search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Sania Mirza"

  • சானியா மிர்சா பிரெஞ்ச் ஓபன் தொடருக்கு தூதராக பணிபுரிந்தார்
  • 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா இறுதிக்கு செல்ல காரணமானவர் ஷமி.

  புதுடெல்லி:

  இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை இந்த ஆண்டு தொடக்கத்தில் விவாகரத்து செய்தார்.

  இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது மனைவி ஹசின் ஜஹானை விவாகரத்து செய்துள்ளார். இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

  இந்நிலையில், கடந்த சில நாட்களாக சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகின.

  இதையடுத்து, ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த தகவல் வைரலானது.

  இதுதொடர்பாக சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் கூறுகையில், இது முற்றிலும் வதந்தி. இதுவரை முகமது ஷமியை சானியா மிர்சா சந்தித்ததுகூட கிடையாது என தெரிவித்தார்.

  டென்னிசில் இருந்து ஓய்வுபெற்ற சானியா மிர்சா மதிப்புமிக்க பிரெஞ்ச் ஓபன் தொடருக்கு தூதராக பணிபுரிந்தார் என்பதும், முகமது ஷமி 2023 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி செல்ல முக்கிய காரணமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாலிக் சானியா மிர்சாவை விவாகரத்து செய்தார்.
  • புனித பயணம் மூலம் என்னுடைய வாழ்க்கையை நான் மாற்ற முயற்சி செய்கின்றேன்.

  இந்திய மகளிர் டென்னிஸ் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்த சானியா மிர்சா, கலப்பு இரட்டையர் பிரிவில் தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையாக திகழ்ந்தார்.

  பல்வேறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சானியா மிர்சா கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாலிக் சானியா மிர்சாவை விவாகரத்து செய்தார்.


  இதன் மூலம் மனதளவில் சானியா மிர்சா பெருமளவில் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு தன்னுடைய குழந்தைகள் பார்த்துக் கொள்வது தமது பணி என்று சானியா மிர்சா கூறியிருந்தார். இந்த நிலையில் சானியா மிர்சா எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

  அதில் என்னை விரும்பும் நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை சொல்ல நான் ஆசைப்படுகின்றேன். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த புனித பயணம் மூலம் என்னுடைய வாழ்க்கையை நான் மாற்ற முயற்சி செய்கின்றேன். இந்தத் தருணத்தில் நான் ஏதேனும் தவறு செய்திருந்தாலும் உங்கள் மனது பாதிக்கும்படி ஏதேனும் செய்திருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் ஆன்மீகப் பயணத்தை நான் மீண்டும் கொண்டு வர முயற்சி செய்ய வாய்ப்பு கிடைத்ததற்கு என் இதயம் நன்றி உணர்வுடன் இருக்கின்றது. என்னுடைய பிரார்த்தனைகளுக்கு அல்லாஹ் செவி சாய்த்து என்னை ஆசிர்வதிக்கப்பட்ட பாதையில் வழிநடத்த வேண்டுகின்றேன். இந்தப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து அதிர்ஷ்டம் என்று நினைக்கின்றேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • பா.ஜ.க. சார்பில் சமூக தன்னார்வலரான மாதவி லதா என்பவரை பா‌.ஜ.க வேட்பாளராக அறிவித்துள்ளது.
  • ஐதராபாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதில் மக்களிடமும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

  திருப்பதி:

  தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் நிறுவனர் சலாவுதீன் ஒவைசி எம்.பி.யாக இருந்தார்.

  அவரது மறைவிற்குப் பிறகு தற்போது அந்த கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தொடர்ந்து இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார்.

  இந்த முறை அவரை வெல்ல பா.ஜ.க. சார்பில் சமூக தன்னார்வலரான மாதவி லதா என்பவரை பா.ஜ.க வேட்பாளராக அறிவித்துள்ளது.

  இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலிலும் தனது பலத்தை நிரூபிக்க முடிவு செய்துள்ளது.

  ஐதராபாத் தொகுதியில் ஒவைசி மற்றும் பா.ஜ.க வேட்பாளரை விட பிரபலமான ஒருவரை களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

  அதன்படி பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை களமிறக்கலாம் என முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சானியா மிர்சாவிடமும் அவரது குடும்பத்தாரிடமும் காங்கிரஸ் கட்சியினர் பேசி முடிவு செய்துள்ளனர்.

  ஒருவேளை சானியா மிர்சா போட்டியிட மறுத்தால் அவரது தந்த இம்ரான் மிர்சாவை களமிறக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  கடந்த புதன்கிழமை டெல்லியில் தெலுங்கானாவில் மீதமுள்ள தொகுதி வேட்பாளர்கள் தேர்வு குறித்து மத்திய காங்கிரஸ் தேர்தல் குழு தரப்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  விளையாட்டுத்துறையில் இருந்து அரசியல் துறைக்கு சானியா மிர்சாவை களமிறக்க முயற்சிகள் நடைபெற்று வருவதால் ஐதராபாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதில் மக்களிடமும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • சானியா மிர்சா- சோயிப் மாலிக் இடையே விவாகரத்து ஆனதாக செய்திகள் வெளியானது.
  • சோயிப் மாலிக் நடிகை சானா ஜாவித்தை திருமணம் செய்ததன் மூலம் அது உண்மையாகியுள்ளது.

  ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவரான இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு இஷான் என்ற மகன் உள்ளார்.

  கடந்த சில வருடங்களாக இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்தனர். ஆனால், அவ்வப்போது இருவரும் சேர்ந்து காணப்பட்டனர்.

  பின்னர் இருவருக்கும் இடையில் விவாகரத்தானதாக தகவல் வெளியானது. ஆனால், இருவரும் அதை உறுதிப்படுத்தாமல் இருந்தனர்.

  இந்நிலையில், சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களை சோயிப் மாலிக் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதன்மூலம் விவாகரத்து பெற்றதாக வெளியான வதந்தி உண்மையாகிவிட்டது.

  சோயிப் மாலிக்கின் 2-வது திருமணம் குறித்து தற்போது சானியா மிர்சா குழு மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் எழுதப்பட்டதாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

  அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  சானியா மிர்சா பொதுவெளியில் இருந்து தனது தனிப்பட்ட வாழ்க்கையை ஒதுக்கியே வைத்திருப்பார். எனினும், இன்று தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விசயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சோயிப் மாலிக்- சானியா மிர்சா இடையே விவாகரத்தாகி சில மாதங்கள் ஆகிறது. சோயிப் மாலிக்கின் புதிய பயணத்திற்கு சானியா வாழ்த்து தெரிவிக்கிறார்.

  அவருடைய வாழ்க்கையின் முக்கியமான இந்நேரத்தில், அவருடைய ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் சானியா மிர்சாவின் தனியுரிமையை மதிக்கும் வகையில் எந்தவிதமான ஊகங்களில் ஈடுபடுவதை தவிர்க்க கேட்டுக்கொள்கிறோம்.

  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார்.
  • இந்த தம்பதியருக்கு இஷான் என்ற 5 வயது மகன் உள்ளார்.

  பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை மணந்தார் சோயிப் மாலிக்

  லாகூர்:

  ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவர், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 2010-ம் ஆண்டு 5 மாதங்கள் காதலித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார்.

  இந்த தம்பதியருக்கு இஷான் என்ற மகன் உள்ளார்.

  இதற்கிடையே, சோயிப் மாலிக்-சானியா மிர்சா ஜோடி முறைப்படி விவாகரத்து செய்துவிட்டனர்.

  இந்நிலையில், சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களை சோயிப் மாலிக் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • இரட்டையர் டென்னிஸ் விளையாட்டில் பல உயரங்களை தொட்டவர், சானியா
  • 2010ல் சானியா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை மணம் முடித்தார்

  மும்பையில் பிறந்து ஐதராபாத்தில் வளர்ந்து, இந்திய பெண்கள் டென்னிஸ் விளையாட்டில் ஒலிம்பிக்ஸ் உள்ளிட்ட பல போட்டிகளில் பல சாதனைகள் புரிந்தவர், சானியா மிர்சா (Sania Mirza).

  குறிப்பாக, இரட்டையர் டென்னிஸ் ஆட்டத்தில் பல உயரங்களை தொட்டவர், சானியா.

  தனது 6-வது வயதில் டென்னிஸ் விளையாட தொடங்கிய சானியா, 17 வயதிலிருந்து தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையாக மாறினார்.

  2010ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.


  ஆனால், 2022 ஆண்டில் இருந்தே சானியா-சோயிப் ஜோடிக்குள் கருத்து வேற்றுமை நிலவுவதாகவும், இருவரும் பிரிய உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவந்தன.

  2023ல் சோயிப் மாலிக், "ஒரு சூப்பர் பெண்மணிக்கு கணவன்" என மனைவியை குறித்து அதுநாள் வரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த பகுதியை நீக்கினார்.

  இந்நிலையில், தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் சமூக வலைதள கணக்கில் சானியா மிர்சா கவிதை வடிவில் சில மறைமுக கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

  அப்பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:

  திருமணம் கடினமானது.

  விவாகரத்து கடினமானது.

  உங்களுக்கு எந்த "கடினம்" விருப்பமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

  இவ்வாறு சானியா பதிவிட்டுள்ளார்.

  மேலும் அந்த நீண்ட பதிவில், எடை குறைப்பு, சிக்கனமாக வாழ்தல், பிறருடன் உரையாடுவது உள்ளிட்ட விஷயங்களை குறித்தும் இதே போல் பதிவிட்டுள்ள சானியா, இறுதியாக, "வாழ்க்கை சுலபமாக இருக்கவே இருக்காது. எப்போதுமே கடினமாகத்தான் இருக்கும். ஆனால், நாம் நமக்கு எந்த "கடினம்" விருப்பமோ அதனை தேர்வு செய்ய முடியும். அதை அறிவுபூர்வமாக தேர்வு செய்யுங்கள்" என முடித்துள்ளார்.

  கணவர் சோயிப் மாலிக் உடனான பல புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து நீக்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

  • சானியா மிர்சா சோயிப் மாலிக் 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
  • இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

  இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கும் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகளில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

  இதன் காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் இருவரும் விவாகரத்து கோர இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு சோயிப் மாலிக் மறுப்பு தெரிவித்திருந்தார். பிறகு இருவரும் ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர்.


  இந்த நிலையில் மீண்டும் இருவர் குறித்த விவாகரத்து வதந்தி மீண்டும் எழுந்துள்ளது. இந்த வதந்திக்கு மாலிக்கின் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட மாற்றம்தான் காரணம். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சானியா மிர்சா குறித்த தகவல்களை மாலிக் நீக்கியுள்ளார். அதாவது மிகச்சிறந்த பெண்மணியான சானியா மிர்சாவின் கணவர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை தனது இன்ஸ்டாவிலிருந்து நீக்கியுள்ளார். இதனால் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • கடந்த 6 மாதங்களாக சானியா, சோயிப் மாலிக் ஜோடியாக பொது வெளியில் சென்றதில்லை.
  • இதனால் இவர்கள் விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் உலா வந்தன.

  கராச்சி:

  இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இஷான் என்ற மகன் உள்ளார். கடந்த 6 மாதங்களாக சானியா, சோயிப் மாலிக் ஜோடியாக பொது வெளியில் சென்றதில்லை. இதனால் இவர்கள் விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் உலா வந்தன.

  இந்நிலையில், தானும் தனது மனைவியும் எந்தவித விவாகரத்து நடவடிக்கையிலும் இல்லை எனவும் தாங்கள் பிரிந்திருக்கவும் இல்லை என்றும் சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் கூறியதாவது:-

  ரம்ஜான் பெருநாளை எனது மனைவி மற்றும் மகனுடன் கொண்டாட விரும்பினேன். ஆனால் அவர்கள் வெளியூரில் இருக்கிறார்கள்.

  அனைத்து திருமணங்களும் ஏற்றத் தாழ்வுகளை கடந்து செல்கின்றன. ஆனால் அதற்காக உறவு முடிந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை. நானும், சானியாவும் சர்வதேச விளையாட்டுடன் தொடர்பில் இருப்பதால் பிசியான அட்டவணையை கொண்டுள்ளோம். இதன் காரணமாகவே நாங்கள் ஒன்றாக இருப்பதை பார்க்க முடிவதில்லை. எங்களுக்குள் பிரிவினை மற்றும் கருத்துவேறுபாடுகள் என வெளிவரும் செய்திகள் ஆதாரமற்றவை.

  என சோயிப் மாலிக் கூறினார்.

  • மதினாவுக்கு தனது குடும்பத்தினருடன் சென்ற புகைப்படங்களை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
  • அந்த புகைப்படங்களில் அவரது தாய், தந்தை, சகோதரி மற்றும் மகன் உள்ளிட்டோர் இருந்தனர்.

  இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ரமலான் பண்டிகையை முன்னிட்டு சவுதி அரேபியாவில் உள்ள மதினாவுக்கு தனது குடும்பத்தினருடன் சென்ற புகைப்படங்களை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

  அந்த புகைப்படங்களில் அவரது தாய், தந்தை, சகோதரி மற்றும் மகன் உள்ளிட்டோர் இருந்தனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


  அதில் ஒருவர் சோயிப் மாலிக் எங்கே? என்று கேட்டுள்ளார். அதே நேரம் பல பயனர்கள் அந்த படத்தின் கீழ் இதய எமோஜிகளுடன் அன்பை பொழிந்த வண்ணம் உள்ளனர்.

  • ஐதராபாத்தில் தனது கடைசி போட்டியில் சானியா மிர்சா ஆடினார்.
  • கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை இவர் தான்.

  ஐதராபாத்:

  டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கடந்த மாதம் துபாய் ஓபன் போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார்.

  36 வயதான சானியா மிர்சா 2005-ம் ஆண்டில் ஒற்றையர் பிரிவில் ஐதராபாத் ஓபனை வென்றார். அவர் கைப்பற்றிய ஒரே டபிள்யூ.டி.ஏ. பட்டம் இதுதான். அதே சமயம் கிராண்ட்ஸ்லாமில் 6 இரட்டையர் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார். கிராண்ட்ஸ்லாம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை இவர் தான்.

  இந்நிலையில், சானியா மிர்சாவின் சொந்த ஊரான தெலுங்கானாவின் ஐதராபாத்தில் அவருக்கு பிரிவுபசாரம் அளிக்கும் வகையில் கண்காட்சி டென்னிஸ் போட்டிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க வந்த சானியாவுக்கு இளம் ரசிகைகள் இருபுறமும் பேட்டை உயர்த்தி நின்று கவுரவம் அளித்தனர்.

  தனது கடைசி டென்னிஸ் போட்டியில் அடியெடுத்து வைத்த சானியாவுடன் சக நாட்டு வீரர் ரோகன் போபண்ணா, அமெரிக்காவின் பெதானி மாடக் சான்ட்ஸ், குரோஷியாவின் இவான் டோடிக் ஆகியோர் இணைந்து விளையாடினர். இரு கலப்பு காட்சி போட்டியிலும் சானியா மிர்சா வெற்றி பெற்றார். அப்போது சானியா மிர்சா உருக்கமுடன் பேசியதாவது:

  2002-ம் ஆண்டு இங்கு தேசிய விளையாட்டில் பதக்கம் வென்றதில் இருந்து எனது டென்னிஸ் பயணம் தொடங்கியது. இந்தியாவுக்காக 20 ஆண்டு விளையாடியது சிறந்த கவுரவமாகும்.

  இந்தியாவுக்காக சாதிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளின் கனவாக இருக்கும். அதை நான் நிறைவு செய்து விட்டேன். நினைத்ததை விட அதிகமாக சாதித்து இருக்கிறேன். எனது கடைசி போட்டியை உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடியது, பரவசமளிக்கிறது. அவர்களின் ஆதரவும், உற்சாகமும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரை வரவழைக்கிறது. இதை விட சிறந்த வழியனுப்பு விழாவை நான் எதிர்பார்க்க முடியாது. இனி களத்தில் உங்களை (ரசிகர்கள்) எல்லாம் தவற விடப்போகிறேன்.

  தெலுங்கானா மாநில அரசுடனும், மாநில விளையாட்டு ஆணையத்துடனும் இணைந்து பணியாற்றி இன்னொரு சானியாவை நிச்சயம் உருவாக்குவேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன். நமக்கு இன்னும் நிறைய சானியாக்கள் தேவை. அதற்காக பணியாற்றுவேன் என குறிப்பிட்டார்.

  • முதல் சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா- மேடிசன் கீஸ் ஜோடி தோல்வியடைந்து வெளியேறியது.
  • சானியா மிர்சா பெண்கள் 6 கிரண்ட்சிலாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார்.

  பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா (வயது 36) துபாயில் நடைபெறும் டபிள்யு.டி.ஏ. போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்படி துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில், தோல்வியடைந்த நிலையில் அவர் ஓய்வு பெற்றார்.

  மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா- மேடிசன் கீஸ் ஜோடி, ரஷியாவின் வெரோனிகா-லியுத்மிளா ஜோடியிடம் 4-6, 0-6 என தோல்வியடைந்து வெளியேறியது.

  சானியா பெண்கள் இரட்டையர் பிரிவில் 3 கிரண்ட்சிலாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார். 2015ல் விம்பிள்டன், அமெரிக்க ஓபன் பட்டங்களையும், 2016-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். கலப்பு இரட்டையர் பிரிவிலும் சானியா மிர்சா 3 கிராண்ட்சிலாம் பட்டங்களை பெற்றார். 2009-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், 2012-ல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும், 2014-ல் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார்.

  • துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் துபாயில் தொடங்குகிறது.
  • இந்தப் போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெற சானியா முடிவு செய்துள்ளார்.

  துபாய்:

  துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் துபாயில் தொடங்குகிறது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, அமெரிக்காவின் மேடிசன் கீசுடன் இணைந்து பங்கேற்கிறார்.


  இந்தப் போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ள சானியா, இரட்டையர் முதல் சுற்றில் ரஷியாவின் குடெர்மிதோவா-சம்சோனோவா ஜோடியை இன்று எதிர்கொள்கிறார்.

  ×