search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Volodymyr Zelenskyy"

    • ஐ.நா.வில் இன்னும் ரஷியாவிற்கு இருக்கை கொடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
    • ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவி செய்ய கோரிக்கை விடுக்க இருக்கிறார்.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடிவருகிறார். உலக நாடுகளில் இருந்து ரஷியாவை தனித்துவிட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு நேரடியாக சென்று உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்.

    கடந்த சில நாட்களாக ஐ.நா. சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஐ.நா.வில் இன்னும் ரஷியாவிற்கு இருக்கை கொடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், வெறுப்பு ஆயுதமாகும்போது, அது ஒரு நாடுடன் நிற்காது என்று எச்சரித்தார். இந்த கூட்டத்தில் கனடா, உக்ரைனுக்கு ஆதரவாக பேசியது.

    இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா சென்று இருக்கிறார். கனடா சென்று இருக்கும் அவர், அங்குள்ள பாராளுமன்றத்தில் உரையாற்றி, ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவி செய்ய கோரிக்கை விடுக்க இருக்கிறார்.

    2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கியது. அதன்பிறகு தற்போது தான் ஜெலன்ஸ்கி முதன்முறையாக கனடா சென்றுள்ளார். கனடாவின் ஒட்டாவாவில் தரையிறங்கிய ஜெலன்ஸ்கியை கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரவேற்றார்.

    பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜெலன்ஸ்கி மற்றும் ட்ரூடோ டொரோண்டோ பயணம் மேற்கொண்டு அங்குள்ள உக்ரைன் மக்களை சந்திக்கின்றனர். உக்ரைனின் மொத்த மக்கள் தொகையில் நான்கு சதவீதம் பேர் தற்போது கனடாவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக பேசிய கனடாவுக்கான ஐ.நா. தூதர் பாப் ரே, "அவருக்கு உதவுவதற்காக பலவற்றை செய்து இருக்கிறோம், மேலும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது. உக்ரைன் மக்களுக்காக எங்களால் முடிந்தவற்றை தொடர்ச்சியாக செய்யப் போகிறோம்," என்று தெரிவித்து உள்ளார்.

    • உக்ரைன் அதிபர் கடந்த மாதம் இங்கிலாந்து சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    • எனது அம்மா கொஞ்சம் இந்திய இனிப்புகளை (பர்பி) தயாரித்து எனக்காக வைத்திருந்தார்.

    லண்டன் :

    இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக், இந்திய வம்சாவாளியை சேர்ந்தவர் ஆவார். இவரது தாய் உஷா தயாரித்த இந்திய இனிப்புகளை (பர்பி) உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பகிர்ந்து கொண்ட சம்பவம் ஒன்றை ரிஷி சுனக் தற்போது வெளியிட்டு உள்ளார். உக்ரைன் அதிபர் கடந்த மாதம் இங்கிலாந்து சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இதுதொடர்பாக ரிஷி சுனக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கடந்த மாதம் எனது சொந்த ஊரான சவுதாம்டனுக்கு சென்றிருந்தேன். இது குறித்து எனது பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை. ஆனால் இதை அறிந்து அவர்கள் வருத்தமடைந்தனர். என்னை பார்க்க வர முயன்றனர், ஆனால் முடியவில்லை.

    எனது அம்மா கொஞ்சம் இந்திய இனிப்புகளை (பர்பி) தயாரித்து எனக்காக வைத்திருந்தார். ஆனால் அப்போது தர முடியவில்லை. பின்னர் கால்பந்து போட்டி ஒன்றை பார்க்க சென்றபோது, அதை என்னிடம் கொடுத்தார்.

    இதில் விந்தை என்னவென்றால், அதன்பிறகு நான் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தேன். நானும், அவரும் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு பசி எடுத்தது. அதனால், நான் அவருக்கு என் அம்மாவின் பர்பியில் சிலவற்றைக் கொடுத்தேன். அதைப்பார்த்து அம்மா சிலிர்த்து போனார்.

    இவ்வாறு ரிஷி சுனக் அந்த வீடியோவில் தெரிவித்து உள்ளார்.

    • உக்ரைன் போர் உலகின் மிகப்பெரிய பிரச்சினை.
    • உக்ரைன் போரை நான் அரசியல் அல்லது பொருளாதார பிரச்சினையாக பார்க்கவில்லை.

    ஹிரோஷிமா :

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது, உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த போர் விரைவில் முடிந்து விடும் என்றுதான் உலகமே எதிர்பார்த்தது. ஆனால் ஓராண்டை கடந்தும் அந்த போர் நீடித்து வருகிறது. இதனால் உலகளாவிய கச்சா எண்ணெய், உரங்கள், உணவு பொருட்கள் போன்றவற்றின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவை விலையேற்றத்தை சந்தித்து வருகின்றன.

    உக்ரைன் போரை ரஷியா முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக அந்த நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ஆனாலும் ரஷியா தனது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது.

    இந்த நிலையில், இரண்டாம் உலக போரின்போது, உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்டு, உருக்குலைந்துபோய், இப்போது பீனிக்ஸ் பறவை சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவதுபோல, மீண்டெழுந்துள்ள ஜப்பானின் ஹிரோஷிமா நகரில், 'ஜி-7' நாடுகளின் உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.

    இந்த உச்சி மாநாட்டில், உலக தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கலந்துகொள்கிறார் என தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. எதிர்பார்த்தபடியே இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அங்கு வந்து சேர்ந்தார். அவர் அங்கு வருமுன்னரே அவருடன் பிரதமர் மோடி சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகின.

    அதன்படி 'ஜி-7' உச்சி மாநாட்டின் மத்தியில் பிரதமர் மோடியும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி கூறியதாவது:-

    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் தொலைபேசியில் பல முறை பேசி இருக்கிறோம். நீண்ட இடைவெளிக்கு பிறகு நேரில் சந்திக்கும் வாய்ப்பை இப்போது பெற்றிருக்கிறோம்.

    உக்ரைன் போர் உலகின் மிகப்பெரிய பிரச்சினை. ஒட்டுமொத்த உலகிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    உக்ரைன் போரை நான் அரசியல் அல்லது பொருளாதார பிரச்சினையாக பார்க்கவில்லை. இதை நான் மனிதநேய பிரச்சினையாகவும், மனித விழுமியங்களின் பிரச்சினையாகவும் தான் பார்க்கிறேன்.

    எங்கள் எல்லோரையும் விட இந்த போரினால் ஏற்படுகிற பாதிப்புகளை நீங்கள் அதிகமாக அறிவீர்கள். எங்கள் மருத்துவ மாணவர்கள் உக்ரைனில் இருந்து கடந்த ஆண்டு நாடு திரும்பியபோது அவர்கள் அங்குள்ள சூழ்நிலையை எடுத்துக்கூறினார்கள். நீங்களும், உக்ரைன் மக்களும் அடைந்துள்ள வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

    எனவே இந்தியாவும், நானும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரு தலைவர்கள் சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டது. அதில், "பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஜி-7 உச்சி மாநாட்டின் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார்" என கூறப்பட்டுள்ளது.

    • ஓர் ஆண்டுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷிய போர் தொடுத்து வருகிறது.
    • இருநாட்டு ராணுவத்துக்கும் கடுமையான சண்டை நடந்து வருகிறது.

    கீவ் :

    ஓர் ஆண்டுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷிய போர் தொடுத்து வருகிறது. அதே வேளையில் நட்பு நாடுகளிடம் இருந்து கிடைக்கும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் ராணுவம் ஓர் ஆண்டாக ரஷிய படைகளை எதிர்த்து துணிவுடன் சண்டையிட்டு வருகிறது.

    ரஷிய படைகள் தற்போது கிழக்கு உக்ரைனில் உள்ள பக்முத் நகரை கைப்பற்ற தீவிரம்காட்டி வரும் நிலையில் அங்கு இருநாட்டு ராணுவத்துக்கும் கடுமையான சண்டை நடந்து வருகிறது.

    இதனிடையே ரஷியாவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் எதிர் தாக்குதலை நடத்த உக்ரைன் தயாராகி வருவதாகவும், அதற்கு பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இந்த நிலையில் ஆயுதங்கள் பற்றாக்குறையால் ரஷியாவுக்கு எதிராக எதிர் தாக்குதலை தொடங்க முடியவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "எங்களால் இன்னும் தாக்குதலை தொடங்க முடியவில்லை. பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகள் இல்லாமல் எங்கள் துணிச்சலான வீரர்களை முன் வரிசைக்கு அனுப்ப முடியாது" என கூறினார்.

    மேலும் நட்பு நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை பெற காத்திருப்பதாகவும், நாட்டின் கிழக்கு பகுதியில் நிலைமை சாதகமாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    • உக்ரைனின் அமைதி திட்டத்தை ரஷியா பலமுறை புறக்கணித்துள்ளது.
    • உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க ரஷிய அதிபர் புதினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    கீவ் :

    ரஷியா மற்றும் உக்ரைனில் வாழும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்கள் இன்று (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இதையொட்டி உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க ரஷிய அதிபர் புதினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று, வெள்ளிக்கிழமை நண்பகல் தொடங்கி சனிக்கிழமை நள்ளிரவு வரை 36 மணி நேரத்துக்கு தாக்குதல்களை நிறுத்தும்படி ரஷிய படைகளுக்கு அவர் உத்தரவிட்டார். ரஷிய படைகளின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு போர்நிறுத்தம் பொருந்துமா, உக்ரைன் தொடர்ந்து சண்டையிட்டால் ரஷியா திருப்பித் தாக்குமா என்பது அந்த உத்தரவில் தெளிவுப்படுத்தவில்லை.

    இந்த நிலையில் ரஷியாவின் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இது உக்ரைன் படைகளின் முன்னேற்றத்தை தடுக்கும் ஒரு தந்திரம் எனவும் குற்றம் சாட்டினார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "உக்ரைனின் அமைதி திட்டத்தை ரஷியா பலமுறை புறக்கணித்துள்ளது. அவர்கள் இப்போது கிறிஸ்துமசை ஒரு மறைப்பாகப் பயன்படுத்த விரும்புகிறார்கள்.

    ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டான்பாசில் உக்ரைன் படைகளின் முன்னேற்றத்தை தடுக்கவும், ராணுவ தளவாடங்களை எங்கள் துருப்புகளுக்கு நெருக்கமாக கொண்டு வருவதற்கும் ரஷியாவின் தந்திரம் இது.

    புதிய பலத்துடன் போரைத் தொடர ரஷியா எவ்வாறு போரில் குறுக்கீடுகளைப் பயன்படுத்துகிறது என்பது முழு உலகமும் அறிந்ததே. ரஷிய துருப்புக்கள் உக்ரைனை விட்டு வெளியேறும்போது அல்லது வெளியேற்றப்படும்போது போர் முடிவடையும்" என்றார்.

    • உக்ரைனியர்களாகிய நாங்கள் சுதந்திர போரை கடந்து செல்வோம்.
    • எங்கள் போர், சுதந்திரத்துக்கானது, உக்ரைன் மக்களின் பாதுகாப்புக்கானது.

    வாஷிங்டன் :

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 300 நாட்களைக்கடந்து சென்று கொண்டிருப்பதால் அது உலகளவில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த போருக்கு மத்தியில் உக்ரைன் நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கு சென்றது, உலகளவில் பேசுபொருளாகி இருக்கிறது.

    அவர் போலந்து நாட்டின் ரெஸ்சோவ் நகரில் இருந்து அமெரிக்காவின் போர் விமானத்தில்தான் அங்கு சென்றார். அங்கு அவருக்கு ஒரு மாபெரும் ஹீரோவுக்குரிய வரவேற்பு அளிக்கப்பட்டது

    வாஷிங்டன் வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் உக்ரைனிய ராணுவ பதக்கத்தை ஜோ பைடனிடம் வழங்கினார். ஜெலன்ஸ்கிக்கு ஜோ பைடன் 2 கட்டளை நாணயங்களை வழங்கினார்.

    இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது ஜெலன்ஸ்கியிடம் ஜோ பைடன், "இந்த பயங்கரமான நெருக்கடியில் உங்கள் தலைமை, நீங்கள் செய்திருக்கும் செயல்கள் உக்ரைன் மக்களையும், அமெரிக்க ஜனாதிபதியையும், அமெரிக்க மக்களையும், ஒட்டுமொத்த உலகையும் ஈர்த்துள்ளது" என புகழாரம் சூட்டினார். உக்ரைனுக்கு அமெரிக்கா செய்த பெரும் உதவிகளுக்கு தான் நன்றி கூறத்தான் அமெரிக்கா வந்துள்ளதாக ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    ஜெலன்ஸ்கியின் வாஷிங்டன் பயணத்தையொட்டி, உக்ரைனுக்கு 1.85 பில்லியன் டாலர் (சுமார் ரூ.15 ஆயிரத்து 306 கோடி) பாதுகாப்பு உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

    அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசுவதற்காக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அவருக்கு அமெரிக்க தேசியக்கொடியை வழங்கினார்.

    இந்த கூட்டுக்கூட்டத்தில் ஜெலன்ஸ்கி பேசும்போது கூறியதாவது:-

    எங்களுக்கு அமைதி வேண்டும். இதற்கான 10 அம்ச திட்டத்தை வழங்கி உள்ளேன். அதுபற்றி ஜனாதிபதி ஜோ பைடனிடம் விவாதித்தேன். இது இன்னும் பல பத்தாண்டுகளுக்கு கூட்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை தரும் என நம்புகிறேன்.

    உக்ரைனியர்களாகிய நாங்கள் சுதந்திர போரை கடந்து செல்வோம். நாங்கள் கண்ணியத்துடன், வெற்றிகரமாக சுதந்திரத்தை அடைவோம். நாங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம். எங்கள் நாட்டில் மின்சாரம் இல்லை என்றாலும், எங்களில் நாங்கள் வைத்துள்ள நம்பிக்கை தீபத்தை அணைத்து விட முடியாது.

    ரஷியா எங்கள் மீது ஏவுகணைகளால் தாக்கினால், நாங்கள் எங்களைக் காக்க எங்களால் முடிந்ததைச் செய்வோம். அவர்கள் எங்களை ஈரான் டிரோன்களால் தாக்கினால், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது எங்கள் மக்கள் வெடிகுண்டு தவிர்ப்பு புகலிடத்துக்கு செல்வார்கள்.

    எங்கள் போர், உயிருக்கானது மட்டுமல்ல. எங்கள் போர், சுதந்திரத்துக்கானது, உக்ரைன் மக்களின் பாதுகாப்புக்கானது.

    இந்த போர், என்னவிதமான உலகத்தில் எங்கள் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் வசிக்கப்போகின்றன என்பதை வரையறை செய்யும்.

    உக்ரைன் உயிருடன்தான் இருக்கிறது. நாங்கள் தாக்குதல் நடத்துகிறோம். நாங்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம். உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் ராணுவ உதவி, தொண்டு அல்ல. இது எதிர்கால பாதுகாப்புக்கான முதலீடு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உக்ரைன்-ரஷியா போர் 5 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.
    • சீனா ரஷியாவுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது.

    கான்பெர்ரா :

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 5 மாதங்களுக்கும் மேலாக படையெடுப்பை நடத்தி வருகிறது. இந்த போரில் அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகள் ரஷியாவுக்கு எதிராக நிற்கின்றன. போரை கடுமையாக எதிர்க்கும் அந்த நாடுகள் ரஷியா மீது ஏராளமான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

    அதே சமயம் சீனா, போர் தொடங்கிய நாள் முதல் ரஷியாவுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது. மாறாக ரஷியா மீதான பொருளாதார தடைகளை கடுமையாக எதிர்த்து வருகிறது.

    இந்த நிலையில் உக்ரைன் மீதான போரில் ரஷியாவுக்கு சீனா, உதவக்கூடாது என உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த 21 பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மத்தியில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றியபோது ஜெலன்ஸ்கி இதை தெரிவித்தார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், "இப்போதைக்கு, சீனா உண்மையில் நடுநிலையாக உள்ளது, நான் நேர்மையாகச் சொல்வேன், சீனா ரஷியாவுடன் இணைவதை விட இந்த நடுநிலை சிறந்தது, ரஷியாவுக்கு சீனா உதவாது என்பது எங்களுக்கு மிகவும் முக்கியம்" என கூறினார்.

    • உக்ரைனுக்கு ராணுவ, நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை இங்கிலாந்து வழங்கி வருகிறது.
    • சர் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமைத்துவ விருது இங்கிலாந்தின் உயரிய விருதாகும்.

    லண்டன் :

    உக்ரைன் மீதான ரஷியா போரில் இங்கிலாந்து தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. உக்ரைனுக்கு ராணுவ, நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை இங்கிலாந்து வழங்கி வருகிறது. போருக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் உக்ரைனுக்கு சென்ற இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து, இங்கிலாந்து எப்போதும் உக்ரைனுக்கு துணை நிற்கும் என உறுதியளித்தார்.

    இந்த நிலையில் இங்கிலாந்தின் உயரிய விருதான சர் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமைத்துவ விருதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு வழங்கி போரிஸ் ஜான்சன் கவுரவித்துள்ளார்.

    இது குறித்து போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " இன்று வின்ஸ்டன் சர்ச்சில் தலைமைத்துவ விருதை எனது நண்பர் ஜெலன்ஸ்கிக்கு வழங்கியது பெருமையாக உள்ளது. ஜெலன்ஸ்கியின் தைரியம், எதிர்ப்பாற்றல் மற்றும் கண்ணியம் என அவரின் அனைத்து குணங்களும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை அசைத்து, உலகளாவிய ஒற்றுமை அலைகளை கிளறிவிட்டன" என குறிப்பிட்டுள்ளார்.

    ×