search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kulasai mutharamman"

    • ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது.
    • தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தூத்துக்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். இதனால் தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் தங்களது வலது கையில் மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிந்தனர். ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் பக்தர்கள், அங்குள்ள கோவில் வளாகத்தில் தசரா பிறை அமைத்து தங்கியிருந்து ஒருவேளை மட்டும் பச்சரிசி உணவு உண்டு அம்மனை வழிபடுகின்றனர்.

    விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக சிவன், பிரம்மன், விஷ்ணு, விநாயகர், முருகபெருமான், ராமர், லட்சுமணர், நாராயணர், கிருஷ்ணர், காளி, அனுமார் உள்ளிட்ட பல்வேறு சுவாமி வேடங்களையும், அரசன், குறவன், கரடி, கிளி உள்ளிட்ட வேடங்களையும் அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் தசரா பக்தர்கள் குழுக்களாக வாகனங்களில் பல்வேறு ஊர்களுக்கும் சென்று காணிக்கை வசூலிக்கின்றனர்.

    அப்போது கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளையும், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர். இதனால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.

    தசரா திருவிழாவையொட்டி, குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபடுகின்றனர். விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு நாள் இரவிலும் அம்மன் வெவ்வேறு வாகனத்தில் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 10-ம் நாளான வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணியளவில் கடற்கரையில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசிப்பார்கள்.

    • மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா.
    • இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வெற்றி கிடைக்கும்

    தூத்துக்குடி:

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் 6-ம் நாள் நிகழ்ச்சியில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் முத்தாரம்மன் வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

    6-ம் நாளான நேற்று முன்தினம் இரவில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இ்க்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ஏராளாமான பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை வழிபட்டனர்.

    7-ம் திருநாளான நேற்று காலை 8 மணி முதல் இரவு 6.30 மணி வரை சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதி வந்தார். மாலை 4.30 மணிக்கு மகிஷாசுரன் வீதி உலா நடைபெற்றது. மாலை 4 மணி முதல் 8 மணி வரை சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • குலசேகரப்பட்டினத்தில் நவராத்திரி விழா திருவிழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
    • புரட்டாசி மாதம் நவராத்திரி சமயத்தில் ஊரெங்கும் ஆடல் பாடல் களை கட்டும்.

    குலசேகரப்பட்டினத்தில் நவராத்திரி விழா பெரும் திருவிழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

    இந்த சமயத்தில் ஊர் முழுவதும் உள்ள ஆட்ட கலைஞர்கள் அம்மன் வேடமிட்டு தெருவெங்கும் நடனமாடி

    திருவிழா நடத்த வேண்டிய தொகையை வீடுகள் தோறும் காணிக்கையாக பிச்சையெடுப்பர்.

    புரட்டாசி மாதம் நவராத்திரி சமயத்தில் ஊரெங்கும் ஆடல் பாடல் களை கட்டும்.

    கொண்டாடி விட்டு 10ம் நாள் விஜயதசமியன்று கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

    இந்த நவராத்திரி கொண்டாட்டமே குலசேகரப்பட்டினத்தின் மிகப்பெரும் திருவிழாவாகும்.

    இதை தவிர ஆடிக்கொடை திருவிழா, ஐப்பசி விசு, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி

    போன்ற தினங்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    அம்மை நோய் கண்டவர்கள் நலமடைய இங்கே பிரார்த்திக்கின்றனர்.

    மேலும் ஊனமுற்றவர்கள், மனநிலை பாதிப்படைந்தவர்கள் சொத்துக்கள் இழந்தவர்கள்,

    வியாபார விருத்தியடைய விரும்புபவர்கள் ஆகியோரும் மாவிளக்கு பூஜை,

    அங்க பிரதட்சனம், தீச்சட்டி எடுத்தல் வேல் அம்பு குத்தல் என தங்களால் இயன்ற நேர்த்தி கடன்களை செலுத்தி பலனடைகின்றனர்.

    • எல்லா கோவில்களிலும் சிவனுக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கும்.
    • இக்கோவிலில் சக்தி மயமாக சிவனும், சிவமயமாக சக்தியும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

    அழகிய கடற்கரை கிராமமான குலசை என அழைக்கப்படும் குலசேகரப்பட்டினம்

    திருநெல்வேலியிலிருந்து 68 கி.மீ. தொலைவிலும் திருச்செந்தூரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

    இயற்கை எழில் கொஞ்சும் கடலோர கிராமமான குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவிலேயே

    மைசூருக்கு அடுத்தப்படியாக நவராத்திரி பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    9 நாட்கள் மட்டுமின்றி 365 நாட்களும் இங்கே கொண்டாடப்படும் அம்மன் அருள்மிகு முத்தாரம்மன்.

    குலசை முத்தாரம்மன் என்றால் மிக பிரசித்தம்.

    தலப்பெருமை:

    பொதுவாக எல்லா கோவில்களிலும் சிவனுக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கும்.

    ஆனால் இக்கோவிலில் சக்தி மயமாக சிவனும், சிவமயமாக சக்தியும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

    குலசை முத்தாரம்மன் கோவிலில் எங்கும் காண முடியாத அதிசயமாக இங்கு

    மூலவர் ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பாள் முத்தாரம்மனும் சுயம்புவாக தோன்றி ஒரே விக்கிரகமாக

    வடக்கு திசை நோக்கி வீற்றிருக்கின்றனர்.

    • குலசேகரன்பட்டினத்தில் பிரசித்திப் பெற்ற தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • தீப்பெட்டி தொழில்சாலையின் மிக பழமையான கட்டிடச்சுவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் கவுன்சி லர்கள் கூட்டம் கூட்டரங்கில் நேற்று நடந்தது. யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார். ஆணையாளர் ஜான்சிராணி முன்னிலை தாங்கினார். கவுன்சிலர்கள் முருங்கை மகாராஜா, செல்வின், லோபோரின், முருகேஸ்வரி, ஜெயகமலா, தங்க லெட்சுமி மெல்சி ஷாலினி, ராமலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முதலில் வரவு செலவு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் நடந்த விவாதம் வருமாறு:-

    முருகேஸ்வரி (அ.தி.மு.க): குலசேகரன்பட்டினத்தில் பிரசித்திப் பெற்ற தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திரு விழாவை காண இந்தியா முழு வதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குலசையில் குவி வார்கள். பக்தர்களின் வசதிக்காக குலசை நகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக பக்தர்கள் அதிகளவு பயன்படுத்தும் குலசை வடக்கூர் ரோடு, காமராஜர்நகர் ரோடு, குலசை கடற்கரை ரோடு மற்றும் இணைப்பு ரோடுகள் அனைத்து ரோடுகளையும் உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.

    முருங்கை மகாராஜா (அ.தி.மு.க): குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அருகில் தீப்பெட்டி தொழில்சாலையின் மிக பழமையான கட்டிடச்சுவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளது. தசரா திருவிழாவின் போது சுவர் இடிந்து விழுந்தால் பலத்த உயிர் சேதம் ஏற்படும். எனவே ஆபத்தான சுவரை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

    தசரா திருவிழாவின் போது பக்தர்கள் குலசை மெயின் ரோட்டில் இருந்து ரெத்தினமாகாளி அம்மன் கோவில் வழியாக முத்தாரம்மன் கோவிலுக்கு செருப்பு அணியா மல் நடந்து வரு வார்கள். எனவே பக்தர்களின் வசதிக்காக இதனை பேவர்பிளாக் சாலையாக அமைக்க வேணடும்.

    செல்வின் (கவுன்சிலர்): மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாலை நேரங்களில் சிகிச்சை அளிக்க மருத்துவ பணியாளர்கள் இல்லை. எனவே டாக்டர் மற்றும் பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.

    பாலசிங் (சேர்மன்): அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் அறிவுறுத்தலின் படி தசரா திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடங்கி உள்ளது. குலசே கரன்பட்டினத்தில் 3 முக்கியமான ரோடு போடப்பட்டுள்ளது. கல்லா மொழியில் சிமெண்ட் ரோடு அமைக்கும் பணி தொடங்க உள்ளது. தசரா திருவிழாவிற்கு முன்பாக குலசையில் உள்ள அனைத்து ரோடுகளும் மரமாத்து செய்யப்பட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்து தரப்படும்.

    தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுகோள் விடுத்து பேசினர்.

    • குலசேகரப் பட்டினத்தில் சுயம்பு வடிவிலேயே முத்தாரம்மனை பக்தர்கள் ஆரம்ப காலங்களில் வழிபட்டு வந்தனர்.
    • அந்தப் புனிதமான சிலையை உணர்ச்சிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டு அவர்கள் குலசேகரன்பட்டினம் திரும்பினர்.

    உருவத்தை காட்டி சிலை செய்ய சொன்ன முத்தாரம்மன்

    குலசேகரப் பட்டினத்தில் சுயம்பு வடிவிலேயே முத்தாரம்மனை பக்தர்கள் ஆரம்ப காலங்களில் வழிபட்டு வந்தனர். அப்போது அன்னையின் திருமேனியினைக் கண்குளிரக் கண்டு, அவளைத் தரிசனம் செய்ய வேண்டும் என்று அவ்வூர் பக்தர்களுக்கு ஆவல் ஏற்பட்டது. அம்பாளிடம் இதற்காக மனமுருகி அவர்கள் வேண்டினர்.

    அப்போது ஒருநாள், கோவில் அர்ச்சகரின் கனவில் அம்மன் தோன்றினாள். "எனது திருவுருவைக் காண நீங்கள் அனைவரும் ஆவலாக இருப்பது தெரிகிறது. கன்னியாக்குமரி அருகே மைலாடி என்றொரு சிறிய ஊர் உள்ளது. அங்கு செல். அனைத்தும் நிறைவேறும்" என்று கூறினாள்.

    மைலாடி பகுதியில் அதிக அளவில் பாறைகள் உண்டு. இதனை வெட்டி எடுத்து கலைநுணுக்கத்துடன் கடவுள் சிலைகளை நிறைய பேர் செய்து வருகின்றனர். இப்படி பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப, கற்களில் அற்புதமாக சிலை வடிவமைத்துக் கொடுக்கும் ஆற்றலை சுப்பையா ஆசாரி என்பவர் பெற்றிருந்தார்.

    அவரது கனவிலும் குலசை முத்தாரம்மன் தோன்றினாள். குலசேகரன் பட்டினத்தில் தான் சுயம்புவாக விளங்கி இருப்பது பற்றி விரிவாகக் கூறினாள். அதுமட்டுமல்லாமல், தன் உருவத்தைக் காண அங்குள்ள பக்தர்கள் அனைவரும் ஆவலாக இருப்பதையும் ஆசாரிக்குத் தெரியப்படுத்தினாள்.

    பின்னர், தனது மற்றும் ஞானமூர்த்தீஸ்வரர் திருமேனியுடன் ஆசாரிக்குக் காட்சி அளித்த அன்னை, தங்களை நன்கு உற்று நோக்குமாறும், தென் திசையில் உள்ள ஆண் பெண் பாறையில் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் தங்கள் திருவுருவச் சிலையை வடித்துக் கொடுக்குமாறும் உத்தரவிட்டாள்.

    தங்கள் சிலைகளைச் செய்து, தாங்கள் சுயம்புவாக முளைத்துள்ள இடத்திற்கு அருகாமையில் அந்தக் கற்சிலையை நிறுவ வேண்டும் என்றும் அந்தக் கனவில் ஆசாரிக்குக் கட்டளையிட்டு முத்தாரம்மன் மறைந்தாள். இந்தக் கனவு கலைந்ததும் திடுக்கிட்டார் ஆசாரி. கனவில் முத்தாரம்மன் தனக்கு ஆணை பிறப்பித்ததை உணர்ந்தார். குலசேகரப்பட்டினம் எங்கிருக்கிறது என்பது பற்றி பலரிடமும் விசாரித்து அறிந்து கொண்டார். அதன்பிறகு தன் மனதில் திடமாகப் பதிந்திருந்த அம்பாள் மற்றும் சுவாமியின் திருமேனியை அப்படியே கற்களில் சிலையாக வடித்தார்.

    முத்தாரம்மன் கனவில் கூறியபடி குலசை அர்ச்சகர், அவ்வூரை சேர்ந்த சிலருடன் மைலாடி சென்றார். சுப்பையா ஆசாரி யார் என்று விசாரித்து அறிந்து அவரை சந்தித்தார்கள். சுப்பையா ஆசாரி ஏற்கனவே ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் சிலையை செய்து வைத்திருந்தார். அந்தப் புனிதமான சிலையை உணர்ச்சிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டு அவர்கள் குலசேகரன்பட்டினம் திரும்பினர். முத்தாரம்மனின் விருப்பப்படியே அந்தச் சிலை, சுயம்புவாக முளைத்துள்ள அம்பாளின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இந்த அன்னைதான் குலசேகரன் பட்டினத்தில் இன்றும் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறாள்.

    முத்தாரம்மன் அருகே ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்திஸ்வரர் வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் முக்கியச் சிறப்பாகும். இதுபோல் அம்பாளும், சிவனும் ஒருசேர வீற்றிருந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே.

    இதில் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், சுவாமி, அம்பாள் ஆகிய இருவருமே வடக்கு நோக்கி வீற்றிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் வேறு எந்த தலத்திலும் இத்தகைய காட்சியை காண இயலாது.

    மேலும் அம்பாளுக்கும், சிவனுக்கும் ஒரே நேரத்தில் பூஜை நடைபெறுகிறது என்பதும் முக்கிய விஷயமாகும். இந்த கோவிலின் தலமரமாக வேம்பு விளங்குகிறது 

    • விரத நெறியை மீறும் இச்செயல் பாவம் சேர்க்கக் கூடியது
    • 60 ஆண்டுகளுக்கு மேலாக வேடம் போடும் திரு.கந்தசாமி

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அருளைப் பெற வித, விதமாக வேடம் போட்டு தர்மம் எடுத்து வழிபாடு செய்யும் பழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டது. ஆனால் அந்த பழக்கம் கடந்த நூற்றாண்டில் மற்ற ஊர்களுக்கும் பரவி தசரா திருவிழாவாக உருவெடுத்தது.

    அதன் பிறகு கால மாற்றங்களுக்கு ஏற்ப வேடமிடுவதில் எத்தனையோ மாற்றங்களும், புதுமைகளும் வந்து விட்டன. என்றாலும், "முத்தாரம்மன் அருள் பெறுவது ஒன்றே இலக்கு" என்ற தசரா குழுவினரின் பாரம்பரிய மரபு மட்டும் மாறவே இல்லை.

    அதற்கு இன்று நம்மிடையே உதாரணமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கந்தசாமி.

    குலசேகரன்பட்டினம் காவடி பிறைத் தெருவில் வசித்து வரும் இவர் நாடார் மைனர் தசரா குழுவின் மூத்த உறுப்பினர் ஆவார். குலசை ஆலயத்துக்கு வேடமிடும் பக்தர்களில் இவர் அளவுக்கு, இத்தனை ஆண்டுகள் வேடமிட்டவர் வேறு யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சிறப்புக்குரிய கந்தசாமியிடம் இருந்துதான் வேடம் போடுவது, வேடம் போடுவதற்கான பொருட்கள் தயாரிப்பது உள்பட பல விஷயங்கள் மற்ற ஊர் தசரா குழுவினரிடம் பரவியதாக சொல்கிறார்கள்.

    நல்ல ஆஜானுபாகுவான, கட்டான உடலமைப்புடன் கம்பீரமாக காணப்படும் கந்தசாமி தன் உயிர் இறுதி மூச்சு உள்ள வரை குலசை முத்தாரம்மனுக்காக வேடமிட சபதம் எடுத்துள்ளதாக கூறினார். எப்படி உங்களால் 60 ஆண்டுகளுக்கு மேலாக வேடமிட முடிந்தது? என்றதும், கந்தசாமி மலரும் நினைவுகளில் மூழ்கியபடி சரளமாக மடை திறந்த வெள்ளமென சொல்லத் தொடங்கினார்.,

    எனக்கு அப்போது 10 வயது இருக்கும். குலசேகரன்பட்டினம் முழுவதும் காலரா பரவி இருந்தது. நிறைய பேர் சிகிச்சை எடுக்க வழியில்லாமல் செத்துப் போனார்கள். எங்கள் குடும்பத்தில் எனக்கு உள்பட என் அக்கா & தம்பி 7 பேருக்கு காலரா பாதித்தது. 7 பேரும் பிழைப்பார்களா? என்று எல்லாருக்கும் சந்தேகம் வந்து விட்டது. அப்போது எனது தாயார், குலசை முத்தாரம்மனை நோக்கி கும்பிட்டப்படி, "தாயே 7 பேருக்கும் குணமாகி விட வேண்டும். அதற்கு காணிக்கையாக என் மகன் கந்தசாமி அவன் ஆயுள் முழுவதும் வேடம் அணிந்த தர்மம் எடுத்து உடன் சன்னதிக்கு வருவான்" என்று வேண்டி கொண்டார்.

    மறுநாளே மருந்து, மாத்திரை இல்லாமல் நாங்கள் 7 பேரும் பிழைத்து கொண்டோம். இதனால் மறு ஆண்டு முதல் நான் வேடம் போட தொடங்கினேன். என் 19வது வயதில் சீதாலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு 1 மகன், 2 மகள்கள் பிறந்தனர். யாரும் நான் வேடம் போடுவதை தடுக்கவில்லை. மாறாக ஆண்டு தோறும் உற்சாகப்படுத்தினார்கள். 1986ம் ஆண்டு மகன் மரணம் அடைந்ததால் அந்த ஆண்டு மட்டும் என்னால் வேடம் போட இயலவில்லை. இத்தனை ஆண்டுகளில் 6 ஆண்டுகள் ராஜா வேடம், 7 ஆண்டுகள் பெண் வேடம், 6 ஆண்டுகள் குறத்தி வேடம் போட்டேன்.

    கிருஷ்ணர் வேடத்தை அதிகபட்சமாக 14 ஆண்டுகள் போட்டேன். 10 ஆண்டுகள் கர்ணன் வேடம், 4 ஆண்டுகள் எமதர்மர் வேடம் போட்டேன். 3 ஆண்டுகள் இசக்கியம்மன் வேமணிந்தேன். 2 ஆண்டுகளாக இந்திரன் வேடம் போட்டேன். நான் போடும் வேடங்களுக்குரிய பொருட்களை மிகவும் அழகாக நானே தயாரித்து கொள்வேன்.

    வேடப்பொருட்களை தசரா குழுவினரே தயாரித்துக் கொள்ளும் பழக்கத்தை நான்தான் ஏற்படுத்தினேன். என்னிடம் கற்றவர்கள் மற்ற ஊர்களில் அதை பரப்பினார்கள். என் பேரனுக்கு இப்போது 17 வயதாகிறது. முத்தாரம்மன் அருள் பெற வேடம் போடு என்று சொன்னேன். கல்லூரியில் படிப்பதாலோ., என்னவோ, அவன் வெட்கப்படுகிறான். என் காலத்துக்கும், இப்போதைய தலைமுறைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

    நான் சிறுவனாக இருந்த போது 41 நாட்கள் விரதம் இருப்பார்கள். இப்போது 21 நாட்கள், 11 நாட்கள் என்று சுருக்கி விட்டார்கள். அந்த காலத்தில் முத்தாரம்மனை நினைத்து பயந்து, பயந்து விரதம் இருந்தனர். விரதம் தொடங்கியதும் கட்டிலில் படுக்க மாட்டார்கள். நாற்காலியில் உட்கார மாட்டார்கள். வெளியில் சாப்பிட மாட்டார்கள். வீட்டுக்கு கூட போகாமல் தனி குடிலில் இருப்பார்கள். ஆனால் இன்று வேடம் அணிபவர்கள் சர்வ சாதாரணமாக புகை பிடிக்கிறார்கள். விரத நெறியை மீறும் இச்செயல் பாவம் சேர்க்கக் கூடியது. தர்மம் எடுத்து அதை ஆலயத்தில் சேர்ப்பதிலும் ஒழுங்கு இல்லை. 7 வீடுகளில் தர்மம் எடுத்தாலே போதும் என்று முத்தாரம்மன் கூறி இருக்கிறாள்.

    அது போல காப்பு கட்டிய பிறகுதான் வேடம் போட வேண்டும். ஆனால் கடந்த சில வருடங்களாக காப்பு கட்டும் முன்பே பலரும் கம்மல் போட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் பெண் வேடம் போடப் போகிறார்கள் என்று ஒரு மாதத்துக்கு முன்பே தெரிந்து விடுகிறது. இதெல்லாம் ரொம்ப தப்பு. காளி வேடும் போடும் சிலரும் விதியை மீறுவது மனதுக்கு வேதனை தருகிறது. சூரசம்ஹாரம் முடிந்து விட்டால் அம்மன் சாந்தம் ஆகி விடுவாள். ஆனால் அதன் பிறகும் காளி வேடம் போட்டு இருப்பவர்கள் ஆக்ரோஷமாக ஆடுவதை ஏற்க இயலாது. நான் வாலிப வயதில் இருந்த போது வேடம் போடுவதற்கு நிறைய செலவு செய்ய மாட்டோம். மாட்டு வண்டி சக்கரத்தில் உள்ள கருப்பு கிரீஸ் மையை எடுத்து முகத்தில் தேய்த்துக் கொண்டு தகர டப்பாவை கழுத்தில் தொங்கப் போட்டு கொண்டு வீடு, வீடாக சென்று தர்மம் எடுப்போம்.

    "அம்மா..... தாயே.... உன் அருளைப் பெற பிச்சை எடுக்கும் இழி நிலைக்கும் கீழாக என்னை நான் தாழ்த்திக் கொள்கிறேன்" என்று மனதுக்குள் பயப்பக்தியுடன் வேண்டியபடி ஒவ்வொருவரும் நடந்து கொள்வார்கள். ஆனால் இப்போது வேடம் போடுபவர்கள் தங்களை அலங்கரிக்கும் ஆடைகளுக்கு மட்டுமே பல ஆயிரம் செலவு செய்வது பிரமிப்பாக உள்ளது.

    அந்த காலத்தில் எங்களுக்கு இப்படியெல்லாம் அலங்காரப் பொருட்கள் கிடைக்கவில்லை. உருளைக் கிழங்கு, வாழைக்காய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை கயிறில் கட்டி, கழுத்தில் தொங்க விட்டிருப்போம். காதில் கம்மலுக்கு பதில் வததலை கட்டி அணிந்திருப்போம். எங்களது இந்த வேடங்களை மக்கள் ஆர்வமாக வந்து பார்ப்பார்கள். குலசை கோவிலுக்கு வேடம் போட்டிருப்பவர் ஊர் எல்லையில் வந்து இருக்கிறார் என்றால் ஊரே திரண்டு வரும். வீடு தவறாமல் தர்மம் தருவார்கள். அந்த நிலை இப்போது இல்லை.

    15 ஆண்டுகளுக்கு முன்பு வரை காளிவேடம் அணிந்து இருப்பவர் ஒரு ஊருக்குள் சென்றால், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மனே நம் வீட்டுக்கு வந்து விட்டதாக நினைப்பார்கள். பணிவோடு அருள்வாக்கு கேட்பார்கள். காளி என்ன காணிக்கை கேட்டாலும் மறுக்காமல் கொடுப்பார்கள். இப்போது காணிக்கை கேட்டால் "பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்கிறார்கள். தசரா குழுக்களிடம் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள்தான் மக்கள் மன நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. மற்றபடி முத்தாரம்மனுக்குரிய பணிகள் ஆண்டுக்கு ஆண்டு சிறப்பாகவே நடக்கிறது. அவள் நிகழ்த்தும் அற்புதங்கள் அன்று போல இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    ஒரு தடவை நான் இலங்கை செல்ல ராமேசுவரம் சென்றிருந்தேன். கள்ளத்தோனி ஏற முயன்ற சமயத்தில் ரோந்து பணியில் உள்ள போலீஸ்காரர்கள் வந்து விட்டனர். அப்போது நான் சட்டை பைக்குள் வைத்திருந்த குலசை முத்தாரம்மன் படத்தை தொட்டப்படி அம்மா நீதான் என்னை காப்பாத்தணும் என்று வேண்டினேன். அம்மன் அருளால்தான் அன்று நூலிழையில் தப்பினேன்.

    குலசை முத்தாரம்மனை நம்பியவர்கள் வாழ்வில் நல்லதே நடந்துள்ளது. குலசை சுற்றுப் பகுதியில் ஒரு வாய் கஞ்சிக்கு கூட வழியில்லாமல் இருந்தவர்கள் இன்று குபேரனாக இருக்கிறார்கள் என்றால் அது முத்தாரம்மன் அருளால் நடந்த மகிமைதான் என்றார்.

    • மீண்டும் மன்னன் படையெடுத்து வெற்றி பெற்றான். இதனால் அம்மனுக்கு கோயில் கட்டினான்.
    • சமீப ஆண்டுகளாக வேடத்தை அறிய பக்தர்கள் அருள்வாக்கு கேட்பது குறைந்து விட்டது.

    புராண கதைகளும், பெயர்காரணமும்

    குலசேகர பாண்டிய மன்னன், சுற்றியுள்ள சிற்றரசர்களிடம் போரிட்டு வெற்றிபெற்று தம் ஆதிக்கத்தை மதுரை முழுவதும் பரப்பினார். இதன் விளைவாக கேரளா நாட்டை கைப்பற்ற எண்ணி திருவனந்தபுர மன்னனிடம் தோல்வியுற்றான். வரும் வழியில் இரவு வெகு நேரமானதால் தூங்கிவிட்டான் பாண்டிய மன்னன். அவன் முன் அறம் வளர்த்த நாயகி அம்மன் தோன்றினாள்.

    "பாண்டிய மன்னா தூங்கிவிடாதே, தூங்கி உன நாட்டின் பெருமை இழந்து விடாதே ஒருமுறை தோற்றால் என்ன?" மறுமுறை முயற்சி செய் என்று அருள்வாக்கு சொல்லி ஆசிர்வதித்து மறைந்தாள். மீண்டும் மன்னன் படையெடுத்து வெற்றி பெற்றான். இதனால் அம்மனுக்கு கோயில் கட்டினான். கோவில் அருகே ஊர் அமைந்ததால் மன்னனின் நினைவாக குலசேகர பட்டினம் என பெயர் பெற்றது.

    முத்தாரம்மனின் ஆதி பெயர் தட்டத்தி அம்மனாகும். அம்மனுக்கு கோபம் வரும் சமயம் ஊரில் உள்ள மக்களுக்கு முத்து வாரி போடுவது தட்டத்தி அம்மனின் வழக்கம். அவ்வாறு முத்துவாரி போடுவதால் அம்மனுக்கு முத்தாரம்மன் என்று பெயர் மாற்றப்பட்டது.

    முத்தாரம்மன் பீட சிறப்பு

    முன்பொரு காலத்தில் வியாபாரிகள் தோனிகளில் சரக்குகளை எடுத்து சென்று வியாபாரம் செய்து வருவது வழக்கம். ஒரு செட்டியார் தன் மனைவியுடன் குலசேகர பட்டின கடற்கரையில் சென்றபோது கடல் அலையால் அவருடைய சரக்குகள் கடலில் மூழ்கியது. வேதனையுற்ற செட்டியாரும், அவர் மனைவியும், சிவனை வேண்டினார்கள். சிவனும் அவர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கு காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என கேட்டார். "ஆண்டவனே எங்களுக்கு காட்சி தந்ததே நாங்கள் செய்த பாக்யம், நீங்கள் (சிவனும் பார்வதியும்) இருவரும், திருமண கோலத்தில் இதே போல் பக்தர்களுக்கு காட்சி தர வேண்டுகிறேன் என்று வேண்டினார். இறைவனும் "அவ்வாறே ஆகட்டும்" என்று கோயில் பீடத்தில் காட்சி தருகிறார்.

    குலசையில் 8 அம்மன்கள்

    உலகையே தன் கைக்குள் கொண்டுவர அசுரபலம் கொண்ட அரக்கன் சிவனை நோக்கி பல ஆண்டுகளாக கடுந்தவம் புரிகின்றான். சிவன் உடனே அந்த வரத்தை வழங்குகிறார், அசுரன் உடனே சிவனையே கொல்ல முற்படுகிறான். பார்வதி தேவி துர்கையாக மாறி அவனை அழிக்கிறாள். இந்த நிகழ்ச்சியை கருவாக கொண்டுதான் 10ம் நாளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சூரசம்காரம் செய்யும்போது கீழேவிழும் அசுரனின் தலையை துர்கை அம்மன் சிம்மவாகனத்துடன் தன் கையில் ஏந்துகிறாள். அசுரனின் ரத்தம் பூமியில் பட்டவுடன் இரத்தத்தின் வழயாக மீண்டும் அசுரனாக உருவெடுக்ககூடாது என்று எண்ணிய துர்க்கை அம்மன் சண்டி அம்மனை அசுரனின் இரத்தத்தை உறுஞ்ச கட்டளையிட்டாள். அவ்வாறே உறிஞ்சிய துளிகள் கீழே விழும் போது காளியம்மனாக உருவெடுத்தாள்.

    இங்கு கருங்காளி, பத்ரகாளி, சந்தியம்மன், அங்காளம்மன், தட்டத்தி அம்மன், பரமேஸ்வரி, வீராகாளி, அறம் வளர்த்த நாயகி அம்மன் 8 வகை காளி அம்மன்கள் குடியிருப்பது சிறப்பு அம்சமாகும். இதில் வீராகாளியம்மனுக்கு மட்டும் ஊருக்கு வெளியே ஆலயம் அமைந்துள்ளது. இப்படி பல வகையிலும் சிறப்பு வாய்ந்த முத்தாரம்மன் தசரா திருவிழாவை கான மக்கள் அலைகடலென திரண்டு வருகிறார்கள்.

    வேடம் சொல்லும் அம்மன்

    குலசை கோவிலில் தசரா பண்டிகையையட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு கடவுளின் வேடங்களை அணிந்த படி வீதி உலாவாக செல்வர். காளி, ஆஞ்சநேயர், சிவன், முருகன்,விநாயகன் என பல்வேறு கடவுளைப் போல பக்தர்கள் வேடம் புனைந்து வருவது வேறு எங்குமே இல்லாத சிறப்பு.

    இப்படி வேடம் புனையும் பக்தர்கள் அனைவருமே ஏதாவது ஒரு வேண்டுதலுக்கான நேர்த்திக் கடனைத் தீர்க்கவே இப்படி வருகிறார்கள். அதே வேடத்தில் ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து அதை கோவிலில் செலுத்துகிறார்கள்.

    பல்வேறு அவதாரங்கள் புனைந்து அம்மை, அப்பனைத் தரிசிக்கவும் வேண்டுதலைக் காணிக்கையாக்கவும், ஆண்டுதோறும் பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படும். தசரா பண்டிகையில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் திரள்கின்றனர்.

    ஆண்டுக்கு ஆண்டு இங்கு வரும் பக்தர்களின் கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது. விரதம் தொடங்கும் முதல் நாளின்போது குலசை முத்தராம்மன் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், பூசாரியிடம் ஆசி பெற்று காப்பு கட்டி கொள்வார்கள். அவர்கள் அணியும் வேடத்தை அவர்களே தீர்மானிப்பதில்லை. அதற்கும் ஒரு வழிமுறை உள்ளது.

    முத்தாரம்மன் சந்நிதியில் முத்து போட்டுப் பார்க்கும் பூசாரிகள், ஒவ்வொரு பக்தரும் என்ன வேடம் அணிய வேண்டும் என அருள்வாக்காகச் சொல்கிறார்கள். அதன்படியே பக்தர்கள் வேடமணிந்து பத்து நாள் திருவிழாவில் பங்கு பெறுவர். பத்து நாள் வழிபாடு முடிந்ததும் கடலில் நீராடி விரதத்தை முடித்துக் கொள்வார்கள். ஆனால் சமீப ஆண்டுகளாக வேடத்தை அறிய பக்தர்கள் அருள்வாக்கு கேட்பது குறைந்து விட்டது.

    ஆனால் சமீப ஆண்டுகளாக வேடத்தை அறிய பக்தர்கள் அருள்வாக்கு கேட்பது குறைந்து விட்டது.

    குலசேகரன்பட்டினத்தில் அன்னை முத்தாரம்மன் சுவாமி ஞானமூர்த்தீசுவரரோடு வடதிசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றாள்.
    குலசேகரன்பட்டினத்தில் அன்னை முத்தாரம்மன் சுவாமி ஞானமூர்த்தீசுவரரோடு வடதிசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றாள்.

    கர்ப்ப கிரகத்தில் சுவாமி அம்பாள் இருவரும் சுயம்பு மூர்த்திகளாக விளங்குகின்றனர். அம்பாள் தலையில் ஞானமுடி சூடி, கண்களில் கண்மலர் அணிந்து, வீரப்பல் புனைந்து, கழுத்தில் தாலிப்பொட்டும், மூக்கில் புல்லாக்கும் மூக்குத்தியும் தரித்து அழகுத் திருமேனியோடு விளங்குகின்றாள்.

    அன்னை முத்தாரம்மனுக்கு நான்கு திருக்கைகளும், வலப்புற மேல் திருக்கையில் நாகபாசமும், கீழ்த் திருக்கையில் திருநீற்றுக் கொப்பரையும் தாங்கியுள்ளாள்.

    சுவாமி ஞானமூர்த்தீசுவரருக்கு இரண்டு திருக்கைகள் மட்டுமே உள்ளன. வலப்புற திருக்கரத்தில் செங்கோல் தாங்கியுள்ளார். இடப்புறத் திருக்கையில் திருநீற்றுக் கொப்பரை ஏந்தியுள்ளார்.

    அம்பாள் வலது திருவடியை மடக்கி இடது தொடையில் வைத்த நிலையிலும், சுவாமி இடது திருவடியை மடக்கி வலது தொடையில் வைத்த நிலையிலும் ஞானபீடத்தில் அமர்ந்து ஏனைய திருவடிகளைத் தொங்க விட்ட நிலையில் அமர்ந்துள்ளனர்.
    ×