search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WPL"

    • கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார்.
    • குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் ஸ்னே ரானா 2 விக்கெட் கைப்பற்றினார்.

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. 5 அணிகள் பங்கேற்றுள்ள இந்த சீசனின் துவக்க ஆட்டம் நவி மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார். ஹெய்லி மேத்யூஸ் 47 ரன்களும், நாட் ஷிவர் பிரன்ட் 23 ரன்களும், அமெலியா கெர் ஆட்டமிழக்காமல் 45 ரன்களும் அடித்தனர்.

    குஜராத் தரப்பில் ஸ்னே ரானா 2 விக்கெட் கைப்பற்றினார். ஜார்ஜியா, தனுஜா, ஆஷ்லெய் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது. 

    • மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை 5 அணிகளின் கேப்டன்கள் அறிமுகம் செய்தனர்.
    • பாலிவுட் நட்சத்திரங்களான கியாரா அத்வானி, கிருத்தி சனோன் உள்ளிட்டோரின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய இரு மைதானங்களில் இந்த போட்டி அரங்கேறுகிறது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன.

    போட்டி தொடங்குவதற்கு முன்பாக, இன்று மாலை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் பிரமாண்டமான துவக்க விழா நடைபெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் பிரீமியர் லீக் குறித்து மந்த்ரா பேடி அறிமுக உரையாற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பாலிவுட் நட்சத்திரங்களான கியாரா அத்வானி, கிருத்தி சனோன் மற்றும் பஞ்சாபி பாடகர் ஏ.பி. தில்லான் ஆகியோரின் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

    பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் மூத்த நிர்வாகிகள் மேடையில் ஏறி, அனைவரையும் வரவேற்றனர். போட்டியில் பங்குபெறும் ஐந்து அணிகளின் கேப்டன்களையும் மேடைக்கு அழைத்தனர். அவர்கள் மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை அறிமுகம் செய்தனர்.

     

    துவக்க விழா முடிந்ததும் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பெர்த் மூனே பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    • தொடக்க ஆட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    • போட்டிக்கான தொடக்க விழா மாலை 6.25 மணிக்கு தொடங்கும்.

    மும்பை:

    முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய இரு மைதானங்களில் இந்த போட்டி அரங்கேறுகிறது.

    இந்த பெண்கள் கிரிக்கெட் திருவிழாவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன.

    ஐ.பி.எல். போன்று ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீராங்கனைகள் ஆடும் லெவனில் இடம் பெற முடியும். இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் இடையேயான தொடக்க ஆட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது. டாஸ் இரவு 7.30 மணிக்கு போட்டப்படும். இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    போட்டிக்கான தொடக்க விழா மாலை 6.25 மணிக்கு தொடங்கும். தொடக்க விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சி நடக்கிறது. இப்போதைக்கு இந்த போட்டியை காண பெண்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    • ஆஸ்திரேலியாவை சேர்ந்த பென் சாயரை தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வதாகவும் ஆர்சிபி அணி அறிவித்தது.
    • ஏடிபி துபாய் ஓபன் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் அணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி 20 கிரிக்கெட் போட்டி மும்பையில் அடுத்த மாதம் 4-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இடம் பெற்றுள்ள ஆர்சிபி அணி ஆஸ்திரேலியாவை சேர்ந்த பென் சாயரை தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வதாகவும் அறிவித்தது.

    சாயர் நியூசிலாந்து பெண்களின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். மேலும் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுடன் மகளிர் உலகக் கோப்பை வென்ற அணியில் உதவி பயிற்சியாளராக இருந்தார்.

    இந்நிலையில் தொடக்கப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆலோசராக சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஏடிபி துபாய் ஓபன் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் அணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவரது கடைசி தொழில்முறை போட்டியாக இருக்கலாம். 36 வயதான மிர்சா, ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னதாக தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரும் அவரது கூட்டாளியான ரோஹன் போபண்ணாவும் கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்மிருதி மந்தனா, எலிஸ் பெர்ரி, மேகன் ஷட், சோஃபி டிவைன், டேன் வான் நீகெர்க் மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ், தொடக்க ஏலத்தில் நட்சத்திர வீராங்கனைகளுடன் களமிறங்குகிறது.

    • பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவும் மாணவியை பாராட்டினார்.
    • இந்த வீடியோவை இதுவரை மில்லியன் கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு ஷேர் செய்து வருகின்றனர்.

    சமீபத்தில் பெண்கள் பிரீமியர் லீக் ஏலத்தில் இந்திய வீராங்கனைகள் பல கோடி ரூபாய்க்கு ஏலம் போனார்கள். இந்நிலையில் ராஜஸ்தான் கிராமத்தில் ஒரு சிறுமி கிரிக்கெட்டில் பொளந்துகட்டும் வீடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதில் பள்ளி மாணவி ஒருவர் ஒரு மைதானத்தில் தன் வயது சக சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி அபாரமான பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களை அடித்து அசத்தியுள்ளார்.

    இந்த வீடியோவில் வைரலாகும் அந்த சிறுமியின் பெயர் முமல் மெஹர். இவருக்கு 14 வயதுதான் ஆகிறது. இவரது அதிரடியான பேட்டிங் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரும் பகிர்ந்துள்ளார்.

    மாணவியின் பேட்டிங்கை பார்த்து மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவும் மாணவியை பாராட்டினார்.


    ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உள்ள ஷெர்புரா கனாசர் பகுதியைச் சேர்ந்தவர் முமல் மெஹர். இது ஒரு சிறிய கிராமம். அவருக்கு கிரிக்கெட் விளையாடுவது பிடிக்கும். வெறும் 34 வினாடிகள் பேட்டிங் செய்து அனைத்து தரப்பு மக்களின் இதயங்களையும் வென்றுள்ளார்.

    மூமல் கிராமத்தில் உள்ள தனது வயது சிறுவர்களுடன் தினமும் பள்ளியிலிருந்து திரும்பியதும் கிரிக்கெட் விளையாடுவார். மூமல் மெஹர் எட்டாம் வகுப்பு மாணவர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பேட்டிங் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிரும் போது அது வைரலாகி வருகிறது.

    முமல் மெஹர் கடந்த ஜனவரி 31-ம் தேதி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை இதுவரை மில்லியன் கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு ஷேர் செய்து வருகின்றனர்.

    • மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரின் தொடக்கத்தில் குஜராத், மும்பை அணிகள் மோதுகின்றன.
    • ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி 20 கிரிக்கெட் போட்டி மும்பையில் அடுத்த மாதம் 4-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது.

    87 வீராங்கனைகள் ரூ.59½ கோடிக்கு ஏலம் விடப்பட்டனர். அதிகபட்சமாக இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை ரூ.3.4 கோடிக்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வாங்கியது. இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரை ரூ.1.8 கோடிக்கு மும்பை அணி வசப்படுத்தியது.

    இந்நிலையில், பிரிமீயர் லீக் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டார். இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். 2-வது, 3-வது இடத்தைப் பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி காணும் அணி இறுதிச்சுற்றை எட்டும். மொத்தம் 22 ஆட்டங்கள் நடக்கின்றன. தினமும் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.

    மார்ச் 4-ம் தேதி டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் அரங்கேறும் தொடக்க லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மறுநாள் இரட்டை ஆட்டங்களாக பெங்களூரு- டெல்லி, உ.பி. வாரியர்ஸ்- குஜராத் அணிகள் சந்திக்கின்றன. மார்ச் 26-ம் தேதி இறுதிப்போட்டி மும்பை பிரபோர்னில் நடைபெறும்.

    • மகளிர் பிரீமியர் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் வீராங்கனைகளுக்கு வாய்ப்புகள் கிடைக்காதது துரதிஷ்டவசமானது.
    • மகளிர் பிரீமியர் லீக் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

    மகளிர் பிரீமியர் லீக்கின் முதலாவது சீசன் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 5 அணிகள் விளையாட உள்ளன. இந்த 5 அணிகளுக்கும் வீராங்கனைகளை உறுதி செய்ய மும்பையில் நேற்று ஏலம் நடைபெற்றது. இதில் 5 அணி நிர்வாகங்களும் தங்களுக்கு தேவையான வீராங்கனைகளை ஏலத்தில் எடுத்தனர்.

    இந்நிலையில் மகளிர் பிரீமியர் போட்டியில் விளையாட ஆசையாக உள்ளது என்று பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

    மகளிர் பிரீமியர் லீக் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இதில் பல நாடுகளில் உள்ள வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் ஆண்கள் ஐபிஎல் போலவே மகளிர் ஐபிஎல் போட்டியிலும் பாகிஸ்தான் வீராங்கனைகள் தேர்வு செய்யப்படவில்லை.

    இது குறித்து பாகிஸ்தான் மகளிர் அணி கேப்டன் பிஸ்மா கூறியுள்ளதாவது:-

    பெண்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் வீராங்கனைகளுக்கு வாய்ப்புகள் கிடைக்காதது துரதிஷ்டவசமானது. மகளிர் ஐபிஎல் போட்டியில் விளையாட எங்களுக்கும் ஆசை உண்டு. ஆனால் அது எங்கள் கையில் இல்லை என்றும் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

    • ஜூனியர் உலகக் கோப்பை போட்டியை பார்த்த பிறகு அவர்களை போல நாமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை பெற்றுள்ளோம்.
    • ஏலத்திற்கு முன்பாக எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம் (பாகிஸ்தானுக்கு எதிரான மோதல்) நடக்கிறது.

    மும்பை:

    முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டி அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதற்கான ஏலம் வருகிற 13-ந்தேதி மும்பையில் நடக்கிறது. வீராங்கனைகள் ஏலம் முதல்முறையாக நடப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு முந்தைய நாள் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது.

    இதனால் கவனச்சிதறல் ஏற்படுமா என்பது குறித்து இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடம் கேட்கப்பட்ட போது அவர் கூறியதாவது:-

    ஏலத்திற்கு முன்பாக எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம் (பாகிஸ்தானுக்கு எதிரான மோதல்) நடக்கிறது. எங்களது கவனம் எல்லாம் அந்த போட்டி மீதே இருக்கும். மற்ற எல்லாவற்றையும் விட உலகக் கோப்பை தொடரே மிகவும் முக்கியமானது. ஒரு வீராங்கனையாக எது நமக்கு முக்கியமானது, கவனச்சிதறல் இல்லாமல் எப்படி அதன் மீது தொடர்ந்து கவனம் செலுத்துவது என்பது தெரியும்.

    நாங்கள் எல்லோரும் ஓரளவு முதிர்ச்சியானவர்கள். எது முக்கியம் என்பதை அறிவோம். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியை பார்த்த பிறகு அவர்களை போல (இந்திய ஜூனியர்) நாமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை பெற்றுள்ளோம்.

    பெண்கள் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கிறோம். அது விரைவில் நடக்கப்போகிறது. அடுத்த 2-3 மாதங்கள் பெண்கள் கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். பெண்கள் பிக்பாஷ் (ஆஸ்திரேலியா) மற்றும் தி ஹன்ட்ரட் (இங்கிலாந்து) ஆகிய போட்டிகள் அவர்களது நாட்டில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கிறது என்பதை பார்த்து இருக்கிறோம்.

    இதே போல் நமது நாட்டிலும் நடக்கும் என்று நம்புகிறேன். இந்த போட்டியின் மூலம் இந்திய இளம் வீராங்கனைகளுக்கு சர்வதேச நட்சத்திரங்களுடன் இணைந்து விளையாடும் அனுபவம் கிடைக்கும். நமது நாட்டில் பெண்கள் கிரிக்கெட்டின் மேம்பாட்டுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.

    இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.

    • மும்பை அணி தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்தின் சார்லட் எட்வர்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • மும்பை அணி பந்துவீச்சு பயிற்சியாளராக ஜூலன் கோஸ்வாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு 'பெண்கள் பிரிமீயர் லீக்' என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 5 அணிகளில் ஒன்றான மும்பையை தலைமையிடமாக கொண்ட மும்பை அணியை ரூ.912.99 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது. அந்த அணி நிர்வாகம் தற்போது மும்பை அணியின் பயிற்யாளர் குழுவை அறிவித்துள்ளது.

    இந்நிலையில், அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து பெண்கள் அணியின் முன்னாள் வீராங்கனை சார்லட் எட்வர்ட்ஸ் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி அணியின் ஆலோசகர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் தேவிகா பால்ஷிகார் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை அந்த அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    • ஐ.பி.எல். போன்று மகளிர் பிரீமியர் லீக் போட்டி நடத்தப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.
    • ஆடவர் ஐபிஎல் போட்டியின் 2008 ஏலத் தொகையின் சாதனையை மகளிர் பிரீமியர் லீக் அணிகள் முறியடித்தது.

    டெல்லி:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக 5 அணிகள் ரூ.4,669 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. மகளிருக்காக WPL கிரிக்கெட் போட்டி நடத்தப்பட இருப்பது வரலாற்றின் புதிய தருணம் என ஜெய்ஷா ட்வீட் செய்துள்ளார்.

    ஐபிஎல் போன்று மகளிருக்கான பிரீமியர் தொடரை நடத்துவதற்கு பிசிசிஐ கடந்த வருடம் முதலே திட்டுமிட்டு வந்தது. ஏனெனில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் எல்லாம் மகளிருக்கான பிரீமியர் லீக்குகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.

    இதனால் இந்தியாவிலும் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாரபூர்வ அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ளார். 

    மேலும் ஆடவருக்கான ஐபிஎல் அறிமுகத்தின்போது 8 அணிகளுக்கான மொத்த ஏலம் சுமார் ரூ.3000 கோடியாக இருந்த நிலையில் தற்போது மகளிருக்கான பிரீமியர் லீக்கில் அறிமுகத்தில் 5 அணிகள் ரூ.4669 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆடவர் ஐபிஎல் ஏலத்தின் சாதனையை மகளிர் பிரீமியர் லீக் முறியடித்துள்ளது.

    5 அணிகள் பங்குபெற்றுள்ள இந்த மகளிர் பிரீமியர் லீக்கில் அதானி குழுமம் களமிறங்கியுள்ளது. அதானி குழுமம் 1,289 கோடிக்கு அகமதாபாத் அணியின் உரிமையைப் பெற்றுள்ளது.

    5 அணிகளையும் ஏலம் எடுத்த நிறுவங்கள் விவரம்:-

    1. அதானி ஸ்போர்ட்ஸ்லைன் பிரைவேட் லிமிடெட் - ரூ. 1,289 கோடி - அகமதாபாத்

    2. இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் - ரூ. 912.99 கோடி - மும்பை

    3. ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் - ரூ. 901 கோடி - பெங்களூரு

    4. ஜே.எஸ்.டபிள்யூ ஜிஎம்ஆர் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் - ரூ. 810 கோடி - டெல்லி

    5. கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் - ரூ. 757 கோடி - லக்னோ

    மகளிருக்கான பிரீமியர் லீக் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா அணிகளின் உரிமையாளர்கள் பங்கு பெறவில்லை.

    ×