search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Harmanpreet Kaur"

  • விஸ்டன் பத்திரிகை முதல் 5 ஆட்டக்காரர்களின் பட்டியலில் கவுரை குறிப்பிட்டது
  • டைம் பத்திரிகையின் 100 நெக்ஸ்ட் பட்டியலில் கவுர் பெயர் இடம்பெற்றது

  15 வருடங்களாக சர்வதேச பெண்கள் கிரிக்கெட் அரங்கில் பல சாதனைகளை புரிந்து வருபவர், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (34).

  பெண்கள் டி20 (T20) கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடித்த முதல் வீராங்கனை ஹர்மன்ப்ரீத்.

  கடந்த பிப்ரவரி மாதம் அவரது சாதனைகளில் ஒன்றாக 150 டி20 போட்டிகளில் விளையாடியவர் எனும் புகழ் பெற்றார்.

  மேலும், ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஸ்மிருதி மந்தானாவுடன் இணை கேப்டனாக தங்க பதக்கம் வென்றார்.

  கிரிக்கெட் சாதனைகளை குறித்த பதிவுகளை வெளியிடும் பிரபல "விஸ்டன்" (Wisden) பத்திரிகை, இவ்வருடத்தின் முதல் 5 கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் பெயரை குறிப்பிட்டது.

  தாக்கத்தை ஏற்படுத்திய முதல் 100 பெண்மணிகள் பட்டியலில் பிபிசி (BBC) செய்தி நிறுவனம் ஹர்மன்ப்ரீத் பெயரையும் சேர்த்தது. அதே போன்று, டைம் (TIME) பத்திரிகை வெளியிட்ட "100 நெக்ஸ்ட்" (100 Next) பட்டியலில் இவர் பெயர் இடம் பெற்றது.

  பிற விளையாட்டுகளை விட கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட இந்திய மக்களிடையே பெண்கள் கிரிக்கெட்டிற்கும் ஆர்வம் ஏற்பட வைத்த பெருமைக்குரியவர்களில் ஹர்மன்ப்ரீத் ஒருவர். இவரது சாதனைகள் இந்திய பெண்களுக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபாடு வளர காரணமாக இருப்பதாக விமர்சகர்கள் ஒப்பு கொள்கின்றனர்.

  பஞ்சாப் மாநில மோகா பகுதியை சேர்ந்தவரான ஹர்மன்ப்ரீத் கவுர், நடுத்தர சீக்கிய குடும்பத்தை சேர்ந்தவர். கமல்தீஷ் சிங் சோதி என்பவரிடம் பயிற்சி எடுத்து கொள்ள தொடங்கியதும், ஹர்மன்ப்ரீத்தின் விளையாட்டு பயணம் ஏறுமுகத்தை காண தொடங்கியது.

  கடந்த வருடம் பெண்கள் கிரிக்கெட்டில் புகழ் பெற்ற மிதாலி ராஜ் ஓய்வு பெற்றார். அவருக்கு பிறகு பெண்கள் கிரிக்கெட்டை அனைத்து வடிவங்களிலும் அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்து செல்பவர்களில் ஒருவராக ஹர்மன்ப்ரீத் திகழ்கிறார்.

  ஹர்மன்ப்ரீத் இதுவரை 290 சர்வதேச போட்டிகளில் விளையாடி 6,500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.

  அவ்வப்போது விளையாட்டு மைதானத்தில் கோபத்தை வெளிப்படுத்துபவராக பார்க்கப்பட்டாலும் விரைவில் பக்குவமுள்ள பவர் ஹிட்டராக (power hitter) கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்ப்பார் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

  • இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
  • முதல் நாள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்தது.

  மும்பை:

  இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 1 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

  இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதம் அடித்து அசத்தினர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.

  இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 94 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்தது. தீப்தி ஷர்மா 60 ரன்களுடனும், பூஜா வஸ்த்ரகர் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக லாரன் பெல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

  இந்நிலையில் இந்த போட்டியில் கவுர் 49 ரன்களில் ரன் அவுட் ஆனார். ஒரு ரன் எடுக்க முயற்சித்த அவர் பாதி தூரம் ஓடினார். மறுமுனையில் இருந்த வீராங்கனை ரன் வேண்டாம் என்று கூறியதால் கவுர் கிறீசுக்கு திரும்பினார். கிறீஸ் அருகே வந்த அவர் பேட்டை கோட்டிற்கு முன் வைத்தார். ஆனால் பேட் எதிர்பாராதவிதமாக பிட்சில் சிக்கி கொண்டது. இதனால் அவர் ரன் அவுட் செய்யப்பட்டார். அவர் எந்தவித சிரமமும் இன்றி கிறீசுக்குள் வந்திருக்கலாம். ஆனால் அவர் மெத்தனமாக செயல்பட்டதே இந்த ரன் அவுட்டுக்கு காரணமாக அமைந்ததது.

  இதேபோல மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியிலும் கவுர் இதேபோல ரன் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • இங்கிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • இந்திய அணி தோல்வியடைந்தாலும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மகளிர் கிரிக்கெட்டில் யாரும் படைக்காத சாதனை படைத்துள்ளார்.

  இங்கிலாந்து பெண்கள் அணி 3 டி20, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதலில் டி20 தொடரும் அடுத்து டெஸ்ட் போட்டியும் நடைபெறும்.

  இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மும்பையில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இந்திய அணி தோல்வியடைந்தாலும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மகளிர் கிரிக்கெட்டில் யாரும் படைக்காத சாதனை படைத்துள்ளார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக இருந்தவர் என்ற உலக சாதனையை படைத்தார். இந்த போட்டியையும் சேர்த்து அவர் 101 ஆட்டங்களுக்கு கேப்டனாக பணியாற்றியுள்ளார்.

  இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் 100 ஆட்டங்களில் கேப்டனாக இருந்ததே சாதனையாக இருந்தது.

  • பெண்கள் கிரிக்கெட்டில் இதை நாம் அடிக்கடி பார்க்க முடியாது.
  • கிரிக்கெட்டில் நீங்கள் ஆக்ரோஷமாக செயல்படலாம். ஆனால், அந்த ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

  லாகூர்:

  வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஐசிசியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையால், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது.

  மேலும், அவரது போட்டி கட்டணத்தில் 75% அபராதம் விதிக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த தண்டனையால் ஹர்மன்பிரீத் கவுரால் ஆசிய விளையாட்டு போட்டிகளில் சில போட்டிகளை விளையாட முடியாமல் போகும்.

  இந்நிலையில், ஹர்மன்பிரீத் செயலை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரீடி விமர்சித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் கூறியதாவது:-

  இது இந்தியாவுக்கு மட்டுமல்ல. கடந்த காலங்களிலும் நாம் இவற்றைப் பார்த்திருக்கிறோம். இருப்பினும், பெண்கள் கிரிக்கெட்டில் இதை நாம் அடிக்கடி பார்க்க முடியாது. களத்தில் அவரது செயல்பாடு அதிகமாகவே இருந்தது. ஐசிசியின் கீழ் இது ஒரு பெரிய நிகழ்வு. நீங்கள் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். அவ்வாறு இருக்கையில் உங்கள் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது. கிரிக்கெட்டில் நீங்கள் ஆக்ரோஷமாக செயல்படலாம். ஆனால், அந்த ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • கோபத்தில் ஸ்டம்புகளை பேட்டால் அடித்து உடைத்ததுடன், அம்பயர்களையும் பகிரங்கமாக விமர்சனம் செய்தார்.
  • ஹர்மன்பிரீத் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஐசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  வங்காளதேச அணியுடனான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நடந்துகொண்ட விதம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் அவுட் ஆனதும், கோபத்தில் ஸ்டம்புகளை பேட்டால் அடித்து உடைத்ததுடன், அம்பயர்களையும் பகிரங்கமாக விமர்சனம் செய்தார். 

  அவரது இந்த செயல்பாடுகள் ஐசிசி விதிகளை மீறும் செயல் என்பதால் அவர் அடுத்த இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டி சம்பளத்தில் 75 சதவீதத்தை அபராதமாக செலுத்தவும் ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

  ஹர்மன்பிரீத் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஐசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  "இந்திய கேப்டன் குற்றங்களை ஒப்புக்கொண்டதுடன், எமிரேட்ஸ் ஐசிசி சர்வதேச போட்டி நடுவர்கள் குழுவின் அக்தர் அகமது முன்மொழிந்த தடைகளை ஏற்க ஒப்புக்கொண்டார். எனவே அவர் மீது முறையான விசாரணை தேவையில்லை, தண்டனைகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டன" என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

  • இந்திய கேப்டனின் செயல்பாடுகள் ஏற்கத்தக்க ஒன்றாக இல்லை.
  • அவர் நடந்து கொண்ட விதம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது.

  வங்கதேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து ஆடிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

  இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் செயல் கிரிக்கெட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் அவுட் ஆனதும், கோபத்தில் ஸ்டம்புகளை பேட்-ஆல் அடித்து அம்பயர்களை கடுமையாக சாடினார்.

  இதனை சமூக வலைதளங்களில் சரி என்று ஒருதருப்பும், தவறு என்று மறு தரப்பும் மாறி மாறி கருத்துக்களை பரிமாறி வருகிறது.

  இந்நிலையில் உடனுக்குடன் கோபம் அடைவது ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் இந்திய மகளிர் அணியின் கேப்டன் டியானா எடுல்ஜி கூறியுள்ளார்.

  இது குறித்து அவர் கூறியதாவது:-

   

  இந்திய கேப்டனின் செயல்பாடுகள் ஏற்கத்தக்க ஒன்றாக இல்லை. அவர் நடந்து கொண்ட விதம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. நீங்கள் தான் கேப்டன். நீங்கள் தான் அணியை வழிநடத்தி சென்று, அடுத்து வர இருக்கும் ஜூனியர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். அவர்கள் உங்களின் நடத்தையை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களும் இதே போன்ற செயல்பட வாய்ப்புகள் உண்டு.

  உடனுக்குடன் கோபம் அடைவது ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் ஐ.சி.சி. விதிகளின் கீழ் விளையாடி வருகின்றீர்கள். அதிர்ஷ்டவசமாக அது சீரிசின் கடைசி போட்டியாக அமைந்தது. பி.சி.சி.ஐ. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். முதலில் 90 முதல் 100 சதவீதம் வரை போட்டிக்கு பங்களிப்பை கொடுங்கள். போட்டிகளில் வெற்றி பெற்றாலே, அளவுக்கு அதிகமாகவே நட்சத்திர அந்தஸ்து தானாக கிடைத்து விடும்.

  எல்லோரும் வெற்றி பெற வேண்டும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன், ஆனால் அம்பயரிங் போட்டியின் ஒருபங்கு மட்டும் தான். சில சமயங்களில் அது சாதகமாக இருக்கும், சில சமயங்களில் அது இருக்காது. ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். 

  இவ்வாறு அவர் கூறினார்.

  • இந்திய வீராங்கனைகளான புனியா 7, யாஷிகா 15, ஸ்மிருதி மந்தனா 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
  • கவூர் 80 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக வெளியேறினார்.

  மிர்புர்:

  ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 20 ஓவர் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை வசப்படுத்திய இந்திய அணி கடைசி ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.

  இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையே மிர்புரில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை சாய்த்தது.

  இந்த நிலையில் இந்தியா - வங்காளதேசம் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மிர்புரில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

  தொடக்க வீராங்கனைகளாக புனியா 7, யாஷிகா 15, ஸ்மிருதி மந்தனா 36 என ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கேப்டன் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.


  கேப்டன் கவுர் 48 ரன்கள் எடுத்த நிலையில் 1 ரன் எடுக்க முயற்சித்த போது பேட் ஸ்லிப்பாகி கீழே விழுந்தார். இதனால் வலியால் துடித்த அவர் சிறிது நேரத்தில் களத்தில் இருந்து வெளியேறினார். அவர் 80 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்தார். காயத்தை பொறுத்து அவர் மீண்டும் களத்தில் இருங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  டி20 மகளிர் உலக கோப்பை நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி அவர் 2 ரன்கள் எடுக்க கிரிசை நோக்கி பேட்டை ஊன்றிய போது எதிர்பாரதவிதமாக பேட் தரையில் சிக்கி கொண்டது. அதனால் அவர் ரன் அவுட் முறையில் வெளியேறினார். அதேபோல இந்த முறையும் நடந்துள்ளது.

  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
  • 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் டோனி ரன் அவுட் ஆனார்.

  இந்திய அணி முன்னாள் கேப்டன் டோனிக்கு நடந்த அதே கொடுமை ஹர்மன்ப்ரீத் கவுருக்கும் நடந்ததால் மகளிர் டி20 உலகக்கோப்பையில் இருந்து இந்திய அணி வெளியேறியுள்ளதாக ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

  மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டி நேற்று கேப்டவுனில் நடைபெற்றது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்களை குவித்தது.

  இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு பேட்டிங் மோசமாக சொதப்பியது. ஓப்பனிங் பேட்டர்கள் சஃபாலி வெர்மா 9 ரன்களுக்கும், ஸ்மிருதி மந்தனா 2 ரன்களுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய யாஷ்டிகா பாட்டியா வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்தார். கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவூர் 52 ரன்களும், ஜெமிமா 42 ரன்களும் மட்டுமே அடிக்க 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.

  இந்நிலையில் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. அப்போது இந்தியா நிறைய விக்கெட்களை இழந்து தடுமாறிய போது டோனி தான் நம்பிக்கை தந்தார். எனினும் அவர் நூலிழையில் ரன் அவுட்டாகி உலகக்கோப்பை கனவு தகர்ந்தது. அதே சம்பவம் தான் தற்போதும் நடந்துள்ளது.


  டோனியை போலவே நம்பர் 7 ஜெர்சி அணியும் மகளிர் அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் 52 ரன்கள் அடித்து சிறப்பாக ஆடி வந்தார். 14.4வது ஓவரில் மிட் விக்கெட்டில் ஸ்வீப் ஷாட் ஆடினார். அப்போது அதனை டைவ் அடித்து பிடித்த கார்ட்னர் வேகமாக ஸ்டம்பிற்கு அனுப்பிவிட்டார். இதனால் கிட்டத்தட்ட கிறீஸை நெருங்கிவிட்ட ஹர்மன்ப்ரீத் கவுர் துரதிஷ்டவசமாக தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

  இத்துடன் இந்தியாவின் டி20 உலகக்கோப்பை கனவும் தகர்ந்தது. இதனை நினைவுக்கூர்ந்து இருவரும் ரன் அவுட் ஆன வீடியோவை ரசிகர்கள் வேதனையுடன் பகிர்ந்து வருகின்றனர். 

  • கடைசி பந்து வரை சென்றதில் மகிழ்ச்சி அடைந்தோம்.
  • நாங்கள் மீண்டும் சில எளிதான கேட்சுகளை தவர விட்டோம்.

  கேப்டவுன்:

  8-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

  இதில் நேற்று நடந்த முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது.

  பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியின் தொடக்கம் சரியாக அமையவில்லை.

  பின்னர் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (52ரன்), ரோட்ரிக்ஸ் (43 ரன்) ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இதனால் இந்திய அணி வெற்றியை நெருங்கியது.

  ஆனால் இருவரும் அவுட் ஆன பிறகு நெருக்கடி ஏற்படுத்தியது. ஹர்மன்பிரீத் கவுரின் ரன் அவுட் திருப்புமுனையாக அமைந்தது.

  இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 167 ரன்னே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

  இந்தியா போராடி தோற்று வெளியேறியது. தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் கூறியதாவது:-

  இதை விட துரதிருஷ்டவசமாக உணர முடியாது. ரோட்ரிக்ஸ் ஆட்டத்தில் மீண்டும் வேகத்தை பெற்றோம். நான் ரன்-அவுட் ஆன விதம் துரதிருஷ்டவசமானது. இங்கிருந்து தான் தோற்றோம். இதை நாங்கள் எதிர் பார்க்கவில்லை.

  கடைசி பந்து வரை சென்றதில் மகிழ்ச்சி அடைந்தோம். தொடக்கத்தில் முதல் 2 விக்கெட் இழந்தாலும் எங்களிடம் ஒரு நல்ல பேட்டிங் வரிசை உள்ளது என்று எங்களுக்கு தெரியும். ரோட்ரிக்சை பாராட்ட வேண்டும். அவர் எங்களுக்கு உத்வேகத்தை கொடுத்தார். ஒட்டு மொத்தமாக நாங்கள் சில நல்ல கிரிக்கெட் விளையாடினோம். எங்களின் இயல்பான ஆட்டத்தை விளையாட விரும்பினோம். அதை எங்களில் சிலர் செய்தோம்.

  நாங்கள் மீண்டும் சில எளிதான கேட்சுகளை தவர விட்டோம். வெற்றி பெற வேண்டு மென்றால் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்வோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இன்று நடைபெறும் 2-வது அரை இறுதியில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.