search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றியதில் முறையான விசாரணை தேவை- திருநாவுக்கரசர் பேட்டி
    X

    வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றியதில் முறையான விசாரணை தேவை- திருநாவுக்கரசர் பேட்டி

    கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றியதில் முறையான விசாரணை தேவை என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #thirunavukkarasar #votemachineissue

    கோவில்பட்டி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. இதுவரை நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும், நடக்க உள்ள தேர்தல்களிலும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான அலை வீசுகிறது. இதனால் மத்தியில் பாரதிய ஜனதா அகற்றப்படுவது உறுதி. 23-ந் தேதிக்கு பின்னர் ராகுல் காந்தி பிரதமராக வருவார்.

    தமிழகத்தை பொறுத்த வரை மதச்சார்பற்ற கூட்டணி தான் வெற்றி பெறும். சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை எப்படி மத்தியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என வாக்களிக்கிறார்களோ அதேபோல் தமிழகத்தில் மோடியை ஆதரித்து கொண்டிருக்கிற பாரதிய ஜனதாவின் பினாமியாக இருக்கக்கூடிய எடப்பாடி தலைமையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற உணர்வோடு தான் மக்கள் வாக்களித்துள்ளனர். அந்த வகையில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு மக்கள் வெற்றியை தருவார்கள்.

    காங்கிரசை பொறுத்த வரை தலைவர் ராகுல் காந்தி தேவையான நேரத்தில் தேவையான மாற்றத்தை செய்வார். கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏன் கொண்டு செல்லப்பட்டது என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    பெட்டிகளை மாற்றவே துணை முதல்வர் வாரணாசி சென்று, அங்கு பிரதமரை சந்தித்தார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. எனவே இது குறித்து அங்கு ஏதாவது பேசப்பட்டதா?, அங்கு சென்றதற்கும், பெட்டிகள் மாற்றப்படவும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? என இதையெல்லாம் ஆராயப்பட வேண்டிய வி‌ஷயம்.

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு தோல்வி உறுதியானது. அந்த பயத்தில் இதுபோன்ற தில்லுமுல்லுகள் செய்ய முயற்சிக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

    தேர்தல் ஆணையர், தேர்தல் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு தான் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியது, தேர்தல் சட்டம் மற்றும் விதிமுறைகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. எனவே கண்ணியத்தோடு அந்தப் பணிகளை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

    Next Story
    ×