search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kulasai Mutharamman thiruvizha"

    • அவள் அருள் செய்யும் கருவறை சிறிய அறையாக உள்ளது.
    • செப்புத் தகட்டின் வடப்பக்கத்தில் அம்பாளும், சுவாமியும் அருள் பாலிக்கின்றனர்.

    முத்தாரம்மன் கோவில் அமைப்பு

    குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில், மற்ற பழைய கோவில்களை போல சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கட்டிட அமைப்புகளுடனோ அல்லது உயர்ந்த கோபுரங்கள் மற்றும் மாடவீதிகள் கொண்டதாகவோ அமையவில்லை. அந்த ஆலயம் மிகச்சிறிய ஆலயம்தான். ஆனால் முத்தாரம்மனின் அருளாட்சி வரையறுக்க முடியாத எல்லையாக பரவியுள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் சாதி, மத வேறுபாடின்றி குலசை முத்தாரம்மனை குலதெய்வம் போல வழிபடுகின்றனர். அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் குலசை முத்தாரம்மனின் நாமத்தை உச்சரிக்கத் தவறுவதில்லை. இத்தகைய சிறப்புடைய முத்தாரம்மை குலசையில் ஒரு தெருவில் நடுநாயகமாக வீற்றிருக்கிறாள். அவள் அருள் செய்யும் கருவறை சிறிய அறையாக உள்ளது.

    கர்ப்பக்கிரகத்தினை அடுத்து அர்த்த மண்டபமும், அதனையடுத்து மகாமண்டபமும் அமைந்துள்ளன. இந்த மகாமண்டபத்தின் வலதுபுறம் பேச்சியம்மனும், இடது புறம் கருப்பசாமியும் அருள் பாலிக்கின்றனர். பைரவர் தெற்குமுகமாக மகாசன்னதியை எதிர்நோக்கி காட்சி தருகிறார்.

    அடுத்து கொடி மர மண்டபம் உள்ளது. இதன் நடுவில் 32 அடி உயரக் கொடிமரம் செப்புத் தகடுகளால் அமைக்கப்பட்டு கம்பீர மாக உயர்ந்து நிற்கிறது. இதன் அடிப்புற செப்புத் தகட்டின் வடப்பக்கத்தில் அம்பாளும், சுவாமியும் அருள் பாலிக்கின்றனர். தென்பக்கத்தில் அஸ்திர தேவரும், கீழ்ப்பாக்கத்தில் விநாயகரும், மேற்கில் பாலசுப்பிரமணியரும் காட்சி அளிக்கின்றனர்.

    கொடிமர மண்டபத்தின் கன்னிமூலையில் மகா வல்லப விநாயகர் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார். தென்புறம் நோக்கி இரு பூதத்தார்களும் உள்ளனர்.

    இக்கோயிலுடன் இணைந்து அருள்மிகு சிதம்பரேஸ்வரர் ஆலயம், விண்ணவரம் பெருமாள் திருக்கோவிலும் அமையப் பெற்றுள்ளன.

    • சென்னை, சேலம் நகரங்களில் இருந்து வரும் மானாட மயிலாட போன்ற நடன குழுவினர் ஆடலைத்தான் ரசிக்கிறார்கள்.
    • முன்பெல்லாம் ஒரு குழுவுக்கு அதிகபட்சம் ரூ.5 ஆயிரம்தான் செலவாகும். இப்போது பல லட்சம் செலவிடுகிறார்கள்.

    மாலை போடும் மரபு

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் மாலை அணிந்து விரதம் கடை பிடித்து செல்வது போல குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் மாலை அணிகிறார்கள். ஆனால் இந்த பழக்கம் ஆதி காலத்தில் இருந்தே கடை பிடிக்கும் பழக்கம் அல்ல., சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பழக்கம்தான்.

    ஒரு தடவை குலசை கோவில் தசரா திருவிழாவுக்கு வந்த குறவர் இனத்தவர்கள் தங்கள் தயாரிப்பான பாசி மணி மாலைகளை விற்பதற்காக, "இந்த மாலையை வாங்கிச் சென்று கடல் தண்ணீரில் சுத்தம் செய்து ஆலயத்தில் வழிபாடு செய்து அணிந்தால் நினைத்தது நடக்கும்" என்றனர். அதை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி அணிந்தனர். அதன் பிறகே குலசை பக்தர்கள் மாலை அணியும் புதிய மரபு ஏற்பட்டது.

    டிஸ்கோ டான்ஸ் ஆதிக்கம்

    தசரா குழு நடத்துபவர்கள் முன்பெல்லாம் வேறு ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். ஒரு தசரா குழு ஊருக்குள் வருகிறது என்றால் முதலில் காளி வேடம் போட்டு இருப்பவர் வீடு, வீடாக வந்து திருநீறு கொடுத்து செல்வார். சிலருக்கு அருள் வாக்கும் கிடைக்கும்.

    காளியைத் தொடர்ந்து மற்ற வேடங்கள் அணிந்து இருப்பவர்கள் ஆடியபடி வருவார்கள். அவர்களை ஊர்க்காரர்கள் பக்தியுடனும் ஆச்சரிய பரவசத்துடனும் பார்ப்பார்கள். ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் அல்லது ஊர் கோவில் முன்பு அந்த வேடக்காரர்கள் அனைவரும் வட்டமாக சுற்றி வந்து ஆட்டம் போடுவார்கள். ரவுண்டு கட்டி அவர்கள் போடும் ஆட்டம் காலத்துக்கும் மறக்காது. பார்த்தவர்களின் கண்ணுக்குள்ளேயே நிழலாடியபடி இருக்கும். வெளியூர்களுக்கு போய் செட்டிலாகி விடுபவர்கள் கூட இன்றும் தசரா குழுவினர் ஆட்டத்தை மெய் சிலிர்க்க சொல்வார்கள்.

    தசரா குழுவைத் தொடர்ந்து கரகம் ஆடுபவர்கள் ஆடியபடி செல்வார்கள். இவர்கள் தசரா குழுவுக்கு மெருகேற்றுவது போல இருப்பார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தசரா குழுக்களுடன் டிஸ்கோ டான்ஸ் ஆடுபவர்கள் வந்து ஆடுகிறார்கள். இது தசரா குழுக்களில் புதுவிதமான கலாசாரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முத்தாரம்மனுக்காக வேடம் அணிபவர்கள் மீதான மக்களின் கவனம் குறைந்து விட்டது. அதற்கு பதில் மக்களின் பார்வை டிஸ்கோ டான்ஸ் ஆடுபவர்கள் பக்கம் திரும்பி விட்டது என்கிறார்கள்.

    குறிப்பாக சென்னை, சேலம் நகரங்களில் இருந்து வரும் மானாட மயிலாட போன்ற நடன குழுவினர் ஆடலைத்தான் இளைஞர்கள் ரசிக்கிறார்கள். இத்தகைய டிஸ்கோ டான்சை தவிர்த்தால் நன்றாக இருக்கும் என்று தசரா குழுக்களின் மூத்த தலைவர்கள் சொல்கிறார்கள். என்றாலும் நவீன மாற்றங்களுக்கு ஏற்ற புதிய வரவாக டிஸ்கோ டான்சை பெரும்பாலான தசரா குழுக்கள் ஏற்றுக் கொண்டு விட்டன. எத்தனை டிஸ்கோ டான்சர்கள் வந்தாலும் அம்மனுக்காக வேடம் அணிபவர்கள் புனிதம் ஒரு போதும் குறையாது என்பது அவர்களது வாதமாக உள்ளது.

    தசரா குழு அன்றும் & இன்றும்

    தசரா குழுக்களிடம் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஊரில் ஒரு தசரா குழு இருக்கிறது என்றால் 10 முதல் 50 பேர் வரைதான் இருப்பார்கள். ஆனால் இன்று 50 முதல் 150 பேர் வரை இருக்கிறார்கள். இது போல ஒவ்வொரு விஷயத்திலும் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. இதுபற்றி மாதவன்குறிச்சி ஊர்த் தலைவரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ஏ.டி.கருப்பசாமி கூறியதாவது,

    எங்கள் ஊர் தசரா குழுவுக்கு ஈஸ்வரி தசரா குழு என்று பெயர். இந்த குழு தொடங்கப்பட்டு 78 ஆண்டுகள் ஆகிறது. தற்போது இந்த குழுவின் தலைவராக எஸ்.கார்த்திகேயன் இருக்கிறார். நான் 11 வயது முதல் சுமார் 40 ஆண்டுகள் பல்வேறு வேடங்கள் அணிந்துள்ளேன். பெண் வேடம், ராஜா ராணி வேடம், இன்ஸ்பெக்டர் வேடம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். என்னுடைய சிறு வயதில் தசரா குழுவினர் நடந்தே ஊர், ஊராக செல்வார்கள். ஆனால் இப்போது வாகன வசதி வந்து விட்டது.

    முன்பு 5 ரூபாய் முன்பணம் கொடுக்க கஷ்டப்படுவோம். ஆனால் இப்போது வேடமிடுபவர்களிடம் பணம் ஒரு பிரச்சினையாக தெரியவில்லை. முன்பெல்லாம் ஒரு குழுவுக்கு அதிகபட்சம் ரூ.5 ஆயிரம்தான் செலவாகும். இப்போது பல லட்சம் செலவிடுகிறார்கள். முன்பு ஆடை அலங்காரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. இப்போது அலங்காரங்கள் கன கச்சிதமாக போடப்படுகின்றன.

    முன்பு விரத முறைகளில் கடுமை இருக்கும். குலசையில் கொடி இறங்கிய பிறகுதான் வீட்டுக்கு வர முடியும். தற்போது அது மாறி விட்டது. முன்பெல்லாம் ஒரு குழுவில் 4 அல்லது 5 பேர்தான் காப்பு கட்டுவார்கள். இப்போது வேடமிடும் எல்லாரும் காப்பு கட்டுகிறார்கள். அப்போது உடல் உழைப்பு முக்கியமாக இருந்தது. இப்போது பொழுது போக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றார்.

    ×