search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "voting machine"

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்று ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா கருத்து தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு :

    பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதை நேரில் ஆய்வு செய்து அம்பலப்படுத்தியவர் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா. இதன் மூலம் அவர் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பிரபலம் அடைந்தார்.

    அதன் பிறகு அவர் சிறைத்துறையில் இருந்து வேறு துறைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் தற்போது ரெயில்வேத்துறை ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார்.

    தற்போது நடந்து முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்டு உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன. இதுபற்றி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.



    இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்று ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது. அதற்கான சாத்தியமே இல்லை. இது அனைத்து ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் தெரியும். நான் எந்த கட்சிக்கு ஆதரவாகவும் இந்த கருத்தை கூறவில்லை.

    உண்மை நிலையை கூறுகிறேன். தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளும் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட மாட்டார்கள். இது எனது கருத்து. இதில் அரசியலுக்கு இடமில்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
    நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு அல்லது பா.ஜனதாவுக்கு ஓட்டுகள் விழுவதுபோல் உள்ளது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார். #DigitalIndia #VotingMachine #AkhileshYadav
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் சாய்பாயில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று ஓட்டு போட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராம்பூர் மற்றும் படவுன் தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக வந்த புகார்களை தேர்தல் கமிஷன் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    படவுன் தொகுதியில் மாநில மந்திரி ஒருவர் அங்கு போட்டியிடும் தனது மகளுக்கு சாதகமாக வாக்களிக்க பணம் கொடுத்ததாக எனக்கு தெரியவந்துள்ளது.

    தேர்தல் அலுவலர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததாலும் பல இடங்களில் மின்னணு வாக் குப்பதிவு எந்திரங்கள் செயல்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தான் மத்திய அரசு உறுதி அளித்த டிஜிட்டல் இந்தியாவா?

    மைன்புரி தொகுதியில் முலாயம்சிங் யாதவ் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றிபெறுவார். 3-வது கட்ட தேர்தலில் பா.ஜனதாவும், அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வியை தழுவும். மக்கள் பா.ஜனதாவுக்கு எதிரான மனநிலைக்கு மாறிவிட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அகிலேஷ் யாதவ் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறாக உள்ளன. அல்லது யாருக்கு வாக்களித்தாலும் பா.ஜனதாவுக்கு ஓட்டு விழுவதுபோல் உள்ளது. தேர்தல் அலுவலர்களுக்கு போதிய பயிற்சியும் இல்லை. உத்தர பிரதேசத்தில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட எந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன.

    இது ரூ.50 ஆயிரம் கோடி செலவில் நடத்தப்படும் தேர்தல் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள குற்றவியல் அலட்சியம். இதனை நாம் நம்பலாமா? அல்லது இதைவிட பெரிய கொடுமையான நடைமுறை ஏதாவது உள்ளதா?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதற்கிடையே சமாஜ்வாடி கட்சி பிரதிநிதிகள் லக்னோவில் தலைமை தேர்தல் அதிகாரி வெங்கடேஸ்வரை சந்தித்து எந்திரங்கள் கோளாறு, மந்திரி பணம் கொடுத்தது ஆகியவை குறித்து புகார் தெரிவித்தனர்.

    இதுபற்றி கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி திவாரி கூறும்போது, “சமாஜ்வாடி கட்சியினர் மாநில மந்திரி சுவாமி பிரசாத் மவுரியா தனது மகள் சங்கமித்ரா மவுரியாவுக்கு சாதகமாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும், வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு குறித்தும் புகார் கொடுத்துள்ளனர்.

    தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து இதுதொடர்பாக விரிவான அறிக்கை கேட்டுள்ளோம்.

    அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப் படும்” என்றார்.  #DigitalIndia #VotingMachine #AkhileshYadav
    மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாத்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #MKStalin #MaduraiConstituency

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறைக்குள் பெண் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் அதிகாலை 3 மணி அளவில் உள்ளே நுழைந்து, இரண்டு மணி நேரத்திற்கும் மேல் அங்கேயே இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்வதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    மதுரை மக்களவை தொகுதிக்காக வாக்குப் பெட்டிகள் அனைத்தும் சீலிடப்பட்டு, மதுரை மருத்துவக்கல்லூரியில் உள்ள ஆறு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையும் சீலிடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரின் முழுப் பாதுகாப்பில் இருக்கும் போது, இப்படி அரசு அதிகாரிகள் அத்துமீறி நுழைந்ததும் முறைகேடுகள் செய்ததும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் தொடங்கியதிலிருந்து பிரசாரம், வாக்குப் பதிவு அனைத்திலும் ஆளும் கட்சியினரின் அடாவடிகளுக்கும் முறைகேடுகளுக்கும் துணை நின்ற தேர்தல் அதிகாரிகள் இப்போது வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள்ளும் நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

     


    தேர்தல் ஜனநாயகம் தற்போதுள்ள அதிமுக ஆட்சியின் கீழும் அந்தக் கட்சியின் அத்துமீறல்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியிலும் காப்பாற்றப்படுவதற்கு வழியே இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

    தேர்தல் நடைமுறைகளுக்கும், சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்துவதற்கும் மாநிலத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியும் இந்தியத் தேர்தல் ஆணையமும் தமிழகத்தில் மூச்சுத் திணறி நிற்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகிறது.

    தேர்தல் ஆணையத்தால், ஆளும் கட்சியின் பணப்பட்டு வாடாவைத் தடுக்க முடியவில்லை. துணை முதல்-அமைச்சரே நேரடியாக வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தும் அதை நிறுத்த முடியவில்லை. தர்மபுரி தொகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி, அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வாக்களித்த போது அதையும் அங்குள்ள காவல் துறையும் தேர்தல் அதிகாரிகளும் தடுக்க முன் வரவில்லை.

    சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் தாழ்த்தப்பட்டோர் மீது கடும் தாக்குதல் நடத்தியதையும், பொன்பரப்பியில் வாக்குப் பதிவில் செய்த தில்லு முல்லுகளையும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

    இப்போது துணை ராணுவத்தினரின் பாதுகாப்பில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களையும் இந்தத் தலைமைத் தேர்தல் அதிகாரியால் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியவில்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது.

    தேர்தல் அதிகாரிகள் அனைவரும் ஆளும் கட்சியின் கைப்பாவைகளாக ஒட்டுமொத்தமாக மாறி இருப்பது தேர்தல் ஜனநாயகத்தை சீர்குலைத்து நேர்மையான தேர்தலுக்கு பேராபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கின்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமா? என்ற மிகப்பெரிய கேள்வி இப்போது எழுந்திருக்கிறது.

    ஆகவே அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் துணை ராணுவத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும்.

    அதிகாலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த அனைவர் மீதும், அதற்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள், நுழைய விட்டு பாதுகாப்பு கொடுத்தவர்கள் அனைவர் மீதும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    வாக்கு எண்ணும் மையங்களில் கழக நிர்வாகிகளும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் இரவு- பகல் பார்க்காமல் விழிப்புணர்வுடன் இருந்து வாக்கு எண்ணிக்கை மையங்களைக் கைப்பற்ற நினைக்கும் அராஜக அ.தி.மு.க. ஆட்சியிடமிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #MKStalin #MaduraiConstituency

    வாக்குப்பதிவு எந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை திட்டமிட்டே மங்கலாக பதித்துள்ளனர் என்று சீமான் குற்றம் சாட்டி உள்ளார். #LokSabhaElections2019 #Seeman
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுபா‌ஷினியை ஆதரித்து மயிலாடுதுறையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

    மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவத்தை தனியாருக்கு தாரை வார்த்து விட்டனர். மீத்தேன் திட்டத்தை தடுப்போம் என்கின்றனர்.

    இத்திட்டம் கொண்டு வரப்பட்டது யாருடைய ஆட்சி காலத்தில்? கச்சத்தீவை மீட்போம் என்கின்றனர். கச்சத்தீவு பறிபோனது யாருடைய ஆட்சி காலத்தில்? கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவோம் என்கின்றனர். அது யாருடைய ஆட்சி காலத்தில் மத்திய பட்டியலுக்கு சென்றது? விவசாயக்கடன், கல்விக் கடனை தள்ளுபடி செய்வோம் என்கின்றனர். விவசாயிகளையும், மாணவர்களையும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளியது யார்? என்பதனை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நரேந்திரமோடி ஆறுதலாக ஒரு ‘ட்வீட்‘ கூட போடவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் செய்யாத எதனை, அடுத்த 5 ஆண்டுகளில் நரேந்திரமோடி செய்யப்போகிறார்?.



    வாக்குப்பதிவு எந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னமான விவசாயி சின்னத்தை திட்டமிட்டே மங்கலாக பதித்துள்ளனர். இதனால் நாங்கள் பொதுமக்களிடம் வாக்கு கேட்கும்போது, வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த சின்னம் மங்கலாக தெரிகிறதோ அந்த சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்க வேண்டிய நிலையில் உள்ளோம். மக்கள் இந்த தேர்தலை மாற்றத்துக்கான தேர்தலாக பாருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #Seeman
    வாக்குப் பதிவினை உறுதி செய்யும் எந்திரத்தை பற்றி தவறான தகவல் பரப்புவோருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #LoksabhaElections2019

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் பதட்டமான வாக்குச் சாவடிகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.

    திருவள்ளூர் சாலையில் உள்ள அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் உள்ள பதட்டமான 2 வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார்.

    பின்னர் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மகேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    அப்போது கலெக்டர் மமேஸ்வரி கூறியதாவது:-  மாவட்டத்தில் மொத்தம் 3603 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை. இதில் 9 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை. இந்த பதட்டமான வாக்குச் சாவடிகளில் ஆயுதம் தாங்கிய துணை ராணுவப்படை வீரர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்த உள்ளோம்.

    இந்த வீரர்கள் இம்மாதம் 13-ந் தேதியில் இருந்து வாக்கு பதிவு நாளான 18-ந் தேதி வரை பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள். பதட்டமான ஒரு வாக்குச் சாவடிக்கு 4 பேர் வீதம் துணை ராணுவப் படை வீரர்களை பாதுகாப்பில் பணி அமர்த்த உள்ளோம்.

     


    வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரத்தை மாவட்டத்தில் இது வரை 3 லட்சம் பேர் சோதனை அடிப்படையில் பரிசோதித்துள்ளனர். வாக்குப் பதிவினை உறுதி செய்யும் எந்திரத்தை பற்றி தவறான தகவல் பரப்புவோருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.

    இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி கூறினார்.

    அப்போது தாசில்தார் வில்சன், தேர்தல் துணை வட்டாட்சியர் தாமேதரன், துணை தாசில்தார் சரவண குமாரி, பேரூராட்சி செயல் அலுவலர் மாலா, வருவாய் அலுவலர் யுகந்தர், கிராம நிர்வாக அலுவலர் ஹேமகுமார் உடன் இருந்தனர்.

    திருவள்ளூர் அருகே புல்லரம்பாக்கத்தில் உள்ள வாக்கு மையத்தில் கலெக்டர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.

    அப்போது, மாற்றுத் திறனாளிகள் வந்து செல்லும் வகையில், சாய்தளப் பாதை அமைக்கப்பட்டுள்ளனவா? அங்கு வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து கேட்டு அறிந்தார்.

    இதை தொடர்ந்து புல்லரம் பாக்கத்தில் குடியிருப்பு பகுதியில் 100 சதவீத வாக்குகளைப் பதிவு செய்ய வலியுறுத்தும் வகையில், வாக்காளர்களுக்கு அழைப்பிதழ் விநியோகம் செய்து, விழிப்புணர்வுப் பேரணியை கொடிஅசைத்து தொடங்கி வைத்தனர். #LoksabhaElections2019

    வாக்கு இயந்திரம் இப்போது சரியாக செயல்படுகிறதா? என்று காங்கிரஸ் கட்சிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார். #Results2018 #TamilisaiSoundararajan
    சென்னை:

    சட்டசபை தேர்தல் நடைபெற்ற ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் இரண்டு கட்சிகளும் கிட்டத்தட்ட சமநிலையில் உள்ளன.

    இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் பற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:



    எந்த தோல்வியும் எங்களை துவளச்செய்யாது. வெற்றியால் பாஜக துள்ளிக் குதிப்பதும் இல்லை தோல்வியால் துவள்வதும் இல்லை. மோடி அலை ஓய பெரிய தலை எதுவும் இல்லை; மோடி அலையை ஓய வைக்கவும் முடியாது.

    வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என இயந்திரத்தனமாக காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தனர். வாக்கு இயந்திரம் இப்போது சரியாக செயல்படுகிறதா?

    இவ்வாறு அவர் கூறினார். #Results2018 #TamilisaiSoundararajan
    மத்தியபிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்துக்கு 2 பேர் கொண்டு செல்வது போன்ற வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. #MadhyaPradesh #VotingMachine
    சத்னா:

    230 உறுப்பினர்களை கொண்ட மத்தியபிரதேச மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 28-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. வருகிற 11-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருப்பதால், வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் சத்னா என்ற இடத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு சில பெட்டிகளை 2 பேர் கொண்டு செல்வது போன்ற வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. பகுஜன் சமாஜ் வேட்பாளர் புஷ்கர் சிங் தோமர் உடனே கட்சி நிர்வாகிகளுடன் அங்கு சென்றார். காங்கிரஸ் கட்சியினரும் அங்கு திரண்டனர். ஆளும் பாரதீய ஜனதா கட்சியினர் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து, மின்னணு எந்திரங்கள் எதுவும் மாற்றப்படவில்லை என்றும், வாக்குப்பதிவுக்கு பின் உபரியாக இருந்த எந்திரங்கள் அங்கு கொண்டு வரப்பட்டதாகவும் விளக்கம் அளித்தனர். இதைத்தொடர்ந்து அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.  #MadhyaPradesh #VotingMachine
    எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். #MansoorAlikhan
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவில், எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தில் முறைகேடுகள் பல நடக்கின்றன. இதை என்னால் நிரூபிக்க முடியும்.

    எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தை தொடர்ச்சியாக 7 நாட்கள் என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த துறையில் நிபுணர்களாக உள்ளவர்களை கொண்டு, சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுப் பெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் சோதனை செய்து, ஓட்டு எந்திரம் மூலம் தேர்தல் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிப்பேன் என்று இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷனர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு கடந்த ஜூலை 10-ந்தேதி மனு அனுப்பினேன். இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, என் மனுவை பரிசீலித்து, ஓட்டு எந்திரத்தில் முறைகேடு நடப்பதை நான் நிரூபிக்கும் விதமாக 7 நாட்கள், அந்த எந்திரத்தை என்னிடம் ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வக்கீல் இல்லாமல், மன்சூர் அலிகான் நேரில் ஆஜராகி வாதிட்டார். இவரது கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.  #MansoorAlikhan
    மகாராஷ்டிராவில் பால்கர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கு பின் சில மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் விதிகளை மீறி தனியார் காரில் கொண்டு செல்லப்பட்டு உள்ளன.
    பால்கர்:

    மகாராஷ்டிராவின் பந்த்ரா-கோண்டியா மற்றும் பால்கர் என இரு நாடாளுமன்ற தொகுதிகள், உத்தர பிரதேசத்தின் கைரானா மற்றும் நாகலாந்தில் ஒரு தொகுதி என 4 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.

    இந்த இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் டுவிட்டரில் குற்றச்சாட்டு எழுப்பினார்.  இதே தகவலை ராஷ்டீரிய லோக் தள கட்சியும் தெரிவித்திருந்தது.

    தேர்தல் விதிமுறைகளின்படி வாக்கு பதிவு முடிந்தபின் மின்னணு இயந்திரங்கள் அரசு வாகனத்தில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

    ஆனால் பால்கர் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் முடிந்த பின்னர் சில மின்னணு இயந்திரங்கள் தனியார் கார் ஒன்றில் விதிகளை மீறி எடுத்து செல்லப்பட்டு உள்ளன.

    சில கிராமவாசிகள் காரை தடுத்து நிறுத்தி அதில் இருந்த தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பினர்.  பின் தகவல் அறிந்து வந்த போலீசார் காரில் இருந்தவர்கள் மற்றும் மின்னணு இயந்திரங்களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதனை அடுத்து பால்கர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரசாந்த் நார்னவாரே ஆகியோர், விதிகளை மீறிய தேர்தல் அதிகாரி மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளனர்.  இதுபற்றி போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×