search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குலசை முத்தாரம்மன்"

    • ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது.
    • தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தூத்துக்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். இதனால் தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் தங்களது வலது கையில் மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிந்தனர். ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் பக்தர்கள், அங்குள்ள கோவில் வளாகத்தில் தசரா பிறை அமைத்து தங்கியிருந்து ஒருவேளை மட்டும் பச்சரிசி உணவு உண்டு அம்மனை வழிபடுகின்றனர்.

    விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக சிவன், பிரம்மன், விஷ்ணு, விநாயகர், முருகபெருமான், ராமர், லட்சுமணர், நாராயணர், கிருஷ்ணர், காளி, அனுமார் உள்ளிட்ட பல்வேறு சுவாமி வேடங்களையும், அரசன், குறவன், கரடி, கிளி உள்ளிட்ட வேடங்களையும் அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் தசரா பக்தர்கள் குழுக்களாக வாகனங்களில் பல்வேறு ஊர்களுக்கும் சென்று காணிக்கை வசூலிக்கின்றனர்.

    அப்போது கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளையும், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர். இதனால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.

    தசரா திருவிழாவையொட்டி, குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபடுகின்றனர். விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு நாள் இரவிலும் அம்மன் வெவ்வேறு வாகனத்தில் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 10-ம் நாளான வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணியளவில் கடற்கரையில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசிப்பார்கள்.

    • மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா.
    • இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வெற்றி கிடைக்கும்

    தூத்துக்குடி:

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் 6-ம் நாள் நிகழ்ச்சியில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் முத்தாரம்மன் வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

    6-ம் நாளான நேற்று முன்தினம் இரவில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இ்க்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ஏராளாமான பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை வழிபட்டனர்.

    7-ம் திருநாளான நேற்று காலை 8 மணி முதல் இரவு 6.30 மணி வரை சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதி வந்தார். மாலை 4.30 மணிக்கு மகிஷாசுரன் வீதி உலா நடைபெற்றது. மாலை 4 மணி முதல் 8 மணி வரை சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • குலசேகரப்பட்டினத்தில் நவராத்திரி விழா திருவிழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
    • புரட்டாசி மாதம் நவராத்திரி சமயத்தில் ஊரெங்கும் ஆடல் பாடல் களை கட்டும்.

    குலசேகரப்பட்டினத்தில் நவராத்திரி விழா பெரும் திருவிழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

    இந்த சமயத்தில் ஊர் முழுவதும் உள்ள ஆட்ட கலைஞர்கள் அம்மன் வேடமிட்டு தெருவெங்கும் நடனமாடி

    திருவிழா நடத்த வேண்டிய தொகையை வீடுகள் தோறும் காணிக்கையாக பிச்சையெடுப்பர்.

    புரட்டாசி மாதம் நவராத்திரி சமயத்தில் ஊரெங்கும் ஆடல் பாடல் களை கட்டும்.

    கொண்டாடி விட்டு 10ம் நாள் விஜயதசமியன்று கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

    இந்த நவராத்திரி கொண்டாட்டமே குலசேகரப்பட்டினத்தின் மிகப்பெரும் திருவிழாவாகும்.

    இதை தவிர ஆடிக்கொடை திருவிழா, ஐப்பசி விசு, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி

    போன்ற தினங்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    அம்மை நோய் கண்டவர்கள் நலமடைய இங்கே பிரார்த்திக்கின்றனர்.

    மேலும் ஊனமுற்றவர்கள், மனநிலை பாதிப்படைந்தவர்கள் சொத்துக்கள் இழந்தவர்கள்,

    வியாபார விருத்தியடைய விரும்புபவர்கள் ஆகியோரும் மாவிளக்கு பூஜை,

    அங்க பிரதட்சனம், தீச்சட்டி எடுத்தல் வேல் அம்பு குத்தல் என தங்களால் இயன்ற நேர்த்தி கடன்களை செலுத்தி பலனடைகின்றனர்.

    • எல்லா கோவில்களிலும் சிவனுக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கும்.
    • இக்கோவிலில் சக்தி மயமாக சிவனும், சிவமயமாக சக்தியும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

    அழகிய கடற்கரை கிராமமான குலசை என அழைக்கப்படும் குலசேகரப்பட்டினம்

    திருநெல்வேலியிலிருந்து 68 கி.மீ. தொலைவிலும் திருச்செந்தூரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

    இயற்கை எழில் கொஞ்சும் கடலோர கிராமமான குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவிலேயே

    மைசூருக்கு அடுத்தப்படியாக நவராத்திரி பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    9 நாட்கள் மட்டுமின்றி 365 நாட்களும் இங்கே கொண்டாடப்படும் அம்மன் அருள்மிகு முத்தாரம்மன்.

    குலசை முத்தாரம்மன் என்றால் மிக பிரசித்தம்.

    தலப்பெருமை:

    பொதுவாக எல்லா கோவில்களிலும் சிவனுக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கும்.

    ஆனால் இக்கோவிலில் சக்தி மயமாக சிவனும், சிவமயமாக சக்தியும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

    குலசை முத்தாரம்மன் கோவிலில் எங்கும் காண முடியாத அதிசயமாக இங்கு

    மூலவர் ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பாள் முத்தாரம்மனும் சுயம்புவாக தோன்றி ஒரே விக்கிரகமாக

    வடக்கு திசை நோக்கி வீற்றிருக்கின்றனர்.

    • குலசேகரப் பட்டினத்தில் சுயம்பு வடிவிலேயே முத்தாரம்மனை பக்தர்கள் ஆரம்ப காலங்களில் வழிபட்டு வந்தனர்.
    • அந்தப் புனிதமான சிலையை உணர்ச்சிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டு அவர்கள் குலசேகரன்பட்டினம் திரும்பினர்.

    உருவத்தை காட்டி சிலை செய்ய சொன்ன முத்தாரம்மன்

    குலசேகரப் பட்டினத்தில் சுயம்பு வடிவிலேயே முத்தாரம்மனை பக்தர்கள் ஆரம்ப காலங்களில் வழிபட்டு வந்தனர். அப்போது அன்னையின் திருமேனியினைக் கண்குளிரக் கண்டு, அவளைத் தரிசனம் செய்ய வேண்டும் என்று அவ்வூர் பக்தர்களுக்கு ஆவல் ஏற்பட்டது. அம்பாளிடம் இதற்காக மனமுருகி அவர்கள் வேண்டினர்.

    அப்போது ஒருநாள், கோவில் அர்ச்சகரின் கனவில் அம்மன் தோன்றினாள். "எனது திருவுருவைக் காண நீங்கள் அனைவரும் ஆவலாக இருப்பது தெரிகிறது. கன்னியாக்குமரி அருகே மைலாடி என்றொரு சிறிய ஊர் உள்ளது. அங்கு செல். அனைத்தும் நிறைவேறும்" என்று கூறினாள்.

    மைலாடி பகுதியில் அதிக அளவில் பாறைகள் உண்டு. இதனை வெட்டி எடுத்து கலைநுணுக்கத்துடன் கடவுள் சிலைகளை நிறைய பேர் செய்து வருகின்றனர். இப்படி பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப, கற்களில் அற்புதமாக சிலை வடிவமைத்துக் கொடுக்கும் ஆற்றலை சுப்பையா ஆசாரி என்பவர் பெற்றிருந்தார்.

    அவரது கனவிலும் குலசை முத்தாரம்மன் தோன்றினாள். குலசேகரன் பட்டினத்தில் தான் சுயம்புவாக விளங்கி இருப்பது பற்றி விரிவாகக் கூறினாள். அதுமட்டுமல்லாமல், தன் உருவத்தைக் காண அங்குள்ள பக்தர்கள் அனைவரும் ஆவலாக இருப்பதையும் ஆசாரிக்குத் தெரியப்படுத்தினாள்.

    பின்னர், தனது மற்றும் ஞானமூர்த்தீஸ்வரர் திருமேனியுடன் ஆசாரிக்குக் காட்சி அளித்த அன்னை, தங்களை நன்கு உற்று நோக்குமாறும், தென் திசையில் உள்ள ஆண் பெண் பாறையில் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் தங்கள் திருவுருவச் சிலையை வடித்துக் கொடுக்குமாறும் உத்தரவிட்டாள்.

    தங்கள் சிலைகளைச் செய்து, தாங்கள் சுயம்புவாக முளைத்துள்ள இடத்திற்கு அருகாமையில் அந்தக் கற்சிலையை நிறுவ வேண்டும் என்றும் அந்தக் கனவில் ஆசாரிக்குக் கட்டளையிட்டு முத்தாரம்மன் மறைந்தாள். இந்தக் கனவு கலைந்ததும் திடுக்கிட்டார் ஆசாரி. கனவில் முத்தாரம்மன் தனக்கு ஆணை பிறப்பித்ததை உணர்ந்தார். குலசேகரப்பட்டினம் எங்கிருக்கிறது என்பது பற்றி பலரிடமும் விசாரித்து அறிந்து கொண்டார். அதன்பிறகு தன் மனதில் திடமாகப் பதிந்திருந்த அம்பாள் மற்றும் சுவாமியின் திருமேனியை அப்படியே கற்களில் சிலையாக வடித்தார்.

    முத்தாரம்மன் கனவில் கூறியபடி குலசை அர்ச்சகர், அவ்வூரை சேர்ந்த சிலருடன் மைலாடி சென்றார். சுப்பையா ஆசாரி யார் என்று விசாரித்து அறிந்து அவரை சந்தித்தார்கள். சுப்பையா ஆசாரி ஏற்கனவே ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் சிலையை செய்து வைத்திருந்தார். அந்தப் புனிதமான சிலையை உணர்ச்சிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டு அவர்கள் குலசேகரன்பட்டினம் திரும்பினர். முத்தாரம்மனின் விருப்பப்படியே அந்தச் சிலை, சுயம்புவாக முளைத்துள்ள அம்பாளின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இந்த அன்னைதான் குலசேகரன் பட்டினத்தில் இன்றும் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறாள்.

    முத்தாரம்மன் அருகே ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்திஸ்வரர் வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் முக்கியச் சிறப்பாகும். இதுபோல் அம்பாளும், சிவனும் ஒருசேர வீற்றிருந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே.

    இதில் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், சுவாமி, அம்பாள் ஆகிய இருவருமே வடக்கு நோக்கி வீற்றிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் வேறு எந்த தலத்திலும் இத்தகைய காட்சியை காண இயலாது.

    மேலும் அம்பாளுக்கும், சிவனுக்கும் ஒரே நேரத்தில் பூஜை நடைபெறுகிறது என்பதும் முக்கிய விஷயமாகும். இந்த கோவிலின் தலமரமாக வேம்பு விளங்குகிறது 

    • அவள் அருள் செய்யும் கருவறை சிறிய அறையாக உள்ளது.
    • செப்புத் தகட்டின் வடப்பக்கத்தில் அம்பாளும், சுவாமியும் அருள் பாலிக்கின்றனர்.

    முத்தாரம்மன் கோவில் அமைப்பு

    குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில், மற்ற பழைய கோவில்களை போல சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கட்டிட அமைப்புகளுடனோ அல்லது உயர்ந்த கோபுரங்கள் மற்றும் மாடவீதிகள் கொண்டதாகவோ அமையவில்லை. அந்த ஆலயம் மிகச்சிறிய ஆலயம்தான். ஆனால் முத்தாரம்மனின் அருளாட்சி வரையறுக்க முடியாத எல்லையாக பரவியுள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் சாதி, மத வேறுபாடின்றி குலசை முத்தாரம்மனை குலதெய்வம் போல வழிபடுகின்றனர். அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் குலசை முத்தாரம்மனின் நாமத்தை உச்சரிக்கத் தவறுவதில்லை. இத்தகைய சிறப்புடைய முத்தாரம்மை குலசையில் ஒரு தெருவில் நடுநாயகமாக வீற்றிருக்கிறாள். அவள் அருள் செய்யும் கருவறை சிறிய அறையாக உள்ளது.

    கர்ப்பக்கிரகத்தினை அடுத்து அர்த்த மண்டபமும், அதனையடுத்து மகாமண்டபமும் அமைந்துள்ளன. இந்த மகாமண்டபத்தின் வலதுபுறம் பேச்சியம்மனும், இடது புறம் கருப்பசாமியும் அருள் பாலிக்கின்றனர். பைரவர் தெற்குமுகமாக மகாசன்னதியை எதிர்நோக்கி காட்சி தருகிறார்.

    அடுத்து கொடி மர மண்டபம் உள்ளது. இதன் நடுவில் 32 அடி உயரக் கொடிமரம் செப்புத் தகடுகளால் அமைக்கப்பட்டு கம்பீர மாக உயர்ந்து நிற்கிறது. இதன் அடிப்புற செப்புத் தகட்டின் வடப்பக்கத்தில் அம்பாளும், சுவாமியும் அருள் பாலிக்கின்றனர். தென்பக்கத்தில் அஸ்திர தேவரும், கீழ்ப்பாக்கத்தில் விநாயகரும், மேற்கில் பாலசுப்பிரமணியரும் காட்சி அளிக்கின்றனர்.

    கொடிமர மண்டபத்தின் கன்னிமூலையில் மகா வல்லப விநாயகர் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார். தென்புறம் நோக்கி இரு பூதத்தார்களும் உள்ளனர்.

    இக்கோயிலுடன் இணைந்து அருள்மிகு சிதம்பரேஸ்வரர் ஆலயம், விண்ணவரம் பெருமாள் திருக்கோவிலும் அமையப் பெற்றுள்ளன.

    • பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்கு சூட்டி மகிழ்ந்தனர்.
    • உயிர்களை மலக் கட்டுகளிலிருந்து விடுவித்தால், உயிர்கள் சீவன் முத்தர்கள் ஆவர்.

    முத்தாரம்மன் பெயர்க் காரணம்

    அன்னை மகாசக்தி ஒவ்வொரு தலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் அருள்பாலிக்கிறாள். அந்த வகையில் குலசேகரன் பட்டினம் அம்பாளுக்கு முத்தாரம்மன் என்ற பெயர் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. அவையனைத்தும் பொருத்தமானதாகவே தெரிகிறது.

    "பாண்டி நாடு முத்துடைத்து" என்பார்கள். பாண்டிய மன்னர்கள் முத்துக்களைக் குவித்து தேவியாக நினைத்து வழிபட்டனர். அம்முத்துகள் அம்பாளாகத் திருமேனி கொண்டன. முத்துகளிலிருந்து அன்னை உதித்ததால் முத்தாரம்மன் என அழைக்கப்பட்டாள் என்பது ஒரு கருத்து.

    பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்கு சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை, முத்தாரம்மன் எனவும் வழங்கலானாள். கிராமங்களில் அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு.

    முத்து கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தை சுற்றி நீர் கட்டச் செய்வர். இதன் மூலம் அம்மை நோய் (முத்துநோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றிக் குணப்படுத்தியதால் அன்னை, முத்து ஆற்று அம்மன், முத்தாரம்மன் என அழைக்கப்படுகிறாள்.

    சிப்பியிலிருந்து விடுபட்டது முத்து. முத்தைச் சிப்பி மூடியிருக் கிறது. உயிர்களை ஆணவ மலம் மூடி மறைத்துள்ளது. உயிர்களை மலக் கட்டுகளிலிருந்து விடுவித்தால், உயிர்கள் சீவன் முத்தர்கள் ஆவர். அம்பாள் சிப்பியிலிருந்து முத்துக்களைப் பிரித்தெடுப்பது போல உலக உயிர்களை மலக்கட்டுகளிலிருந்து பிரித்து ஜுவ முக்தர்களாக மாற்றுகிறாள்.

    இதனால் அன்னைக்கு, முத்தாரம்மன் என்ற பெயர் ஏற்பட்டது.  இப்படி முத்தாரம்மன் பெயர் தோன்றியதற்கு பல கதைகள் உள்ளன.

    • சென்னை, சேலம் நகரங்களில் இருந்து வரும் மானாட மயிலாட போன்ற நடன குழுவினர் ஆடலைத்தான் ரசிக்கிறார்கள்.
    • முன்பெல்லாம் ஒரு குழுவுக்கு அதிகபட்சம் ரூ.5 ஆயிரம்தான் செலவாகும். இப்போது பல லட்சம் செலவிடுகிறார்கள்.

    மாலை போடும் மரபு

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் மாலை அணிந்து விரதம் கடை பிடித்து செல்வது போல குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் மாலை அணிகிறார்கள். ஆனால் இந்த பழக்கம் ஆதி காலத்தில் இருந்தே கடை பிடிக்கும் பழக்கம் அல்ல., சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பழக்கம்தான்.

    ஒரு தடவை குலசை கோவில் தசரா திருவிழாவுக்கு வந்த குறவர் இனத்தவர்கள் தங்கள் தயாரிப்பான பாசி மணி மாலைகளை விற்பதற்காக, "இந்த மாலையை வாங்கிச் சென்று கடல் தண்ணீரில் சுத்தம் செய்து ஆலயத்தில் வழிபாடு செய்து அணிந்தால் நினைத்தது நடக்கும்" என்றனர். அதை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி அணிந்தனர். அதன் பிறகே குலசை பக்தர்கள் மாலை அணியும் புதிய மரபு ஏற்பட்டது.

    டிஸ்கோ டான்ஸ் ஆதிக்கம்

    தசரா குழு நடத்துபவர்கள் முன்பெல்லாம் வேறு ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். ஒரு தசரா குழு ஊருக்குள் வருகிறது என்றால் முதலில் காளி வேடம் போட்டு இருப்பவர் வீடு, வீடாக வந்து திருநீறு கொடுத்து செல்வார். சிலருக்கு அருள் வாக்கும் கிடைக்கும்.

    காளியைத் தொடர்ந்து மற்ற வேடங்கள் அணிந்து இருப்பவர்கள் ஆடியபடி வருவார்கள். அவர்களை ஊர்க்காரர்கள் பக்தியுடனும் ஆச்சரிய பரவசத்துடனும் பார்ப்பார்கள். ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் அல்லது ஊர் கோவில் முன்பு அந்த வேடக்காரர்கள் அனைவரும் வட்டமாக சுற்றி வந்து ஆட்டம் போடுவார்கள். ரவுண்டு கட்டி அவர்கள் போடும் ஆட்டம் காலத்துக்கும் மறக்காது. பார்த்தவர்களின் கண்ணுக்குள்ளேயே நிழலாடியபடி இருக்கும். வெளியூர்களுக்கு போய் செட்டிலாகி விடுபவர்கள் கூட இன்றும் தசரா குழுவினர் ஆட்டத்தை மெய் சிலிர்க்க சொல்வார்கள்.

    தசரா குழுவைத் தொடர்ந்து கரகம் ஆடுபவர்கள் ஆடியபடி செல்வார்கள். இவர்கள் தசரா குழுவுக்கு மெருகேற்றுவது போல இருப்பார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தசரா குழுக்களுடன் டிஸ்கோ டான்ஸ் ஆடுபவர்கள் வந்து ஆடுகிறார்கள். இது தசரா குழுக்களில் புதுவிதமான கலாசாரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முத்தாரம்மனுக்காக வேடம் அணிபவர்கள் மீதான மக்களின் கவனம் குறைந்து விட்டது. அதற்கு பதில் மக்களின் பார்வை டிஸ்கோ டான்ஸ் ஆடுபவர்கள் பக்கம் திரும்பி விட்டது என்கிறார்கள்.

    குறிப்பாக சென்னை, சேலம் நகரங்களில் இருந்து வரும் மானாட மயிலாட போன்ற நடன குழுவினர் ஆடலைத்தான் இளைஞர்கள் ரசிக்கிறார்கள். இத்தகைய டிஸ்கோ டான்சை தவிர்த்தால் நன்றாக இருக்கும் என்று தசரா குழுக்களின் மூத்த தலைவர்கள் சொல்கிறார்கள். என்றாலும் நவீன மாற்றங்களுக்கு ஏற்ற புதிய வரவாக டிஸ்கோ டான்சை பெரும்பாலான தசரா குழுக்கள் ஏற்றுக் கொண்டு விட்டன. எத்தனை டிஸ்கோ டான்சர்கள் வந்தாலும் அம்மனுக்காக வேடம் அணிபவர்கள் புனிதம் ஒரு போதும் குறையாது என்பது அவர்களது வாதமாக உள்ளது.

    தசரா குழு அன்றும் & இன்றும்

    தசரா குழுக்களிடம் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஊரில் ஒரு தசரா குழு இருக்கிறது என்றால் 10 முதல் 50 பேர் வரைதான் இருப்பார்கள். ஆனால் இன்று 50 முதல் 150 பேர் வரை இருக்கிறார்கள். இது போல ஒவ்வொரு விஷயத்திலும் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. இதுபற்றி மாதவன்குறிச்சி ஊர்த் தலைவரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ஏ.டி.கருப்பசாமி கூறியதாவது,

    எங்கள் ஊர் தசரா குழுவுக்கு ஈஸ்வரி தசரா குழு என்று பெயர். இந்த குழு தொடங்கப்பட்டு 78 ஆண்டுகள் ஆகிறது. தற்போது இந்த குழுவின் தலைவராக எஸ்.கார்த்திகேயன் இருக்கிறார். நான் 11 வயது முதல் சுமார் 40 ஆண்டுகள் பல்வேறு வேடங்கள் அணிந்துள்ளேன். பெண் வேடம், ராஜா ராணி வேடம், இன்ஸ்பெக்டர் வேடம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். என்னுடைய சிறு வயதில் தசரா குழுவினர் நடந்தே ஊர், ஊராக செல்வார்கள். ஆனால் இப்போது வாகன வசதி வந்து விட்டது.

    முன்பு 5 ரூபாய் முன்பணம் கொடுக்க கஷ்டப்படுவோம். ஆனால் இப்போது வேடமிடுபவர்களிடம் பணம் ஒரு பிரச்சினையாக தெரியவில்லை. முன்பெல்லாம் ஒரு குழுவுக்கு அதிகபட்சம் ரூ.5 ஆயிரம்தான் செலவாகும். இப்போது பல லட்சம் செலவிடுகிறார்கள். முன்பு ஆடை அலங்காரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. இப்போது அலங்காரங்கள் கன கச்சிதமாக போடப்படுகின்றன.

    முன்பு விரத முறைகளில் கடுமை இருக்கும். குலசையில் கொடி இறங்கிய பிறகுதான் வீட்டுக்கு வர முடியும். தற்போது அது மாறி விட்டது. முன்பெல்லாம் ஒரு குழுவில் 4 அல்லது 5 பேர்தான் காப்பு கட்டுவார்கள். இப்போது வேடமிடும் எல்லாரும் காப்பு கட்டுகிறார்கள். அப்போது உடல் உழைப்பு முக்கியமாக இருந்தது. இப்போது பொழுது போக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றார்.

    • மீண்டும் மன்னன் படையெடுத்து வெற்றி பெற்றான். இதனால் அம்மனுக்கு கோயில் கட்டினான்.
    • சமீப ஆண்டுகளாக வேடத்தை அறிய பக்தர்கள் அருள்வாக்கு கேட்பது குறைந்து விட்டது.

    புராண கதைகளும், பெயர்காரணமும்

    குலசேகர பாண்டிய மன்னன், சுற்றியுள்ள சிற்றரசர்களிடம் போரிட்டு வெற்றிபெற்று தம் ஆதிக்கத்தை மதுரை முழுவதும் பரப்பினார். இதன் விளைவாக கேரளா நாட்டை கைப்பற்ற எண்ணி திருவனந்தபுர மன்னனிடம் தோல்வியுற்றான். வரும் வழியில் இரவு வெகு நேரமானதால் தூங்கிவிட்டான் பாண்டிய மன்னன். அவன் முன் அறம் வளர்த்த நாயகி அம்மன் தோன்றினாள்.

    "பாண்டிய மன்னா தூங்கிவிடாதே, தூங்கி உன நாட்டின் பெருமை இழந்து விடாதே ஒருமுறை தோற்றால் என்ன?" மறுமுறை முயற்சி செய் என்று அருள்வாக்கு சொல்லி ஆசிர்வதித்து மறைந்தாள். மீண்டும் மன்னன் படையெடுத்து வெற்றி பெற்றான். இதனால் அம்மனுக்கு கோயில் கட்டினான். கோவில் அருகே ஊர் அமைந்ததால் மன்னனின் நினைவாக குலசேகர பட்டினம் என பெயர் பெற்றது.

    முத்தாரம்மனின் ஆதி பெயர் தட்டத்தி அம்மனாகும். அம்மனுக்கு கோபம் வரும் சமயம் ஊரில் உள்ள மக்களுக்கு முத்து வாரி போடுவது தட்டத்தி அம்மனின் வழக்கம். அவ்வாறு முத்துவாரி போடுவதால் அம்மனுக்கு முத்தாரம்மன் என்று பெயர் மாற்றப்பட்டது.

    முத்தாரம்மன் பீட சிறப்பு

    முன்பொரு காலத்தில் வியாபாரிகள் தோனிகளில் சரக்குகளை எடுத்து சென்று வியாபாரம் செய்து வருவது வழக்கம். ஒரு செட்டியார் தன் மனைவியுடன் குலசேகர பட்டின கடற்கரையில் சென்றபோது கடல் அலையால் அவருடைய சரக்குகள் கடலில் மூழ்கியது. வேதனையுற்ற செட்டியாரும், அவர் மனைவியும், சிவனை வேண்டினார்கள். சிவனும் அவர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கு காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என கேட்டார். "ஆண்டவனே எங்களுக்கு காட்சி தந்ததே நாங்கள் செய்த பாக்யம், நீங்கள் (சிவனும் பார்வதியும்) இருவரும், திருமண கோலத்தில் இதே போல் பக்தர்களுக்கு காட்சி தர வேண்டுகிறேன் என்று வேண்டினார். இறைவனும் "அவ்வாறே ஆகட்டும்" என்று கோயில் பீடத்தில் காட்சி தருகிறார்.

    குலசையில் 8 அம்மன்கள்

    உலகையே தன் கைக்குள் கொண்டுவர அசுரபலம் கொண்ட அரக்கன் சிவனை நோக்கி பல ஆண்டுகளாக கடுந்தவம் புரிகின்றான். சிவன் உடனே அந்த வரத்தை வழங்குகிறார், அசுரன் உடனே சிவனையே கொல்ல முற்படுகிறான். பார்வதி தேவி துர்கையாக மாறி அவனை அழிக்கிறாள். இந்த நிகழ்ச்சியை கருவாக கொண்டுதான் 10ம் நாளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சூரசம்காரம் செய்யும்போது கீழேவிழும் அசுரனின் தலையை துர்கை அம்மன் சிம்மவாகனத்துடன் தன் கையில் ஏந்துகிறாள். அசுரனின் ரத்தம் பூமியில் பட்டவுடன் இரத்தத்தின் வழயாக மீண்டும் அசுரனாக உருவெடுக்ககூடாது என்று எண்ணிய துர்க்கை அம்மன் சண்டி அம்மனை அசுரனின் இரத்தத்தை உறுஞ்ச கட்டளையிட்டாள். அவ்வாறே உறிஞ்சிய துளிகள் கீழே விழும் போது காளியம்மனாக உருவெடுத்தாள்.

    இங்கு கருங்காளி, பத்ரகாளி, சந்தியம்மன், அங்காளம்மன், தட்டத்தி அம்மன், பரமேஸ்வரி, வீராகாளி, அறம் வளர்த்த நாயகி அம்மன் 8 வகை காளி அம்மன்கள் குடியிருப்பது சிறப்பு அம்சமாகும். இதில் வீராகாளியம்மனுக்கு மட்டும் ஊருக்கு வெளியே ஆலயம் அமைந்துள்ளது. இப்படி பல வகையிலும் சிறப்பு வாய்ந்த முத்தாரம்மன் தசரா திருவிழாவை கான மக்கள் அலைகடலென திரண்டு வருகிறார்கள்.

    வேடம் சொல்லும் அம்மன்

    குலசை கோவிலில் தசரா பண்டிகையையட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு கடவுளின் வேடங்களை அணிந்த படி வீதி உலாவாக செல்வர். காளி, ஆஞ்சநேயர், சிவன், முருகன்,விநாயகன் என பல்வேறு கடவுளைப் போல பக்தர்கள் வேடம் புனைந்து வருவது வேறு எங்குமே இல்லாத சிறப்பு.

    இப்படி வேடம் புனையும் பக்தர்கள் அனைவருமே ஏதாவது ஒரு வேண்டுதலுக்கான நேர்த்திக் கடனைத் தீர்க்கவே இப்படி வருகிறார்கள். அதே வேடத்தில் ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து அதை கோவிலில் செலுத்துகிறார்கள்.

    பல்வேறு அவதாரங்கள் புனைந்து அம்மை, அப்பனைத் தரிசிக்கவும் வேண்டுதலைக் காணிக்கையாக்கவும், ஆண்டுதோறும் பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படும். தசரா பண்டிகையில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் திரள்கின்றனர்.

    ஆண்டுக்கு ஆண்டு இங்கு வரும் பக்தர்களின் கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது. விரதம் தொடங்கும் முதல் நாளின்போது குலசை முத்தராம்மன் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், பூசாரியிடம் ஆசி பெற்று காப்பு கட்டி கொள்வார்கள். அவர்கள் அணியும் வேடத்தை அவர்களே தீர்மானிப்பதில்லை. அதற்கும் ஒரு வழிமுறை உள்ளது.

    முத்தாரம்மன் சந்நிதியில் முத்து போட்டுப் பார்க்கும் பூசாரிகள், ஒவ்வொரு பக்தரும் என்ன வேடம் அணிய வேண்டும் என அருள்வாக்காகச் சொல்கிறார்கள். அதன்படியே பக்தர்கள் வேடமணிந்து பத்து நாள் திருவிழாவில் பங்கு பெறுவர். பத்து நாள் வழிபாடு முடிந்ததும் கடலில் நீராடி விரதத்தை முடித்துக் கொள்வார்கள். ஆனால் சமீப ஆண்டுகளாக வேடத்தை அறிய பக்தர்கள் அருள்வாக்கு கேட்பது குறைந்து விட்டது.

    ஆனால் சமீப ஆண்டுகளாக வேடத்தை அறிய பக்தர்கள் அருள்வாக்கு கேட்பது குறைந்து விட்டது.

    ×