என் மலர்tooltip icon

    உலகம்

    அலாஸ்காவில் புதினுடன் அதிபர் டிரம்ப் சந்திப்பு
    X

    அலாஸ்காவில் புதினுடன் அதிபர் டிரம்ப் சந்திப்பு

    • ரஷியாவுக்கு சொந்தமாக இருந்த அலாஸ்கா மாகாணத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
    • டிரம்பும், புதினும் சந்தித்து பேச இருப்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    வாஷிங்டன்:

    நேட்டோ எனப்படும் சர்வதேச ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சி செய்தது. இதில் உக்ரைன் சேர்ந்தால் தங்களின் இறையாண்மைக்கு ஆபத்து என கருதிய ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்தது.

    3 ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் இந்த சண்டையில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். ஆனாலும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இதுதொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இருதரப்பினர் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் பலன் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே, ரஷிய அதிபர் புதினுடன் அதிபர் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் சந்திப்புக்கு பிறகு டிரம்பை சந்திக்க புதின் ஒப்புக்கொண்டார்.

    இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் அதிபர் டிரம்ப், அதிபர் புதினை நேருக்கு நேர் சந்தித்தார்.

    இந்த சந்திப்பின்போது உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர புதினுக்கு டிரம்ப் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரி விதிப்பை காரணம் காட்டி அவர் புதினுக்கு அழுத்தம் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

    ஒரு காலத்தில் ரஷியாவுக்கு சொந்தமாக இருந்த அலாஸ்கா மாகாணத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ரஷியாவின் பழைய நகரில் டிரம்பும், புதினும் சந்தித்து பேசியது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


    Next Story
    ×