search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Congress"

    மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் 10 நாள் தொடர் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பிரதமர் மோடியும், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனும் ரபேல் போர் விமானங்கள் வாங்கிய விவகாரத்தில் பாராளுமன்றத்திற்கும், உச்சநீதி மன்றத்திற்கும் தவறான தகவல்களை அளித்துள்ளனர்.

    அரசு கருவூலத்திற்கு இழப்பு ஏற்படுத்தியுள்ள இந்த மோசமான மெகா ஊழலின் உண்மை விவரங்களை வெளிக்கொண்டுவர பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்படவேண்டும் என ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    இதேபோல் அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்களையும் மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கின்ற பொறுப்பும் கடமையும் காங்கிரஸ் கட்சிக்கு உண்டு.

    மத்திய-மாநில அரசுகளின் செயல்களை மக்களுக்கு எடுத்துரைக்கின்ற விதமாக தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரசார பொதுக் கூட்டங்களை நடத்திட வேண்டுமென்று மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    அதன்படி மாவட்டத் தலைவர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட எல்லா சட்டமன்ற தொகுதிகளிலும் வருகிற 2-ந்தேதியில் இருந்து 12-ந் தேதி முடிய தொடர் பொதுக்கூட்டங்களை நடத்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Congress #Thirunavukkarasar
    தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் வரும் என்று அக்கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். #Congress #Kushboo
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மாற்றப்படலாம் என்று கடந்த சில மாதங்களாகவே பேசப்படுகிறது. தற்போது திருநாவுக்கரசர் அமெரிக்காவில் இருக்கிறார்.

    இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று சென்னை வந்தார். அவரை அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்புக்கு பிறகு குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இது முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான சந்திப்பு. அவரும் குடும்பத்துடன் தனிப்பட்ட பயணமாக வந்திருக்கிறார். அரசியல் பற்றி நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.


    கேள்வி:- தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை சுயநல கூட்டணி என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளாரே.

    பதில்:- இதை சொல்வதற்கு முன்பு அவரது கட்சியிலும், கூட்டணி கட்சியிலும் உள்ள தலைவர்களிடையேயும் நிலவும் பிரச்சனை பற்றி சிந்திக்க வேண்டும்.

    எங்கள் கூட்டணி சுயநல கூட்டணியா? மக்கள் நலக் கூட்டணியா? என்று மக்கள் சொல்வார்கள்.

    5 மாநில தேர்தலில் அடி பலமாக விழுந்ததால் அவர்கள் இன்னும் அதில் இருந்து மீளவில்லை.

    தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் வரும் என்பதை கேள்விப்பட்டேன். மாற்றம் வரும் பார்ப்போம்.

    இவ்வாறு குஷ்பு கூறினார். #Congress #Kushboo
    தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்றப்படுமா? என்ற கேள்விக்கு அக்கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய்தத் பதிலளித்துள்ளார். #Congress #sanjayDutt
    கோபி:

    அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சஞ்சய்தத் கோபியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த மாவட்டம் தோறும் தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி அவர்களுடைய கருத்துக்களை கேட்டு வருகிறோம்.

    இக்கட்சியைப் பொறுத்தவரை தொண்டர்கள் தான் மிக முக்கியமானவர்கள். விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறஉள்ளதால், பூத் கமிட்டி அமைத்து கட்சியை வலுப்படுத்த உள்ளோம்.


    தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்றப்படுமா? என்ற கேள்விக்கு, நான் பதில் சொல்ல தமிழகம் வரவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி தான் இதுகுறித்து முடிவு செய்வார்கள்.

    மத்திய அரசும், தமிழக அரசும் மக்களை ஏமாற்றி வருகிறது. இவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #sanjayDutt
    தமிழக காங்கிரஸ் தலைவராகும் தகுதி தனக்கு உள்ளதாகவும் விரைவில் மாற்றம் வந்தால் தலைவர் ஆவேன் என்றும் கராத்தே தியாகராஜன் கூறினார். #Congress #KarateThiagarajan #Thirunavukkarasar
    சென்னை:

    தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் அடையாறில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிவாஜியை ராசி இல்லாதவர் என்கிறார்கள். தோற்கிற ஜானகி அம்மாள் கூட்டணியில் ராஜசேகரனும், இளங்கோவனும் தான் சேர்த்து விட்டார்கள். தோல்வி அடைந்தவுடன் சிவாஜி காங்கிரசுக்கு வந்து இருந்தால் உயர்ந்த இடத்துக்கு சென்று இருப்பார்.

    இளங்கோவன் திரும்பவும் காங்கிரசுக்கு வந்து மத்திய மந்திரி ஆனார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வரவில்லையா? காங்கிரஸ் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் சிவாஜி. நிறைய தலைவர்களை உருவாக்கி இருக்கிறார். கட்சி வளர்ச்சிக்காக உழைப்பையும் கொடுத்திருக்கிறார்.

    தமிழக காங்கிரசில் தொண்டர்கள் இருக்கிறார்கள். வழிகாட்டும் தலைவர்கள் சரியில்லை. திருநாவுக்கரசர் வேலை வாங்க வேண்டும். திருநாவுக்கரசர் என்னை பதவியில் இருந்து எடுத்து விடுவதாக மிரட்டுகிறார்.


    முதல்-அமைச்சர் ஆகும் கனவில் அவர் இருக்கிறார். முதல்-அமைச்சராக யார் வேண்டுமானாலும் வரலாம். ப.சிதம்பரம், குமரி அனந்தன் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்களுக்கு தகுதி உள்ளது. முதல்வரை தேர்வு செய்யும் தகுதி காங்கிரஸ் மேலிடத்துக்கு தான் இருக்கிறது.

    கட்சிக்கு தொடர்பில்லாதவர்களும் எனக்கு ஜூனியரான செல்லக்குமார் உள்ளிட்டோரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களாக உள்ளனர். திருநாவுக்கரசருக்கு முதல்வராகும் தகுதி இருக்கும் போது, எனக்கும் தமிழக காங்கிரஸ் தலைவராகும் தகுதி உள்ளது. விரைவில் மாற்றம் வந்தால் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆவேன்.

    திருநாவுக்கரசர் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். எனக்கு தலைவர் ராகுல், வழிகாட்டும் தலைவர் சிதம்பரம். உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. திருநாவுக்கரசர் இன்னும் காங்கிரஸ் கலாச்சாரத்திற்கே வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #KarateThiagarajan #Thirunavukkarasar
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் காலத்தினை கருத்தில் கொண்டு மிக விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். #Congress #Thirunavukkarasar #18MLAs
    கோவை:

    ஊட்டியில் அரசு பஸ் பள்ளத்தில் உருண்டு 9 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 15 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    அவர்களில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள். தற்போது 9 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊட்டியில் அரசு பஸ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் நிதி அறிவித்துள்ளது. சுனாமி, இயற்கை சீற்றம், போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ரூ. 20 லட்சம் வரை வழங்கி வருகிறது.

    அதே போல் ஊட்டி பஸ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 20 லட்சம் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

    காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமாக பல மாதங்கள் ஆகும் என்பதால் அவர்களது குடும்பத்துக்கு தேவையான நிதி உதவியை அரசு வழங்க வேண்டும்.

    ஊட்டி மலை பாதை அதிக வளைவு, நெளிவுகளை கொண்டது. எனவே அங்கு தரமான பஸ்களை இயக்க வேண்டும். ஊட்டியில் விபத்து அடிக்கடி நடைபெறுவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அங்கு மல்டி ஸ்பெ‌ஷல் ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும்.

    தற்போது அங்கு மூடப்பட்டு உள்ள இந்துஸ்தான் பிலிம் தொழிற்சாலையில் மல்டி ஸ்பெ‌ஷல் மருத்துவமனை அமைக்கலாம். இல்லாவிட்டால் ஊட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்.

    ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 7 பேரின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

    ஜனாதிபதி நிராகரித்து விட்ட நிலையில் அரசியல் ரீதியாக எந்த முயற்சியும் செய்ய முடியாது. கோர்ட்டு மூலம் தான் நிவாரணம் பெற முயற்சிக்க வேண்டும். இந்த வி‌ஷயத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்.

    ராஜீவ் கொலையாளிகள் தங்களை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறி உள்ளதாக தெரிகிறது.

    அவர்கள் விடுதலையை நம்பி இருந்து கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் வருத்தத்தில் அவ்வாறு சொல்லி இருக்கலாம். இது ஏற்புடைய கருத்து அல்ல.


    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகள் இரு விதமான தீர்ப்பு வழங்கி உள்ளனர். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளதால் 18 எம்.எல்.ஏ.க்களும் தற்போது பதவியில் உள்ளார்களா? இல்லையா? என்பதில் பிரச்சனை உள்ளது.

    நீதி திரிசங்கு சொர்க்கத்தில் உள்ளது. தற்போது 3-வது நீதிபதி தீர்ப்பு வழங்குவார் என கூறப்பட்டு உள்ளது. காலத்தினை கருத்தில் கொண்டு மிக விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு ஏற்கனவே 8 மாதம் ஆகி விட்டது. இப்பிரச்சனை 18 எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. தொகுதி மக்கள் பிரச்சனை.

    ஒரு தொகுதிக்கு சுமார் 2 லட்சம் மக்கள் இருந்தாலும் 18 தொகுதிகளுக்கும் சேர்த்து 45 லட்சம் மக்களின் பிரச்சனை ஆகும். மேலும் அரசுக்கு ஸ்திரதன்மை உள்ளதா? என்பது இந்த தீர்ப்பில் தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார், கணேஷ் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட தலைவர் மகேஷ் குமார், நிர்வாகிகள் உமாபதி, சவுந்திர குமார், கணபதி சிவகுமார், துளசி ராஜ், கேபிள் வினோத், காமராஜ்துல்லா, எம்.எஸ். பார்த்தீபன், காட்டூர் சோமு, இருகூர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். #Congress #Thirunavukkarasar #18MLAs
    தமிழக காங்கிரசுக்கு எழுச்சியூட்டும் தலைமை வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் இளங்கோவன் ஆதரவாளர்கள் மனு அளித்த சம்பவம் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் இளங்கோவன் இடையேயான கோஷ்டிபூசல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

    இந்த நிலையில் இளங்கோவன் ஆதரவாளர்களான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் வி.ஆர்.சிவராமன், ரங்கபாஷ்யம், வசுந்தராஜ் ஆகியோர் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து தமிழக காங்கிரஸ் செயல்பாடு பற்றி 3 பக்க புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் தோல்விகளையும், சோதனைகளையும் சந்தித்து வருகிறது. ஆனாலும் தொண்டர்கள் உற்சாகம் இழக்காமல் இருந்தார்கள். ஆனால் இப்போது சோர்வுடனும், விரக்தியுடனும் இருக்கிறார்கள்.

    ஜி.கே.வாசன் பிரிந்து சென்றபோது காங்கிரஸ் காணாமல் போய்விடும் என்றார்கள். ஆனால் கட்சி எவ்வித சேதாரமும் இல்லாமல் இருந்ததை திருச்சி மாவட்டத்தில் கொட்டும் மழையில் நினைந்தபடி நீங்களே பார்த்து பாராட்டினீர்கள்.

    2004-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைய தமிழக காங்கிரசே காரணமாக இருந்தது. அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைத்ததும் மாநில தலைவராக இருந்த இளங்கோவன் சென்று பேசினார். 2 முறை மத்தியில் காங்கிரஸ் அரசு மலர்ந்தது. ஆனால் இப்போது தோழமை கட்சிகளை எரிச்சலூட்டும் நிகழ்வுகள்தான் நடக்கிறது.

    மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து டெல்லி தலைமை அறிவிக்கும் போராட்டங்களை தொண்டர்கள் எழுச்சியுடன் நடத்தினார்கள்.

    தற்போது தமிழ்நாட்டில் குழப்பமான, தெளிவற்ற நிலையில் அரசியல் உள்ளது. அ.தி.மு.க. உடைந்து பா.ஜனதாவின் எடுபிடி கட்சியாக இருக்கிறது.

    நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வந்துள்ளார்கள். இதனால் அரசியலில் தாக்கம் ஏற்படலாம் என்ற கருத்தும் உள்ளது.

    இந்த நேரத்தில் வேகமாக செயல்பட்டால்தான் காங்கிரசை பலப்படுத்த முடியும். ராஜீவ்காந்தி இருந்தபோது 22 சதவீத செல்வாக்குடன் இருந்த கட்சியின் செல்வாக்கு தற்போது 5 சதவீதமாக குறைந்து இருக்கிறது.

    தொண்டர்களும், நிர்வாகிகளும் முடங்கி கிடக்கிறார்கள். காரணம் தினந்தோறும் நிகழும் அரசியல் மாற்றங்களை சந்திக்காதது தான். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே உள்ளாட்சிகளில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக போராட வேண்டிய நிலைமை உள்ளது. ஆனால் எதுவும் நடைபெறவில்லை. கூட்டணி கட்சியான தி.மு.க. நடத்தும் போராட்டங்களில் தலைவர் மட்டுமே கலந்து கொள்கிறார்.

    அன்றாடம் பா.ஜனதா அ.தி.மு.க. எழுப்பும் குரல்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் காங்கிரஸ் முடங்கி கிடக்கிறது. செயல்படாத அரசை கண்டித்து செயல்படும் நிலையில் காங்கிரஸ் இல்லை.

    சத்தியமூர்த்தி பவனை விட்டு காங்கிரஸ் வெளியே சென்று கவுரவ பிரச்சனையை மறந்து செயலாற்ற வேண்டும். அதற்கு செல்வாக்குள்ள எழுச்சியூட்டும் தலைமை தேவைப்படுகிறது.

    ஜெயலலிதாவை கூட எதிர்த்து களம் கண்டது காங்கிரஸ் என்பதை நீங்கள் அறிவீர்கள். வேலை செய்ய தொண்டர்களும், நிர்வாகிகளும் தயாராக இருக்கிறோம். இதை பயன்படுத்தி கட்சியை பலப்படுத்த நடவடிக்கை தேவை. உடனடியாக நடவடிக்கை எடுத்து பாராளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    டெல்லியில் இளங்கோவன் ஆதரவாளர்கள் நேரில் புகார் செய்து இருப்பது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Congress #RahulGandhi
    ×