எதிராக உக்ரைன் மடிந்துவிடும் என பலர் நினைத்தனர். உலக தலைவர்கள் என்னை தப்பி ஓட அறிவுறுத்தினர். ஆனால் மக்களிடம் நகைச்சுவை நடிகனாக அறிமுகமான நான், இன்று உக்ரைன் அதிபராக பிரமாண்ட ரஷிய படைகளை எதிர்த்து அடிப்பேன் என யாரும் எதிர்பார்க்கவில்லை’ என கூறினார்.

    04.30: உக்ரைன் மீது ரஷியா நடத்திய போரால் உக்ரைனிய நகரங்களின் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், ராணுவ கட்டமைப்புகள் சின்னாபின்னமாகி உள்ளன.

    உக்ரைனில் ரஷியா ஏற்படுத்தி உள்ள சேதங்களை அந்நாட்டின் மந்திரிசபை மதிப்பிட்டுள்ளது. 600 பில்லியன் டாலர் (சுமார் ரூ.45 லட்சம் கோடி) மதிப்பில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என உக்ரைன் மந்திரிசபை தெரிவித்துள்ளது.

    00.50: ரஷிய ராணுவத்தின் தாக்குதல் காரணமாக உக்ரைனில் இருந்து இதுவரை 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    போலந்தில் மட்டும் 36 லட்சம் பேர் குடியேறியுள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் அந்நாட்டின் மக்கள் தொகை கடந்த 3 மாதங்களில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுதவிர ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா மற்றும் சுலோவாகியா நாடுகளுக்கும் உக்ரைன் மக்கள் அகதிகளாக சென்றுள்ளனர்.
    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 100 நாளாகிறது. ரஷிய ராணுவத்தின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
    3.6.2022

    15:30: ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்பதற்காக உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். தற்போது ரஷிய படைகள் கிழக்கு பகுதியில் கவனம் செலுத்தி வரும் நிலையில், மற்ற பகுதிகளில் உக்ரைன் படைகள் சில பகுதிகளை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். 

    நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள 20 சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாக உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    15:00: உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு தொடங்கி 100 நாளை எட்டிய நிலையில், இந்த போரில் யாரும் வெற்றி பெற மாட்டார்கள் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இந்த 100 நாட்களில் உயிர்கள், வீடுகள், வேலைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்திருப்பதாக உக்ரைனுக்கான ஐ.நா. ஒருங்கிணைப்பாளர் அமின் அவாட் தெரிவித்தார்.

    14.43: ரஷிய போரினால் பாதுக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜூன் 1ம் தேதி நீண்ட தூரம் சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணைகளை வழங்கியது. இந்த ஏவுகணைகளை கொண்டு ரஷிய நிலப்பரப்புகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தும் என கூறப்பட்டு வந்த நிலையில், ‘அமெரிக்க ஏவுகணைகளை வைத்து ரஷிய நிலப்பரப்புகளை தாக்கும் திட்டம் இல்லை. நாங்கள் பாதுகாப்பிற்காக போர் செய்கிறோம். அடுத்த நாட்டை தாக்கும் எண்ணம் இல்லை’ என உக்ரைன் கூறியுள்ளது.

    10.37: ரஷியா-உக்ரைன் போர் 100வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளில் இருந்தும் உற்பத்தி செய்யப்பட்ட உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் உலக அளவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்ட வாய்ப்பிருப்பதாக ஐநா எச்சரித்து வருகிறது. இந்நிலையில் ஐநா மனிதாபிமான செயல்பாடுகள் பிரிவின் தலைவர் மார்டின் கிரிஃபித், ரஷ்ய அதிகாரிகளை சந்தித்து உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார். 

    00.45: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொல் மூலம் நாட்டுமக்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ரஷிய ராணுவத்திற்கு எதிராக நம்மை காத்துக் கொள்ள வேண்டும். ரஷிய ராணுவத்தினர் 20 சதவீத நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளனர். உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் ரஷ்யப் படைகள் தங்கள் பிடியை இறுக்கி வருகின்றன  என குறிப்பிட்டார்.


    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 மாதங்களை கடந்துள்ளது. ரஷிய ராணுவ தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.
    26.5.2022

    14:00: உக்ரைனின் கிழக்கு பகுதியில் நடக்கும் கடுமையான போர் மற்றும் ரஷிய படைகள் முக்கிய தொழில்துறை நகரத்தை சுற்றி வளைக்க நெருங்கி வரும் நிலையில், இந்த போரில் வெற்றி பெறுவதற்கு உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் போதுமான உதவிகள் செய்யவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    எந்த வரம்புகளும் இல்லாமல் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், குறிப்பாக கனரக ஆயுதங்களை அனுப்பவேண்டும் என தெரிவித்தார்.

    13:00: உக்ரைன் ஏற்றுமதி செய்வதற்கு ஏதுவாக கருங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்தை ரஷியா அனுமதிக்க உள்ளது. இவ்வாறு உக்ரைனுக்கு உதவுவதற்கு ஈடாக, ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கப் போவதில்லை என்று அமெரிக்கா கூறுகிறது.

    11.14: உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் சீவிரோடோனெட்ஸ்க் மற்றும் லைசிசான்ஸ்க் நகரங்களை முற்றுகையிட்டுள்ளது. 

    அந்த இரு நகரங்களையும் மூன்று பக்கங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரஷிய வீரர்கள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி  வருகின்றனர். இந்த இரு நகரங்களையும் பிடித்துவிட்டால் லுஹான்ஸ்க் மாகாணம் முழுவதும் ரஷியாவின் கட்டுப்பாட்டுக்குள்  வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    08.53: கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் உக்ரைன், ரஷியா போரினை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து இருநாட்டு தூதரகங்களும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அமைதி உடன்படிக்கைக்காக ரஷியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து உக்ரைன் வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போர் தொடரும் என கூறினார்.

    06.00:உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட, உக்ரைனுக்கான அமைதித் திட்டம் ஒன்றை இத்தாலி முன்மொழிந்துள்ளது. ஆனால் இந்த திட்டம் வெறும் கற்பனையாகவே போய்விடும் என ரஷியாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா விமர்சித்துள்ளார். 

    02.00: டாவோசில் நடைபெற்று வரும் உலக வர்த்தக மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ சொரோஸ் பங்கேற்று பேசினார். 

    அப்போது பேசிய அவர், உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு மூன்றாவது உலகப் போரை நோக்கி இட்டுச் செல்லலாம். அத்தகைய போர் மனித குலத்தை முழுமையாக அழித்துவிடும். எனவே, மனிதகுலம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இப்போர் விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். விளாடிமிர் புதின் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றார்.
    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 மாதங்கள் முடிந்துள்ளது. ரஷிய ராணுவத்தின் தாக்குதலுக்கு உக்ரைனும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.
    25.5.2022

    16:50: கிழக்கு உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் செர்ஹி ஹைடாய், சமீபத்தில் ரஷியா நடத்திய ஷெல் தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 24 மணிநேரத்தில் மேலும் எட்டு பேர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மறைந்திருக்கும் தங்குமிடங்களை ரஷியர்கள் வேண்டுமென்றே குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக ஹைடாய் குற்றம்சாட்டியுள்ளார்.

    13:00: ரஷிய படைகளின் முற்றுகையால் உக்ரைனில் இருந்து கடல் மார்க்மாக உணவு தானியங்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. இதனால் தானியத்தை வெளியேற்றுவதற்கான வழிகள்  குறித்து உக்ரைன் அரசு ஆராய்கிறது. சாலை மார்க்கமாக தானியங்கள் மற்றும் தாவர எண்ணெய்களை வெளியேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    10:45: ரஷியா நீண்ட போருக்குத் தயாராக இருப்பதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறி உள்ளார். அனைத்து நோக்கங்களும் அடையப்படும் வரை சிறப்பு ராணுவ நடவடிக்கையைத் தொடருவோம் என்று அவர் குறிப்பிட்டார்.

    10:30: உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பை தொடங்கி மூன்று மாதங்கள் நிறைவடைந்து நான்காவது மாதமாக நீடிக்கிறது. இன்று டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள தொழில் நகரமான செவரோடோனெட்ஸ்க் மீது ரஷிய படைகள் இடைவிடாமல் குண்டுவீசி தாக்குதல் நடத்துகின்றன.

    05.30: உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான மரியுபோலை ரஷியா முழுமையாக கைப்பற்றியது. 3 மாத கால போரில் இந்த நகரத்தின் கட்டிடங்கள், ரஷிய படைகளின் தாக்குதலில் எலும்புக்கூடுகளாக காட்சியளிக்கின்றன.

    இந்த நகரத்தில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளில் 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    00.45: சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் இணைய வழியில் பங்கேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், போரை முடிவுக்கு கொண்டுவர ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயார். உக்ரைன் மக்களை ரஷிய படைகள் படுகொலை செய்து வருகின்றன. ரஷியாவின் மற்ற பிரதிநிதிகளுடன் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் ஏற்படவில்லை என்பதால் அவர்களுடனான பேச்சுவார்த்தையை ஏற்கப் போவதில்லை என தெரிவித்தார்.
    ×