என் மலர்
கிரிக்கெட் (Cricket)

உலகக் கோப்பையை வென்றதும் ரஜினிகாந்த் போனில் வாழ்த்தினார்- ஹர்மன்பிரீத் நெகிழ்ச்சி
- உலகக் கோப்பையை வென்ற நாள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாகும்.
- எனக்கு எல்லாமே கிரிக்கெட் தான். அதனை தவிர்த்து வேறு எதுவும் தெரியாது.
சமீபத்தில் நடந்த 13-வது பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நவிமும்பையில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. உலகக் கோப்பையை முதல்முறையாக உச்சி முகர்ந்த இந்திய அணியை பிரதமர், ஜனாதிபதி நேரில் பாராட்டி உற்சாகப்படுத்தினர். வீராங்கனைகளுக்கு கோடிக்கணக்கில் பரிசு மழை கொட்டியது.
உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய பெண்கள் அணியின் கேப்டனான 36 வயது ஹர்மன்பிரீத் கவுர் நேற்று முதல்முறையாக தமிழகம் வந்தார். சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது. சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன், தலைவர் மரிய ஜான்சன் ஆகியோர் ஹர்மன்பிரீத் கவுருக்கு நினைவுப்பரிசு வழங்கினர்.
விழாவில் தொகுப்பாளர் மற்றும் மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து ஹர்மன்பிரீத் கவுர் பேசுகையில் கூறியதாவது:-
உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. உலகக் கோப்பையை வென்ற நாள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாகும். கிரிக்கெட்டுக்காகவே நான் பிறந்து இருப்பதாக நினைக்கிறேன். எனக்கு எல்லாமே கிரிக்கெட் தான். அதனை தவிர்த்து வேறு எதுவும் தெரியாது. இந்த வெற்றி பெண்கள் கிரிக்கெட்டுக்கு உத்வேகம் அளிக்கும்.
நிறைய இளம் வீராங்கனைகள் கிரிக்கெட்டை நோக்கி படையெடுக்க ஊக்கமளிக்கும். அது மட்டுமின்றி இந்த வெற்றி பெண்கள் கிரிக்கெட்டில் நிறைய நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறது. ஒரு வீராங்கனையாக நிறைய போட்டிகளில் விளையாட வாய்ப்பு வேண்டும் என்று கேட்டோம். அது தற்போது நடந்து இருக்கிறது. அதிகமான போட்டிகள் நடக்கும் போது வீராங்கனைகள் மட்டுமின்றி அணியும் வலிமை அடையும்.
சமூக வலைதள நெருக்கடியை எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள். அணி சரியாக ஆடாத போது பலவாறு விமர்சனங்கள் வரும். ஆனால் உலகக் கோப்பையை வென்ற பிறகு கூட சில வீராங்கனைகள் விமர்சனங்களை சந்தித்து இருக்கிறார்கள். ஆனால் விமர்சனம் என்பது விளையாட்டில் மட்டுமல்ல ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அங்கமாகி விட்டது. அதனை நீங்கள் எப்படி எடுத்து கொள்கிறீர்கள் என்பதில் தான் எல்லாம் உள்ளது. என்னை பொறுத்தமட்டில் அது ஒரு சாதாரண பிரச்சினை தான்.
2022-ம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் நாங்கள் லீக் சுற்றோடு வெளியேறினோம். அது எங்கள் இதயத்தை நொறுக்கியது. அப்போதைய கேப்டன் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி உள்ளிட்டோர் மிகுந்த வேதனை அடைந்தனர். அப்போது நான், மந்தனா உள்ளிட்ட வீராங்கனைகள் இந்த மூத்த வீராங்கனைகளுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம். அதனால்தான் உலகக் கோப்பையை வென்றதும், அவர்களது கையில் கொடுத்து கவுரவித்தோம்.
உலக சாம்பியன் ஆன பிறகு நான் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றேன். அப்போது நடிகர் ரஜினிகாந்த் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வாழ்த்து தெரிவித்தார். சிறுவயதில் டெலிவிஷனில் பார்த்து மகிழ்ந்த நபர் போனில் அழைத்து பேசியது உற்சாகமாக இருந்தது. இறுதிப்போட்டியை நேரில் பார்க்க வரவேண்டும் என்று விரும்பினேன். அப்போது சிங்கப்பூரில் படப்பிடிப்பு இருந்ததால் வர இயலவில்லை. ஆனால் எனது ஒட்டுமொத்த குடும்பமும் போட்டியை பார்க்க வந்து இருந்தது. நமது அணி வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டனர் என்று அவர் என்னிடம் கூறினார்.
சென்னை எனக்கு மிகவும் பிடித்தமான இடமாகும். இங்கு வரும்போதெல்லாம் மக்கள் அன்பை பொழிகிறார்கள். இங்குள்ள உணவும் எனக்கு பிடிக்கும். சொந்த ஊரை விட்டு வெளியில் செல்லும்போதெல்லாம் தோசையை விரும்பி சாப்பிடுவேன்.
நாங்கள் கோப்பையை வெல்ல தலைமை பயிற்சியாளர் அமோல் முஜூம்தாரும் முக்கிய காரணம். அவர் எங்களுக்கு எல்லா வகையிலும் பக்கபலமாக இருந்தார். 'நீங்கள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள். மற்ற பிரச்சினைகளை எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன்' என்பார். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.






