search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மகளிர் பிரீமியர் லீக்: வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது பெண்கள் கிரிக்கெட் திருவிழா

    • மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை 5 அணிகளின் கேப்டன்கள் அறிமுகம் செய்தனர்.
    • பாலிவுட் நட்சத்திரங்களான கியாரா அத்வானி, கிருத்தி சனோன் உள்ளிட்டோரின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய இரு மைதானங்களில் இந்த போட்டி அரங்கேறுகிறது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன.

    போட்டி தொடங்குவதற்கு முன்பாக, இன்று மாலை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் பிரமாண்டமான துவக்க விழா நடைபெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் பிரீமியர் லீக் குறித்து மந்த்ரா பேடி அறிமுக உரையாற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பாலிவுட் நட்சத்திரங்களான கியாரா அத்வானி, கிருத்தி சனோன் மற்றும் பஞ்சாபி பாடகர் ஏ.பி. தில்லான் ஆகியோரின் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

    பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் மூத்த நிர்வாகிகள் மேடையில் ஏறி, அனைவரையும் வரவேற்றனர். போட்டியில் பங்குபெறும் ஐந்து அணிகளின் கேப்டன்களையும் மேடைக்கு அழைத்தனர். அவர்கள் மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை அறிமுகம் செய்தனர்.

    துவக்க விழா முடிந்ததும் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பெர்த் மூனே பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    Next Story
    ×