search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Voting machines"

    • வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு நடந்தது.
    • முதல் மற்றும் 2-ம்கட்ட சரிபாக்கும் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தற செயல் நேரடி தேர்தல் - 2022 தொடர்பாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் மற்றும் 2-ம்கட்ட நிகழ்வு கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி, நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் நேரடித் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்ட அளவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்காலிக ஒதுக்கீடு செய்வதற்கான முதல் மற்றும் 2-ம்கட்ட சரிபாக்கும் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்திற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 20 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 40 வாக்குப்பதிவு எந்திரங்களின் சரிபார்க்கும் பணிகள் கடந்த 28.6.2022 அன்று முடிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் நிலையில் உள்ளது.

    தற்சமயம் இளையான்குடி வார்டு 13-ல் நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் நேரடித்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒதுக்கீடு செய்வதற்கென அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரமுகர்கள், போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் மற்றும் இளையான்குடி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் முன்னிலையில், இணையதளம் வாயிலாக முதல் மற்றும் 2-ம் கட்ட பணிகள் நடந்தது.

    இதில், இளையான்குடி பேரூராட்சிக்கு 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரமுகர்கள், வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    வாக்கு எந்திரங்கள் மாற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை அடுத்து தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடந்த தேர்தலில் 67.11 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    வேலூர் தவிர 542 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அந்தந்த பகுதி ஓட்டு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

    மின்னணு எந்திரங்கள் இருக்கும் அறையை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தவிர கட்சிகளின் முகவர்களும் மின்னணு எந்திரங்களின் பாதுகாப்புக்காக அங்கேயே தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். வெளியில் இருந்தபடியே ரேடியோ அலைகள் மூலம் மின்னணு எந்திரங்களில் உள்ள பதிவை மாற்ற முடியும் என்ற புதிய குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் சில குறிப்பிட்ட தொகுதிகளில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. சமீபத்தில் தேனி, மதுரை தொகுதிகளில் அப்படி எந்திரங்களை மாற்ற முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதற்கு விளக்கம் அளித்தனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்னணு எந்திரங்களை கொண்டு சென்று இருப்பு வைப்பதாக தெரிவித்தனர். அதன் பிறகே அமைதி திரும்பியது.

    இந்த நிலையில் வட மாநிலங்களில் பல தொகுதிகளில் மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக தகவல்கள் பரவியபடி உள்ளன. குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இந்த பரபரப்பு அதிகளவில் பரவி உள்ளது.

    அந்த சமூக வலைதள தகவல்களில் மின்னணு எந்திரங்களை ஒட்டு மொத்தமாக மாற்றவும் சில இடங்களில் மின்னணு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்யவும் முயற்சி நடப்பதாக படங்களுடன் தகவல்கள் பரவியது. இதனால் எதிர்க்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     


    உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள காசிப்பூர் தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் மத்திய மந்திரி மனோஜ்சின்கா, பகுஜன் சமாஜ் சார்பில் அப்சல் அன்சாரி போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் பதிவான வாக்குகளை கொண்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்குள் நேற்று இரவு சிலர் செல்ல முயன்றனர்.

    அவர்கள் அங்கிருந்த மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஒரு வாகனத்தில் ஏற்றி செல்ல முயன்றதாக தகவல் பரவியது. இதையடுத்து ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறை முன்பு அன்சாரியும் அவரது ஆதரவாளர்களும் திரண்டு வந்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் காசிப்பூர் தொகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    இதற்கிடையே உத்தர பிரதேச மாநிலம் சந்தவுலி தொகுதியிலும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக தகவல் பரவியது. இந்த தொகுதிக்குரிய மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்துக்கு நேற்று இரவு ஒரு லாரியில் ஏராளமான எந்திரங்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டன.

    ஓட்டுப்பதிவு நிறைவு பெற்று 2 நாட்களுக்கு பிறகு லாரியில் இருந்து புதிதாக மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் இறக்கப்பட்டதால் அந்த தொகுதி சமாஜ்வாடி தொண்டர்களுக்கு சந்தேகம் எழுந்தன. அவர்கள் அதை வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.

    சந்தவுலி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்காக திட்டமிட்டு ஓட்டுப்பதிவு எந்திரங்களை மாற்றுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டது. ஆனால் இதை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சந்தவுலி தொகுதியில் 35 மின்னணு எந்திரங்கள் முன் எச்சரிக்கையாக வைக்கப்பட்டு இருந்தன. ஏதாவது வாக்குச்சாவடியில் எந்திரங்கள் பழுதானால் அங்கு பயன்படுத்துவதற்காக இந்த 35 ஓட்டுப்பதிவு எந்திரங்களும் கையிருப்பு வைக்கப்பட்டு இருந்தன. அந்த 35 எந்திரங்களைதான் நாங்கள் லாரியில் இருந்து எடுத்து வந்து இறக்கி வைத்தோம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

    ஆனால் இதை சமாஜ்வாடி தொண்டர்கள் ஏற்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    உத்தரபிரதேசத்தில் டுமரியாகஞ்ச் தொகுதியிலும் மினி லாரி மூலம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு வந்து மாற்றம் செய்யப்பட்டதாக பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த தொகுதியில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தது.

    போராட்டங்கள் வலுத்ததால் மினி லாரியில் கொண்டு வரப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து எடுத்து வேறு பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    ஜான்சி தொகுதியிலும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சி நடந்ததாக சமூக வலைதளங்களில் நேற்று முதல் பரபரப்பு தகவல் வெளியானது. பஞ்சாப், அரியானா, பீகார் மாநிலங்களிலும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    பீகாரில் மகாராஜ் கஞ்ச், சரண் தொகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களுடன் லாரிகள் சுற்றி வருவதை லாலு பிரசாத் கட்சி தொண்டர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

    இதனால் பீகாரிலும் பல இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது. வட மாநிலங்களில் சுமார் 20 தொகுதிகளில் மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சி நடந்ததாக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளை தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிரடியாக மறுத்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மாற்றப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி உள்ள தகவல்களில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. தேவையில்லாமல் வதந்தியை பரப்பும் வகையில் இதை யாரோ செய்துள்ளனர். திட்டமிட்டு இத்தகைய சதியில் யாரோ ஈடுபட்டுள்ளனர்.

    எந்த ஒரு தொகுதி வாக்குகளும் தில்லுமுல்லு செய்து மாற்றப்படவில்லை. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் உரிய முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த எந்திரங்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன.

    நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்களும், ஒப்புகை சீட்டு எந்திரங்களும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில்தான் சீல் வைத்து மூடப்பட்டன. அப்படி சீல் வைக்கப்பட்டது முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சீல் வைக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படையினர் ஒவ்வொரு ஓட்டு எண்ணும் மையம் முன்பும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இத்தகைய பலத்த பாதுகாப்பை மீறி யாரும் உள்ளே சென்று விட முடியாது.

    தேர்தல் ஆணையம் செய்துள்ள பாதுகாப்பை தவிர வேட்பாளர்களும் தங்களது முகவர்கள் மூலம் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு பாதுகாப்பில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் 24 மணி நேரமும் அங்குதான் இருக்கிறார்கள்.

    இவற்றையெல்லாம் மீறி எப்படி மின்னணு எந்திரங்களை கடத்தி சென்று விட முடியும். எனவே அடிப்படை ஆதாரமே இல்லாத இத்தகைய குற்றச்சாட்டுகளை யாரும் நம்ப வேண்டாம்.

    உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் பயன்படுத்தாத அதாவது கையிருப்பு வைக்கப்பட்டு இருந்த மின்னணு எந்திரங்களை கொண்டு சென்றபோது தான் அதுபற்றி தெரியாமல் வதந்தியை பரப்பி விட்டனர். அத்தகைய இடங்களில் மின்னணு எந்திரம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    அதை அனைத்துக் கட்சியினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால் பிரச்சினை தீர்ந்துள்ளது. பயன்படாத மின்னணு எந்திரங்களை கொண்டு செல்வது தொடர்பாக இப்போது நாங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம்.

    ஜான்சி தொகுதியிலும் பயன்படாத மின்னணு எந்திரங்களை கொண்டு சென்றதால்தான் கட்சி தொண்டர்கள் சந்தேகத்தில் வதந்தியை பரப்பிவிட்டனர். தற்போது அங்கும் உரிய விளக்கம் அளித்த பிறகு பிரச்சினை தீர்ந்துள்ளது.

    இவ்வாறு அந்த தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்தார்.

    தேனி தொகுதிக்கு திருவள்ளூரில் இருந்து கூடுதலாக 20 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு சென்றதற்கு இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:-

    தேனி தொகுதியில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு வேண்டும் என்று எந்த கட்சியும் கோரிக்கை வைக்கவில்லை.

    தேர்தல் ஆணையம் தன்னிச்சையாகவே ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள பாலசமுத்திரம், பெரியகுளம் தொகுதியில் உள்ள வடுகப்பட்டி ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் இதுபற்றி அறிவிப்பதற்கு முன்பே ரகசியமாக கோவையில் இருந்து 50 வாக்குப்பதிவு எந்திரங்களை தேனிக்கு கொண்டு சென்றனர். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பிறகுதான் 2 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தப்போவதாக சொன்னார்கள்.

    அப்படியே பார்த்தாலும் இரு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு 50 எந்திரங்கள் எதற்கு?

    இந்த நிலையில் திருவள்ளூரில் இருந்து மேலும் 20 வாக்குப்பதிவு எந்திரங்கள், 30 விவிபாட் எந்திரங்களையும் கொண்டு சென்றுள்ளார்கள். இவ்வளவு எந்திரங்களை தேனியில் கொண்டு குவிப்பதற்கு என்ன காரணம்?

    இதையெல்லாம் பார்க்கும்போது ஏதோ, சதிசெயல் செய்ய திட்டமிடுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

    தேர்தல் ஒழுங்காக நடந்தால் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகனுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. அதனால்தான் எப்படியாவது தில்லுமுல்லு நடத்த வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்.

    எத்தனை பெட்டிகளை மாற்றினாலும் அவர் மிகப் பெரிய தோல்வி அடைவார். மக்கள் மத்தியில் கடுமையான கோபமும், ஆத்திரமும் ஏற்பட்டுள்ளது. தேனி தொகுதியில் சட்டம், ஒழுங்கு சீர்கெடும் நிலையை உருவாக்கி வருகிறார்கள். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் எங்கள் புகாரை தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றியதில் முறையான விசாரணை தேவை என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #thirunavukkarasar #votemachineissue

    கோவில்பட்டி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. இதுவரை நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும், நடக்க உள்ள தேர்தல்களிலும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான அலை வீசுகிறது. இதனால் மத்தியில் பாரதிய ஜனதா அகற்றப்படுவது உறுதி. 23-ந் தேதிக்கு பின்னர் ராகுல் காந்தி பிரதமராக வருவார்.

    தமிழகத்தை பொறுத்த வரை மதச்சார்பற்ற கூட்டணி தான் வெற்றி பெறும். சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை எப்படி மத்தியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என வாக்களிக்கிறார்களோ அதேபோல் தமிழகத்தில் மோடியை ஆதரித்து கொண்டிருக்கிற பாரதிய ஜனதாவின் பினாமியாக இருக்கக்கூடிய எடப்பாடி தலைமையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற உணர்வோடு தான் மக்கள் வாக்களித்துள்ளனர். அந்த வகையில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு மக்கள் வெற்றியை தருவார்கள்.

    காங்கிரசை பொறுத்த வரை தலைவர் ராகுல் காந்தி தேவையான நேரத்தில் தேவையான மாற்றத்தை செய்வார். கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏன் கொண்டு செல்லப்பட்டது என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    பெட்டிகளை மாற்றவே துணை முதல்வர் வாரணாசி சென்று, அங்கு பிரதமரை சந்தித்தார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. எனவே இது குறித்து அங்கு ஏதாவது பேசப்பட்டதா?, அங்கு சென்றதற்கும், பெட்டிகள் மாற்றப்படவும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? என இதையெல்லாம் ஆராயப்பட வேண்டிய வி‌ஷயம்.

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு தோல்வி உறுதியானது. அந்த பயத்தில் இதுபோன்ற தில்லுமுல்லுகள் செய்ய முயற்சிக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

    தேர்தல் ஆணையர், தேர்தல் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு தான் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியது, தேர்தல் சட்டம் மற்றும் விதிமுறைகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. எனவே கண்ணியத்தோடு அந்தப் பணிகளை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

    மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையில் அனுமதியின்றி மர்ம நபர் நுழைந்தது தொடர்பான புகார் குறித்த உரிய விசாரணை நடத்தப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். #MaduraiConstituency
    மதுரை:

    மதுரையில் கடந்த 18ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் சீலிட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, மதுரை தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆவணங்களை மர்ம நபர் ஒருவர் எடுத்துச்சென்று நகல் எடுத்ததாக புகார் நேற்று இரவு புகார் எழுந்தது.

    இதையடுத்து அங்கு குவிந்த அரசியல் கட்சியினர், கலெக்டர் வந்து விளக்கம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன் அங்கு வந்து ஆய்வு செய்தார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிசிடிவி மற்றும் காவல் துறையின் பாதுகாப்பில் மின்ணணு இயந்திரங்கள் பத்திரமாக உள்ளது. மின்ணணு வாக்குப்பதிவு அறைகள் அனைத்தும் முழு பாதுகாப்பில் உள்ளன. வேட்பாளர்கள் பார்வையிட்டு பாதுகாப்பு குறித்து முழு திருப்தி தெரிவித்துள்ளனர். உரிய விசாரணை நடத்தப்பட்டு அனுமதியின்றி உள்ளே சென்றவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். #MaduraiConstituency
    மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையில் அனுமதியின்றி மர்மநபர் நுழைந்து நகல் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #MaduraiConstituency
    மதுரை:

    மதுரையில் கடந்த 18ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் சீலிட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், மதுரை தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆவணங்களை மர்ம நபர் ஒருவர் எடுத்துச்சென்று நகல் எடுத்ததாக புகார் இன்று இரவு புகார் எழுந்தது.

    இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அங்கு வந்தனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆட்சியர் நடராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    மர்ம நபர் நகல் எடுத்ததாக தகவல் பரவியதும் தி.மு.க.-வினர் மற்றும் அ.ம.மு.க-வினர் குவிந்தனர். தொடர்ந்து அறையின் சிசிடிவி காட்சிகளை காண்பிக்கவும்,  மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வலியுறுத்தியும் அரசியல் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #MaduraiConstituency
    வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். #LokSabhaElections2019 #TNElections2019
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்த எந்திரங்களை ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்ல பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடசென்னை பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்களும், பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்களும் ராணிமேரி கல்லூரியில் வைக்கப்படும்.

    மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



    இந்த 3 இடங்களிலும் ஓட்டு எண்ணும் நாள் வரை 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். முதல் அடுக்கு பாதுகாப்பில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் இருப்பார்கள். 2-வது அடுக்கு பாதுகாப்பில் ஆயுதப்படை போலீசார் பணியில் இருப்பார்கள். 3-வது அடுக்கு பாதுகாப்பில் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    3 ஓட்டு எண்ணும் மையங்களிலும் ஓட்டு எண்ணப்படும் நாள் வரை தினமும் 1,000 போலீசார் சுழற்சி முறையில் காவல் பணி செய்வார்கள். ஒவ்வொரு ஓட்டு எண்ணும் மையத்துக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒரு உதவி கமிஷனர் தலைமையில் செய்யப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் தேவநாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர். #LokSabhaElections2019 #TNElections2019
    அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தும் பொருட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதற்கட்டமாக சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற, நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தும் பொருட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதற்கட்டமாக சரிபார்க்கும் பணி நடைபெற்றது.

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், நடந்த இந்த பணியை கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். மேலும் எந்திரங்களை சரிபார்க்கும் பணியினை, பெங்களூரு பாரத மின்னணு நிறுவனத்தைச் சேர்ந்த, 7 பொறியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியானது வருகிற 11-ந்தேதி வரை நடைபெறும்.

    இந்த ஆய்வின் போது, அரியலூர், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், முதற்கட்ட சரிபார்க்கும் பணிக்கான பொறுப்பு அலுவலர் மற்றும் துணை கலெக்டர் பாலாஜி, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், தனி தாசில்தார் (தேர்தல்) சந்திரசேகரன் மற்றும் அரியலூர் தாசில்தார் முத்துலெட்சுமி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
    பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்ட 5,880 வாக்குப்பதிவு எந்திரங்கள் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
    பல்லடம்:

    நாடாளுமன்ற தேர்தல் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூரு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருந்து 6 வேன்கள் மூலம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த வேன் ஒவ்வொன்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு வந்திருந்தனர். வாக்குப்பதிவு எந்திரங்கள் 5,880-ம், 3 ஆயிரத்து 200 கட்டுப்பாட்டு எந்திரங்களும் கொண்டு வரப்பட்டது. இந்த வேன்களில் கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி பார்வையிட்டார்.

    பின்னர் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஒரு பாதுகாப்பான அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. பின்னர் அந்த அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார், திருப்பூர் கலால் உதவி ஆணையாளர் சக்திவேல், பல்லடம் தாசில்தார் அருணா, திருப்பூர் வடக்கு தாசில்தார் ஜெயக்குமார், தேர்தல் தனி தாசில்தார் முருகதாஸ், திருப்பூர் உதவி ஆணையாளர் (கலால்) சக்திவேல், தேர்தல் துணை தாசில்தார் மயில்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    முன்னதாக பல்லடம் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்திருந்த மாவட்ட கலெக்டரிடம் என்.ஜி.ஆர். ரோட்டில் நடைபாதையில் பழக்கடை, பூக்கடை வைத்து வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வந்தார்கள். அந்த ஆக்கிரமிப்புகள் பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டது. அவர்கள் மீண்டும் அப்பகுதியில் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்டு கலெக்டர் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் கூறினார். 
    ×